மு. கருணாநிதி: அந்த எட்டு முடிவுகள்

மு. கருணாநிதி: அந்த எட்டு முடிவுகள்
Published on

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சராக இரண்டாண்டுகள் பதவி வகித்தவர் கலைஞர் மு.கருணாநிதி. ஆனாலும் அவர் தலைமையில் திமுக சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றது 1971 ஆம் ஆண்டில்தான். நேரடியான மக்கள் தீர்ப்பின்படி தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 15 மார்ச் 1971 முதல் 12 ஆகஸ்டு 1971 வரையிலான முதல் 150 நாட்களில் எட்டு முக்கியமான முடிவுகளை எடுத்தார். அந்த எட்டு முடிவுகள் தமிழ்நாட்டு அரசியலின் திசைவழிப் பாதையிலும் திமுகவின் அரசியல் பயணத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அந்த முடிவுகளைப் பற்றிப் பேசுகிறது இந்தச் சிறப்புக்கட்டுரை.

1971 சட்டமன்றத் தேர்தல் முடிவு என்பது தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் அதுவரை வந்திடாத முடிவு. ஆம், 184 இடங்களைக் கைப்பற்றி ஆகப்பெரிய ஆளுங்கட்சி என்ற தகுதியோடு ஆட்சியமைத்தது திமுக. தமிழ்நாட்டில் ஓர் ஆளுங்கட்சி பெற்ற அதிகபட்ச சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். அப்படியான பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மு.கருணாநிதி தனது அமைச்சரவையில் இருவரைச் சேர்க்கத் தயங்கினார். ஒருவரைச் சேர்த்துக்கொண்டார். அந்த முடிவுகள் பின்னாளில் திமுகவுக்குள் மிகப்பெரிய அதிர்வுகளைக் கிளப்பின.

ஆம், திமுகவின் வெற்றிக்காகப் பரப்புரை செய்த எம்ஜிஆருக்கு அமைச்சராகும் ஆசை வந்தது. மெடிக்கல் மினிஸ்டர் என்ற சுகாதாரத்துறையைக் கோரினார். ஆனால் சினிமாவில் நடித்துக்கொண்டே அமைச்சராகத் தொடர்வதில் சட்டச்சிக்கல் இருப்பதாகச் சொன்னார் கருணாநிதி. அதன்மூலம் கருணாநிதி அமைச்சரவையில் எம்ஜிஆர் இடம்பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது. அது கருணாநிதி எடுத்த முக்கிய முடிவு.

அடுத்து, திமுக மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.ஏ.மதியழகனும் அமைச்சராக விரும்பினார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கத் தயங்கிய கருணாநிதி, சட்டமன்ற சபாநாயகர் பதவியைக் கொடுத்தார். அதை வேண்டா வெறுப்பாகவே ஏற்றுக்கொண்டார் கே.ஏ.மதியழகன். அப்படி கருணாநிதியால் அமைச்சரவையில் சேர்க்கப்படாத எம்ஜிஆரும் கே.ஏ.மதியழகனும் சேர்ந்துகொண்டு சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியைக் கொடுத்ததும், திமுக என்ற கட்சியே இரண்டாக உடைந்ததும் அதிமுக என்ற புதிய கட்சி உருவானதும் வரலாறு.

எம்ஜிஆர், கே.ஏ.மதியழகன் தொடர்பான அரசியல் முடிவுகளுக்கு அப்பால் சில முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. அவற்றில் குறிப்பிடத்தக்கது மாநிலத் திட்டக்குழுவை உருவாக்கியது.

அகில இந்திய அளவில் மத்திய அரசு அமைக்கும் இந்தக் குழுதான் இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களுக்குமான திட்டங்கள் குறித்து விவாதித்து, ஆய்வு செய்து, முடிவெடுத்து, நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது வழக்கம். அப்படியான சூழலில், மாநிலங்களுக்கென்று தனியே திட்டக்குழு தேவை, தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் குறித்து எங்கோ டெல்லியில் அமர்ந்து யோசித்து முடிவெடுப்பதைவிட, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள், அதிகாரிகளைக் கொண்டு திட்டங்களைத் தீட்டுவதுதான் சரியாக இருக்குமென்று சொல்லி தமிழ்நாடு அரசு திட்டக்குழுவை உருவாக்கினார் முதலமைச்சர் கருணாநிதி.

1971 ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாடு அரசுக்கென்று உருவாக்கப்பட்ட முதல் திட்டக்குழுவின் தலைவராக முதலமைச்சர் கருணாநிதியும் திட்டக்குழுவின் தலைவராக அப்போதைய தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்ஸும் நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் அதிகாரக்குவிப்புக்கு எதிராகவும் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும் முதலமைச்சர் கருணாநிதி எடுத்த முக்கியமான முடிவு இது. தமிழ்நாட்டைப் பின்பற்றி பின்னாளில் பல மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தலைமையில் திட்டக்குழுக்கள் உருவாகின. அந்த வகையில், தமிழ்நாடு இந்தியாவுக்கான முன்னோடி மாநிலம்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் 150 நாட்களில் கருணாநிதி எடுத்த முக்கியமான முடிவுகளுள் ஒன்று, திருவாரூர் தேரை ஓடவைத்தது. பகுத்தறிவுப் பிரசாரத்தைத் தொடருவோம்; பக்திப் பிரசாரத்தைத் தடுக்கமாட்டோம் என்று பேசியிருந்தார் முதலமைச்சர் கருணாநிதி. அதற்கேற்ப திருவாரூரில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேரைச் செப்பனிட்டு ஓடச் செய்தார் முதலமைச்சர் கருணாநிதி.

பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்கு திமுக ஆட்சி, காணிக்கை என்று சொல்லிவிட்டு, வாக்குவங்கிக்காக ஆன்மிகக் காரியங்களைச் செய்கிறார் முதலமைச்சர் கருணாநிதி என்ற விமரிசனம் எழுந்தது. அதற்கு, ‘தேர் நான்கு நாள்களுக்குத்தான் ஓடுகிறது. ஆனால் அதற்காக நான்கு லட்சம் ரூபாயில் போடப்பட்ட சாலைகளை அந்தப் பகுதி மக்கள்தான் பயன்படுத்தப் போகிறார்கள்.’ என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி.

இன்னொரு முக்கியமான முடிவு, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவரை நம்பியிருக்கும் பிச்சைக்காரர்களைக் கைகொடுத்துக் காப்பாற்றிவிடுவதற்காக பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் கருணாநிதி. முக்கியமாக, பிச்சைக்காரர் என்ற சொல்லைத் தவிர்த்து இரவலர் என்ற சொல்லைப் பயன்படுத்த உத்தரவிட்டார்.

அந்தத் திட்டத்தின்படி புதிதாகக் கட்டப்பட்ட விடுதிகளில் பிச்சைக்காரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே அவர்களுக்குப் பயிரிடுதல், தொழில் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் தரப்பட்டன. அவர்கள் உணவுக்காக வெளியே சென்று பிச்சை எடுக்காமல் இருக்கும் வகையில் விடுதிகளிலேயே உணவு தரப்பட்டது. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு உருவாக்கிய பிச்சைக்காரர் மறுவாழ்வுத்திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்றார் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் கே.கே.ஷா.

பிறகு அந்தத் திட்டத்துக்குள் தொழுநோயாளிகளையும் கொண்டுவந்து, ஒவ்வொரு விடுதியிலும் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டு, தொழுநோய்க்குச் சிகிச்சை தரப்பட்டது. தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் பிச்சை எடுக்க விரும்பாமல் வேறு தொழில் செய்ய விரும்பினால் விடுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் தொழில் இயந்திரம் ஒன்றைத் தொடங்கிவைக்க வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, “தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வுத்திட்டம் போற்றத்தக்க மனிதநேயத் திட்டம்” என்று பாராட்டினார். உண்மையில், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்பது வெறும் மக்கள் நலத் திட்டம் மட்டுமல்ல, சக மனிதனின் சுயமரியாதையைக் காப்பாற்றும் திட்டமும்கூட.

இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்திடமிருந்து வித்தியாசமான தீர்ப்பு ஒன்று வெளியானது. இந்தியாவில் யாரும் விருப்பப்பட்டுப் பிச்சையெடுக்கவில்லை, வறுமையே அவர்களைப் பிச்சையெடுக்கத் தூண்டுகிறது. ஆகவே, பிச்சையெடுக்கத் தடை போடுவதைவிட அவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஏற்படுத்தித் தருவதே முக்கியம். அதைச் செய்து தருவது அரசின் கடமை என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்த அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உள்ளடக்கம்.

இந்தத் தீர்ப்பு வெளியானதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு அரசு பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்திவிட்டது முக்கியமான அரசியல் வரலாற்றுக் குறிப்பு.

சில சொற்கள் வெல்லும், சில சொற்கள் கொல்லும் என்பார்கள். அதுபோல, வெண்குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோயைவிட அந்த நோய்க்கான பெயர் அதிகமான வலியை கொடுத்தது. குஷ்ட ரோகி என்ற சொல் அவர்களைக் கூனிக்குறுக வைத்தது. அவர்களது உள்ளக்குமுறலைப் புரிந்துகொண்டு, வெண் குஷ்டம் என்று சொல்வதற்குப் பதிலாக வெண்புள்ளி நோய் என்று அழைக்க வேண்டுமென அரசாணை வெளியிட்டார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.

முதலமைச்சர் கருணாநிதி எடுத்த துணிகர முடிவுகளுள் மதுவிலக்கு ஒத்திவைப்பு மிகமிக முக்கியமானது. ராஜாஜி, காயிதே மில்லத் என்று பல தலைவர்கள் விடுத்த கோரிக்கையை கருணாநிதி நிராகரித்து விட்டதாக இன்றளவும் விமர்சனம் தொடர்கிறது.

அக்காலகட்டத்தில் கருணாநிதி எடுத்த மிகப்பெரிய முடிவு என்று மதுவிலக்கு ஒத்திவைப்பைத்தான் சொல்லவேண்டும். அது கருணாநிதியின் ஆட்சி நிர்வாக வரலாற்றில் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவும்கூட.

ராஜாஜி காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. அவருக்குப் பின்வந்த முதலமைச்சர்கள் எல்லோருமே மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாகவே இருந்தனர். அண்ணா ஆட்சியிலும், அவருக்குப் பின்வந்த கருணாநிதியின் இரண்டாண்டு கால ஆட்சியிலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் அதன் காரணமாக தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. அத்தோடு, தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதில் நிர்வாகச் சிக்கல் இருந்தது.

மதுவிலக்கால் ஏற்படும் நிர்வாகச் சிக்கலையும் நிதிச்சிக்கலையும் சமாளிக்க இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தார் கருணாநிதி. ஒன்று, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவித்து, மதுவிலக்கை நாடு முழுக்க அமல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது முதல் கோரிக்கை. மதுவிலக்கை அமல்படுத்துவதால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பைச் சமாளிக்க மத்திய அரசு நிதியுதவி செய்யவேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

அந்த இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு முழுமையாக நிராகரித்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் மதுவிலக்கை ஒத்திவைப்பதென்று முடிவெடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. ‘கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்? என்று சொன்ன முதலமைச்சர் கருணாநிதி, கனத்த இதயத்துடன் மதுவிலக்குத் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

முதலமைச்சர் கருணாநிதி எடுத்த துணிகர முடிவுகளுள் மதுவிலக்கு ஒத்திவைப்பு மிகமிக முக்கியமானது. ராஜாஜி, காயிதே மில்லத் என்று பல தலைவர்கள் விடுத்த கோரிக்கையை கருணாநிதி நிராகரித்து விட்டதாக இன்றளவும் விமர்சனம் தொடர்கிறது. உண்மையில், மதுவிலக்கை ஒத்திவைத்த முதலமைச்சர் கருணாநிதி, மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் மதுவிலக்கைக் கொண்டுவந்துவிட்டார் என்றாலும்கூட, மதுவிலக்கை ரத்து செய்தவர் கருணாநிதி என்ற விமர்சனம் மட்டும் அரசியல் பக்கங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இன்னொரு முக்கியமான முடிவு, காவிரி நடுவர் மன்றம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. ஆம், 1971 ஜுலையில் காவிரி நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது கருணாநிதி அரசு. ஆனால் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு அலட்சியம் செய்ததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கருணாநிதி அரசு தீர்மானித்தது.

அந்த வழக்கில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தது தமிழ்நாடு அரசு. காவிரி நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் என்கிற நடுவர் மன்றத்தை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அன்றைய மைசூர் அரசு (இன்றைய கர்நாடக அரசு) மேற்கொண்டிருக்கும் கபினி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி, ஹேரங்கி உள்ளிட்ட புதிய நீர்ப்பாசனத் திட்டப் பணிகளை நிறுத்திவைக்கவேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

காவிரி நதிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சியில் கருணாநிதி எடுத்த முக்கியமான முடிவு இது. ஆனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தால் பிரச்னையைத் தீர்ப்பது கடினம், அதனால் வழக்கை வாபஸ் பெறுங்கள், பிரச்னையைத் தீர்த்துவைக்கிறேன் என்று பிரதமர் இந்திரா காந்தி கொடுத்த வாக்குறுதி பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு பின்னாளில் வாபஸ் பெறப்பட்டது சர்ச்சைக்குரிய நிகழ்வு.

தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, சோமசுந்தரம் கமிட்டியை அமைத்தார் முதலமைச்சர் கருணாநிதி. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படியே, சேரன் போக்குவரத்துக் கழகம், சோழன் போக்குவரத்துக் கழகம், பாண்டியன் போக்குவரத்துக் கழகம், பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஆகியன உருவாக்கப்பட்டன.

இப்படி, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் 150 நாட்களில் சமூகநீதி சார்ந்து, நிர்வாகம் சார்ந்து, அரசியல் சார்ந்து சில முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. அவற்றில் சில முடிவுகள் இன்றளவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. சில முடிவுகள் வியப்போடு விவாதிக்கப்படுகின்றன. ஆனால் அந்த முடிவுகளை எல்லாம் முதலமைச்சர் மு.கருணாநிதி சுயமாகச் சிந்தித்து, துணிச்சலாக எடுத்தார் என்பது இங்கே முக்கியமானது!

logo
Andhimazhai
www.andhimazhai.com