என் மகன்

என் மகன்

நான் பிறந்து ஒன்றரை நாளுக்குப் பிறகே அப்பா வந்தாராம் அந்த பனங்காட்டு ஆஸ்பத்திரிக்கு. மகன் பிறந்த உற்சாகத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு ஆடி அசைந்து வந்திருக்கிறார் மனுசன்.

இரண்டாம் நாளே என் உடம்பில் தடிப்பு தடிப்பாய் இருக்க…

“என் மகனை கொசு கடிச்சிருச்சு….”

“மூட்டைப்பூச்சி கடிச்சிருச்சு….” என்று எங்கம்மா செய்த அலப்பறையில் மொத்த மருத்துவமனைக்கே மருந்தடித்திருக்கிறார்கள்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகுதான் தெரிந்திருக்கிறது வந்தது கொசுவுமில்லை… மூட்டையுமில்லை…. எனக்கு வந்திருப்பது கரப்பான் என்கிற ஒரு சொரி தான் என்று. சொரி என்றால் சாதாரண சொரி அல்ல…. ராஜசொரி. உடம்பு முழுக்க புண் தான். கண்ணையும் GUN யும் தவிர.

இப்படிப் பிறக்கும் போதே அடுத்தவர்களை அலைக்கழிக்கும் அற்புதப் பிறவி பிறந்த ”பூரிப்பில்” நகர்ந்தது அவர்களின் வாழ்வு. பால காண்டம்… சுந்தர காண்டம்…. என வளர்ந்த என்னைப் பார்க்கும் போதெல்லாம் அப்பாவுக்கு காண்டம் நினைவு வந்திருந்தால் அது தப்பேயில்லை. ஆனாலும் பிள்ளைப் பருவம் தாண்டிய பிற்பாடு அவர் அப்பாவாகவே இருந்ததில்லை என்னிடம். அதற்கும் மேலாக நண்பனாகவே நடத்தினார். 

ஒரு முன்கதை இறுக்கம் :

ஏப்ரல் 17 – 1984 மாலை.

கல்லூரியில் ஆசிரியர்களுக்கே ”கற்றுக் கொடுத்துவிட்டு” வந்த களைப்பில் கட்டிலில் ஓய்ந்து சாய்ந்திருக்கும் என்னிடம் காப்பியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு….

“டேய் ராஜா…. சாவிய எடுத்துக்க… நீ வரும்போது நான் இருக்க மாட்டேன்” என்றபடி மாண்டலின் சீனிவாசன் கச்சேரி கேட்கக் கிளம்புகிறார் அப்பா.

இரவு எட்டுமணி சுமாருக்கு டீக்கடையில் அரட்டை  அடித்துக் கொண்டிருந்த என்னை நோக்கி இரண்டு மூன்று வாகனங்களில் வந்து இறங்குகிறார்கள் நண்பர்கள்.

என்ன ஏது என்று விசாரிப்பதற்குள்…

“நீ மொதல்ல வண்டீல ஏறு” என உத்தரவு பிறக்கிறது நண்பர்களிடம் இருந்து.

ஏறி உட்கார்ந்தபடி…. ஏண்டா மோகா… என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு அவசரம்? என்கிறேன். மெதுவாகச் சொல்கிறான் எதிர்வீட்டு மோகன்…

“ஒன்னுமில்ல…. அப்பா கச்சேரி கேட்டுட்டு வந்தவரு ஆட்டோவுல இருந்து இறங்க இறங்க வாந்தி எடுத்துட்டாரு… பூரா ரத்தம்…. அதான் குப்புசாமி ஆஸ்பத்திரி போறோம். ஒன்னும் ஆகாது தைரியமா வா…”

அதற்கு அப்புறம் தைரியமாவது… மண்ணாவது.

மருத்துவமனை வளாகத்தில் நுழையும்போதே வலப்புறம் உள்ள போர்ட்டிகோவில் ஆம்புலன்ஸ் நிற்க…. அப்பா… அப்பா என்று அரற்றியபடி ஓடுகிறேன்… கன்னத்தைத் தொட்டுத் தொட்டுத்   திருப்பினாலும்… நான் தாவி விளையாடிய அந்தத் தோள்களைக் குலுக்கிக் குலுக்கி அசைத்தாலும் கண் திறப்பதாயில்லை அந்த மனிதன்.

நண்பர்கள்… அத்தை… மாமா… என யார் யாரோ வருகிறார்கள். டாக்டர்களிடம் பேசுகிறார்கள்…

மொத்த புத்தியும் பேதலித்து அங்குள்ள வராண்டா பில்லரில் சாய்ந்து நின்று கொண்டிருக்கிறேன்.

“எல்லாம் முடிஞ்சு போச்சுங்க” என்று என் பெரிய மாமாவின் தோள் மீது அத்தை சாய்ந்து குமுறும்போதுதான் உறைக்கிறது…. அந்தப் பாவி என்னை ஏமாற்றி விட்டான் என்று. இருபத்தி இரண்டு வயதில் பாதி அனாதையாக.

இரண்டு தோள்களிலும் கால்களைப் போட்டுக் கொண்டு அவரது தலைமுடியில் ரப்பர் பேண்ட் கட்டிவிளையாட ஒத்துழைக்கும் சக சிறுவனாய்…

புதுப் பள்ளியில் சேர்வதற்கான நுழைவு டெஸ்ட்டில் “வாட் ஈஸ் யுவர் ஃபாதர்?” என்று கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என கற்பித்து அனுப்பும் ஆசானாய்…

வளர்ந்த பிற்பாடு அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் தோழனாய்…

எந்தக் கட்டத்திலும் சாதி…. மதம்…. என எந்த அழுக்கையும் அறிமுகப்படுத்தாத கண்ணியவானாய்… எல்லாவற்றுக்கும் மேலாய் என் காதலனாய் இருந்தவன்.

இதோ திரும்பவும் அதே ஆம்புலன்ஸில் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். பின்னால் நண்பர்கள் பைக்கில் நான்.

அப்பாவுக்கு வந்த புற்று நன்றாகிவிடுமா என்று கேட்பதற்காக கிணத்துக்கடவு ஜோசியனைப் பார்க்கச் சென்ற அம்மா இவ்வேளை வீடு திரும்பியிருக்கக் கூடும்.

அவ்வளவுதான்….

அப்பா போன பிற்பாடு அந்த மருத்துவமனை பக்கம் போகவே மாட்டேன் நான். அந்த வளாகமும் அந்த வராண்டாவும் மீண்டும் மீண்டும் என்னை அந்த 84 ஆம் ஆண்டு இரவுக்கே கொண்டு போய்த்தள்ளும். அந்தப் பக்கம் எந்த வேலை இருந்தாலும் சுற்றி சுற்றித்தான் செல்வேனே ஒழிய அந்த சாலை வழியாக ஒருபோதும் செல்லவே மாட்டேன்.

அதைப் போலவே அப்பாவை ஆம்புலன்ஸ் சுமந்து சென்ற அந்த அவினாசி சாலையில் மட்டும் இரவு ஏழு மணிக்கு மேல் பயணிக்கவே மாட்டேன். அம்மாதிரி வேளைகளில் அப்பா முன்னால் போய்க் கொண்டிருப்பது போலவே இருக்கும். மீண்டும் மீண்டும் அதே இரவும்… நண்பனது பைக்கில் அமர்ந்தபடி பயணித்த கோலமும் அவனது தோள்களை நனைத்த கண்ணீரும்தான் முன்னே நிற்கும்.

ஆனால் அதற்கும் ஒரு முடிவு வந்தது ஒருநாள்.

மிஸ்டர் சண்முகசுந்தரம் வேலைக்குப் போனார்… கல்யாணம் கட்டினார்…. என்னை பெற்றார்… தோழனாக வளர்த்தார்…. Late சண்முகசுந்தரம் ஆனார்.

நானும் (அவ்வப்போது) வேலைக்குப் போனேன்.  சம்பளம் வாங்கினேன். கல்யாணம் கட்டினேன்.

உலக அமைதிக்கான நோபல் பரிசு வாங்கும் நோக்கில் என்னையும் திருமணம் செய்து கொண்டாள் இவள். எட்டு மாத கர்ப்பிணியாய் இருந்தாலும் அந்த பிரேக் பிடிக்காத மொபெட்டில் துணிந்து பயணப்படுவாள் என்னோடு. 

குழந்தை பிறப்பது அடுத்த வாரமா அல்லது பத்து நாளாகுமா தெரியாது…. ஆனாலும் சென்ட்ரல் தியேட்டரில் ”சார்லி சாப்ளின் வாரம்” என்பதற்காக தினமும் படம் பார்க்கச் சென்றுவிடுவோம் இருவரும். ”கர்ப்பிணிப் பெண்ணுக்கு தியேட்டரில் பிரசவம்” என்கிற செய்தி வராதவாறு பார்த்துக் கொண்டது எங்கள் வாரிசு.

வழக்கமான குழந்தை செக்கப்பில் எந்தச் சிக்கலும் எழவில்லை. வீட்டின் அருகில் இருந்த பிள்ளைப்பேறு மருத்துவரிடமே சென்று வந்தோம். ஆனால் பிரசவம் என்றால் இங்கெல்லாம் ஆகாது…. குப்புசாமி மருத்துவமனைக்குத்தான் போகவேண்டும் என்றபோதுதான் கதிகலங்கிப் போனேன் நான்.

எந்த மருத்துவமனைப் பக்கமே திரும்பாமல் இருந்தேனோ… அந்த வழியில்கூட பயணிக்காமல் இருந்தேனோ… அதே மருத்துவமனைக்குப் போவதென்றால்…?

நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் வலியுறுத்தியதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. அந்த வயதான பிள்ளைப்பேறு மருத்துவர் ஆயிரம் பிரசவங்களுக்கு மேல் பார்த்த அனுபவமுள்ளவர். மருத்துவத் துறையில் மாபெரும் திறமைசாலி. 

சரி நம் மனதின் அலைக்கழிப்பு நம்மோடு போகட்டும் என்கிற எண்ணத்துடன் மனதை திடப்படுத்திக் கொண்டு ”ஓகேம்மா…. அங்கேயே போகலாம்…சரி…” என்றேன்.

முதல் நாள் உள்ளே நுழையும்போது அந்த வார்டு இருந்த திசைப்பக்கம்கூட திரும்பவில்லை. பார்த்தால் அப்பாவோடு ஆம்புலன்ஸ் நிற்பது போலவே இருக்கும்.

சரி… எப்படியோ வந்தாயிற்று. கணக்கு வாத்தியார் சொன்ன கடன் வாங்கிக் கழித்தலை வாழ்வில் கடைப்பிடித்ததால் கையிலும் காசில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள மாமியார் உடன் இருந்தார்.

1989 ஜூன் 21 மாலை வலியின் உச்சத்தில் அலறும் அவளை பிரசவ வார்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். எனது அம்மாவோடு ஓரிரு நண்பர்களும் வந்து சேர்கிறார்கள்.

கதவு திறக்கும் இடைவெளிகளில் அவள் கத்தும் சத்தம் மட்டும் லேசாகக் கேட்கிறது.

அரை மணி நேரத்தில் செவிலியர் வெளியில் வந்து பேபி பிறந்த தகவலைச் சொல்கிறார். ஆணா பெண்ணா? எதுவும் கேட்கவில்லை. அவரும் சொல்லாமல் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறார்.

அதற்கடுத்த பத்தாவது நிமிடம்….

”யாருங்க அவங்களோட வந்தவுங்க…?” என்று வினவும் செவிலியர் கரங்களில் ஒரு பிஞ்சு. 

”பத்திரமா புடிச்சுக்கனும்…” என்று சொல்லியபடி ஒரு ரப்பர் ஷீட்டில் வைத்து என்னிடம் நீட்டுகிறார்கள் மகனை.

எல்லையில்லா தற்கால மகிழ்வும் மறக்கவியலா அக்கால நினைவுகளும் சூழ அழத் துவங்குகிறேன் நான்.

எங்கே என் தகப்பனைப் பறிகொடுத்தேனோ….

எங்கே என் வாழ்வின் ஒரு பாதி தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டதோ…

எந்த மருத்துவமனை வளாகத்தில் கதியற்றுக் கதறி அழுதேனோ…

அங்கே…

அதே…

அதே… இடத்தில்…

எங்கள் மகனை ஏந்தியபடி நான்.

மகிழ்வும் கண்ணீரும் கலந்து அரற்றும் என்னை ஏதும் புரியாமல் பார்க்கிறான் மகன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com