
வழக்கமான அந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ரயில்வே மைதானத்தில் ஒரு 40 அணியினர் குறுக்கும் மறுக்குமாக ஸ்டம்ப் ஊன்றி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அணிக்காக பீல்டிங் செய்வதை விட்டுவிட்டு, அடுத்த டீமின் பந்துகளை எடுத்துப் போடுவதை மட்டுமே வேலையாக செய்துகொண்டிருந்தார்கள். அந்த குழப்பத்தையும் மீறி அப்போதுதான் ஒரு கேட்ச் பிடித்த பெருமிதத்துடன் உற்சாகமாக நின்றுகொண்டிருந்த கருப்பசாமியின் போனில், “ஊரார் ஒதுக்கிவச்ச ஓவியம் என்னைப் பொறுத்தவரை காவியம்” ரிங்டோன் அடித்தது. போனில் வந்த செய்தியைக் கேட்டதும் ‘அப்பாடா’ என்று ஆசுவாசமானவன், அப்படியே போனில் ஐடி கம்பெனியில் பணிபுரியும் தனது தம்பி சுப்ரமணிக்கு கால் செய்தபடியே, மகிழ்ச்சியாக தனது பைக்கை நோக்கி ஓடினான்.
“டேய் சுப்பு, அப்பத்தா போயிருச்சாம்டா… எதித்த வீட்டு பால்சாமி போன் பண்ணான்.”
Indoor Turf Pitch-ல் தனது சக பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சுப்ரமணி தனது நண்பர்களிடம் கையசைத்தபடியே, உற்சாகமான மனநிலையுடன் தனது காரை நோக்கி வேகமாக நடந்தான். காரை ஓட்டியபடியே மனைவியிடம் ஊருக்குக் கிளம்பச்சொல்ல, மனைவி இன்னும் உற்சாகமானாள்.
“நல்லவேளைங்க, பாஸ்போர்ட் வேலையா ஊருக்கு போக நெனச்சுட்டு இருக்கறப்பயே உங்க கெழவி செத்துப் போச்சு, ஒரே செலவா முடிஞ்சுரும்... அப்புறம் நம்ம கார்லயே போயிரலாம்.. உங்க அண்ணன பஸ் புடிச்சி வரச் சொல்லிருங்க.”
“என்னம்மா நீ? இப்பதான் நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னேன், அவன் கேப் டிரைவர்தான.. எனக்கும் அவ்ளோ தூரம் ஓட்ட கஷ்டம். அவன் வந்தா அவனே ஓட்டிக்குவான்…”
“அவர் பொண்டாட்டி, புள்ளைங்களும் வருவாங்கள்ல, இடிச்சு, புடிச்சுட்டு போகனும்.. வழில நெனச்சத வாங்கி சாப்டக் கூட முடியாது.. துக்க வீடுன்னு உம்முன்னே வந்து தொலையும்ங்க…”
“அவனும் சந்தோஷமாதான்டி பேசுனான்..”
“என்னமோ, சரி, சீக்கிரம் வாங்க.. நான் பேக் பண்ணி வைக்கிறேன்”
அண்ணன், தம்பி இருவர் குடும்பத்தையும் தாங்கிக்கொண்டு கார் திருவாடானை நோக்கி சென்றுகொண்டிருந்தது. கருப்பசாமியின் மகன் ஒருபுறம் விஜய் பாடல்களாக போடச் சொல்ல, சுப்ரமணியின் மகள் சிவகார்த்திகேயன் பாடல்களாகப் போடச் சொல்ல, இரு குழந்தைகளும் ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் குதூகலமாக ஆடியபடி வந்தார்கள். கருப்பசாமியின் இரண்டாவது மகள், அவன் மனைவியின் மடியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
மணி இரவு எட்டை நெருங்க, பிணத்தைத் தூக்கும் வரை சாப்பிடமுடியாது என ஊருக்கு 15 கிலோமீட்டர் முன்னால் ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தி வயிறு நிரம்ப அனைவரும் சாப்பிட்டுக்கொண்டார்கள். சாப்பிட்டு முடித்ததும்தான் தெம்பாக அடுத்து என்ன செய்வது என குடும்பமாக தங்களுக்குள் ஆலோசிக்கத் தொடங்கினார்கள். கருப்பசாமி கார் ஓட்டியபடியே ப்ளான் போட ஆரம்பித்தான்.
“நாளைக்கி மத்தியானத்துக்கு மேலதான் அடக்கம் பண்ணனும், பூ, மாலை, ஐஸ்பெட்டி, கொட்டகைக்குலாம் எதிர்த்த வீட்டு பால்சாமிக்கு காசு போட்டுவிட்டு ரெடி பண்ணச் சொல்லிட்டேன். அக்கம், பக்கத்து ஊர் சொந்தம்லாம் ராத்திரிக்கே வந்துருவாய்ங்க. அவிய்ங்களுக்கு சரக்கு, கலர், காபிக்கு நம்மதான் போயி என்னன்னு பாக்கனும்.”
”மூணாம் நாள் காரியம் முடிச்சிட்டுதான கெளம்பனும்.. அதுக்குள்ள இந்த தடவையாச்சும் அக்காட்ட பேசி, அதை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடனும்டா...”. சுப்ரமணி சொன்னதும் ‘அது நடக்கிற காரியமா’ என தனக்குள் யோசித்துவிட்டு கருப்பசாமி மேலும் தொடர்ந்தான்.
“என்னத்த சம்மதிக்க வைக்கிறது… அப்பத்தா சொல்லியே கேக்காதது நம்ம சொல்லியா கேக்கப்போவுது… ஊருக்குள்ள வந்தாலே அக்காள விட்டுட்டு தம்பிங்க குடும்பம், குட்டின்னு செட்டிலாயிட்டாய்ங்கன்னு நக்கல் பண்றாய்ங்க, அதுக்கு பயந்துக்கிட்டே ஊரு பக்கட்டே வர முடியமாட்டுது, அக்காளுக்கு சொன்னா புரியவே மாட்டுது.” சுப்ரமணி விரக்தியாக சொல்ல,
அண்ணனும், தம்பியுமே பேசிக்கொண்டிருக்க, அவர்களின் மனைவிகள் தங்கள் கருத்தை உதிர்க்க வாயெடுத்தார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க.. இவ்ளோ நாள் அப்பத்தா இருந்துச்சு, வீட்ட விக்க முடியல. உங்கக்கா இனி தனியாதான இருக்கணும், இனியாச்சும் அந்த வீட்டை வித்து பங்கு போடணும்ல. உங்க அக்காவ வேற வீட்டுக்கு அனுப்பி வச்சாதான இந்த வீட்ட விக்க முடியும். அக்கா ஒத்துக்கமாட்டுதுன்னே இன்னும் எத்தன வருஷத்துக்கு சொல்லிட்டு இருப்பீங்க.”
கருப்பசாமியின் மனைவி கலா பேசுவதில் இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே சுப்ரமணியின் மனைவி வனிதாவுக்கு பொதுவாக ஒத்துப்போகும். கலா சொல்லியதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருந்த வனிதா, தானும் ஏதாவது பேசவேண்டுமே என பேச ஆரம்பித்தாள்.
“உங்கக்கா ஒத்துக்கிட்டாலும், இனி அது நடக்குற விஷயமா சொல்லுங்க. உங்கக்காவுக்கு 42 வயசாயிடுச்சு. யாரு வரிசைல வராங்க உங்கக்காவ கட்டிக்கிறதுக்கு, அத்தாச்சி கல்யாணமே பண்ணலன்னாலும் சரி, வீட்டை விக்கிறத இப்பவே பேசிடுங்க. அத்தாச்சி வேணா ஊருக்குள்ளயே வேற வீட்டுல வாடகைக்கு இருந்துக்கட்டும். அவுக எப்ப கல்யாணம் பண்ண, நம்ம எப்ப இந்த பிரச்சினைய ஓச்சுவிட.”
அனைவரும் ஒருமனதாக அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுப்பதற்கு முன்பாகவே சாவுமேளச் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. தாங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை தற்காலிகமாக ஒத்திப் போட்டுவிட்டு, முகத்தை சோகமாக வைக்க தயாரானார்கள்.
தெருமுனையிலேயே காரை நிறுத்திவிட்டு, எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக, தலைகுனிந்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். கொட்டகைக்குள்ளும், கொட்டகைக்கு வெளியேயும் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த ஊர்க்காரர்களும், உறவினர்களும் இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து கருப்பசாமி, சுப்ரமணியின் கைகளைப் பற்றிக்கொண்டு தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். அப்பத்தாவின் உடலைச் சுற்றி அத்தை, பெரியம்மாமார்களும், அப்பத்தாவின் அடுத்த வீட்டு சங்கதி தோழிகளும் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார்கள். தமிழரசி அப்பத்தாவின் தலைமாட்டில் பேயறைந்ததுபோல் அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் அவளின் வாழ்வில் அடுத்து என்ன என்ற கேள்வி உறைந்திருந்தது.
தலைமாட்டில் உறைந்திருந்த தமிழரசி தம்பிகளைக் கண்டதும், அவ்வளவு நேரம் தேக்கி வைத்திருந்த மொத்த அழுகையையும் கொட்ட அவர்களை நோக்கி ஓடிவந்தாள். அவர்கள் இருவரையும் இரு கைகளின் பக்கவாட்டில் அணைத்தபடி வெடித்து அழத் தொடங்கினாள். அந்த சூழலை சரிவர அணுகத் தெரியாத இருவரும் தங்களுக்குள் தர்மசங்கடமாக பார்த்துக்கொண்டார்கள். எப்படி அக்காவை விடுவிப்பது என்ற குழப்பத்தில் இருக்க, நல்லவேளையாக எதிர்த்த வீட்டு பால்சாமி வந்து அக்காவிடமிருந்து தம்பிகளைப் பிரித்தெடுத்து, ஓரமாக வரும்படி கூறினான்.
கருப்பசாமி அந்த சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாமல், கண் ஜாடையிலேயே ‘என்னடா?’ எனக் கேட்க, அவன் கட்டை விரலால் ஆள்காட்டி விரலை சுண்டிக் காட்டி, பணத்தேவையை குறிப்பால் உணர்த்தினான். சுப்ரமணி கருப்பசாமியிடம் கண் ஜாடையில் அப்பத்தாவைக் காண்பிக்க, ‘ஒரு நிமிடம்’ என மீண்டும் ஒரு கண் ஜாடை செய்து இருவரும் அப்பத்தாவை நோக்கி சென்றார்கள். இருவரது மனைவிகளும் ‘அழுவதா? வேண்டாமா?’ என்ற குழப்பத்தில் ஓரமாக நிற்க, குழந்தைகள் இறங்கிய வேகத்தில் வீட்டுக்குள் சென்று, இவர்கள் வந்தால் தங்குவதற்கென இருக்கும் அறையில் அசதியில் படுத்துக்கொண்டனர்.
ஆங்காங்கே அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும் இருந்த உறவினர்கள், ஊர்க்காரர்கள் நெடுநாள் கழித்து சந்தித்துக்கொண்ட ஆர்வத்தில் அவர்களுக்குள் பகிராமல் விட்டுப்போன செய்திகளையும், தாக்கல்களையும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். தமிழரசி அத்தாச்சியைத் தவிர்த்து யாருக்கும் அப்பத்தா இறப்பு வருத்தமளிக்கவில்லை என்பது போலிருந்தது அங்கிருந்த சூழல்.
கருப்பசாமியும் சுப்ரமணியும் கடமைக்கு அப்பத்தா முன் 30 நொடிகள் நின்றுவிட்டு, அப்பத்தாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு பால்சாமியிடம் வந்தார்கள்.
“என்னடா பால்சாமி, 20000 காலியாயிடுச்சா அதுக்குள்ள…”
“மச்சான், எல்லாத்துக்கும் அட்வான்ஸ்தான் குடுத்துருக்கேன், தமிழ் அத்தாச்சியும் அவுகட்ட இருந்த ஏழாயிரத்த கொடுத்தாக. இருபத்தேழாயிரமும் முடிஞ்சுது மச்சான். எழுதி வெச்சுருக்க கணக்கெடுத்து வேணா காமிக்கட்டா…”
பால்சாமி முகம் சட்டென சுருங்கியதை கவனித்த கருப்பசாமி, சுப்ரமணி கையை பிடித்து ‘கொஞ்சம் இரு’ என்பது போல் சொல்லிவிட்டு,
“டேய் மாப்ள, அப்டி சொல்ல வரலடா, நீ இங்க என்னென்னத்துக்கு குடுத்தன்னு தெரியாதுல.. சரி வா, ஏடிஎம் வரைக்கும் போய்ட்டு வருவோம்.. சொச்சத்த வேணா நான் பாத்துக்கறேன்” என பால்சாமியை கூட்டிக்கொண்டு பைக்கில் கிளம்பினான்.
வனிதாவும், கலாவும் பயண அசதியில் பேருக்கு 10 நிமிடங்கள் அப்பத்தா அருகில் நின்றுவிட்டு, உள்ளே போய் அறைக் கதவை சாத்திக்கொண்டு பிள்ளைகளுக்குப் பக்கத்தில் அசதியில் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“காலைலயே தூக்கச் சொல்லிரலாம்ல… எதுக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு வச்சிருக்காக.. தூக்குற வரைக்கும் சாப்பிடவும் விடமாட்டாங்க, எவ்ளோ நேரம் பட்டினியா கெடக்குறது” என கலா ஆரம்பிக்க, வனிதா ஆசுவாசமாக படுத்துக்கொண்டு, “அதுலாம் என் புருஷன்ட்ட சொல்லிட்டேன், காலைல ராசி மங்கலத்துல நமக்கு மட்டும் ரொட்டி-சால்னா வாங்கியாரச் சொல்லிருக்கு.. மதியத்துக்கு எல்லார்க்குமே சாப்பாடு சொல்லிருக்கு....” என ஆறுதல் சொல்ல கலா சற்றே நிம்மதியானாள்.
வந்திருந்த உறவினர்களில் சிலர் அவரவர் வீட்டுக்கு கிளம்ப, கொஞ்சம் பேர் அக்கம் பக்கத்து வீட்டு திண்ணை, மாடிகளுக்கு உறங்க சென்றார்கள். கருப்பசாமியும், சுப்ரமணியும் அறைக்குள் சென்று தங்களது குடும்பத்தினருடன் உறங்கச் சென்றுவிட்டார்கள்.
அந்த இரவின் அமைதியில் அப்பத்தா ஐஸ் பெட்டியில் உறங்க, தமிழரசியும், சின்ன அத்தையும் மட்டும் அப்பத்தா சவத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். தமிழரசி அப்பத்தா முகத்தையே பார்த்துக்கொண்டு, அப்பத்தா மேல் கிடக்கும் மாலைகளில் இருந்து சாமந்திப் பூவை உதிர்த்துக்கொண்டிருந்தாள். என்ன நினைத்தாளோ சாமந்திப் பூவிதழ்களை விரலுக்கும், உதட்டுக்கும் கொண்டு சென்று குழந்தை போல் பீப்பீ ஊதினாள். அதை கவனித்த சின்ன அத்தை அவளை அணைத்துக்கொண்டு, “இனிமே உனக்கு யாருடி இருக்கா? இன்னும் குழந்தையாவே இருக்கியேடி..” என அழ, அதுவரை அப்பத்தா முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் சின்ன புன்னைகை எட்டிப் பார்த்தது.
”எனக்குதான் நான் இருக்கேன்லத்தே.. இந்த ஊர் இருக்குலத்தே..” புன்னகையினூடாக கண்கள் கலங்கி அதை சொல்லிவிட்டு மீண்டும் அப்பத்தா முகத்தையே வெறிக்கத் தொடங்கினாள் தமிழரசி.
மறுநாள் அப்பத்தாவைப் புதைத்துவிட்டு வந்து ஆண்கள் கைநனைத்தார்கள். பின் பெண்கள் கைநனைத்தார்கள். வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், கேதம் முடிந்து களைந்து போக, சித்தி, இரண்டு அத்தைகள் மற்றும் சில உறவினர்கள் உட்பட 10 பேர் இருந்தனர். கருப்பசாமி குடும்பம், சுப்ரமணி குடும்பம், தமிழரசி அவர்கள் முன்னால் இருக்க, சித்தி பேச்சை ஆரம்பித்தாள்.
“தமிழு… இம்புட்டு நாளு அப்பத்தாவ பாத்துக்க ஆளில்லன்னே ஒப்பேத்திட்ட.. இனிமேலும் அப்டி விட்டுட்டுருந்தா ஊர் வாய்க்கு பதில் சொல்ல முடியாதுடி.. சொன்னாக் கேளு..”
தமிழரசி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“இன்னும் கொழந்தையாவே வேற இருக்கா... கம்மாய்ல போயி பயலுகளோட ஆட்டம் போடுறா, சின்ன சின்ன சில்வண்டுகளோட வீதில வெளாண்டுக்கிட்டு இருக்கா... அவ சோட்டுப் புள்ளைக பேரன் பேத்தி எடுத்துட்டாளுக, இவளுக்கு ஒரு புள்ளை பெத்து பாக்கனும்ன்னு ஆச வரமாட்டுதே” என சின்ன அத்தை புலம்ப, அப்போதும் தமிழரசி பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.
பெரிய அத்தை அவள் கழுத்து, கைகளை பார்த்து விரக்தியாக, “இந்த காலத்துல எவளாச்சும் கழுத்துல ஒரு நகை நட்டு இல்லாம மொட்டையாத் திரிவாளுகளா? கால்ல கொலுசு போடுறதில்ல, கைல வளையல் போடுறதில்ல, இவ மனசுல என்னதான் நெனச்சுட்டு இருக்கான்னு தெரியலயே..” என தமிழரசி கொமட்டில் ஒரு குத்து வேறு குத்தினாள். தமிழரசி வாயை சுழட்டி அந்த வலியை சரி செய்துகொண்டாள்.
கலாவும், வனிதாவும் தங்களது கணவர்களை பார்த்து, “நீங்க ஏன் சும்மா இருக்கீங்க?” என்பது போல் கண்களால் ஜாகை செய்ய, சற்றே தயங்கி ஆனால் கோபமாக கருப்பசாமி பேசினான்.
“உலகத்துல எங்கயாச்சும் அக்காள விட்டுட்டு தம்பிங்க கல்யாணம் பண்ணி பாத்துருக்கியா? சொல்லு… நீ முடியவே முடியாதுன்னு ஒத்தக்கால்ல நின்னதுனாலதான் நாங்க வேற வழியே இல்லாம, ஒவ்வொரு வாட்டி வர்றப்பயும் மேக்கொண்டு எதுவும் பேசமுடியாம போயிடுது, எத்தன வருஷமா இந்த அசிங்கத்த எங்களுக்கு நீ குடுத்துட்டே இருக்கப் போற.. ஊருக்குள்ள ஒரு விஷேசம், சாவுன்னு வர முடியல.. ஒரு சொந்தக்காரன்ட்ட நின்னு பேச முடியல, எவன பாத்தாலும் இதே கேள்வி.. சரி உனக்கு 40 வயசான பின்னாடியாச்சும் கேக்காம விடுவானுகன்னு பாத்தேன்... இப்பதான் அதிகமா கேக்குறானுக.. அதுனால இந்தவாட்டி சும்மா விட்டுட்டுப் போறதா இல்ல.. நீ சம்மதிச்சுதான் ஆகனும்.. நாங்க எங்கருந்தாவது மாப்பிள்ளைய கொண்டாறோம், அப்பத்தாவே போயிருச்சு.. இனிமே தனியா இங்கன கெடந்து என்னத்த அள்ளி குமிக்கப் போற..?” கருப்பசாமி சற்று காட்டமாகவே பேசிவிட்டான்.
தமிழரசி கருப்பசாமியை உயிர்போகும் கடைசி நொடியில் இருப்பதுபோலான ஒரு பார்வை பார்த்தாள். கருப்பசாமியால் அந்த பார்வையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு நாள் இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்வாள். அல்லது முறைப்பாள். இப்படி ஒரு கலங்கிய பார்வையை, ஏக்கப் பார்வையை அவனால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவளின் இத்தனை நாள் வாழ்க்கையும் மொத்தமும் கலந்த மாதிரி ஒரு பார்வை. அவளுக்கு எது சந்தோஷம் என மற்றவர்கள் ஏன் முடிவு செய்கிறார்கள் என்பது போலான பாவப் பார்வை.
கருப்பசாமி ஒரு நிமிடம் ஆடிப்போய் கண்களை மூடிக்கொண்டான், சுப்ரமணியை ’இதற்கு மேல் எதுவும் கேட்கவேண்டாம்’ என்பதுபோல கருப்பசாமி பார்த்தான். கருப்ப சாமியும், சுப்ரமணியும் ஒருவரையொருவர் தீர்க்கமாக பார்த்து, பின் தமிழரசியை பார்த்தனர்.
தம்பிகளுக்கும் அக்காக்களுக்கு ஊர்ப்பக்கம் பொதுவான ஒரு உணர்வும், இணக்கமும் உண்டு.
தம்பிகள் விரல் சூப்பிக்கொண்டிருக்கிற பருவத்தில் அக்காக்கள் கணிதப்பாட ஆணிமணிச் சட்டத்தில் 436-ஐக் கோர்த்து வாத்தியாரிடம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அம்மா இல்லாத சமயங்களில் தம்பிகளுக்கு குண்டிகழுவி விட்டார்கள்.
தம்பிகள் ஆங்கில எழுத்துகளை சேர்த்து எழுத பழகியபோது, அக்காக்கள் நியூட்டன் விதிகளுக்கு தாவியிருந்தார்கள். பனம்பழக்கொட்டை தின்ற தம்பிகளின் முகத்தைக் கழுவிவிட்டார்கள்... கம்பங்களி நடுவில் குழிபறித்து நல்லெண்ணெய் ஊற்றி பெரிய வெல்லக்கட்டியை உடைத்துவைத்தார்கள். ஒரு டஜன் காசில் அரை டஜன் வளையல்கள் வாங்கிக்கொண்டு, மீதி காசில் தம்பிகளுக்கு சர்பத் வாங்கிக் கொடுத்தார்கள்.
தம்பிகள் நியூட்டன் விதிகளுக்கு வந்தபோது அக்காக்கள் வடிவியலில் காம்பஸில் வட்டம் போட்டு, கிராஃப் பேப்பரில் பென்சில் வைத்து இழுக்க ஆரம்பித்தார்கள். மச்சான்கள் வாங்கிக் கொடுத்த ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை கொண்டுவந்து பாதி பிய்த்துத் தந்தார்கள்(இதில் மட்டும் முழுதாகக் கிடைக்காது). பாட்டுபுக் வாங்கி பாடல்களை மனப்பாடம் செய்து படிக்க ஆரம்பித்தார்கள். தம்பிகளுக்கு விஜயகாந்த் படம் போட்ட பொங்கல் வாழ்த்து வாங்கிவந்து கொடுத்தார்கள்.
தம்பிகள் பத்தாவது தாண்டுகிறபோது, அக்காக்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு செங்கற்சூளைக்கு லோடு ஏற்ற சென்றார்கள். பரமக்குடியில் படம் பார்க்க, ரொட்டி சால்னா வாங்கித் தின்ன காசு தந்தார்கள். அவர்களின் செய்முறைத் தேர்வுக்கு ஹெர்பேரியத்திற்கு குவளைப் பூக்கள் பறித்து வந்து தந்தார்கள்.
தம்பிகள் கல்லூரிக்கு செல்லும்போது வெள்ளக்கோவில் பனியன் கம்பெனியில் பீஸ் கட் வேலைக்குப் போய் தம்பிகளுக்கு பீஸ் கட்டினார்கள். அப்பாவுக்கு தெரியாமல் கைச்செலவுக்கு காசுகொடுத்தார்கள். வீட்டில் பொய்க் கணக்கு சொல்லி நாடகமாடினார்கள்.
தம்பிகளுக்கு வேலை கிடைக்க பாகம்பிரியாளுக்கு நேர்ந்துவிட்டு மொட்டை போட்டுக்கொண்டார்கள். கல்யாண மேடையில் பம்பரமாய் சுழன்று தம்பிகளுக்கு முன்னால் நின்று கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.
தம்பிகள்…?
சுப்ரமணியும், கருப்பசாமியும் இறுதியாக தத்தம் மனைவிகளை பார்த்தார்கள். கருப்பசாமி சற்று நிதானித்து தீர்க்கமாக தொடங்கினான்.
”மூனாம் நாள் காரியத்தை நாளைக்கே பண்ணிருவோம்.. காலைல சேதுக்கரை போய் திதி குடுத்துட்டு, மதியமா படையல் போட்டுட்டு நாளைக்கு ரவையே கெளம்பிடுவோம்.. மத்த பேச்சுலாம் இனி எப்பவும் அக்காட்ட பேசிக்க வேணாம். அதுக்கு எப்ப என்ன வேணும்ன்னு அதுக்கே தெரியும்? அது பாத்துக்கும்.. ”
அதுவரை எதுவும் பேசாமல் இருந்த தமிழரசி மெல்ல வாயை திறந்தாள்.
“தம்பி, அக்கா பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சு பேசுனதுக்கு நன்றிடா... அதுமாதிரி அக்காக்கும் எல்லாம் புரியும்... எனக்கு நல்லது நடந்துராதான்னு ஏங்குற உங்க பாசமும் புரியும். உங்க ஜீவன கஷ்டமும் தெரியும். ஏன் என்னால நீங்க பேசுறதலாம் தாங்கிக்க முடியலன்னா இன்னிக்கேவா இதுலாம்... பொதைச்ச ஈரம் காஞ்சுருக்குமா அங்க? இன்னொரு வாட்டி எதும் விஷேசத்துக்கோ, இல்ல திருவிழாக்கோ வர்றப்ப, நீங்க என்னலாம் நினைச்சு இங்க வந்தீங்களோ அது எல்லாத்துக்கும் நல்ல பதிலா சொல்றேன். அப்புறம் உங்க பொண்டாட்டிமார்களுக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். பாவம் என் தம்பிகளை விட உங்களுக்குதான் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாதது பிரச்சினையா இருக்குன்னு தெரியுது. இந்த வீடு என் தம்பிகளுக்குதான், எப்ப விக்க நெனைக்கிறீங்களோ அப்ப வீட்ட காலி பண்ணிக்கிறேன். என்னை எனக்கு பாத்துக்க தெரியும். நான் இந்த ஊரோட மகாராணிடி என் அழகு நாத்தனாளுகளா. கவலைலாம் வேண்டாம்டி என் செல்ல வாப்பட்டிகளா...”
என சொல்லிவிட்டு, தம்பி மனைவிகளின் கன்னத்தை கிள்ளி கொஞ்சிவிட்டு, ஒரு தேங்காப்பூத்துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, செருப்பு போடாத கால்களுடன் நெருஞ்சிப் புதர் படர்ந்திருக்கும் கொல்லைப்புற ஒற்றையடிப் பாதையில், காலில் குத்தும் நெருஞ்சி முட்களை தட்டிவிட்டுக்கொண்டே நடந்து செல்கிறாள்.
அங்கிருப்பவர்கள் அவளை ஆச்சர்யமாய் பார்க்கிறார்கள். அவள் எங்கு செல்கிறாள் என்ற குழப்பமெல்லாம் அவர்களுக்கு வேண்டாம். கண்மாய்க்கு சென்றால் இக்கரைக்கும், அக்கரைக்கும் நீச்சல் அடித்து, முக்குளிப்பான் பறவைகளுடன் முங்கி முங்கி எழுந்து, தன் ஈரப் பாவாடையில் முட்டை விட்டு விளையாடிக் கொண்டிருப்பாள்.
கு.விநாயகமூர்த்தி, திரைத்துறையில் துணை இயக்குநர். சென்னையில் வசிக்கிற தென் தமிழகத்துக்காரர். கல்லூரிக்காலம் முதல் பல்வேறு வார இதழ்கள், இணைய இதழ்களில் வாழ்வியல் கவிதைகள் எழுதி வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை கிராமிய வாழ்வின் அடிப்படையில் 'நூலாம்படை' மற்றும் 'சினைக் கெளுத்தி' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.