
போன் வந்தது. குரோம்பேட்டையிலிருந்து கேமராமேன் பரத்தின் உதவியாளர் பிரபஞ்சன் ஆர்வத்துடன் பேசினார். புதிதாக பரத்திடம் சேர்ந்திருக்கிறார்.
விசாகப்பட்டினம் படப்பிடிப்பு முடித்து வந்திருப்பதாகச் சொன்னார். தேடலையும் பாய்ச்சலையும் அவர் சொற்கள் உணர்த்தியது. பரத் மும்பையில் இருக்கிறார்.
புகழ் பெற்ற விசாகப்பட்டினம் நரசிம்மசாமி கோயிலிருந்து வாங்கி வந்த பிரசாதத்தை பரத் தந்து என்னிடம் சேர்த்துவிட வேண்டும் எனச் சொன்னதாகச் சொன்னார்.
வேலை இருப்பதால் போர்ட்டர் மூலமாக அனுப்பிவிடுவதாக பணிவோடு முகவரி கேட்டார். தந்தேன்.
“நானே வர நினைச்சேன் சார். முடியல. மன்னிச்சிடுங்க.” புன்னகையோடு பரவாயில்லை எனச்சொல்லி முகவரி தந்தேன்.
நீண்ட நேரம் காத்திருக்க விடவில்லை. போர்ட்டர் வந்து சேர்ந்தார். திருநீர்.திருத்தமான முகம். பரவி இருக்கும் புன்னகை.
சிலரை பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது; இவர் அதுபோல் ஒருவராக இருந்தார்.
பிரசாதத்தை வாங்கிக்கொண்டு ஓடிபி எண் சொன்னேன். ஒரு தயக்கம் அவரிடம் இருந்தது. டிப்ஸ் ஏதாவது எதிர்பார்க்கிறாரா? உடனே எனக்கு ஒன்று தோன்ற கொஞ்சம் லட்டை எடுத்துத் தந்தேன். வாங்கிக்கொண்டு சொன்னார்.
“அம்மாவையே நெனைச்சிக்கிட்டே வந்தேன். அம்மாவுக்கு பக்தி அதிகம் சார்.கொஞ்ச நாளா நடக்க முடியல. கோயிலுக்குப் போக முடியாத நிலமை. இந்த பிரசாதத்த கொடுத்தா சந்தோஷப்படுவாங்க.’’
இன்னும் கொஞ்சம் தந்தேன். தயக்கத்துடன் வாங்கிக்கொண்டார். நன்றி சொன்னார்.
“தந்தவரு இது பிரசாதம், பத்திரமா சேத்துடுங்கன்னு சொன்னாரு. எனக்கும் கொடுத்திட்டீங்க. இது பிரசாதம் இல்ல சார்; பெரிய சந்தோஷம்.” சொல்லிவிட்டு விடைபெற்றார்.
ஒரு தாயைச் சென்றடையப் போகிறது அந்தப் பிரசாதம். மனநிறைவை உணர்ந்தது என் மனம். பரத்துக்கு போன் செய்து நன்றி சொன்னேன். நடந்ததையும் சொன்னேன்.
“என்ன சார் படத்துல வர்ற ஒரு சீன் மாதிரி இருக்கு.”
“அடுத்த கதையில வேணா வச்சிடலாம்” என்றேன்.
இருவரும் சிரித்தோம்.