ஒட்டகக்கடி முதல் ஒருங்கிணைந்த நலவாழ்வு வரை

ஒட்டகக்கடி முதல் ஒருங்கிணைந்த நலவாழ்வு வரை
Published on: 

ரேபிஸ் எனப்படும் வெறிநோய் குறித்து முற்றிலும் வேறுபட்ட இரு பார்வைகள் சமூகத்தில் உருவாகியுள்ளன. ஒன்று விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது; மற்றொன்று மக்கள் கற்பனையில் வளர்க்கப்பட்டது.

அறிவியல் ரீதியான முதல் பார்வை, லைசா வைரஸ் (Lyssa virus) உமிழ்நீர், நரம்புப் பாதைகள், வைரஸ் தாக்குதலுக்குப் பிந்தைய தடுப்பு சிகிச்சை (PEP), தடுப்பூசி ஆகியவற்றைப்பற்றியது. இரண்டாவது, மருத்துவமனைப் படுக்கையில் பயத்துடன் படுத்திருக்கும் ஒரு நோயாளியைச் சுற்றி ஊசிகள் குவிந்திருப்பதை நினைவுகூர்வது—குறிப்பாக தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடப்படுவதாகக் கற்பனை செய்யப்படும் புகழ்பெற்ற காட்சி!

இங்குதான் தமிழ் சினிமாவும் மக்கள் நினைவுகளும், சற்று குறும்புத்தனமான முறையில், தொற்றுநோயியல் பாடத்திற்குள் நுழைகின்றன.

பல தலைமுறைகளாக “வயிற்றைச் சுற்றி 14 ஊசிகள்” என்பது ரேபிஸுக்கான ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. ஆனால் அறிவியல் அந்தத் திரைப்பிம்பத்தைத் தாண்டி வெகுதூரம் முன்னேறிவிட்டது.

ரேபிஸ் நோய்க்கான இற்றைப்படுத்தப்பட்ட தடுப்புசிகிச்சை ( Updated Prophylaxis) குறித்து பார்க்கலாம்.

வைரஸ் தாக்குதலுக்குப் பிந்தைய தடுப்பு சிகிச்சை (Post Exposure Prophylaxis -PEP) மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது: காயத்தை முறையாகச் சுத்தம் செய்தல், பொருத்தமான ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தேவையான சூழ்நிலைகளில் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) அல்லது ரேபிஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்துதல்.

உலக சுகாதார நிறுவனம் (WHO)நவீன திசு வளர்ப்பு தடுப்பூசி( Cell-culture Vaccine) அல்லது தூய்மையாக்கப்பட்ட கரு வளர்ந்த கோழி முட்டை தடுப்பூசி( Purified embryonated-egg vaccine ) யைப் பரிந்துரைக்கிறது. மேலும், தசைக்குள் செலுத்தும் முறைக்கு (intramuscular) மாற்றாக, குறைந்த அளவு தடுப்பூசியைப் பயன்படுத்தும் தோலுக்குள் செலுத்தப்படும் (intradermal)தடுப்பூசி முறையையும் அங்கீகரிக்கிறது.

இன்று- செப்டம்பர் 28, உலக வெறிநோய் தினம் (World Rabies Day). ரேபிஸ் குறித்த திரைப்பட நகைச்சுவைச் சித்தரிப்புகள் தவறான தகவலாக மாறிவிடாமல் நமக்கு நாமே அறிவூட்டிக் கொள்ள இந்த நாள் இனிய நாள்.

ரேபிஸ் ஏற்படக்கூடிய விலங்கு கடித்தாலோ அல்லது கீறினாலோ, ஒருவர் “எத்தனை ஊசிகள்?” என்ற எண்ணிக்கையில் புகுந்து நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது.

முதல் நடவடிக்கை மிகவும் எளிமையானது:

காயத்தை சோப்பு மற்றும் ஓடும் தண்ணீரால் குறைந்தது 15 நிமிடங்கள் உடனடியாகவும் நன்றாகவும் கழுவ வேண்டும்; பின்னர் தாமதமின்றி மருத்துவ உதவியை நாட வேண்டும்.

ஏன் 15 நிமிடங்கள்?

இந்தப் பரிந்துரை காரணமற்ற சடங்கு அல்ல.

ரேபிஸ் வைரஸ் பொதுவாக பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீரின் மூலம், கடி அல்லது கீறல் வழியாக உடலுக்குள் செல்கிறது. ரேபிஸ் வைரஸ் நரம்பு வழியாக விரைவாகப் பயணப்படும் வைரஸ் ஆகும். உடனடியாகவும் தீவிரமாகவும் காயத்தைக் கழுவுவது, வைரஸ் நரம்புகளுக்குள் நுழைவதற்கு முன், காயப்பகுதியில் இருக்கும் வைரஸை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.

சோப்புக்கும் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. ரேபிஸ் வைரஸ், உறையுள்ள வைரஸ் (enveloped virus) ஆகும். சோப்பு மற்றும் டிடர்ஜெண்டுகள் அதன் கொழுப்பு உறையைச் சிதைக்கக்கூடும். ஓடும் தண்ணீர் அந்த வைரஸை எந்திர ரீதியாகக் கழுவி ( mechanical wash) வெளியேற்ற உதவுகிறது.

அதனால்தான் WHO, சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு அல்லது வைரஸைச் செயலிழக்கச் செய்யும் பொருத்தமான பொருளைக் கொண்டு ( ஆல்கஹால் போன்றவை) காயத்தை குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த பரிந்துரைக்கிறது.

15 நிமிடங்கள் என்பது நடைமுறை ரீதியான குறைந்தபட்ச நேரம்; 15 நிமிடங்கள் என்பது வைரஸை திடீரென்று மறைந்துவிடச் செய்யும் மாய நேரம் அல்ல என்பதைத் தெரிந்து தெளிக.

கழுவிய பிறகு, povidone-iodine போன்ற பொருத்தமான antiseptic

களைப் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத ஒருவருக்கு மூன்றாம் வகை வைரஸ் தாக்குதல்

( Category III exposure) ஏற்பட்டிருந்தால், ( ரேபிஸ் வைரஸ் தாக்குதல் எவ்வாறு பல Category களாக வகைப்படுத்த்தப்டுகிறது என்பது குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் Chatgpt-யைக் கேட்கவும்) தடுப்பூசியுடன் தேவையான சூழலில் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) அல்லது பொருத்தமான rabies monoclonal antibody வழங்கப்படுகிறது.

RIG உடனடி இரண்டாம் நிலை நோய்த்தடுப்பாற்றலை ( Secondary immunity )-யை வழங்குகிறது. அது காயத்தின் உள்ளேயும் அதைச் சுற்றியும், உடற்கூறு ரீதியாக இயன்ற அளவுக்கு, செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி, உடலின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்பைத் தூண்டி முதல் நிலை நோய் தடுப்பாற்றலான செயல்மிகு நோய்தடுப்பாற்றலை (active immunity)-யை உருவாக்குகிறது.

எனவே முக்கியமான கேள்வி:

“எத்தனை ஊசிகள்?” என்பதல்ல.

“எப்படிப்பட்ட வகையான தாக்குதல் ஏற்பட்டுள்ளது, அதற்குத் தேவையான தடுப்புசிகிச்சை ( PEP) என்ன?” என்பதே.

நாய் மட்டுமல்ல

“Dog bite” என்ற சொல் ரேபிஸுடன் கிட்டத்தட்ட இணைந்துவிட்டது. ஏனெனில்—உலகளவில் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பரவலில் நாய்கள் 99% வரை காரணமாகின்றன.

ஆனால் பூனைக்கடி அல்லது பூனைக்கீறலும் ரேபிஸ் வெளிப்பாடாக இருக்கலாம்.

ரேபிஸ் என்பது பூனை, நாய், கால்நடைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளிட்ட பாலூட்டிகளைப் பாதிக்கக்கூடிய நோயாகும்.

வீட்டுப் பூனை, செல்லப்பூனை அல்லது விளையாட்டுத்தனமான பூனை என்பதால் மட்டும் அதை ஆபத்தற்றதாகக் கருதக்கூடாது.

சமீபத்திய சம்பவம் ஒன்று.15 வயது சிறுமி ஒருவருக்கு முகத்தில் ஏற்பட்ட Category III பூனைக்கீறலைத் தொடர்ந்து பக்கவாத ரேபிஸ் (paralytic rabies) ஏற்பட்டது. அந்தப் பூனை ஒரு ரேபிஸ் பாதித்த நாயால் கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுமிக்கு intradermal rabies vaccine வழங்கப்பட்டிருந்தாலும் RIG வழங்கப்படவில்லை. பின்னர் அவருக்கு படிப்படியாக பக்கவாதமும் சுவாசக் கோளாறும் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மூளைத் தண்டு விடத்திரவம் ( CSF) மற்றும் தோல் உயிர்க்கூறு சோதனை (skin biopsy) மாதிரிகளில் ரேபிஸ் வைரஸ் RNA கண்டறியப்பட்டது.இது ஓர் அரிதான வழக்கு. ஆனால், அது தரும் பாடம் மிகவும் முக்கியமானது.ரேபிஸ் ஏற்படக்கூடிய சூழலில் பூனைக்கீறலை அற்பமானதாகக் கருதக்கூடாது என்பதே அது.

இனி,

பழைய கற்பனைகள் ரேபிஸ் தடுப்பூசி எவ்வளவு மாறியுள்ளது என்பதைப் பார்க்கலாம்

இங்கு ஒரு முக்கியமான விளக்கம் தேவைப்படுகிறது.

ரேபிஸ் வைரஸ் தாக்குதலுக்கு பின், தாத்தலுக்கு உள்ளானவர்கள் 0, 3, 7, 14, 21, 90 நாட்களில் ரேபிஸ் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை தற்போதைய WHO-வின் பொதுவான PEP அட்டவணையில் இல்லை.

தற்போதைய இந்திய தேசிய வெறிநோய் தடுப்புத் திட்டம் (National Rabies Control Programme), முன்பு தடுப்பூசி பெறாதவர்களுக்கு தசைக்குள் 0, 3, 7, 14 மற்றும் 28-ஆம் நாட்களில் தடுப்பூசி வழங்கும் அட்டவணையையும், தோலுக்குள் 0, 3, 7 மற்றும் 28-ஆம் நாட்களில் தடுப்பூசி செலுத்தும் அட்டவணையைக் குறிப்பிடுகிறது.

WHO, ஒரு வாரத்திற்குள் இரண்டு இடங்களில் தோலுக்குள் தடுப்பூசி செலுத்தும் 0, 3, 7-ஆம் நாள் முறையையும் பரிந்துரைக்கிறது; ஏற்கனவே ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக் கொண்டவரா? எந்த வகையான தாக்குதல் ஏற்பட்டுள்ளது? போன்ற சூழ்நிலைகளின் அடிப்படையில் நடைமுறைகள் மாறலாம்.

90-ஆம் நாள் dose-க்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. பழைய தடுப்பூசி அட்டவணைகளில் அது இடம்பெற்றிருந்தது; பின்னர் WHO-வின் standard regimen-இலிருந்து அது நீக்கப்பட்டது.

எனவே பழைய மற்றும் தற்போதைய தடுப்பூசி அட்டவணைகளை ஒன்றுடன் ஒன்று கலந்து குழப்பக்கூடாது.

பழைய தடுப்பூசி தொழில்நுட்பங்களிலிருந்து இன்றைய நவீன மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்கான பயணம், தடுப்பூசியி யலில் (vaccinology)-யின் ஒரு முக்கியமான வரலாறு.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் ( IVPM) , சோதனை மற்றும் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் ஆராய்ச்சி உதவியாளரா க நான் பணியாற்றிய குறுகிய கால அனுபவம், பொதுமக்கள் “anti-rabies injection” என்று அழைக்கும் ஒன்றின் பின்னால் இருக்கும் அறிவியல் உலகத்தை அறியச் செய்தது.

அதில் என்னை ஈர்த்த அம்சங்களில் Flury strain மற்றும் low-egg-passage (LEP) rabies vaccine technology ஆகியவற்றின் வரலாறும் அடங்கும். Flury strain, embryonated-egg rabies vaccine வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; LEP virus, chicken embryos-ல் தொடர்ச்சியான passage மூலம் உருவாக்கப்பட்டது.

இன்றைய மனித ரேபிஸ் தடுப்பூசிகளில் human diploid cell vaccine (HDCV), டிவி ஆக்கப்பட்ட கோழி முட்டை கரு செல் தடுப்பூசி ( purified chick embryo cell vaccine ) மற்றும் purified Vero-cell rabies vaccine ஆகியவை அடங்குகின்றன.

WHO, நவீன திசு வளர்ப்பு தடுப்பூசி மற்றும் தூய்மையாக்கப்பட்ட கோழி முட்டை கருசெல் தடுப்பூசி -ஐப் பரிந்துரைக்கிறது; பழைய நரம்புத் திசு தடுப்பு ஊசிகள்-ஐ அவற்றின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஆய்வக மேசைக்கும் திரைப்படத் திரைக்கும் இடையே ஒரு மிகப்பெரிய தூரம் இருக்கிறது:

ஒன்றில் antigen, potency, immunogenicity ஆகியவை அளக்கப்படுகின்றன; மற்றொன்றில் சிரிப்பு அளக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த நலவாழ்வு (One Health) என்ற கருத்தை பொது சுகாதாரப் பாடப்புத்தகங்கள் பிரபலப்படுத்துவதற்கு முன்பே, தமிழ் சினிமா சில சமயம் அதை நகைச்சுவை வழியாகத் தொட்டுவிட்டது.

“நாய் இறந்தால், நாய் கடித்த மனிதனும் இறந்துவிடுவான்” என்ற ஒரு பழைய தவறான நம்பிக்கையும் இருந்தது.

அதனால், கதாநாயகனோ—அல்லது சரியாகச் சொன்னால் நகைச்சுவை நடிகரோ—பாவப்பட்ட நாயைக் காப்பாற்ற முயற்சிப்பார்! இந்தியன் திரைப்படத்தில் ஒட்டகத்தால் கடிபட்ட கவுண்டமணி தான் பிழைப்போமா மாட்டோமா என்று பரிதவித்துக் கொண்டிருக்கும் போது, விலங்குநேயரான கதாநாயகி, கவுண்டமணியைக் கடித்த தன் ஒட்டகம் இறந்து விடுமா? என்று கவலையுடன் கமலஹாசனிடம் கேட்க அதற்கு கவுண்டமணியான் ரியாக்சன் மறக்க முடியாத ஒன்று.

அதேபோல், ஊசி பற்றிய புராணமும் ஒட்டகத்திற்கும் நீட்டிக்கப்படுகிறது.

சிறிய நாய் கடிக்கு 14 ஊசிகள் என்றால், பெரிய ஒட்டகத்திற்கு 128 ஊசிகள் வேண்டுமா என்ற கவுண்டமணி எழுப்பும் கேள்வி!

ஒரு விலங்கின் உடல் அளவை வைத்து தடுப்பூசி எண்ணிக்கையை கணக்கிடுவது போல அமைந்த அந்த நகைச்சுவையே காட்சியின் சுவாரஸ்யம். எழுத்தாளர் சுஜாதாவின் கைவண்ணம். அறிவியல் விவாதங்களை வெகு ஜன உலகத்தில் விதைக்கும் அவரது முயற்சி என்று கூட சொல்லலாம்

அதிர்ஷ்டவசமாக, மனிதனுக்கு எத்தனை ரேபிஸ் தடுப்பூசி doses தேவை என்பதைத் தீர்மானிப்பதில் ஒட்டகத்திற்கு எந்தப் பங்கும் இல்லை!

PEP என்பது விலங்கு சிறியதா, பெரியதா, அழகானதா, பயமுறுத்துகிறதா, நாயா அல்லது ஒட்டகமா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.

ரேபிஸ் வைரஸின் தாக்கம், மற்றும் தாக்கத்தின் வகை ( category of exposure), விலங்கு, நோய் பரவல் சூழ்நிலை (epidemiological) , ஏற்கனவே தடுப்பூசி எடுத்துள்ள நிலை மற்றும் பொருந்தும் மருத்துவ சிகிச்சை முறை (Best suited treatment protocol) ஆகியவற்றைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த நல வாழ்வு (One Health) பற்றி பேசும் போது தான் ரேபிஸ் என்பது, ஒரு கடியைத் தாண்டிய மிகப்பெரிய விஷயமாகிறது.

One Health என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை அங்கீகரிக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை.

ரேபிஸ் அதற்கான மிகச்சிறந்த உதாரணம்.

கடிபட்ட மனிதருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், விலங்கைப் பராமரிக்கும் கால்நடை மருத்துவர், நோயைக் கண்டறியும் ஆய்வகம், விலங்குகளுக்கான தடுப்பூசி மற்றும் population-management நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகள், கண்காணிப்பாய்வு (surveillance) மேற்கொள்ளும் பொதுச் சுகாதார பணியாளர்கள், பொறுப்பான விலங்கு பராமரிப்பில் ஈடுபடும் பொதுமக்கள்—இவர்கள் அனைவரும் ஒரே epidemiological கதையின் வெவ்வேறு பகுதிகள்.

மனித ரேபிஸ் பரவலில் நாய்கள் மிகப்பெரிய பங்கு வகித்தாலும், ரேபிஸ் என்பது அடிப்படையில் பாலூட்டிகளைப் பாதிக்கும் நோயாகும்.

எனவே:

நாயின் ஆரோக்கியம் மனிதனின் ஆரோக்கியத்திலிருந்து தனியானது அல்ல.

நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மனித ரேபிஸைத் தடுப்பதாகும்.

விலங்குகளில் செய்யப்படும் கண்காணிப்பாய்வு (surveillance) , மனித நோயைக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது.

பொறுப்பான விலங்கு பராமரிப்பு என்பது பொதுச் சுகாதாரத்தின் ஒரு பகுதியாகும்.

செப்டம்பர் 28-ஆம் தேதி அனுசரிக்கப்படும் World Rabies Day, ரேபிஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் முன்னோடியாகப் பணியாற்றிய Louis Pasteur மறைந்த நாளை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.

ரேபிஸ் ஒரு முக்கியமான உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது: மருத்துவ அறிகுறிகள் வெளிப்பட்ட பிறகு இந்த நோய் ஏறத்தாழ எப்போது வேண்டுமானாலும் உயிரிழப்பை ஏற்படுத்தலாம்; ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு ப் பிறகு உரிய PEP-ஐ சரியான நேரத்தில் வழங்கினால் இந்த மரணத்தைத் தடுக்க முடியும்.

உலக வெறிநோய் தினம் 2026-ன் கருப்பொருள் " பலமாக ஒருங்கிணைவோம் (“Stronger Together”). இந்தக் கருத்தும் ஒருங்கிணைந்த நல வாழ்வு (One Health)-ஐ மையமாகக் கொண்டுள்ளது—நாய்களுக்குத் தடுப்பூசி கண்காணிப்பாய்வு (surveillance), விழிப்புணர்வு, மனிதர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

பழைய திரைப்பட ஊசி நகைச்சுவையை மறுபரிசீலனை செய்ய இதைவிடச் சிறந்த நாள் இருக்க முடியாது.

ரேபிஸ் தடுப்பு என்பது ஒரு மனிதனின் தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவது பற்றியது அல்ல.அது எப்போதோ வழக்கொழிந்துபோன ஒரு சிகிச்சை முறை.

மாறாக அது கால்நடை மருத்துவர்கள், மருத்துவர்கள், ஆய்வக விஞ்ஞானிகள், பொதுச் சுகாதாரப் பணியாளர்கள், விலங்கு நலப் பணியாளர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என பலரின் கைகளை ஒன்றிணைப்பது பற்றியது.

உண்மையான வட்டம் தொப்புளைச் சுற்றி இல்லை.

அது One Health-எனப்படும் ஒருங்கிணைந்த நலவாழ்வைச் சுற்றி உள்ளது.

கவுண்டமணி-யைக் கடித்த ஒட்டகம் அறியாமலேயே நமக்கு சிறந்த இறுதிக் கேள்வி ஒன்றை விட்டுச் சென்றுள்ளது...

“பெரிய விலங்குக்கு எத்தனை ஊசிகள்?” என்று கேட்பதற்குப் பதிலாக,

“தடுக்கக்கூடிய ஒரு மரணத்தைத் தடுக்க எத்தனை துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்?”

என்று நாம் கேட்க வேண்டும்.

பதில் 128 அல்ல.

அது—நாம் அனைவரும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com