ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் அங்குதான் நிற்கிறார்கள். மணல் மூட்டைகளைக் கொண்டுவந்து போட்டு தண்ணீரை தடுக்க முயன்றார்களா அல்லது ஆற்றைக் கடக்க பாலம் அமைத்தார்களா என்பது என் நினைவில் இல்லை.
ஆனால் நுரைத்துப் பொங்கிப் பாயும் அந்த நதியின் நடுவே அப்பா நின்றார். அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். அதுதான் நினைவிலிருக்கும் முதல் காட்சி.
கண்மாய்களை ஏலம் எடுத்து அதில் மீன் வளர்த்து விற்கும் தொழில் செய்து வந்தார் அப்பா. எப்போதும் வீட்டில் மீனும், கருவாடும் இருக்கும்.
எங்கள் ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டிக்கு இருபுறமும் ஆறு. வடபுறம் வைப்பாறு தென்பக்கம் ஆவுடையாபுரம் கிராமம். அதற்கும் திருவேங்கடத்திற்கும் இடையே மீண்டும் நிட்சேப நதி.
கரிவலம்வந்த நல்லூரில் இந்த நிட்சேப நதியில், மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவரது அஸ்தி கரைக்கப்பட்ட ஏழு நதிகளில் அதுவும் ஒன்று. இவ்விரு நதிகளும் எங்கள் ஊரின் கிழக்குப் பக்கம் குண்டம்பட்டி அருகே இணைகின்றன.
எப்போதும் நீரின்றி, ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் படியாகத் தான் இருக்கும். வெள்ளம் வந்துவிட்டாலோ எங்கள் பகுதி தனித்தீவு போல மாறிவிடும்.
வெளி உலகத் தொடர்பே இருக்காது. தொடர்ந்து பல நாட்களுக்கு மின்சாரம் இருக்காது. ஆற்று வெள்ளம் மக்களை இழுத்துச் செல்லும்.
இரு பக்கமும் பாலங்கள் கட்டப்பட்டது. அதன் பின் மக்களின் வாழ்வும் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது.
எங்கள் ஊரில் ஒரு அம்மா எல்லா வருடமும் ஊர்த்திருவிழா சமயம் என்னை வம்படியாக அழைத்துப் போய் வளையல் வாங்கித் தருவார். அவரையும் இன்னும் சிலரையும் ஆற்று வெள்ளம் அடித்துப் போன போது, அப்பா வலை போட்டு காப்பாற்றினாராம்.
அதற்கு ஒரு சிறிய நன்றிக்கடனாம் அது.
அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு முதல் விடுதி வாசம். அப்பா விடுமுறைக்கு என்னை ஊருக்கு அழைத்துச் செல்ல வந்தார். என்னிடம் அவர் சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம், "பாப்பா ஆத்துல வெள்ளம் போகுது.. பயப்படக் கூடாது" என்பது தான்.
திருவேங்கடம் தாண்டி, ஆவுடையாபுரத்தில் ஒரு தரைப்பாலம் உண்டு. வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் சிற்றோடையான அதிலும் நீர் பெருகி ஓடும்.
திருவேங்கடம் தாண்டும் போது ஆற்றுப்பாலத்தின் மேல் ஓடும் நதியைக் கண்டு பரவசமாக இருந்தது. "பாப்பா பாத்தியா எவ்ளோ தண்ணி போகுதுன்னு. ஆனா பயப்படாத.. நாந்தான் இருக்கேன்ல கடந்துடலாம்" என அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
தரைப்பாலத்தின் கிட்டே செல்லச் செல்ல திடீரென பயம் மனதைக் கவ்வியது. நாங்கள் பாலத்தின் அருகே செல்லும் போது, இன்னும் ஓரிருவர் இருசக்கர வாகனத்தோடு வந்து விட்டார்கள்.
இரு வயதான பாட்டிகளும் பாலத்தைக் கடக்க நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பாட்டி, என் அப்பாவை பார்த்ததும் "சாமி, அப்டியே கைத்தாங்கலா கூப்டு போறியா?" என கேட்டார்.
பின்னால் வந்த ஒரு சித்தப்பா, "நீ போ ணே.. நான் பாப்பாவ கூப்டு வரேன்" என்றார்.
அப்பா, அந்த பாட்டியோடு பாதி ஓடையைக் கடந்த பின் மெதுவாக தயங்கி தண்ணீரில் காலை வைத்தேன். இரு எட்டுகள் எடுத்து வைத்ததும், கால்களை ஊன்ற விடாமல் தண்ணீர் பிடித்து இழுத்தது. கால்கள் தடுமாறி விழப்பார்த்து பயத்தில் அலறி வேகமாக பின்னேறி விட்டேன். பாதி கடந்திருந்த சித்தப்பா இருமுறை அழைத்துப் பார்த்து, பின் வேகமாக அந்தப் பக்கம் சென்றுவிட்டார்.
ஓடையின் வேகமும் நீரின் அளவும் அதிகரித்தது போலத் தோன்றியது. எல்லோரும் அக்கரை அடைந்த பின்பும் இந்தப் பக்கம் இருந்து அழுது கொண்டிருந்தேன்.
வா வா என அந்தப் பக்கமிருந்து இளைஞர்கள் வந்து அழைத்தார்கள். அப்பாவைத் தவிர யாரையும் நம்பி நீரில் இறங்கும் தைரியத்தை இழந்திருந்தேன்.
அங்கிருந்தவர்கள் வேண்டாம் என தடுத்தும் கேட்காது மீண்டும் அக்கரையில் இருந்து வந்தார், என் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு, "அப்பா கையை மட்டும் விட்டுடாத சரியா? புரியுதா? ஒண்ணுமில்லை என் கூடவே நடக்கணும்" என அழைத்துக் கொண்டு போனார்.
நீர் மிகவும் வீரியமாக பாய்ந்து கொண்டிருந்தது. நானும் அப்பாவும் இரு முறை இடறினோம். இம்முறை என் நெஞ்சளவிற்கு நீர் இருந்தது. அப்பாவின் இடுப்பளவு தண்ணீர்.
அந்தப் பக்கம் போய் சேர்ந்தபின்பும் நடுங்கிய உடலோடு அப்பாவின் கரத்தை விடாதிருந்தேன். அது குளிரால் அல்ல பயத்தால் என்பது புரிந்து அப்பா என்னை அணைத்துக் கொண்டிருந்தார்.
எத்தனை எத்தனையோ நெகிழ்ச்சியான சம்பவங்கள் நினைவடுக்குகளில் நிறைந்திருந்தாலும், உயிர் பயத்தோடு அப்பாவை தவிர வேறு யாரையும் நம்பாமல் அவரது கரங்களுக்காக காத்திருந்த நொடிகளும், எனக்காகவே என்னை விட அதிக பதற்றமடைந்த அவரின் முகமும் நடுங்கிய கரங்களும் இன்னும் நினைவில்.
இப்போதெல்லாம் வைப்பாறு வறண்டே கிடக்கிறது. அதில் ஒரு வெள்ளத்தையாவது பார்த்து விட மாட்டோமா என எங்கள் மக்கள் அவ்வப்போது யோசித்து யோசித்து சலித்துப் போய் விட்டார்கள்.
இப்போது 2023 டிசம்பரில் பெய்த பெருமழையும் தாமிரபரணியில் பாய்ந்தோடிய வெள்ளமும் நினைவிருக்கலாம். அப்போது கூட வைப்பாறில் வெள்ளம் வரவில்லையே என ஆதங்கப்பட்டோம். எங்கள் ஆதங்கம் போக்க, இரண்டுநாள் கழித்துப் பெருவெள்ளம் ஏற்பட, பாலம் தாண்டி ஓடியது வைப்பாறு.
இவ்வாண்டு ஆங்கிலப் புத்தாண்டு சமயம் வேம்பார் போய் திரும்பும் வழியில் விளாத்திகுளத்தில் வைப்பாற்றில் நீர் நிற்பதைப் பார்த்து "நிறுத்து நிறுத்து வண்டிய நிறுத்து ஆத்துல கால் நனைச்சிட்டு போகலாம்" என கூவினேன். பாலத்தின் அடியில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினோம். நீரைப் பார்த்த பிள்ளைகள் இறங்கி விளையாட அனுமதி கேட்டனர்.
"ஊர் கழிவெல்லாம் இதுல தான் கலக்குது… வேண்டாம்" விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் இணையர்.