தமிழ் சினிமா நூற்றாண்டுகளைக் கடந்தபோது அதற்கு பல்வேறு முகங்கள் இருந்தன. இதில் ஒளித்து வைத்துக் கொண்ட முகங்களும் உண்டு. அரசியலும், சினிமாவும் ஒன்றிணைந்த தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் அரசியலைப் பேசிய சினிமாக்கள் குறைவு.
சமூக அரசியல் பற்றிப் பேசுகிற படங்களை நாம் தேடவேண்டியிருந்தது. அதிலும் ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளைச் சொல்லும் திரைப்படங்கள் எப்போதேனும் அரிதாக வெளிவந்து கொண்டிருந்தன. சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பது தான் இந்தியாவின் சினிமா வரலாற்றுப் பாடம். இதில் ஒரு இயக்குநர் தான் சொல்ல நினைத்த சமூகக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்ய முடியுமென்பதே ஒதுக்கப்பட வேண்டிய யோசனையாக இருந்தது. இதன் பின்னணியில் தான் பா. இரஞ்சித் பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது.
‘அட்டைக்கத்தி’ படம் வந்தபோது அது ஒரு காதல் படம் என்பதாக பேசப்பட்டது. திரையில் நாம் பார்த்த மனிதர்களின் பின்னணி வேறொன்றைக் குறித்தும் பேசுவதை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர். அது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் சொல்லப்பட்டது. அடுத்து வந்த ‘மெட்ராஸ்’ படம் , முந்தைய படத்தில் தற்செயல்கள் என சொல்லப்பட்டவற்றை ஓரங்கட்டி, ‘இது என்னுடைய முத்திரை’ என இரஞ்சித்தால் முன்வைக்கப்பட்டது. சென்னைக்கான அடையாளம் என்பது அதுவரை தமிழ்சினிமாவில் காட்டப்பட்டதைக் கடந்த ஒன்றாக இவருடைய படத்தில் எழுந்து நின்றது. சென்னை பூர்வகுடிமக்களின் இன்றைய நிலை, கொண்டாட்டங்கள், வாழ்க்கைமுறைகளை நுணுக்கமாக பதிவு செய்தபடி இருக்கிறார்.
சாதி அரசியல் ஒவ்வொருவரையும் எப்படியும் பயன்படுத்திக் கொள்கிறது யாரை பழிகொடுத்து யாரை நிலைநிறுத்துகிறது என்பதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் கறுப்பின மக்கள் குறித்த திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் அவற்றை இயக்குநர் ஸ்பைக் லீ -க்கு முன் பின் என்று பிரிக்கலாம். ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, கலை செயற்பாட்டளராக ஸ்பைக் லீ தனை நிறுவிக் கொண்டது, அங்கு சமூகத்திலும் திரைப்படத் துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு இணையான ஒன்றினை இங்கு பா.இரஞ்சித் செய்து கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தை வைத்து என்ன கதை சொல்லப்போகிறோம் என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது. சென்னை நகரின் அடையாளங்களுள் ஒன்று குத்துச்சண்டைகள் என்பதே ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகே பரவலாக தெரிந்தது. இரஞ்சித் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்புலத்தையும் அழகியலோடு சொல்லப்பட வேண்டும் என்பதைத் தன் திரைக்கனவின் மையமாகக் கொண்டிருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளராக அவருடைய நீலம் தயாரிப்பில் வெளிவந்த படங்களும் அவையளவில் முக்கியத்துவம் பெற்றவையே. இது தவிர இலக்கியச் செயல்பாடுகள், கலைவிழாக்கள், பதிப்பகம், மாத இதழ், நூலகம் என தொடர் செயல்பாட்டாளராக சமகாலத்தில் எந்தத் திரைப்பட இயக்குநரும் இந்திய அளவில் இயங்கவில்லை என்பது முக்கியமானது.
எந்த அதிகாரப் பின்புலமும் இல்லாமல் தொடர்ந்து காத்திரமாக செயல்படக்கூடிய இயக்குநர் பா. இரஞ்சித் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மறுக்க முடியாத நிகழ்வு என்று உறுதியாக சொல்ல முடியும்.