ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு வாசகன்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு வாசகன்

என்னை மாற்றிய எழுத்து!

முகத்தில் அறைந்த கவிதைகள் உண்டு. கசிய வைத்த கதைகள் உண்டு. தேடலுக்கு உந்திய படைப்புகள் உண்டு. இதழக் கடையோரம் சிரிப்பை எழுதிய அபத்தக் களஞ்சியங்கள் உண்டு. ஆனால் வாழ்வைப் புரட்டிப் போட்ட புத்தகம் என்று எனக்கேதும் இல்லை. பாறைகளைப் புரட்ட முடியும். புழுதியைக் கூட. ஆனால் நான் நதிபோல நகர்ந்து கொண்டிருக்கிறேன். சிற்றலைகளை எழுப்பும் காற்றோடு சேர்ந்து களித்தபடி.

உட்கார்ந்து யோசித்தால் என்னை உசுப்பிய, உந்திய புனைவுகள் ஒன்றிரண்டைச் சொல்ல முடியும்.

70களின் தொடக்கம். கல்லூரி வாழ்வின் கடைசி நாட்கள் முடிவுக்கு வருகிற தருணம். வகுப்பறைக்கு வெளியே வீசிய அரசியல் அலைகள் வடியத் தொடங்கியிருந்தன. நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தில் முடிந்தன. அறம் வீழ்ந்துவிட்டது என்று ஒரு வர்ணிக்க முடியாத வலி. ‘மடத்தனமாக' வாக்களித்த மக்கள் மீது ஒரு கசப்பு. படிப்பு முடியப் போகிறது, பயிற்சிக்குப் பின் வேலை கிடைத்துவிடவும் கூடும். ஆனால் இலக்கியத்தில் விழுந்து விட்ட இதயம் இதற்குத்தானா படித்தோம் என்று ஏதோ நிராசையில் நெளிந்து கொண்டிருக்கிறது.

அப்போதெல்லாம் அடிக்கடி எழும் எண்ணம்:  தோளில் ஒரு ஜோல்னா பை; அதில் இரண்டு செட் துணி. தின்னக் கொஞ்சம் தீனி. அத்துடன்  எங்கேயாவது ஊர் ஊராக, மொழி தெரியாத, திசை தெரியாத ஊர்களுக்குப் போய்ச் சுற்ற வேண்டும். மரபுகளை, அதிகாரத்தை, நிராகரித்து அமெரிக்க ஹிப்பிகள் அகிலமெங்கும் அலைந்து கொண்டிருந்த நேரம் அது.

அந்த நேரம் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' ஆரம்பித்திருந்தார். (கோபுலுவின் ஓவியங்களுடன்) ஜே.கே மீது பெரும் பித்து என்றும் உண்டு. அவரது தர்க்கங்களில் ( என் அம்மாவின் வார்த்தைகளில் சொன்னால் ‘கோணக் கட்சி') தன்னை இழந்த நாட்கள் அவை.

ஆனால் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' ஜே.கே,வின் நாவல்களில் வித்தியாசமானது. அவரது படைப்பின் ஆவேசம் தணிந்திருந்தது. ஜே.கே,யே கூடக் கனிந்து விட்டிருந்தார். பாரீசிற்குப் போவிலும், நடிகை நாடகம் பார்க்கிறாளிலும், கோகிலா என்ன செய்து விட்டாளிலும் சமூகம் என்பது நாலு பேரிலும் வரிக்கு வரி தர்க்கித்துக் கொண்டிருந்த ஜே.கே, இதில் காட்சிகள் மூலம் ‘‘கதை'' சொல்ல முனைந்திருந்தார், குழந்தைக்குக் கதை சொல்கிற தகப்பன் மாதிரி.

அப்போது நான் படித்துக் கொண்டிருந்த ‘அட்லஸ் ஷ்ரக்ட்' படிக்கிற,  என்னிலும் சற்றே மூத்த இளைஞனோடு துவங்கிய அந்தக் கதையை அதன் முதல் அத்தியாயத்திலேயே பிடித்துப் போனது. அந்த இளைஞன் ஹென்றி அல்ல. தேவராஜன். ‘இந்த மனிதர்களோடு மனதால் எட்டாமல் இருக்க விரும்புகிறவன்' என்று தேவராஜனை அறிமுகப்படுத்துகிறார் ஜே.கே. 

ஹென்றியைப் பிடித்தது. ஹென்றியை விட அவனது பப்பாவைப் பிடித்தது. ‘இதில் வருகிற ஹென்றி கற்பனாலங்காரமாகத் தோற்றமளிக்கிறான் என்னும் கூற்றை மறுப்பது சாத்தியப்படாது' என்று இந்தத் தொடர்கதை புத்தகமாக வந்தபோது அதன் முன்னுரையில் ஜே.கே எழுதுகிறார். ஆனால் அந்தப் பப்பாதான் சற்று மிகை, ‘‘முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத, சண்டைகள் இல்லாத குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத ஆக்கிரமிப்புக்கள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத அன்பு மட்டுமே தழைத்த குடும்பம்'' உலகில் எங்கேனும் உண்டா? அவரைப் பற்றி எழுதும் போது ஜே.கே தனது சுய பால்யத்திற்குள் போய்விட்டாரோ என்றும் கூடத் தோன்றியது.அதனால் என்ன, சுயம் இல்லாத புனைவுண்டா? மிகையில்லாத புனைவுதான் உண்டா?

கிருஷ்ணராஜபுரம் என்று ஓரு கிராமம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தேசாந்திரியாகப் போய் நான் காண விரும்பிய, வாழ விரும்பிய கிராமம் அது. என் வாழ்வில் நான் கிராமங்களில் வாழ்ந்ததே இல்லை. ஹென்றியைப் போல எனக்கும் பகலில் பார்த்தாலும் பயிர்களில்  எது நெல் எது கம்பு என்று கண்டுபிடிக்கத் தெரியாது. மரவள்ளிக் கிழங்கை உரித்துத் தின்னத் தெரியாத ஹென்றியைப் போல நானும் பனங்கிழங்கைத் தின்னத் தெரியாமல் விழித்திருக்கிறேன். பரியாறி என்ற வார்த்தையை நானும் முதன் முதலில் இதில்தான் அறிந்தேன். அபீட்டையும், அம்பேலையும் ஆங்கிலப்படுத்தித்தான் எனக்குப் புரிந்து கொள்ள முடியும். மண்ணாங்கட்டி என்று ஒரு பெயரா என்று ஆச்சரியப்படும் நகரத்தான் நான். எனக்கு கிருஷ்ணராஜபுரம் சுவாரஸ்யமாக இருந்தது. ஹென்றியோடும் தேவராஜனோடும், ஜே.கேயோடும் நான் அந்தச் சிறு ஆற்றில் இறங்கிக் குளித்து ‘‘சோப்பெங்கப்பா'' எனத் தட்டாமாலை சுற்றினேன். நாவலில் பல இடங்களில் நனைந்தேன்.

சில வரிகளைக் குறித்து வைத்தேன்.  சில இன்று மங்கி விட்டன. சில இன்னும் மின்னுகின்றன.

‘‘நகரத்துக்கும் கிராமத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்குங்க. அது மாறணும்.கிராமம் நகரம் மாதிரியாகணும். நகரத்தைவிட மின்சாரம், ரோடு, டிரான்ஸ்போர்ட், எல்லாம் கிராமத்துக்குத்தாங்க முக்கியம். பயிர்தொழில் முழுக்கவும் நவீனமாகணும்.... ‘கிராமத்து எளிமை' அது இதுனு பேசி, நகரமும், அங்கேயிருக்கிற ஆடம்பரமும் கிராமத்தைக் கொள்ளையடிக்குது''

நகர்மயமாதலைப் பற்றி 70களின் தொடக்கத்தில் இங்கே யாரும் அதிகம் பேசவில்லை. அறிவுஜீவிகள் கூட இடம் பெயர்தலை (migration) பற்றி விசனத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜே.கே நகர்மயமாதல் (urbanization) பற்றிய பேச்சை ஆரம்பித்தார். ஆனால் புறம் மாறினால் எல்லாம் சரியாகப் போகுமா? அதையும் தொட்டார் ஜே.கே:

‘‘ இவர்களை நவீனமாகவும் சயன்டிஃபிக்காகவும்  மாத்தறதுக்கு பதிலா நீங்க நாளுக்கு நாள் ரொம்பவும் ஆதிகாலவாசியா மாறிக்கிட்டிருக்கீங்க''

இதுதான் இன்றைய இந்தியா, இதை 70களின் தொடக்கத்திலேயே உணரும் ஞானமும், உணர்ந்தை உரைக்கும் வீரமும், வீரத்துள் விதை கொண்ட கரிசனமும் ஜே.கே,யிடம் இருந்தது."

‘மிருகங்களுக்கும் மற்றவற்றுக்கும் சமூக வளர்ச்சி, வாழ்க்கைப் பிரச்சினைகள், தார்மீகப் பொறுப்புக்கள் ஒன்றும் கிடையாது. மனிதன் அப்படி ஆகக் கூடுமா என்ன? அப்படி ஆனால் அது சரியும் ஆகாதே. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் வளர்ச்சி ஏது?''

‘‘ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்''

‘‘சாமிக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்?''

‘‘நான் திருமணங்களுக்கோ ஆண் பெண் உறவுகளுக்கோ எதிரியல்ல... எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல. ஆனால் எனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனக்குக் கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே SiUP வேண்டும் என்றா சொல்கிறேன்?''

‘‘நதியில் தண்ணீர் ஓடும் சத்தம், லயத்தோடு, அதே சமயம் மனசின் குமுறல் மாதிரி இடைவிடாது தொடர்ந்து ஜபித்துக் கொண்டிருந்தது''.

‘‘பேசற மாதிரியேவா எழுத முடியும்? எழுதுகிற மாதிரியே பேச முடியுமா? ... என் சம்சாரத்தை ‘ஏய் கழுதை!' னுதான் எனக்குக் கூப்பிட்டுப் பழக்கம். அதுக்காகப் பத்திரத்தில எழுதுவாங்களா?''

ஒரு பாரம்பரியமான இடிந்த வீட்டை அந்த ஊரில் பிறவாத, அங்குள்ள உறவுகளோடு ரத்த சம்பந்தமில்லாத ஒருவன் வந்து அதை புதுப்பித்துக் கட்டுகிறான். ‘அந்த வீட்டுக்குள் மேளதாளத்துடன் ஒரு கிராமமே சஞ்சரித்து வாழ்ந்து கொண்டிருந்தது' என்று நாவல் முடிகிறது.

 கட்டியெழுப்ப வேண்டிய இடிந்து போன வீடுகள் இன்னும் இங்கு ஏராளமாக இருக்கின்றன.

ஜூலை, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com