
எண்பதுகளில் தில்லியில் அமைச்சரவைப் பணியில் சேர்ந்தபோது என்னுடைய பெயர் இத்தனை பாடாய்ப் படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. கல்விச் சான்றிதழ்கள், மருத்துவச் சான்றிதழ், காவல்துறை சான்றிதழ் இன்னபிற சான்றிதழ்களில் பெயர் ஏற்கெனவே அழுத்தம் திருத்தமாகப் பொறிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதால் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த சக குமாஸ்தா ஒவ்வோர் எழுத்தாகப் பார்த்து நுணுக்கி நுணுக்கி என் பெயரை “கே.பென்னேஸ்வரன்” என்று என் பணிப் பதிவேட்டில் ஒருவழியாகப் பதிந்து விட்டார்.
அதற்குப் பிறகுதான் தொடங்கியது வம்பு.
அக்கம்பக்கம் பிரிவுகளில் மெதுவாக என் பெயர் அறிமுகமாகத் தொடங்கிய புதிதில், சக ஊழியர்களும் அதிகாரிகளும் ஒவ்வொருவராக என் பெயரைக் கேட்கத் தொடங்கியபோது தான் அந்தப் பிரச்னையின் பிரம்மாண்டம் புரிந்தது.
“உன் பெயரென்ன?”
“பென்னேஸ்வரன்”
“அப்புறம்”?
“அப்புறம் என்ன? பென்னேஸ்வரன் தான்”
“இல்லை… அதுக்கப்புறம் குடும்பப் பெயர் என்ன?
“குடும்பம் வைத்த பெயர்தான் பென்னேஸ்வரன்”
“இல்லை…. குடும்பத்துக்கு ஒரு பெயர் இருக்குமில்லையா?”
“குடும்பத்துக்குப் பெயரெல்லாம் கிடையாது. என் பெயர்தான் என் பெயர்”
எனக்கு அவர்கள் உள்ளடியாகக் கேட்கும் விஷயம் புரியவில்லை. எதற்கு இந்த அழுத்து அழுத்துகிறார்கள்? பெயர் சொல்லிவிட்டுப் போனால் விட வேண்டியதுதானே?
இதை தில்லியில் பல வருஷங்களாக வசிக்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
“அடப்பாவி, புரியலையா உனக்கு? உன் ஜாதி பற்றி கேட்கிறான். இங்கே மொட்டையாக பெயர் எல்லாம் கிடையாது. பின்னாலே ஷர்மா, வர்மா, திரிபாதி, சதுர்வேதி, திரிவேதி, டாகூர், யாதவ் எல்லாம் போட்டுக்கறான் இல்லையா? அது மாதிரி கேட்கிறான்”.
“ஓஹோ… அப்படி எல்லாம் நமக்கு ஊரில் வச்சுக்கறது இல்லையே?”
“இங்கே வச்சிக்குவாங்க… சில பேருக்கு உன் ஜாதி தெரியலைன்னா மண்டை உடைஞ்சுடும். அது தெரிஞ்சப்புறம்தான் உன்னோட உட்கார்ந்து சாப்பிடறதா-வேண்டாமா, உன் டிபன் பாக்சில் இருக்கறதை எடுத்துக்கலாமா வேண்டாமா… மாதிரியான முக்கியமான விஷயங்களை எல்லாம் தீர்மானிப்பாங்க…”
“அப்போ எனக்கு அவங்களோட சாப்பிட வேண்டாம்”.
என்னுடைய உணவு கூட்டாளிகளாக அருணாசலம், வெங்கடேஷ், ராமநாதன், பக்கிரிசாமி, குமரேசன், குணசேகரன் என்று ஆகிப்போனார்கள். வட இந்திய நண்பர்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன். டீ காபி வேளையில் கூட தமிழ் நண்பர்களுடனே செல்லத் தொடங்கினேன்.
நார்த் பிளாக்கில் மெல்லத் தமிழ்க் கூட்டம் ஒன்று உருவானது.
ஆனாலும் போகுமிடமெல்லாம் இந்த ஸர் நேம் கேள்விகள் துரத்தத் தொடங்கியது.
“கே” என்பதை என்னுடய முதல் பெயராகவும் பென்னேஸ்வரன் என்பதை என்னுடைய ஜாதிப் பெயராகவும் என் அனுமதி இல்லாமலேயே சிலர் எடுத்துக் கொண்டார்கள். “கே” என்பதற்கான கிருஷ்ண ராவ் என்பதை என் பெயராகவும் பென்னேஸ்வரன் என்பதை என்னுடைய ஜாதிப் பெயராகவும் இருக்கலாம் என்று அவர்களே ஊகித்துக் கொண்டார்கள்.
மெல்ல இந்தி பேசக் கற்றுக் கொண்ட பிறகு சில வட இந்திய கூட்டாளிகளிடம் தமிழ்நாட்டில் நாங்கள் சாதிப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை என்றும் சிலர் ஊர்ப் பெயர், அதைத் தொடர்ந்து தகப்பனார் பெயர் வைத்துக் கொள்வார்கள் என்றும் சொன்னேன். ஆனால் அவர்கள் அதிலேயே குறியாக இருந்தார்கள்.
“ஒரு பெயர் மொட்டையாக இருப்பது எப்படி?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
வட இந்தியர்களிலும் “சுரேந்தர் குமார்”, நரேந்தர் குமார்” என்று பின்னொட்டு எதுவும் இல்லாமல் எங்கள் அமைச்சரகத்தில் பணிபுரிந்தார்கள். நான் சாப்பிடும் மெஸ்ஸிலும் அப்படிப் பெயருடன் இருந்தார்கள்.
ஓரிரு வருடங்களுக்குப் பிறகு மெல்ல ஒரு விஷயம் புரிந்தது.
அதாவது, தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பிற வட இந்திய நண்பர்களைப் போலத் தங்கள் குலப்பெயர் அல்லது ஜாதிப் பெயர்களை இணைத்துக் கொள்ளாமல் நேரடியாக பெயர் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
தங்களின் சாதி அடையாளத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க அவர்கள் தயங்குகிறார்கள் என்று சொன்னார்கள். அந்தத் தயக்கத்தின் பின்னணியில் உள்ள வலிமிகுந்த காரணங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் ஒருசிலர் தங்கள் ஊர்ப்பெயர்களை பின்னொட்டாக வைத்துக் கொள்வார்கள்.
“பிரகாஷ் சிங் பாதல் – பாதல் இவருடைய கிராமம்
குருசரண் சிங் தோஹ்ரா – தோரா இவருடைய கிராமம்
ஸந்த் சுந்தர் சிங் பிந்த்ரன்வாலே – பிந்த்ரன் இவருடைய கிராமம்
இதேபோல மராட்டியர்களும் தங்களின் பெயர்களுக்குப் பிறகு தங்களின் கிராமம், இடம் அல்லது நகரங்களின் பெயர்களைப் பின்னொட்டாக அல்லது தங்களின் பெயரின் ஒரு பகுதியாகவே வைத்துக் கொள்வார்கள். தங்கள் கிராமம் அல்லது நகரப் பெயரின் பின்னாக “கர்” என்று சேர்த்துக் கொள்வார்கள். அதாவது – இந்த ஊரில் இருந்து வந்தவர், இந்த ஊர்க்காரர் என்ற அடையாளம் தானாக அமைந்து விடும். முன்னால் வீட்டில் வைத்த பெயர். அதன் பின்னொட்டாக கிராமம். அப்புறம் கிராமத்தின் பெயரை ஒட்டிக் கொண்டு “கர்” – அதாவது அந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற பொருளில் அப்பெயர் அமைந்து விடும். எடுத்துக்காட்டாக-
சச்சின் டெண்டுல்கர்- சச்சின் அவருடைய பெயர். ’தெண்டுல்’ கிராமத்தின் பெயர்.
சுனில் கவாஸ்கர் - சுனில் அவருடைய பெயர். ’கவஸ்’ கிராமத்தின் பெயர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - இதில் ’பீம்ராவ்” அவருடைய பெயர். “ராம்ஜி” – அவருடைய தகப்பனார் “ராம்ஜி மலோஜி ஸக்பால்” தகப்பனார் பெயரின் ஒரு பகுதி. அம்பேத்கர் – “அம்பேவாடே” என்னும் பூர்வீக கிராமத்தின் பெயர்.
இப்படி “ஸோலாப்பூர்கர்”, “கோலாப்பூர்கர்” “நாஷிக்கர்“, “உஸ்காவ்ன்கர்” என்று ஊர்ப்பெயரில் முடியும் பின்னொட்டுக்கள் மகாராஷ்டிராவில் உண்டு.
ஹரியானாவில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை. அவர்கள் வெளிப்படையாக ஜாதிப்பெயர், ஜாதிகளைக் குறிக்கும் அடையாளப் பெயர்களை தங்களின் பெயர்களின் பின்னொட்டாக வைத்துக் கொள்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக-
ஜாட் பிரிவைச் சேர்ந்தவர்கள் தஹியா, மாலிக், ஹூடா, ஸங்வான், புனியா, அஹ்லாவத், தலால், ரத்தி, ச்சில்லர், போகட்,ஜாகர் என்ற பின்னொட்டை வைத்துக் கொள்வார்கள்.
யாதவ் பிரிவை சேர்ந்தவர்கள் யாதவ் அல்லது ராவ் என்று வைத்துக் கொள்வார்கள்.
ராஜபுத்திரர்கள் – சிங், சவுஹான், தன்வர், ராணா என்ற பின்னொட்டை வைத்துக் கொள்வார்கள்.
பிராமணர்கள் – ஷர்மா, கவுஷிக், பரத்வாஜ், வசிஷ்டா, திவாரி என்று தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வார்கள்.
இன்னும் வண்டி வண்டியாக இதே போன்ற பின்னொட்டுக்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களைப் போல அன்றி தங்கள் பெயர்களுக்கான பின்னொட்டை சாங்கோபாங்கமாகப் பயன்படுத்துவார்கள். இதனால் இவர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவது, அரசு ஆவணங்களில் நமக்கு வருவது போன்ற ஸர்நேம் பிரச்சினைகள் இல்லை.
உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஏறத்தாழ இதே போன்ற பின்னொட்டுகளைத் தங்கள் பெயர்களை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் இந்த ஸர்நேம் பிரச்னை எதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் வசிப்பவர்களுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த பின்னொட்டு பெரும்பிரச்னையாக இருந்தது. இப்போது தமிழர்கள் குறிப்பாக பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களின் பின்னால் அய்யர் அல்லது அய்யங்கார் அல்லது ராவ் அல்லது ஷர்மா என்ற பின்னொட்டை சேர்த்து விடுகிறார்கள். என்னுடைய குழந்தைகளை 90-களில் பள்ளியில் சேர்த்தபோது அவர்களின் பெயர்களை “பாரதி பென்னேஸ்வரன், அபிநயா பென்னேஸ்வரன்’’ என்று என்னுடைய பெயரைப் பின்னொட்டாக சேர்த்தேன். என்னைப் போலப் பலரும் தங்கள் பிள்ளைகளின் பெயர்களின் பின்னால் தங்களின் பெயர்களைப் பின்னொட்டாகப் போட்டு விடுகிறார்கள்.
என் மகள்களின் பெயர்களின் பின்னால் இப்படி மாற்றியதால் அந்த ஸர்நேம் தொடர்பான கேள்விகளை யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. ஒருவேளை பென்னேஸ்வரன் என்பது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு விசித்திரமான சாதி என்று வடக்கில் அவர்கள் நினைத்திருக்கலாம். என் பெண்களுக்கு பாஸ்போர்ட்டில் ஸர்நேம் பிரச்சினை எப்போதும் இருப்பதில்லை.
ஆனால் எனக்கு இப்போதும் அந்தப் பிரச்சினை இருக்கிறது. பாஸ்போர்ட்டில் என் பெயர் கிருஷ்ணராவ் பென்னேஸ்வரன்.
அதனால் விமானப் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்யும் போது அது கே.பென்னேஸ்வரன் என்று எடுப்பதில்லை. ஆதார் அட்டையில் கே.பென்னேஸ்வரன் என்று இருந்தாலும் அந்தப் பெயரில் விமானப் பயணச்சீட்டுகள் எடுக்க முடிவதில்லை. கிருஷ்ணராவ் பென்னேஸ்வரன் என்றுதான் பயணச்சீட்டைப் பதிவு செய்ய முடிகிறது.
ஒருமுறை மும்பை விமானநிலையத்தில் என் பெயரில் ஏதோ அறிவிப்பை மைக்கில் செய்தார்கள். அதில் “மிஸ்டர் கிருஷ்ணராவ், நீங்கள் பயணிக்கப் போகும் விமானத்தின் போர்டிங் கேட் மாற்றப்பட்டுள்ளது. கேட் மூடுவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள்தான் உள்ளன. உடனடியாக போர்டிங் கேட் இந்த எண்ணுக்கு விரைந்து செல்லுங்கள்” என்று அறிவிப்பு வந்தது.
ஏதோ ஒரு கிருஷ்ணராவ் போகும் கேட் மாற்றப்பட்டுள்ளது போலிருக்கிறது என்று நினைத்து இருந்த இடத்திலேயே என் பெயருக்கான அறிவிப்புக்குக் காத்திருந்தேன். ஒரு கட்டத்தில் அது நான்தான் என்று தாமதமாகப் புரிந்து கொண்டு விமானத்தில் ஏறுவதற்காகத் தலைதெறிக்க ஓடிப்போக வேண்டியிருந்தது!