நான் முதலில் வாங்கிய சம்பளம் 400 ரூபாய்

ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கர்
Published on

பெண் குழந்தைகள் சிறப்பிதழுக்காக ஊடக ஆளுமை ஒருவரிடம் பேசவேண்டும் என்றதுமே நம் மனதில் முதலில் தோன்றியவர் ப்ரியா பவானி சங்கர்தான். தொலைக்காட்சியிலிருந்து திரைப்படத்துறைக்குச் சென்று முன்னணி நாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர். இலக்கியம் படிக்கக்கூடிய அபூர்வமான திரை நாயகி. அவருடைய வாழ்க்கை, ஊடகப் பயணம் குறித்துப் பேசினோம். பல விஷயங்களை மனந்திறந்து பேசினார்:

 ‘அப்பா ஒரு வங்கி ஊழியர் என்பதால் அடிக்கடி மாறுதல் வரும் . பள்ளிப்படிப்பை பல ஊர்களில் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது எனக்கு அது சிரமமாகவே இல்லை. ஆண்டுக்கு ஒரு பள்ளி என்றபோதும் உற்சாகமாகவே அந்த மாற்றங்கள் எதிர்கொண்டிருக்கிறேன். பல்வேறு சூழல்களுக்கு எதிர்காலத்தில் என்னைத் தகவமைத்துக்கொள்ள அது உதவியாக இருந்ததாகவே நினைக்கிறேன்.

நான் ஊடகத்துக்கு வரவேண்டும் என சின்ன வயதிலேயே தோன்றிவிட்டது. அதற்குக் காரணம் வாசிப்புப் பழக்கம்தான் என நினைக்கிறேன். சாதாரணமான நடுத்தரக் குடும்பப் பின்னணிதான் என்னுடையது! நான் மூன்றாவது படிக்கும்போதே காந்தியின் சத்தியசோதனையின் ஆங்கிலப் பதிப்பை அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்தார். இந்த வயசுல கொடுக்கிற புத்தகமா அது என அம்மாகூட கிண்டல் பண்ணினாங்க. நான் அதை ஐந்தாம் அல்லது ஆறாவது வகுப்புப் படித்தபோதுதான் வாசிக்க முடிந்தது. எப்போதும் புத்தகங்களைத்தான் அப்பா பரிசாகக் கொடுப்பார். அப்படித்தான் ஏராளமாக வாசித்தேன். தமிழில் ஜெயகாந்தன், கல்கி, கலைஞர்னு நிறைய படிச்சிருக்கேன். அந்த வாசிப்பில் ஜெயகாந்தனின் ஒருவீடு ஒரு மனிதன் ஒரு உலகம் எனக்குப் பிடிக்கும். கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன் ஞாபகம் இருக்கிறது. ஆங்கிலத்தில் சிட்னி ஷெல்டனில் தொடங்கி, கிளாசிக் வரை எல்லாம் வாசிப்பேன். இப்போது கையில் இருக்கிற புத்தகம் ‘தி திங்க்ஸ் வீ லீவ் அன்பினிஷ்ட்’(The things we leave unfinished)

பள்ளியில் ஆங்கில வழியில்தான் படித்தேன். நான் படித்த பள்ளிகளில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும். தமிழில் பேசினால் உதைவிழும். ஆனாலும் வீட்டில் தமிழ் வாசிப்பு என்பது பழக்கத்தில் வந்துவிட்டது. அதுவே இன்றைக்கு நவீன இலக்கிய வாசிப்பு வரை தொடர்கிறது.

ஆனால் ஒரு கவலை இருக்கிறது… அன்று நான் வாசித்த புத்தகங்கள், கேட்ட மேடைச் சொற்பொழிவுகள் எல்லாம் எனக்கு மிக உதவியாக இருந்தது. இன்றைக்கு அம்மாதிரி இளைஞர்களிடம் பேச என் தலைமுறையில் இருந்து யாரும் உருவாகி இருக்காங்களா என்று யோசித்துப்பார்த்தால் பெரிதாக எதுவும் தெரியவில்லை.. அதே போல வாசிப்புப் பழக்கம் இருக்கா என்றும் தெரியலை. 20 பக்கம் படிக்கிற ஒரு விசயத்தை பத்துநொடி வீடியோவாக இன்னிக்கு பையன்கள் பார்க்கிறாங்க. ஆனால் அந்த இருபது நிமிடம் வாசிக்கும்போது அவனது மூளையில் ஒண்ணு நடக்குமே. அந்த விஷயத்தை இப்ப தவறவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இந்தத் தொழில்நுட்பம் என்ன பண்ணும் எனத் தெரியவில்லை.

பனிரெண்டாவது முடிச்சதும் தமிழ்நாட்டுல எல்லாரும் பண்றமாதிரி நானும் பொறியியல் படிக்கச் சேர்ந்தேன். அதே சமயம் பார்ட் டைமா மீடியாவில் வேலையும் செய்ய ஆரம்பிச்சேன். நாலுமணிக்கு கல்லூரி முடிஞ்சதும் அங்கேர்ந்து கிளம்பி வந்துடுவேன். ஜீ தமிழ், என்டிடிவி-ஹிந்து, பொதிகை, தந்தி டிவி இப்படி பல இடங்களில் பார்ட் டைமாக நிகழ்ச்சித் தொகுப்பு, களச் செய்தி சேகரிப்பு என வாய்ப்புகள் கிடைத்தன. நிறைய கற்றுக்கொண்டேன். அன்று ஒருநாள் முழுக்க வேலை செய்து 400 ரூபாய் வாங்கியிருக்கேன். அதுதான் என்னோட முதல் சம்பளம்! படிப்பு முடிஞ்சதும் மூன்றுமாதம் இன்போசிஸ்ல வேலை பார்த்தேன். ஆனால் மீடியா மேல இருந்த ஆர்வம் போகல. புதிய தலைமுறை சானல் தொடங்கியபோது அதில் முழுநேர வேலைக்குச் சேர்ந்துட்டேன். அங்கதான் முழுமையாக கல்லூரிப் படிப்புக்கு வெளியே இருந்த உலகத்தைத் கத்துகிட்டேன். நல்லபடியா கற்றுத்தந்த இடம் அது. இரண்டு ஆண்டுகள் இருந்தேன். அப்ப ஒரு மார்க்கெட்டிங் கோர்ஸ் பண்ணேன். அதில் ஒரு பிராஜெக்ட் பண்ண வேண்டி இருந்தது. அதற்காக வேலையை விட்டேன். அப்ப விஜய் டிவியில் சீரியல் வாய்ப்பு வந்தது. மாதம் பத்துநாள் வேலை பார்த்தால் போதும்! ஒன்றரை ஆண்டுகள் அதில் தொடர்ந்தேன். பிறகு சிட்னியில் போய் மார்க்கெட்டிங் படிப்பை முடிச்சுட்டு வந்தப்பதான் மேயாத மான் படத்தில் நடிக்க அழைத்தார்கள்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என்று எவ்வளவு பேர் கனவோடு காத்திருக்காங்க என்பதை சீரியலில் நடித்தபோது உணர்ந்திருந்தேன். அதனால் தேடி வரும் வாய்ப்பை விடவேண்டாம் என்னதான் நடக்குது பார்த்திடுவோம் என சினிமாவுக்குள் நுழைந்தேன். ஏற்கெனவே டிவி சீரியலில் நடித்திருந்த அனுபவம் இருந்ததால் சினிமா நடிப்பு எளிதாக இருந்தது. ஒவ்வொரு படத்துக்கும் நடிப்பு பயிற்சிகள் இருக்கும். சக நடிகர்களிடம் இருந்து கத்துக்கிடலாம். சீரியலுக்கு வருவதற்கு முன்பு எனக்கு நடிப்பு அனுபவமே கிடையாது. பள்ளிக்கூட நாடகங்களில் கூட நடிச்சது இல்லை. ஆனா டிவி சீரியலில் ஒரு நல்வாய்ப்பு என்ன என்றால் நமது நடிப்பை சில எபிசோடுகளிலே வளர்த்துக்கொள்ள முடியும். அது எனக்கு உதவியது. தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற நிலையை எட்டி இருக்கிறேன்.

நான் நடிச்சதுல என்ன கேரக்டர் எனக்குப் பிடிச்சதுன்னு கேட்டால் ராதாமோகன் சார் இயக்கத்தில் நடித்த பொம்மை படத்தில் நடித்த என் கதாபாத்திரத்தைச் சொல்வேன். ஓமனப்பெண்ணே படமும் பிடிக்கும்.

இந்த ஏழு ஆண்டுகளில் உண்மையாக சொல்லணும்னா, வெளிலேர்ந்து சினிமாவைப் பார்க்கறவங்க சினிமா துறை இப்படித்தான்னு சொல்றாங்க இல்லையா… ஆனால் அது உண்மையா பொய்யா என்று இந்த ஏழு வருஷ அனுபவத்துக்குப் பின்னாலும் என்னால் சொல்ல முடியவில்லை. ஒருவேளை நான் கடந்து வந்த பாதை நல்லா இருந்திருக்கலாம். தொலைக்காட்சியில் இருந்து நான் வந்ததாக இருக்கலாம்.. எல்லோருமே என்கிட்ட அன்பாக நடந்துகொண்டார்கள். நடத்தினார்கள். யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அதனாலேயே எல்லாம் நல்லாவே இருக்குது என்று சொல்ல முடியாது. ஒருவேளை என் காதுக்கும் கண்ணுக்கும் வராமலே போயிருக்கலாம். கனவுகள் நிறைய இருக்கும் இடத்தில், பணம் நிறைய புழங்கும் இடத்தில் எப்போதுமே ஆபத்துகளும் நிறையவே இருக்கும். நம்மால் இந்த உலகத்தை உடனே மாற்றிவிட முடியாது. ஆனால் அதை எதிர்கொள்ளும் மனவலிமையுடன் நாம் இருக்கவேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன்.

தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வது மிக சாதாரணம். அதைச் செய்து பழகியிருக்கிறேன். அதனால் சினிமாவிலும் நேரம் ஆனாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்க்கிறேன். தயாரிப்பாளர் தரப்புக்கு அதனால் என் மீது நல்ல அபி்ப்ராயம் இருக்கலாம்!

நடிக்க வருகையில் நாம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்போம் என்று தெரிந்து தான் வருகிறோம். அதனால் நாம் சமூக ஊடகங்களில் வெளியிடும் சாதாரண கருத்தையும் ஊடகங்கள் பெரிதாக ஊதிப் பெருக்கும்போது புகார் எதுவும் சொல்வதற்கில்லை. ஒவ்வொருவர் எப்படி அதைச் செய்கிறார்கள் என்று பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆரம்பத்திலேயே இது இப்படித்தான் இருக்கும் என்ற ஞான நிலைக்கு நான் வந்துவிடவில்லை. அப்புறம் அது பழகிவிட்டது. ஆனால் பொதுவாக ஊடகத்தினர் எனக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்காங்க என்றுதான் சொல்வேன்.

பெண் குழந்தைகளைப் பற்றிய பார்வை இப்போது மாறி இருக்குன்னுதான் நினைக்கிறேன். இந்த தலைமுறையில் அப்பா-அம்மா இருவருமே வேலை பார்க்கிற ஒரு குடும்பத்தில் வளரும் பையனுடைய மனநிலை, பெண்களை மதிக்கிற விஷயத்தில் போன தலைமுறையை விட மேம்பட்டுதான் இருக்கும்னு நினைக்கிறேன். அதாவது போன தலைமுறை அப்பாக்களை விட இந்த தலைமுறை பையன்கள், பெண்களை மேலும் மதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்! எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் பெண்களை படிக்க வைத்துவிடும் சமூகமாக நாம் மாறி இருக்கிறோம். கல்லூரிக்கு கலைவிழாக்களில் பேசப்போகும்போது நான் சொல்வது உண்டு. ‘காமராஜர் படிச்சாரா? கலைஞர் படிச்சா ரான்னு சிலர் கேப்பாங்க. இதெல்லாம் மிக தவறான உதாரணம். அவங்க பள்ளிக்குப் போய் உட்கார்ந்து படிக்கலையே தவிர வெளியே அவங்க நிறைய படிச்சாங்க. பெண்கள் முக்கியமா கவனிக்கணும். என்னோட வேலைக்கு படிப்பே தேவையில்லை என நினைச்சாலும்கூட படிப்பு என்பது வெறும் அறிவு மட்டும் கிடையாது. உன்னுடைய மூளை எப்படி வேலை செய்யுது, உன் ஆளுமை எப்படி உருவாகுது அப்படிங்கற எல்லாத்துக்குமே கல்விதான் அவசியம். அதனால் படித்து உங்கள் நிலையை உறுதியாக்கிக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கனவுகளைத் துரத்துங்கள்’ என்றுதான் சொல்வேன். நான் பத்தாவதுதான் படிச்சேன்; இந்த உயரத்துக்கு வரலையா? இந்த மாதிரி ஹீரோ ஆகலையா? என்று சிலர் சொல்லலாம். ஆனால் அது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். எத்தனை பேரு அந்தமாதிரி ஆகமுடியும்? ஹீரோ ஆகலைன்னா அவர் என்னவா ஆகியிருப்பார்? அதனால் படிப்பை முடிச்சிட்டு என்னவேணும்னாலும் பண்ணுங்க என்று சொல்வேன். நாம் கீழே விழும்போது நம்மைத் தாங்கிப் பிடிக்கறதுக்கு ஒண்ணு இருக்கணும். அது படிப்பாகத்தான் இருக்க முடியும். இன்னொருத்தங்க தாங்கிக்கொள்வார்கள் என்று காத்திருக்க முடியாது!

ஊடகத்துக்கு வரணும் என நினைக்கும் பெண்குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்புவது….

இன்று ஊடகம் என்பது வெறும் ஆன் ஸ்கிரீன் மட்டும் இல்லை. எவ்வளவு அம்சங்கள் இருக்கின்றன. கையில் போன் வைத்திருக்கும் எல்லோரும் ஊடகக்காரர் ஆகிவிடும் காலம் இது. பெண்கள் முகம் தெரியாமல் இருக்கவேண்டும் என்று இருந்த கோடுகள் இன்றைய சமூக ஊடகக் காலத்தில் முற்றிலும் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டன. ஆகவே இன்று செய்யவேண்டியது எல்லாம் என்ன ஆகவேண்டுமோ அதற்கான முயற்சி மட்டுமே. கனவு தான், ஆசைதான் முக்கியம். ஆனால் அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தோற்றுப்போவதில் தவறே இல்லை. உனக்கு இவ்வளவுபோதும்; இவ்வளவுதான் உன்னால் முடியும் என தீர்மானிக்க அடுத்தவர்களை விடாதீர்கள். ஊடகம் மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். பாடப்புத்தகங்களில் படிப்பதையும் தாண்டி மேலும் பல விசயங்களிலும் ஆர்வம் வேண்டும். கண்டிப்பாக எதுவும் கையில் கொண்டுவந்து யாரும் தரமாட்டார்கள்! முயற்சி செய்யுங்கள்! முழுமனசுடன் ஆசைப்பட்டீர்கள் என்றால் பிரபஞ்சம் ஒருநாள் உங்கள் ஆசையை நிறைவேற்றும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com