
இந்திய அரசியல் வரலாற்றில் 2014-ஆம் ஆண்டு மே மாதம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பின் தொடக்கம். “ஸப்கா ஸாத், ஸப்கா விகாஸ்” (அனைவருடன் ஒன்றிணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி) என்ற கோஷத்துடன் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற அந்த முதல் 150 நாட்கள், இன்று பின்னோக்கிய மறுபார்வையில் ஒரு சுவாரசியமான 'டிரெய்லர்' போலத் தெரிகிறது. டெல்லியின் சவுத் பிளாக் வளாகத்தில் பிரதமர் அலுவலத்தில் பிரவேசித்த மோடியின் அந்த ஆரம்பகால அதிரடி ஆட்டத்தை ஆழமாக அலசுவது அவசியமாகிறது.
மோடி பிரதமராகப் பதவியேற்றபோது அவருடன் 'குஜராத் மாடல்' என்ற பிம்பமும் இணைந்து வந்தது. தொடக்கத்தில் மத்திய அமைச்சகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பும் அவற்றின் முடிவெடுக்கும் வேகமும் அதிகரித்ததை யாராலும் மறுக்க முடியாது. “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம்” (Minimum Government, Maximum Governance) என்ற கொள்கையின் மூலம் அரசு இயந்திரத்திலிருந்த 'சிவப்பு நாடா' (Red-tapism) முறையைத் தளர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் 'தனிமனித வழிபாடு' என்று விமர்சித்தாலும் டெல்லியில் அமைச்சரவைகளின் அதிகார வர்க்கத்தில் ஒருவகையான பரபரப்பை அந்த 150 நாட்கள் உருவாக்கியிருந்தன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பொருளாதார ரீதியாக, பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கப் பல்வேறு தளர்வுகளும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் 'Make in India' திட்டம் ஒரு மாபெரும் கனவாக விதைக்கப்பட்டது. ஆனால், முதல் 150 நாட்களில் இத்திட்டம் உடனடி வேலைவாய்ப்பையோ, தொழில் வளங்களையோ பெருக்கவில்லை. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் சட்டச் சிக்கல்கள் இன்றும் தொடரும் சவால்களாகவே உள்ளன. அன்று 'அச்சே தின்' (நல்ல காலம்) பிறக்கும் என்று நம்பிய மக்களுக்கு, விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற எதார்த்தச் சிக்கல்கள் ஒரு கசப்பான உண்மையாகவே நீடித்தன.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட 'ஸ்வச் பாரத்' (தூய்மை இந்தியா) திட்டம், துடைப்பம் பிடிக்கும் ஒரு படலமாக அன்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்ததை யாரும் மறுக்க முடியாது. அதேபோல, அனைவருக்குமான நிதி உட்சேர்க்கையை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட 'ஜன் தன்' திட்டம் ஒரு மைல்கல்லாகும். இத்திட்டத்தின் ஆரம்பத்தில் பல கணக்குகள் செயலற்றுக் கிடந்தன என்றாலும், இன்று கோடிக்கணக்கான பெண்களுக்கு மாநில அரசுகளின் 'மகளிர் உரிமைத் தொகை' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) சென்றடைவதற்கு அன்று விதைக்கப்பட்ட அந்த விதைதான் படிக்கல்லாக அமைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மோடி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கே சார்க் (SAARC) நாட்டுத் தலைவர்களை அழைத்தது, அண்டை நாடுகளுடனான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. ஜப்பானுடனான நெருக்கம், அமெரிக்காவின் 'மேடிசன் ஸ்கொயர்' கொண்டாட்டம் என மோடி ஒரு 'NRI பிரதமர்' என்ற கிண்டலுக்கு மத்தியிலும் இந்தியாவின் பிம்பத்தை உலக அளவில் உயர்த்தினார்.
2014-இன் அந்த முதல் 150 நாள்கள் ஒரு 'பிக் பாஸ்' வீட்டைப் போலப் பரபரப்பாக இருந்தன. எதிர்க்கட்சிகள் அந்த வேகத்தைப் புரிந்துகொள்வதற்குள்ளேயே மோடி பல மைல்கற்களைத் தாண்டிவிட்டார். இன்று திரும்பிப் பார்க்கும்போது, சில திட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றன, சில திட்டங்கள் வெறும் விளம்பரங்களோடு பரிதாபமாக நின்றுவிட்டன.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: அன்று விதைக்கப்பட்ட 'தனிநபர் அரசியல்', 'டிஜிட்டல் இந்தியா' என்ற விதைகள் தான், இன்று இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கின்றன. அன்று எதிர்க்கட்சிகள் எதை 'வெறும் விளம்பரம்' என்று ஒதுக்கித் தள்ளினார்களோ, இன்று தங்களுக்காக அதே பாணியைப் பின்பற்ற அவர்களே போராடிக்கொண்டிருப்பதுதான் காலத்தின் விந்தை. 2014-இன் அந்தத் தொடக்கம் ஒரு மாற்றத்தின் படிக்கல்லாக அமைந்தது; அது நிஜமானதா இல்லையா என்பதை காலம் இன்றும் விவாதித்துக் கொண்டே இருக்கிறது.