நிறுவனமான கட்சிகள்!

நிறுவனமான கட்சிகள்!

மக்களாட்சியில் கட்சிகளின் தோற்றத்துக்கு தேவைகள் இருந்திருக்கின்றன. சுதந்தரபோராட்டத்தையொட்டி காங்கிரஸ் கட்சி உருவானது. அதில் உறுப்பினராக இருந்த எல்லோரும் சொந்த செலவில்தான் கட்சிக்காக வேலைபார்த்தார்கள்.

நீதிக்கட்சி இங்கே இருந்த பிராமண ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவதற்காக உருவானது. அதிலும் சரி நீதிக்கட்சியிலும் சரி படித்தவர்கள், வசதியானவர்கள்தான் இருந்தார்கள். பொதுக் காரியத்துக்காக சொந்த நிதியைச் செலவு செய்தார்கள். காலப்போக்கில் இந்த இயக்கங்கள் மக்களிடையே பரவியபோது பாமர மக்களும் இதில் இணைந்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். பின்னர் திமுக உருவானபோது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எளிய மக்களின் கட்சியாகப் பிறப்பெடுத்தது. அன்றைய வரலாறுகளைப் படிக்கும்போது கட்சிக்காக தங்கள் சொத்துகளை செலவழித்து இழந்ததுதான் தெரியவருகிறது. ராம அரங்கண்ணல் தன் சுயசரிதையில் தான் மைலாப்பூரில் 1967 - இல் போட்டியிட்டது பற்றி எழுதி உள்ளார். அண்ணா  இவருக்கு வாய்ப்பு தந்த நிலையில் மயிலாப்பூரில் சென்று இறங்குகிறார். அங்கே இருக்கும் திமுக தொண்டர்கள் கூட்டம்போட்டு, நமக்காகப் போட்டியிட அரங்கண்ணல் வந்துள்ளார். அவருக்கு எந்த சிரமமும் இல்லாமல் நாம் கவனித்துக் கொள்ளவேண்டும். அவரை வெற்றி பெற வைக்கவேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கடைசிவரை தனக்கு பத்து பைசாகூட செலவுகூட அவர்கள் வைக்கவில்லை என அவர் குறிப்பிடுகிறார். மிகவும் அடித்தட்டு நிலையில் இருந்த தொண்டர்கள்தான் அவர்கள். ஆனாலும் அவர்களே முழுக்க உழைத்து செலவழித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையும் தமிழ்நாட்டில் இருந்தது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

1990களுக்குப் பின் தாராளமயக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. நம் நாட்டின் இயற்கை வளங்களைக் குறிவைத்து அந்நிய நிறுவனங்கள் கடன் கொடுத்தன. முதல் தர தேயிலை முதல் முந்திரி வரை அவர்கள் வட்டியாகப் பெற்றனர். அதுமட்டுமல்ல இந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளையே தங்கள் முகவர்களாக செயல்பட வைத்தனர். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் இதனால் அபரிமிதமான பணத்தைக் குவிக்க ஆரம்பித்தன. பல திட்டங்களில் அவர்களே பங்குதாரர்களாக மாறினர். தொண்டர்களுக்கும் இது புரிந்து, அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழி என பார்க்க ஆரம்பிக்கின்றனர்.

நிலைமைகள் மாறுகின்றன. உதாரணத்துக்கு இப்போது கடைசியாக நடந்துமுடிந்த திமுக இளைஞரணி மாநாட்டை எடுத்துக்கொண்டால் இரண்டரை லட்சம்பேர் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். ஒன்றரை லட்சம்பேருக்கு நாற்காலிகள், அமர மிகப்பெரிய பந்தல். உலக அளவில் 100 ஏக்கரில் யாருமே செய்யாத அளவுக்கு மாநாட்டு ஏற்பாடு என்கிறார்கள். அவர்கள் தங்கள் நாற்காலிகளில் அமரும்போது பைகளில் பிஸ்கட், நீர் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. ஒன்றரை லட்சம்பேருக்கும் இதை வழங்குவதென்றால் அதன் பின்னிருக்கும் திட்டமிடல், ஒழுங்கு, நிதி போன்றவற்றை எண்ணிப்பாருங்கள்.

நான் எண்பதுகளில் கட்சிக் கூட்டங்களுக்கு மாநாடுகளுக்குச் செல்லும்போது தொண்டன் தன் குடும்பத்துடன்சொந்தசெலவில் மிகுந்த ஆர்வத்துடன் வருவதையே கண்டுள்ளேன். பெரியார், அண்ணா பற்றி குழந்தையிலேயே சொல்லி வளர்ப்பர்.

அரசியலில் ஈடுபடுவதை சமூகமாற்றத்துக்காக நாம் செய்யும் கடமையாகப் பார்த்தார்கள். ஆனால் இன்றோ நாம் இதில் என்ன பயனடைகிறோம் என்று பார்க்கும் நிலைக்குத் தொண்டர்கள் வந்துவிட்டனர். கட்சிகளும் இவர்களைப் பயனாளிகளாகவே பார்க்கிறார்கள். ‘நீங்கள் மாநாட்டுக்கு வாங்க. சொகுசாக பேருந்தில் அழைத்துவந்து சாப்பாடு போட்டு, பரிசுகள் கொடுத்து திரும்ப அனுப்புகிறோம்' என்றுதான் அழைக்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டங்கள்கூட இப்படித்தான் நடத்தப்படுகிறது. கேள்வி கேட்பவர்களாக அவர்கள் இருக்கக்கூடாது என்பதும் இதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கிறது. கட்சிகளுக்குள் நிலவுவது ஒருவிதமான சர்வாதிகாரமே.

லட்சியப் பிடிப்புடன்கூட கட்சிகளே இல்லை. இடதுசாரிகளும் விலகிச் சென்றுவிட்டதாகவே நினைக்கிறேன். சுமார் அரைசதவீத வாக்குகள் கொண்டிருக்கும் இக்கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் சுமார் ஆறு இடங்களை பெரிய கட்சி தங்கள் கூட்டணியில் தருகிறது என்றால் அக்கட்சியில் இருக்கும் அணிகளின் பிரச்சார பலத்தைப் பயன்படுத்திக்கொள்ளவே தருகிறது. ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப ஓயாது பிரசாரங்கள், அறிக்கைகள் என்று இக்கட்சிகளும் பாடுபடுகிறார்கள். வர்த்தகரீதியான பெருநிறுவனங்களின் செயல்பாடுபோல் இதுவும் ஆகிவிட்டது.

இந்நிலையில் லட்சியபூர்வமான கட்சிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கான அதிதீவிர சூழல் இனி உருவானால்தான் வாய்ப்புண்டு. இன்றைய நிலையில் யாரும் எதையும் தியாகம் செய்ய தயாராக இல்லை. கட்சிப் பதவிகளையே காசுக்கு விற்கும் அவலத்தைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் பலியானது உட்கட்சி ஜனநாயகம். தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசினால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் போய்விடுமே என்ற எண்ணம் உருவாகி உள்ளது. தலைவர்கள் தமக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது, தன்னை மீறி கட்சிக்குள் யாரும் பேசக்கூடாது என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.

(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com