கடவுள் எழுதும் கவிதைகள் 
ரவி பேலட்

கடவுள் எழுதும் கவிதைகள் 

கோவையில் தங்கியிருந்த விடுதியின் அறையில் ஐந்து நண்பர்களும் நானும் குழுமியிருந்தோம். பேசி மகிழ்வதாக  உத்தேசம். அப்போது தனக்கு வாட்ஸ் அப்பில் வந்த புராண கதையை ஒருவர் சிலாகித்து பேசினார். மற்றொருவர் அதை எதிர்த்து கிண்டலாக வேறு ஒரு தகவலைக் கூறினார். இருவரும் தங்கள் நிலைக்கு ஆதரவாக மேலும் சில செய்திகளைக் கூறி விவாதத்தின் உஷ்ணத்தை கூட்டினர்.

Man and god met somewhere and both exclaimed - my creator என்று இன்னொருவர் கூற நிலவரம் கலவரமானது. அப்போது வாசலில் விடுதி சிப்பந்தி, நாங்கள் கேட்டிருந்த உணவுப் பொருட்களுடன் தோன்றினார்.

கொஞ்ச நேரம் எல்லாரும் பேசாமல் வந்திருக்கும் சாப்பாட்டு வகைகளை காலி பண்ணுங்கள் நான் சில கவிதைகளை / செய்யுள்களை சொல்கிறேன் என்றேன்.

1)

என்னையும் என் கடவுளையும்

ஒரு தராசின்

இரண்டு தட்டுகளில் வைத்து

எடை போட்டுப்பார்த்தால்

என்னை விட என் கடவுள்

இரண்டு மூன்று கிலோக்கள்

குறைவாகத்தான் இருப்பார்.

எப்படியென்று கேட்கிறீர்களா

முதல் கிலோவுக்கான காரணம்

அவருக்கு எந்த கவலையுமில்லை

இரண்டாவது கிலோவுக்கான காரணம்

அவருக்கு எந்த கடன்

தொல்லையுமில்லை

மூன்றாவது கிலோவுக்கான காரணம் அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை ஆகவே

- ஜெ.பிரான்சிஸ் கிருபா

2)

நீ மேலே இருக்கிறாய்

நான் கீழே இருக்கிறேன்

உன் பார்வை எனக்காகக் கீழ்நோக்கியும்

என் பார்வை உனக்காக மேல்நோக்கியும்

இப்போது நாம் சந்திக்கும் இடம்

கீழா.. மேலா?

- ஜின்னா அஸ்மி (கடவுள் மறந்த கடவுச் சொல்)

3)

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப்

போய்விட்டார்

ஆயினும்

மனதினிலே ஓர் நிம்மதி

- ஆத்மாநாம்

4)

மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும்

வாலிபம் இருக்கும் வரைதான்!...

வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும்

வரவுகள் நிலைக்கும் வரைதான்!...

கோடுவிழும் மேனிதனில் கோடிநரை தோன்றியபின்

கூடுவது என்ன சுகமோ?

கூடும்விறகோடு வெறும் கூடுயென வீழ்ந்தபின்பு

கோவணமும் கூட வருமோ?

நாடிவிடு கண்ணனடி தேடிவிடு கண்ணன்முகம்!...

- கண்ணதாசன்

5) சோதி இறையருள் ஆறு பாயவே

பேதம் மறைந்து உய்யவே (கற்புக்கரசி படப்பாடல் )

& பட்டுக்கோட்டையார்

6)

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீநி றைந்தாய்;

தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;

அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;

துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!- தொல்லை

போக்கிவிட்டாய்

- பாரதியார்

7 )

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்

ஏழ் படி கால் தொடங்கி

வந்து வழி வழி யாட் செய்கின்றோம்

திருவோணத் திருவிழவில்

யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை

யழித்தவனைப்

பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

என்று பாடுதுமே

பெரியாழ்வார் ( திருப்பல்லாண்டு பாடல் 6)

8)

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி

நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

பட்டினத்தார்: (திருவேகம்பமாலை )

9)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே

திருமூலர் ( திருமந்திரம் )

10)

‘மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே'

தொல்காப்பியர்

இந்த பத்து கவிதை வரிகள் சுமார் 2300 வருடமாக நிகழ்ந்த கடவுள்களின் தமிழ் பயணத்தை சுருக்கமாகச் சொல்லும்.

அன்று, நீர்நிலைகளையும்,வேம்பு, கடம்பு, ஆல், அரச மரங்களையும், இன்னபிற இயற்கையையும் கடவுளாக பாவித்து பழந்தமிழர்கள் வணங்கினார்கள்.

இன்று, ‘தமிழ் மொழி கடவுளுடன் தொடர்புடையது. தமிழ் ஒரு தெய்வீக மொழி. குடமுழுக்கு நடத்தும் போது அத்தகைய தெய்வீக மொழியைப் பயன்படுத்த வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு கூறுகிறது(செப்டம்பர் , 2021).

‘நெருப்பு என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்' என்றார் லா.ச.ரா. ஆனால் தமிழில் கடவுள் பற்றி பாடப்படும் பொழுதெல்லாம் பக்தியோடு தமிழ்அன்னை சிறப்பாக ஜொலிப்பதைக் காணமுடிகிறது.

நாத்திக அணுகுமுறைக்குத் துணையாக மாங்குடி கிழார் பாடிய பின் வரும் சங்கப் பாடலை பலர் கூறுவதுண்டு,

குரவே தளவே குருந்தே முல்லையென்று

இந்நான் கல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே

சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர்

அவரையொடு

இந்நான் கல்லது உணாவும் இல்லை;

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று

இந்நான் கல்லது குடியும் இல்லை;

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. -

-மாங்குடி கிழார்

பகைவரின் படையெடுப்பைத் தடுத்து, யானைகளைக் கொன்று, விழுப்புண் பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர, நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை என்ற பொருளுடைய இந்த பாடல் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதை உணர்த்துகிறது.

வெளியே நாத்திகம் பேசி அடுத்தவர்க்கு தெரியாமல் சாமியை வணங்குபவர்கள் பற்றிய கவிதை இலங்கையில் எழுதப்பட்டுள்ளது.

கடவுள் என் சோரநாயகன்!

நாஸ்திகன் என்றெனை நம்பியிருந்தேன்.

ஆயின் -

கோயில் கண்டதும் கை கூப்பிற்று.

குளத்தைக் கண்டதும் உளம் சுத்திட்டது.

எனவே -

சுற்றுமுற்றும் பார்த்தேன் எனது

உற்ற நண்பர் பகுத்தறிவாளர்

உளரோ என்று. அன்னவர் யாவரும்

மெத்தத் தொலைவில் என்றறிந்திட்டதும்

பக்திப் பெருக்குப் படீரென எழவும்

கல்லை எனது கைகளால் வணங்கித்

‘தொல்லை தீரடா தோகை மயிலாள்

வள்ளி கணவர்! வடிவேல் முருகா!

பொல்லாச் சூரனை இல்லா தாக்கிய

நல்லை நகரா, போற்றி'யென்றிசைத்தேன்.

நாஸ்திகன் நானா? ஆஸ்திகன் நானா?

என்னை அறியா நிலைக்கு வந்திட்டேன்.

ஆண்டவன் முன்னே நேரே செல்ல

அஞ்சினேன் இருளில் ஆடையுள் மறைந்து

கொஞ்சினேன் அன்னவன் குமிழ் வாயிதழை!

கடவுள் என்றன் கள்ளக் காதலன்.

கள்ளக் காதல் இனிப்பது போல

வெள்ளைக் காதல் இனியா தாதலின்

நாஸ்திகன் பக்தியே

நாட்டில் சிறந்ததாம்!

கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) (இலங்கைச் சாகித்திய மண்டலக் கவியரங்கு - 10.12.1966)

நவீன தமிழில் கடவுளுக்கு பல சட்டைகள் மாட்டிவிடும் போக்கு அதிகரித்துள்ளது.

நரமாமிசப் பட்சிணி

கடவுளோடு பரிச்சயம் உள்ளவரிடம்

மட்டும் கேட்கிறேன் நாத்திக

வாதிகள் தலையிட வேண்டாம்

கடவுள் நரமாமிசப் பட்சிணியா

என் இல்லம் வந்த கடவுள்

இன்றென்ன செய்தார் தெரியுமா

தன்னிரு கைகளாலும் என் கரமொன்றைப் பற்றிக் கொண்டார்

கொஞ்சமும் சலிப்பின்றி அரைமணி நேரம்

தின்று கொண்டேயிருந்தார்

பற்றியயென் கரத்தை

நல்லவேளை பொக்கைவாயென்பதால்

தப்பினேன் இல்லாவிட்டால்

கை போயிருக்கும்

- சாரு நிவேதிதா

பதினெட்டு பட்டி சூழ

சந்நதம் கொண்ட மாரியாத்தா

சட்டென இறங்கினாள்

பெரியவீட்டு சாந்தி மீது

‘என்ன வேண்டும்

கேள் மகனே' என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்

அழகு ததும்பும்

அவளிடம்

அத்தனை பேர் முன்

எப்படிக் கேட்பேன்

நீதான் வேண்டுமென்று.

இது வித்யாஷங்கர் எழுதிய ‘சாமக்கொடை' கவிதை.

ஸ்லோவேனிய கவிஞர் பீட்டர் செமோலிக்கின் ஒரு கவிதை பற்றி எஸ்.இராமகிருஷ்ணன், ‘இவரது கவிதைகளின் சிறப்பாக நான் உணருவது அன்றாட வாழ்க்கையிலிருந்து அபூர்வமான தருணங்களை, நிலைகளை உருவாக்கிக் காட்டுவதாகும்.

சமையலறையில் ஒருவன் கடவுளுடன் உரையாடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதில் சமையலறை என்பது முக்கியமானது. அது ஒரு குறியீடு. கடவுள் பசியற்றவர். நித்யமானவர். அவரது உலகில் சமையலறை கிடையாது. மனிதர்களின் முக்கிய இடம் சமையலறை. அது இல்லாத வீடே கிடையாது. சமைப்பது என்பது வெறும் உணவு தயாரிப்பது மட்டுல்லை. அது ஒரு மனநிலையின் வெளிப்பாடு. அங்கே சலிப்புறும் ஒருவன் கடவுளுடன் உரையாடுகிறார்' என்று பதிவு செய்கிறார்.

அந்த கவிதையில் எனக்கு பிடித்த பகுதி:

தண்ணீர் அருந்தலாம்

என நள்ளிரவில் எழுகிறேன்

கடவுள் இன்னும் கதவருகில் நிற்கிறார்

சுவரிலிருந்து ஜன்னலுக்குச் செல்லும் நேர்க்கோட்டைப் பார்த்தவாறு

அயல்நாட்டில் மொழி அறியாததால்

வழிகேட்கத் தெரியாமல்

தொலைந்துபோனவன் போல் (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு உதவி: மதிமலர்)

இயற்கை வழிபாட்டில் தொடங்கி சைவம், வைணவம், பௌத்தம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்று அதிக சமயங்களைப் பற்றி பாடிய மொழி தமிழ் என்பது என்னை வியக்க வைத்தது. இதை விரிவாக இந்த இதழில் பதிவு செய்கிறோம்.

முருகனுக்காக ஔவை கொடியது, இனியது, பெரியது, அரியது என பாடியது பிரபலம்.

”இனியது கேட்கின் தனிநெடுவேலோய்

இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே”

ஆதியைத் தொழுதலை விட அறிவினர் சேர்தல் மற்றும் அறிவுள்ளோரைக் காண்பது இனிது என்று ஔவை கூறுவதின் நுட்பம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும்?

ரவி பேலட்

பேஸ்புக்கில்  நல்ல விஷயங்கள் படிக்க கிடைப்பதுஉண்டு, கார்த்திகா ராஜ்குமார் எழுதிய ஒரு பதிவு என்னை அதிகமாக சிந்திக்க வைத்தது: எழுபதுகளின் இறுதியில் வந்த ஒரு புயல் பெருமழையின் போது உதகை நகரில் மவுண்டபெண் அருகில் இருந்த நெடிதுயர்ந்து பரந்த மரம் ஒன்று வீழ்ந்தது. அந்த எட்டினன்ஸ் ரோட்டின் மிக அழகான மரம் அது எனக்கு மிகவும் பிடித்த மரமும் கூட. வெயில் நாட்களில் அதன் நிழலை ரசிக்காமல் இருக்க முடியாது. நேரம் போகப்போக கீழாய் படர்ந்திருக்கும் நிழலும் விதவிதமாய் மாறிக் கொண்டிருக்கும்.

பல பறவைகளின் கூடு இருந்தது மாலைகளில் அநேக பறவைகள் வந்தமர்ந்திருக்கும். பேசிக் கொண்டிருக்கும். எங்கிருந்து பார்த்தாலும் கம்பீர மரமது. அது வீழ்ந்து போனபொழுது அந்த இடத்தின் வெறுமையை முடியாது. அப்படியொரு பெருந்துக்கம் மனதில் இருந்தது. அதைமுழுவதுமாய் வெட்டி எடுத்து முடிக்க நாட்களாயிற்று என்று நினைவு.

ஆனாலும் அந்த நினைவுகள் மனதின் ஆழங்களில். மரங்கள் கடவுள் எழுதும் கவிதைகள் என்று நம்புகிறேன், உங்களுக்கு இதில் சம்மதமில்லை என்றாலும்'.

இயற்கையின் பேரழிவை எதிர் கொள்ளும் பலருக்கு கார்த்திகா ராஜ்குமார் போல் ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது.

‘இயற்கையை வணங்கவேண்டும், பாதுகாக்க வேண்டும்' என்பது தான் அந்த புதிய சிந்தனை.

இது புதிய சிந்தனையா ? பழைய சிந்தனையா?

அந்திமழை இளங்கோவன்

(இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் உள்ள கருத்துகள்  அவற்றின் ஆசிரியர்களின் சொந்தக்கருத்தே.)

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com