திராவிடத்திடமும் பௌத்தத்திடமும் அரசியலை இழத்தல்!

திராவிடத்திடமும் பௌத்தத்திடமும் அரசியலை இழத்தல்!
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து நீலம் அமைப்பினர் ஒருங்கிணைத்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அப்பேரணி நமது அரசியலுக்கு எதிரானது என்றும் திருமாவளவன் சொன்னது இன்றைய தலித் அரசியலின் மிக முக்கியமான சிக்கலை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

தார்மீகமா ஒழுக்கமா, எது நம்மை இயக்க வேண்டும் என்பதில் தலித் கட்சிகளுக்கு பெருங்குழப்பம் இருக்கிறது. சொல்லிக் கொள்ளும்படியான நிர்வாக அமைப்பையும், உட்கட்டமைப்பையும் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகளுக்கு இது நெடுநாள் குழப்பம். தலித் என்ற தார்மீகத்தை ஒலிப்பதா அல்லது ஜனநாயக அரசியலில் பங்கேற்கிற கட்சிகளுக்கான ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதா என்பதில் திருமாவளவனால் என்றைக்குமே ஒரு முடிவிற்கு வர முடிந்ததில்லை.

கடந்த முப்பது வருடங்களில் தலித் இயக்கங்கள் மத்தியில் நடைபெற்ற இரு முக்கியமான மாற்றங்கள், ஜனநாயக அரசியலில் பங்கேற்றது; தலித் ஆய்வு முறையியல் ஒன்றை வடிவமைத்தது. இந்திய அளவில் காணப்படும் பல்வேறு தலித் இயக்கங்களின் பொதுத் தன்மைகள் தான் இவை என்றாலும், தமிழில் சில சிறப்புத் தன்மைகள் இருந்தன.

அம்பேத்கரின் சிந்தனைகளுக்குப் பின் தலித் சொல்லாடல் இலக்கிய வெளிப்பாடுகளாலேயே நிரம்பியிருந்த சூழலில், அதை மறுபடியும் ஆய்வுகளின் பக்கம் திசைதிருப்பியதில் தமிழகம் முன்னோடியாக இருந்தது. வரலாற்றைத் திரும்ப எழுதுதல், பண்பாட்டுக் கோலங்களை மீள் வாசிப்பு செய்தல், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டவற்றை தலைகீழாக்குதல், பெளத்தவயமாதல், வேஷ பிராமணிய எதிர்ப்பு என்று தமிழ் ஆய்வுலகில் அறிமுகமான பல்வேறு கலைச்சொற்கள், தமிழ் ஆய்வுப் பரப்பை முற்றிலும் புதிய திசையில் வழிநடத்தின. தலித் இலக்கியம் என்ற பெயரில், வரலாற்றை மறுத்தல், பண்பாட்டைப் புறக்கணித்தல், சமயத்தைக் கைவிடல், மொழியைத் துச்சமாக எண்ணுதல் என்பன போன்ற மறுப்புகளின் காலம் முடிவிற்கு வந்து, எல்லாவற்றையும் மறுநிர்மாணம் செய்யும், அகவயப்படுத்தும் போக்கை அயோத்திதாசரின் அடியொற்றி நடைபெறும் ஆய்வுகள் கொண்டிருந்தன.

உலக அளவில் எழுப்பப்பட்ட பின்னை நவீனக் கேள்விகளையும் அதனால் உருவான சாத்தியங்களையும் தமிழில் பேசத் தொடங்கியதும், நடைமுறைப்படுத்திக் காட்டியதும் தமிழக தலித் சொல்லாடல்களே. உதாரணமாக, தமிழ் தலித் சொல்லாடல்கள் சுயம்புவாய் உருவாக்கிக் கொண்ட கருத்தாக்கங்களின் மூலம் பெரியார் உட்பட்ட சிந்தனையாளர்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்திய விதம் வேறெந்த இந்திய மொழிகளிலும் நடைபெற்றதில்லை.

பின்னை நவீன ஆய்வு சாத்தியங்களை உள்வாங்கிக் கொள்வது ஒரு பக்கமும், அதை நிகழ்த்துவதற்கான சட்டகங்களை இருபதாம் நூற்றாண்டு சிந்தனையாளரான அயோத்திதாசரிடமிருந்து பெற்றுக்கொள்வது இன்னொரு பக்கமும் என தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் தலித் சொல்லாடல் பன்முகத்தன்மை கொண்டது.

தன் காலத்து நெருக்கடிகளுக்காக பாரம்பரியத்தை நோக்கி நகர்ந்த அயோத்திதாசரின் நவச்செவ்வியல் அணுகுமுறை, நவீனத்துவம் மீதான கேள்விகளோடு உருவாகி வந்த தலித்திய ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. எடுத்துக்காட்டாக, நவீனத்துவம் உருவாக்கித் தந்த ‘பிராமண எதிர்ப்பு’ என்ற கருத்தாக்கம் தனது கூர்மையை இழந்த போது, நவச்செவ்வியல் கருத்தாக்கமான ‘வேஷ பிராமண எதிர்ப்பு’ பல புதிய விளக்கங்களைக் கண்டறிய துணை செய்தது.

அதே நேரம், அயோத்திதாசர் மாதிரியான சிந்தனையாளர்களை பின்னை நவீன தலித்தியச் சொல்லாடல்களில் பயன்படுத்துவதில் ஒரு பேராபத்தும் இருந்தது. பின்னை நவீனம் சொல்லக்கூடிய பன்முகத்தின் மீது ஒருவர் காலூன்றி நிற்கவில்லை என்றால், அயோத்திதாசர் போன்றவர்கள் சிலாகிக்கும் பூர்வீகம் அல்லது செவ்வியலின் மீது மோகம் கொள்வதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பதே உண்மை. தலித்திய சொல்லாடல் வரலாற்றில் இந்தப் பூர்வீக மோகத்திற்கான பெயர் ‘பெளத்தவயமாதல்’.

அயோத்திதாசர் மட்டுமல்லாது, வரலாற்றின் பல்வேறு தருணங்களிலும் தலித்துகள் சாதிய விடுதலையை யோசிக்கும் பொழுது, பெளத்தமே நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது. இன்னும் விரிவாகச் சொல்வது என்றால், இந்தியத் துணைக்கண்டத்தில் எப்பொழுதெல்லாம் நலிவுற்றவர்கள் கொதித்தெழுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பெளத்தம் அவர்களோடு நின்றிருக்கிறது.

தனிப்பட்ட துயரங்களால் மனிதர்கள் துன்புறும் போதும் சரி, பசி போன்ற பொதுத் துயரங்களால் வாடும் போதும் சரி, பெளத்த தர்க்கமொன்று அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்திருக்கிறது. துக்கத்தையும் துக்க நிவர்த்தியையும் போதித்த சமயத்திற்கு இப்படியொரு வரலாறு இருப்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால், வரலாற்றில் ஒவ்வொரு முறை ஒடுக்கப்பட்டவர்கள் குரலெழுப்பும் போதும் அது பெளத்தக் குரலாக உருமாறிவிடும் சுழற்பாதையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் உணர்ந்தார்கள் இல்லை. இது ஒரு வகையில் பெளத்தத்திடம் தன்னை இழத்தல்! அயோத்திதாசர் வரைக்கும் கூட ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் பெளத்தத்திடம் தங்களது அடிப்படையான அரசியல் கேள்வியை தொலைத்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. பெளத்தம், ஏதிலிகளின் (அல்லது துக்கங்களின்) கடவுளாகவே தன்னை வரலாற்றில் நிரூபித்திருக்கிறது. அந்தக் கடவுள் ஒடுக்கப்பட்டவர்களை ஈடேற்றுவதற்காகவே தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடமிருந்து தப்பிப்பதும் கூட பின்னை நவீன தலித்திய சொல்லாடலின் அங்கமே! இந்தத் தெளிவில்லாமல், அயோத்திதாசர் போன்றவர்களை அரசியல் தீர்க்கதரிசிகளாகப் பாவித்து ‘பெளத்தவயமாதலே நமது அரசியல்!’ என்று சொல்கிற, செயல்படுகிற ஆபத்து இன்றைய தலித் இயக்கங்களிடம் உண்டு.

கார்த்திகை தீபத்திருவிழா, ஆடி மாதம் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா, தீபவதித் திருநாள், ஓணப் பண்டிகை, கள்ளழகர் பவனி என்று இன்றைக்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் அனைத்தும் பெளத்த சார்புடைய விழாக்களே என்று நிரூபிப்பது வேறு, அவற்றை பெளத்த விழாக்களாக முன்னெடுப்பது வேறு. இந்த இடத்தில், அயோத்திதாசரின் விளக்கங்களிலிருந்து மிக நுட்பமாக நாம் வேறுபட்டு நிற்பது அவசியம்.

இந்த நிரூபணங்கள் அனைத்தும் பெளத்த நிரூபணங்கள் மட்டுமே தானேயொழிய, அவை எக்காலத்திலும் தலித்திய நிரூபணங்கள் ஆகாது. ஏனெனில் தலித் என்பது தனக்கு இழைக்கப்படும் கொடுமைக்கான நியாயத்தைக் கோரும் அரசியலை அடிப்படையாகக் கொண்டது. அதன் ஒரு பகுதியாக, நம்மைப் போலவே வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டிருக்கும் பெளத்தத்திற்கான நியாயத்திற்காக தலித் சொல்லாடல் குரல் எழுப்புகிறது என்பது மட்டுமே இங்கு உண்மை. அதாவது, தலித்திய அரசியலின் ஒரு அங்கமாக, இது நாள் வரை பெளத்தத்திற்கு மறுக்கப்பட்டிருந்த நீதியை நாம் வாங்கித் தருகிறோம். நமது எதிரியே பெளத்தத்தின் எதிரியும் என்பதே இங்கு தர்க்கம். அந்த வகையில், பெளத்தம் நமது விடுதலைக்காகப் போராடவில்லை; நாம் தான் அதன் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். தலித் விடுதலை என்பது இன்னும் நீண்ட நெடிய போராட்டங்களை எதிர் நோக்கியது.

தலித் விடுதலையை ஜனநாயக அரசியலில் பங்கேற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று யோசித்த தலித் கட்சிகளின் பிரச்சினையும் ஏறக்குறைய இது தான். தலித் ஆய்வுலகில் பெளத்தம் ஏற்படுத்தும் அதே மயக்கத்தை, தமிழக அரசியலில் திராவிடம் ஏற்படுத்துகிறது.

ஜனநாயக அரசியலமைப்பின் முக்கியமான நிகழ்வான தேர்தலில் பங்கேற்பது, அதன் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற தலித் கட்சிகளின் முடிவு மிக முக்கியமான நகர்வு என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கருக்கு தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற திட்டத்தில் நம்பிக்கை இல்லை. தனித்தொகுதிகள் கூட, இரட்டை வாக்குரிமை கொண்டதாக இருந்தால் மட்டுமே தலித்துகளின் அதிகாரப் பங்கேற்பு சாத்தியப்படும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஏனெனில், அவருக்கு இந்தியாவின் ஜனநாயகம் குறித்து மாற்றுக் கருத்துகள் இருந்தன. இந்தியா, ஜனநாயக உணர்வுகள் அற்ற நாடு என்றே அவர் முடிவு செய்திருந்தார். அது உண்மையும் கூட.

ஜனநாயகப் பண்புகள் காணப்படாத நாட்டில் அதன் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே எளியவர்களைக் காப்பாற்றும் என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அதிலும், என்றைக்கு இந்திய சமூகம் அரசியலமைப்பு சொல்கிற ஒழுக்கத்தைக் கைக்கொள்கிறதோ அன்றைக்கே இந்தியாவின் ஜனநாயகப் பாதை திறக்கிறது என்றார்.

அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது பொதுவான மானுட விழுமியங்களைக் கொண்டது. புத்தகங்களில் வடிக்கப்பட்டுள்ள இவ்வொழுக்கத்தை ஒரு நாடு கடைபிடிக்கத் தொடங்குகையில் அங்கே ஜனநாயக சமூகம் உருவாக ஆரம்பிக்கிறது; அப்படி உருவான ஜனநாயக சமூகமே ஜனநாயக அரசியலமைப்பை சாத்தியமாக்கும் என்பது அவர் யோசனை.

அரசியலமைப்பு ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளாத சமூகத்தில், நீதி பரிபாலனம் செய்யும் அமைப்புகளே ஜனநாயகத்தை செயற்கையாக உருவாக்குகின்றன என்று பொருள். அதனாலேயே, பெரும்பான்மை தலித் அமைப்புகள் சட்டத்தின் மூலமாகவே தங்களது போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இந்தச் சூழலில், தலித் கட்சிகள் ஜனநாயக அரசியலில் பங்கேற்க முன்வந்தது மிக முக்கியமான சமூக நிகழ்வாகக் கணிக்கப்பட்டது.

அந்நாள்களில் கவர்ச்சிகரமான தலைமைகளால் மட்டுமே நிரம்பியிருந்த இந்திய அரசியல் அரங்கம் கோட்பாடுகளைப் பேசக்கூடிய தலைமைகளையும் சந்திக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. இன்னும் குறிப்பாக, அரசு அதிகாரத்தை பொருளாதார மேம்பாட்டிற்கும், பாரம்பரியப் பெருமைக்குமே கைப்பற்ற நினைத்திருந்த கூட்டத்திற்கு மத்தியில், மானுட விடுதலைக்காக அதிகாரத்தை நெருங்க விரும்புகிறவர்களின் புதிய அரசியல் பேச்சுகளைக் கேட்க நாடே காத்திருந்தது.

இன்னொரு வகையில், தலித் கட்சிகளின் ஜனநாயகப் பங்கேற்பு, தலித் சொல்லாடலில் புதிய அனுபவங்களையும், அதன் மூலம் புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தலித் கட்சிகள் தேர்தல் அரசியலின் சூட்சுமங்களைக் கற்றுத் தேர்வதில் படு மோசமான தோல்வியைச் சந்தித்தன. ஜனநாயக அரசியலின் விதிமுறைகளை அவர்கள் மேம்போக்காக மட்டுமே விளங்கிக் கொண்டார்களோ என்று சந்தேகப்படுகிற வகையில் அக்கட்சிகளின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. கொஞ்சம் நம்பிக்கையூட்டும் காரியங்களை செய்து காட்டிய கன்சிராமும் மாயாவதியும் அதன் பின் தங்களது முயற்சியில் நம்பிக்கையிழந்த காட்சியை மட்டுமே நாம் பார்க்க முடிந்தது.

தேர்தல் அரசியல் என்பது எண்களால் தீர்மானிக்கப்படுவது என்பதை தலித் கட்சிகள் உணரவில்லை என்பதே உண்மை. மேலும், வாக்காளர் என்பவர் கருத்தாக்கத்தால் உந்தப்படுபவர் என்பதெல்லாம் காலாவதியாகிப் போனது என்ற நிஜத்தையும் அவர்கள் அறியவில்லை. மிக முக்கியமாக, தேர்தலைத் தீர்மானிக்கிற சக்தியாக இந்திய முதலீட்டியம் வளர்ந்து வந்ததை இக்கட்சிகள் முன்னுணரத் தவறின. மொத்தத்தில், ஜனநாயக அரசியலமைப்பு கருத்தாக்கங்களால் தீர்மானிக்கப்படும் அரசியலிலிருந்து விலகி, பொருளாதாரக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிற பின்னை அரசியல் சூழலை தலித் கட்சிகள் இன்று வரை உணரவில்லை.

மிக எளிமையாகக் கேட்பது என்றால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ அல்லது புதிய தமிழகமோ தமிழகத்தின் சில சட்டமன்ற தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதை எந்தத் தமிழகப் பெருமுதலாளியாவது விரும்புவாரா? ஆனால், முதலீட்டியத்தின் ஆதரவு இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலை எதிர்கொள்ள முடியாது என்பதே நிஜம். சிறு கட்சிகளுக்கான தேர்தல் முதலீட்டை ஏற்கனவே ஆட்சி அமைத்துப் பழகிய பெருங் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்றவை கவனித்துக் கொள்கின்றன என்பதே உண்மை. மிகக் குறுகிய காலத்தில், தமிழக முதலீட்டியத்தின் நன்மதிப்பைப் பெற்றக் கட்சிகளாக மதிமுகவும் தேமுதிகவும் விளங்கின என்பதாலேயே 2015ல் மக்கள் நலக்கூட்டணி அமைக்கக்கூடிய தைரியம் இவ்வுதிரிக் கட்சிகளுக்கு ஏற்பட்டது.

தலித் கட்சிகள் ஜனநாயக அரசியலின் அரிச்சுவடியைக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இச்சூழல் நமக்குக் காட்டுகிறது. முதலீட்டியத்தின் கரிசனத்தை பெற முடியாத இக்கட்சிகள் கடைசி வரையிலும் ஏதாவதொரு பெரிய கட்சியின் வாலாக மட்டுமே இருக்க முடியும் என்பதே இங்கு நிதர்சனம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்ற நான்கு வாய்ப்புகளில் ஏதாவதொன்றை நம்பியிருக்கும் சூழல் கூட ஒரு வகையில் தலித் கட்சிகளுக்கு சாதகமானது தான். யார் அடுத்து ஆட்சியை அமைக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் தலித் கட்சிகளின் கைகளில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு பின்னை அரசியல் மனநிலையொன்று நிச்சயமாகத் தேவைப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் கன்சிராம் தேர்தல் கூட்டணி அமைப்பதில் காட்டிய வித்தியாசமான அணுகுமுறை ஜனநாயக அரசியல் குறித்த அவரது தெளிவையே காட்டியது. முலாயமுடன் கைகோர்த்து பாஜகவை வீழ்த்திய போதும் சரி, பாஜகவுடன் கைகோர்த்து முலாயமை வீழ்த்திய போதும் சரி, ஒரு தலித் கட்சியாக அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதே நிஜம்.

தமிழகத்தின் மிக முக்கியமான தலித் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளால் நிச்சயமாக கன்சிராமின் அதிரடி சோதனையை செய்து பார்க்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்களையே என்னால் சொல்ல முடிகிறது: ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சொல்லப்படும் புரட்சிகர பிம்பத்தை மீறி வரமுடியாத நிலை; மற்றொன்று, ஜனநாயக அரசியலுக்கு ஒத்து வராத சிறுபிள்ளைத்தனமான அறச்சிக்கல்.

எப்படி தலித்திய ஆய்வுச் சொல்லாடல்கள் ஒரு கட்டத்தில் பெளத்தத்தை இன்னொரு சமயமாகப் பாவித்து, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று சொல்கிறோமோ அதே போல், தலித் கட்சிகளும் திமுகவை இன்னுமொரு கட்சியாக நினைக்கப் பழக வேண்டும். அதன் ஒரு நூற்றாண்டு வரலாறு சொல்லும் சமூக நீதி, பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற கருத்தாக்கங்களை தேர்தல் அரசியலில் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்பதே எனது பரிந்துரை. ஏனெனில் தேர்தல் அரசியலின் கணக்குகள் வேறு மாதிரியானவை. திமுகவை ஆதரிப்பதே சமூக நீதியை ஆதரிப்பது, பிராமண எதிர்ப்பை பதிவு செய்வது என்றெல்லாம் யாரும் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை. இப்படியான குழப்பங்கள் இருக்கிறபட்சத்தில், ஒரு தலித் தலைவரின் படுகொலைக்கு எதிரான உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக்கூட விளங்கிக் கொள்ளாத முரட்டுத்தனத்தையே இன்னொரு தலித் கட்சி வெளிப்படுத்துகிறது என்பதையே நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.

பொருளாதாரக் காரணிகளால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிற தேர்தல் அரசியலில் ‘அறச்சிக்கல்’ என்று யாராவது பேசினால், இதுவும் ஒரு வகை வார்த்தைஜாலம் என்று கடந்துபோவதே சரியாக இருக்கும். ஆனால், தலித்துகள் என்றில்லை எந்தவொரு ஒடுக்கப்பட்ட நபராலும் ‘அறச்சிக்கலிலிருந்து’ வெளியேற முடிந்தத்தில்லை. ஒவ்வொரு தலித்தும், முதன்முறை, பெருஞ்சமூகத்தை எதிர்கொள்ளும் போது அடைகிற மனக்கிலேசம் இது. அதிகாரத்திலிருந்து வெகுதூரம் வாழ்ந்தே பழகிப்போன ஒடுக்கப்பட்டவர், அது நாள் வரை கேட்டுப் பழகியிருந்த அறச்சொல்லாடல்களுக்கும், கண் முன்னே நிகழும் அறத்திற்குமான வேறுபாடுகளைக் கண்டு முதலில் பதட்டமே அடைகிறார்.

கொஞ்சம் நிதானிக்கிற ஒடுக்கப்பட்டவர், அறம் சீரழிந்த தேசத்தில் அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கிருப்பதாய் அயோத்திதாசரைப் போல நம்ப ஆரம்பிக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளும் கம்னியூஸ்ட் கட்சிகளும் தமிழின் பழம்பெருமையைக் காப்பாற்றுவதற்காக அவ்வப்போது கிளம்புவதைப் போன்ற செயல் இது. இவை அனைத்தும், அதாவது அறத்தைப் பாதுகாத்தல், மொழியைப் பாதுகாத்தல், பண்பாட்டைப் பாதுகாத்தல் என்பன போன்ற அனைத்தும் அலங்கார வார்த்தைகள் என்பதைத் தாண்டி அவற்றிற்கு ஜனநாயக அரசியலில் எந்தவிதப் பங்கும் இருப்பதில்லை. அப்படியே அவற்றிற்கு ஏதாவது அர்த்தம் இருக்குமானால் அது ஆய்வுகளின் பரப்பில் மட்டுமே சாத்தியம். ஆய்வுச் சொல்லாடல்கள் இந்த அலங்காரங்களைக் கடந்து வெகுதூரம் சென்று விட்டன என்பது தான் உண்மை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com