பெண் குழந்தையென்று இல்லை, குழந்தை...!

Published on

எங்கள் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண். எங்கள் பெற்றோர் 1950களிலேயே சாதிமறுப்பு, காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பகுத்தறிவு, சமநிலை வரவேண்டுமானால் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடித்தவர்கள்.

எங்களை வளர்த்ததில் அவர்கள் எந்தப் பாகுபாட்டையும் காட்டியதில்லை. நாங்கள் நான்கு பிள்ளைகளும் சாதிமறுப்புத் திருமணம்தான்! காதல் திருமணம் என்றாலும் சொல்லுங்கள் என்றார்கள், பெற்றோர். அந்த வாய்ப்பு அமையவில்லை என்பது வேறு. 

பெண்கள் என்றால் இப்படித்தான், அடக்கமாக இருக்கவேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும் எனப் பாகுபாடாக நாங்கள் வளர்க்கப்படவில்லை. 

வளர்ந்தபிறகு, குழந்தையே பெற்றுக்கொள்ளக் கூடாது என பெரியார் சொன்ன கருத்தில் இருந்தவள், நான். ஆனாலும் ஒரு பெண் குழந்தையை வளர்க்க வேண்டும் என குழந்தையைப் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லவேண்டும்.

ஐயா பெரியார் சொன்னது ஒன்றுதான். பெண் குழந்தைகளுக்கென தனி வளர்ப்பு என்றில்லை. ஆணுக்கு என்ன உரிமையெல்லாம் இருக்கிறதோ, ஆணுக்கு இருக்கிற வீரம், வலிமை, ஆளும் திறம் எல்லாமே பெண்ணுக்கும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு, குழந்தையைப் பார்க்க வேண்டும். ஆணோ பெண்ணோ குழந்தையைக் குழந்தையாக வளர்க்க வேண்டும்.

பெண்ணுரிமைக் கருத்துகளாக அவர் கூறியவை ஏராளம் என்றாலும், பெண் ஏன் அடிமையானாள் எனும் நூல் அவரின் கருத்துக் குவியல் எனலாம்.

90 ஆண்டுகளுக்குமுன் இந்த கருத்துகளை அவர் வெளியிட்ட போது கவைக்கு உதவாதவை என ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்வியல் முறையாகவே மாறிவிட்டது.

"பெண்களுக்கு மட்டுமே கற்பு வலியுறுத்தப்பட்டு வருவதுதான் அவர்களை அடிமையாக வைத்திருப்பதற்குப் பெரிதும் காரணம்; ஆண், பெண் இருவரும் சரிசமமாக வாழவேண்டும் எனும் நிலை ஏற்பட வேண்டுமானால் இருவருக்கும் ஒரே நீதியை ஏற்படுத்த வேண்டும்.” என்று ஐயா சொன்னார்.

திருமணம் என்பது இரு பாலாருக்கும் வாழ்க்கை வசதிக்காக ஏற்பட்ட ஒப்பந்தமே ஒழிய இதில் எந்த தெய்வீகத் தன்மையும் இருக்க நியாயம் இல்லை என்றும் அப்படிப்பட்ட திருமணம் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்றால் அதை இரத்து செய்துவிடத் தக்கதே என்றும் கூர்மையாக தன் கருத்தை 1942இலேயே சொல்லியிருக்கிறார். 

மறுமணம் என்பதை எண்ணிப் பார்க்க முடியாத காலத்தில், அதைப் போட்டு உடைக்கும்படியாக, ‘மறுமணம் செய்துகொண்டால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது’ என்ற தெளிவை அன்றே உருவாக்கினார்.

பெண்கள் சம அந்தஸ்துடன் இருக்கவேண்டும் என்றால்,  “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குபெற உரிமை உடையவர்கள் ஆகவேண்டும்” எனக் குரல் எழுப்பினார்.

இது சட்டமாக ஆனபிறகும்ஐயாவின் பிரச்சாரத்தை இன்னும்செய்து கொண்டுவர வேண்டியிருக்கிறது.

”பெண்கள் விடுதலை பெறவும் சுயேச்சை பெறவும் கருத் தடை அவசியம்” என்று 90 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் பேசினார். ”நாடகம், சினிமா மூலம் இதைப் பிரச்சாரம் செய்யவும் வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

”சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்கு மட்டும்தான் என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்மை என்ற கருத்து அழிக்கப்பட்டால் அன்றி பெண்களுக்கு விடுதலை இல்லை” என்பது பெரியாரின் அழுத்தமான கருத்து.

பெரியார் சொன்ன வாழ்வியல் முறையைக் குறிப்பிட்டு குழந்தைகளை வளர்க்கிறோம். அதில் வலுவாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி!

இறைவி, எழுத்தாளர், திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com