90 களுக்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் பால்யத்தில் தியேட்டர் வாசல்களில் காத்திருக்கும் வேளைகளில் கேட்கக்காத்திருக்கும் சிலிர்க்க வைக்கும் வார்த்தைகள் இவை. ‘பொட்டி வந்திருச்சிடோய்...’ தீபாவளி, பொங்கல்களுக்கு புதுப்படங்கள் ரிலீஸாவது ஒரு விஷேசம் என்றால், புதுப்படங்கள் ரிலீஸாவதும் கூட தீபாவளி, பொங்கல் பண்டிகைதான்.
இப்போது கியூ ஆர் கோடுகளோடு, பாஸ்வேர்டுகளோடு கண்ணுக்குப் புலப்படாத அட்வான்ஸ் டெக்னிக்குகளோடு ஐக்கியமாகிவிட்டோம். குறிப்பாக 2000த்தின் ஆரம்பத்தில் டிஜிடல் படங்கள் வரத் தொடங்கியபோது சினிமாவின் போக்குகள் பல வழிகளில் மாற ஆரம்பித்தன. தமிழில் முதல் டிஜிடல் சினிமாவை ‘வானம் வசப்படும்’ என்கிற பொருத்தமான டைட்டிலுடன் ஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராம்தான் இயக்கினார். அடுத்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக ரிஸ்க் எடுத்தவர் கமல். இரு படங்களும் படு தோல்வி என்றாலும் பிரிண்ட்களை விட டிஜிட்டல்கள் சிக்கனம் என்று ஆனவுடன் படங்கள் திரையிடும் முறையும் வெகுவாக மாறியது.
அப்போதெல்லாம் மிக முக்கிய எதிர்பார்ப்பு கொண்ட ரஜினி, கமல் படங்கள் கூட தமிகமெங்கும் 40 முதல் 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகும். சென்னையில் அதிகபட்சம் நான்கே தியேட்டர்களில்தான் பெரிய படங்களே ரிலீஸாகும். தேவியில் ரிலீஸானால் சாந்தியில் படம் போட முடியாது. உதயம் காம்ப்ளக்ஸில் ரிலீஸானால் கமலாவில் போட முடியாது. அபிராமியில் போட்டால் ஈகா, சங்கம் தியேட்டர்களில் போடக்கூடாது. இது போக வட சென்னையில் அகஸ்தியா போன்ற ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகள் போடப்படும். ஆக சென்னையில் எவ்வளவுபெரிய படமாக இருந்தாலும் மொத்தமே 15 காட்சிகள்தான்.
ஆனால் இன்று சினிமாவும் ஃபாஸ்ட் புட் சமாசாரம்தான். முதல் மூன்று நாட்களிலேயே மக்களின் மொத்தப்பணத்தையும் ஸ்வாஹா செய்துவிட வேண்டும் என்கிற நோக்கில் பல படங்கள் சென்னையில் மட்டுமே 300 காட்சிகள் வரை திரையிடப்படுகின்றன. மாயாஜால் சினிமாவில் சில படங்களை 60 காட்சிகள் வரை ரிலீஸ் செய்கிறார்கள். தமிழகம் முழுக்க 800 தியேட்டர்கள் வரை ஸ்வாஹா செய்துவிடுகிறார்கள்.
தமிழகத்தில் சுமார் 1100 தியேட்டர்கள் இருக்கும் நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் கனவும் தங்கள் படம் அத்தனை தியேட்டர்களிலும் ரிலீஸாக வேண்டும் என்பதாகவே இருக்கிறது. விளைவு? சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்ற நல்ல படங்களுக்கு சிங்கிள் டிஜிட்டில் கூட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் ஓ.டி.டி தளங்கள். சோஷியல் மீடியாக்கள் மூலம் கிடைக்கிற பாராட்டுகள் சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் அங்கேதான் உயிர் பெறுகின்றன.
‘ஒரு தலை ராகம்’ படத்துக்கு முதல் வாரம் ஆளே வரலை தெரியுமா. அப்புறம் மவுத் டாக்ல பிக் அப் ஆகி ஒரு வருஷம் ஓடுச்சி’ போன்ற கதைகளை இனி கேட்க முடியாது.