நம் சாமி நம் உரிமை

நம் சாமி நம் உரிமை

உலகம் முழுவதற்கும் ஒரே ஒரு கடவுள்தான் என்று யாரேனும் சொன்னால், சரிதான்; சேச்சே, பல கடவுள்கள் உண்டு என்று யாரேனும் அறுதியிட்டால், அதற்கும் வாய்ப்பு உண்டுதான். கடவுள் இப்படிப்பட்டவர் கிடையாது என்று யாரேனும் சொன்னால், சரிதான்; அதெப்படி உங்களுக்குத் தெரியும்? கடவுள் இப்படிப்பட்டவர்தான் என்று யாரேனும் அறுதியிட்டால், அதற்கும் வாய்ப்பு உண்டுதான். கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று யாரேனும் மறுத்தால், சரிதான்; அதற்கு எதிராகக் கடவுள் இருக்கிறார் என்று யாரேனும் அறுதியிட்டால், அதற்கும் வாய்ப்பு உண்டுதான். போச்சு போங்க, இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றி விசாரித்துக் கொண்டு திரிந்தால் நம் பிழைப்புக் கெட்டுவிடும் போலிருக்கிறதே' என்று அலுத்துக் கொள்கிறார் கம்பர்.

சரிதானே? திரும்பத் திரும்பக் கடவுளைப்பற்றியே என்ன விசாரணை? முழுவிசாரணை நடத்திக் ‘கடவுள் இல்லை' என்று வாதம் செய்தாலும் நம்பிக்கையாளர்கள் கடவுளை நம்பவே செய்வார்கள். பெருவிசாரணை நடத்திக் ‘கடவுள் உண்டு' என்று வாதம் செய்தாலும் மறுப்பாளர்கள் கடவுளை மறுக்கவே செய்வார்கள். அப்படி இருக்க, மறித்து மறித்துக் கடவுளை விசாரித்து என்ன பயன்?

கண்ணால் கண்டவற்றை எதிர்கொள்ள முடிகிறது; எதிர்கொள்ள முடியாவிட்டாலும் கண்ணால் கண்டுவிட்டதாலேயே அவற்றிடமிருந்து தப்பி ஓடவாவது முடிகிறது. ஆனால் கண்ணால் காண முடியாத இந்தக் கடவுள் விவகாரம் மிகவும் சிக்கலானது. கண்ணால் காண முடியாத காரணத்தாலேயே, அதை எதிர்கொள்ளவும் முடியாது; அதனிடமிருந்து தப்பி ஓடவும் முடியாது. கண்காணாத ஒன்றினால் கண்காணிக்கப்படுகிற அச்சம் நமக்கு வந்துவிடுகிறது. அதனால் நம் நடவடிக்கைகளில் ஓர் ஒழுங்கும் வந்துவிடுகிறது. கண்காணிப்புக் கருவி இருக்கிறது என்று தெரிந்தால் நிறுத்தக் கோட்டுக்கு இப்பாலேயே வண்டியை நிறுத்திக்கொள்கிறோம் இல்லையா?

கண்காணி இல்லை என்று கள்ளத்தனம் செய்வோரே! கண்காணி இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை. கண்காணியும் கண்காணியின் கண்காணிப்பும் எங்கும் நிறைந்து ஒளிர்கிறது என்பது புரிந்துவிட்டால், களவே நடக்காது; அற்றுப் போகும் என்று திருமூலர் பாட்டு ஒன்று:

கண்காணி இல்என்று கள்ளம் பலசெய்வார்;

கண்காணி இல்லா இடம்இல்லை; காணும்கால்,

கண்காணி யாகக் கலந்துஎங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவுஒழிந் தாரே.

(திருமந்திரம் 2067)

கடவுளும் கடவுளை ஒழுங்கு செய்து வழிபாட்டை எளிதாக்கித் தரும் சமய நெறியும் மனிதர்களை மேலாக்கும், செம்மையாக்கும், பண்படுத்தும் என்று முன்பெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது பட்டினத்தார் சொல்போலப் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனது‘ இல்லையா? கடவுளைக் காபந்து செய்வதற்காக உருவாக்கப்பட்ட மதங்களின் பெயரால் எவ்வளவு அடாவடிகள், அராசகங்கள்! கடவுளே!

சாரத்தைத் துப்பிவிட்டு இப்படிச் சக்கைக்காகச் சண்டை போடுவதைப்பற்றி ஒரு குறள் உண்டு:

பேதைமை என்பதுஒன்று யாதுஎனில் ஏதம்கொண்டு

ஊதியம் போக விடல். (குறள் 831)

முட்டாள்தனம் அல்லது மட்டித்தனம் என்பது என்னவென்றால், தனக்குக் கேடு தரக்கூடியவற்றை வைத்துக்கொண்டு நன்மை தரக்கூடியவற்றை எல்லாம் விட்டுவிடுதல்.

இந்த மட்டித்தனத்துக்கு ஆட்பட்டுச் சக்கையை வைத்துக்கொண்டு சாரத்தைத் துப்பிவிடாமல் இருக்கத்தான் கடவுளைப்பற்றி மறித்து மறித்து விசாரணை செய்ய வேண்டியதாய் இருக்கிறது. இனி, இந்தக் கடவுள் விவகாரத்தில், சாரம் எது? சக்கை எது? இதில் சித்தர்களுக்கு ஒரு பார்வை இருந்தது. அதைக் காணப் புகும்முன் ஒன்றைத் தெளிவு செய்துகொண்டு விடலாம்.

கடவுள் என்பவர் எடுத்த எடுப்பிலேயே வானத்தைப் பொத்துக்கொண்டு தனக்கென்று ஒரு பெயரோடும், வடிவத்தோடும், வழிபாட்டு நெறிமுறையோடும், சொல்லும் மந்திரங்களோடும், சடங்குகளோடும் அவற்றை எல்லாம் விளக்கிச் சொல்லும் புனித நூல்களோடும் கோயில் கொண்டு விடவில்லை. கடவுள் என்னும் கருதுகோளுக்கு, கடவுள் வழிபாட்டுக்கு ஒரு வளர்ச்சிமுறை உண்டு. உணர்வெழுச்சியாகத் தொடங்கி, வாழ்வியல் தேவையாகத் தொடர்ந்து, அறிவெழுச்சி நிலையில் அடங்குவது அது.

அசையும் பொருள்களெல்லாம் கடவுளின் ஆவி குடியிருக்கும் பொருள்கள் என்று கருதி, அசைவை நிறுத்திக்கொண்டு இறந்தோரின் ஆவிகளெல்லாம் கடவுளோடு ஐக்கியமாகிவிட்டதாகக் கருதி, அவற்றைக் கும்பிட ஏதேதோ அடையாளம் வைத்து, அடையாளங்களை அழகுபடுத்தி, வடிவமயமாக்கி, அவற்றுக்கு அரண் செய்து கோயில் கட்டி, வழிபாட்டைச் சடங்குமயமாக்கி வளர்ந்தது சமய வழிபாட்டு முறைமை.

சமைக்கத் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்காகச் சமையல் குறிப்பு எழுதுவதைப்போலக் கடவுள் குறிப்புகளும் சடங்குக் குறிப்புகளும் எழுதி, அவற்றைப் புனித நூல்கள் ஆக்கி, அவற்றில் என்ன சொல்லப்பட்டதோ, எப்படிச் சொல்லப்பட்டதோ, எங்கிருப்பதாகச் சொல்லப்பட்டதோ அதுதான் கடவுள் என்று கடவுளை நூல்களுக்குள், சடங்குகளுக்குள் சிறைப்படுத்தியபோது சாரத்தை வெளியே கொட்டிச் சக்கையைப் போற்றத் தூண்டின சமயங்கள்.

கடவுள் வழிபாட்டு முறையில் இது ஒரு தலைகீழாக்கம். இதை நேர் செய்ய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்களின் மூலவர் திருமூலர். கடவுளை எப்படிக் கருதிப் பார்க்க வேண்டும் என்பதை ஒரு நாடகம்போல ஆக்கிக் கொஞ்சம் நுட்பமாகச் சித்திரிக்கிறார்:

ஒரு தாய்க்கு ஒரு மகள். அந்த மகளுக்குத் தலை வாரிக்கொள்வதில் இருந்து சீராக உடுத்திக்கொள்வதுவரை எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறாள் தாய். மகளுக்குத் திருமணம் ஆகிறது. முதன்முதலாகக் கணவனோடு தனித்திருக்கப் போகிறாள் மகள். கணவனோடு தனித்திருக்கையில் செய்துகொள்ள வேண்டுவன யாவை என்பதைக் குறித்து ஒன்றுமே சொல்லிக்கொடுக்காமல் சும்மா விட்டுவிடுகிறாள் தாய். அதென்ன? சுக்குப் பெறாதவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்க முன்நின்ற தாய், வாழ்வின் முக்கியமான அம்சம் ஒன்றைச் சொல்லிக் கொடுக் காமல் சும்மா இருந்துவிட்டாளே ஏன்? அவளுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதா என்றால், தெரியும். அந்தத் தாயும் தன் கணவனோடு ஆடிய இன்பம்தானே அது? அப்படியானால் தாய் ஏன் தன் மணாளனோடு தான் ஆடிய இன்பத்தை மகளுக்குச் சொல்லிக்

கொடுக்கவில்லை எனில், ஒருவர் சொல்லிக்கொடுத்து இன்னொருவர் புரிந்துகொள்ளக்கூடியதா அது? இருவர் ஒருவராகத் தோய்ந்து ஆடி ஆடிப் புரிந்துகொள்கிற ஆட்டம் இல்லையா அது?

உடல் இன்பத்தைப் போலவேதான் கடவுள் இன்பமும். இரண்டுமே சாத்திரங்களைப் படிப்பதால் கைகூடுவதில்லை. சடங்கைப்போல நடத்தினால் இரண்டுமே உருப்படாது. தொடர்புடைய இருவரைத் தவிர மூன்றாமவர் ஒருவர் ஊடே நுழைந்தால் இரண்டுமே விளங்காது.

‘புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்‘ என்று காதலியையே தான் பயிலும் புத்தகம் ஆக்கிவிடுகிறான் காதலன். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?‘ (திருவாய்மொழி 7.5.1) என்று கடவுளையே கற்பவர் கற்கும் நூலாக ஆக்கித் திருவாய்மொழிகிறார் நம்மாழ்வார். அவ்வளவுதான் திருமூலர் சொல்லும் காரியமும். பாட்டு இது:

முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்.

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே?

(திருமந்திரம் 2944)

திருமூலரைப் போல நுட்பமாகச் சொல்லாமல் மிக நேரடியாக, மிக வெளிப்படையாகவே முழங்குகிறார் மற்றொரு சித்தரான சிவவாக்கியர்:

கோவில் ஆவது ஏதடா? குளங்கள் ஆவது ஏதடா?

கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!

கோவிலும் மனத்துஉளே; குளங்களும் மனத்துஉளே.

ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே!

கோவிலாவது குளங்களாவது! இவையெல்லாம் மனிதரைப் பேதப்படுத்துகின்றன. கோவிலின் எந்த எல்லைக்குள் யார் நுழையலாம், கோவிலின் எந்த வேலைக்கு யார் தகுதியாளர் என்று வரம்பு கட்டுகின்றன. இதென்ன பேதைமை? சமயங்களால் வழங்கப்பட்ட வரையறைகளின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர்; பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கம் அற நிறைந்திருப்பவர்; இந்த உலகையே உருவாக்கியவர். அப்படி என்றால், இந்த உலகில் இடம் என்று இருக்கிற எல்லாமே கடவுளின் இடங்கள் இல்லையா? அப்படி இருக்க, இந்த இடத்துக்குள் நீ வரத் தகாது என்று ஓரிடத்தை விலக்குவது எந்த அறிவின் அடிப்படையில்?

கரு. ஆறுமுகத்தமிழன்
கரு. ஆறுமுகத்தமிழன்

சமயங்களால் வழங்கப்பட்ட வரையறைகளின்படி, உலகில் வாழும் உயிர்கள் எல்லாமே கடவுளின் பிள்ளைகள். அப்படி என்றால், எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறைதானே? தகுதி பேதமும் அதிகார பேதமும் எங்கிருந்து வந்தன? கோவில் என்கிற கட்டடத்தை மேலாண்மை செய்கிறவர்களுக்கு இந்த உரிமைகள் எல்லாம் உண்டு என்றால், அந்தக் கோவில் எதற்கு? நாம்தான் கோவில்; நமக்குள்ளேயே குளம். நமக்குள் இவற்றை ஆக்குவாரும் அழிப்பாரும் ஏற்பாரும் மறுப்பாரும் நம்மை அல்லாது வேறு எவரும் இல்லை.

திருமூலரைப்போலவே சிவவாக்கியரும் ஒரு சித்திரம் தீட்டுகிறார்: அடுப்புக் கூட்டிச் சட்டியை ஏற்றிக் காயையும் கறியையும் சேர்த்துக் குழம்பு வைக்கிறார் ஒருவர். குழம்பு கொதித்துவரப் புளி கரைத்து ஊற்றி, உப்பிட்டுக் கரண்டியை இட்டுக் கிண்டுகிறார். சட்டியிலே குழம்பு தளதளத்து மணக்கத் தொடங்குகிறது. பக்குவம் பார்க்கச் சில சொட்டுகளை எடுத்து நாவிலே விட்டுப் பார்க்கிறார். உப்பும் உறைப்பும் சேர்மானமும் சரியாக இருக்கவே, குழம்பை இறக்குகிறார். இது நிகழ்வு.

இப்போது சிவவாக்கியர் சில கேட்கிறார்: தன்னில் கொதிப்பது குழம்புதான் என்று

சட்டிக்கோ, தான் கிண்டுவது குழம்பைத்தான் என்று கரண்டிக்கோ தெரியுமா? ‘குழம்பின் சுவை சரியாக இருக்கிறது‘ என்று குழம்பை ஏந்திய சட்டியோ அல்லது குழம்பைக் கிண்டிய கரண்டியோ சொல்லுமா? அது குழம்பு என்பதும், சேர்மானமும் சுவையும் சரிதான் என்பதும் அதை சமைத்து நுகர்கிற நம் அறிவைப் பொருத்தவையே தவிரச் சட்டியையும் குழம்பையும் பொருத்தவை அல்லவே?

அதைப்போலவே கல்லை நட்டு வைத்துக் கடவுள் என்று போற்றி, மந்திரங்களால் அதனோடு முணுமுணுத்துப் பேசும் மாந்தரே! பதிலுக்குக் கல் உங்களோடு பேசுமா? பேசாது. எப்படிப் பேசும்? கடவுள் உங்களுக்குள் இருக்க,

நீங்களோ அதை விட்டுவிட்டு நட்ட கல்லிடம் அல்லவா முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பாட்டு இது:

நட்ட கல்லைத் தெய்வம்என்று நாலுபுட்பம்

சாத்தியே

சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

சாரம் முந்தியா, சக்கை முந்தியா? கடவுள் முந்தியா, கோவில் முந்தியா? மனிதர் முந்தியா, மதம் முந்தியா என்று வரும்போது சித்தர்கள் சாரத்தை, கடவுளை, மனிதரை முந்தி வைத்தார்கள். கடவுளை அணுகுவது தனிமனித வரம்புகளுக்கு உட்பட்டது. அவரவர்க்கு அவரவர் இறையவர். கடவுளைப் பொதுமையாக்கி, பொதுமையை ஒருமையாக்கி, ஒருமையை மதங்களுக்குள்ளும் சடங்குகளுக்குள்ளும் ஒளித்து வைத்து வழிபடும் மக்களை அயன்மைப்படுத்தும் மேட்டிமை அதிகாரக் கருத்தியல் சித்தர்களுக்கு ஒவ்வாதது. நம் சாமி, நம் உரிமை. ஆம் என்பார் ஆம் என்க; இல்லை என்பார் இல்லை என்க. அவ்வளவுதான்.

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com