புதுசு புதுசா ஏமாத்தறாங்களே!

புதுசு புதுசா ஏமாத்தறாங்களே!
Published on

சைபர் கிரைம் வழக்குகளை காவல் துறையினர் எப்படி கையாள்கிறார்கள்? குற்றவாளிகளை சேஸ் செய்து பிடிக்கிறார்கள்? என்பதை அறிய சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பி.பத்மகுமாரியிடம் கேட்டோம். அவர் பகிர்ந்து கொண்ட இரு சம்பவங்கள்:

சென்னையை சேர்ந்த ஒருவர் அளித்த புகார் இது. இவர் 2017வரை சவுதி அரேபியாவில் வேலை பார்த்துள்ளார். பிறகு சென்னை வந்துவிட்டிருக்கிறார். அங்கு ஜோசப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இவருக்கு நண்பராக இருந்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, ஜோசப் பேசுவதாகச் சொல்லி ஒருவர் அழைத்துள்ளார். தன் நண்பர் மகள் ஒருவர் லண்டனில் செவிலியராக வேலைப் பார்ப்பதாகவும் அவர் இந்தியாவுக்கு வரப்போவதாகவும் அவருக்கு நீங்கள்தான் உதவ வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். ஜோசப் தனக்கு சவுதியில் பழகிய நண்பர் என்பதால் இவரும் உதவிசெய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பிறகு, ரீனா மேத்யூ இவரிடம் பேசியிருக்கிறார். சென்னை வருவதற்காக தன்னுடைய பொருட்களை கொரியர் மூலம் அனுப்பியிருக்கிறேன், இதை எடுக்க கொஞ்சம் பணம் கட்டவேண்டியிருக்கிறது. நீங்கள்தான் உதவ வேண்டும், நான் வந்தவுடன் தந்துவிடுகிறேன் என சொல்லியிருக்கிறார். இதற்காக 122,840 ரூபாயை நெஃப்ட் வழியாக அவர் கொடுத்த அக்கவுண்டுக்கு அனுப்பியிருக்கிறார். இதன் பிறகு அந்த பெண்ணிடமிருந்தோ, ஜோசப் இடம் இருந்தோ எந்த தொடர்பும் இல்லை. இதன் பிறகுதான், ஜோசப் என்ற பெயரில் வேறு யாரோ ஏமாற்றி இருக்கிறரகள் என்று இவருக்குத் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து நேஷ்னல் சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் எங்களிடம் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வாட்ஸ் அப் ஐபி அட்ரஸை வைத்துத் தேடினோம். அது அரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தை காட்டியது. உடனே எங்கள் குழுவுடன் அரியானாவுக்குச் சென்றோம். உள்ளூர் காவல் துறையின் ஒத்துழைப்போடு, அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 2 நைஜீரியர்களை கைது செய்தோம். அவர்களிடமிருந்து நான்கைந்து மொபைல், சிம் கார்டுகள், லேப்டாப், வங்கி பாஸ்புக், ரவுட்டர் போன்ற பொருட்களையும் கைப்பற்றினோம்.

மூவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்தோம். விசாரணையில் குற்றத்தை ஏற்றுக் கொண்டனர். பணத்தையும் திருப்பித் தருவதாக சொன்னார்கள்.

பின்னர் நீதிமன்றத்தின் மூலம், 122,840 ரூபாயை பாதிக்கப்பட்டவருக்கு வாங்கிக் கொடுத்தோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளையும் வாங்கி செக் பண்ணிப் பார்த்ததில், வேறு எந்த மோசடியும் செய்ததாகத் தெரியவில்லை. இன்னும் இந்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது.

மெட்ரிமோனியல் மோசடியில் ஏமாந்த பெண்

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னையில் ஒரு பெரிய கல்விநிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்தார். மெட்ரிமோனியல் தளம் வழியாக திருமணத்துக்கு வரன் தேடுகிறார். அப்போது, இவருக்கு ஒரு இளைஞர் திருமண இணையதளம் மூலமாக அறிமுகமாகிறார். அவர் பெயர் சேத்தன் என்று வைத்துக்கொள்வோம். அவரது புகைப்படம் கம்பீரமாக அழகாக இருக்கிறது. அதைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இணையதளம் மூலமாகவே பழகுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள். ஒருநாள் திடீரென, ‘என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனை செலவுக்குப் பணம் வேண்டும்’ என சேத்தன் கேட்கிறார். இந்த பெண்ணும் தயங்காமல், ‘திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்தானே’ என்ற எண்ணத்தில் பணத்தை சேத்தன் அக்கவுண்டுக்கு இந்த பெண் அனுப்புகிறார்.

கொஞ்ச நாளில் திருப்பித்தருகிறேன் என்று சொல்லித்தான் பணத்தை கேட்டிருக்கிறார். நாள் போகப்போக, சேத்தனுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் விருப்பம் இல்லை. உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என இந்த பெண்ணை மிரட்ட ஆரம்பிக்கிறார்.

பிறகு இந்த பெண் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்துவிட்டு, எங்கள் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து புகார் அளித்தார். நாங்களும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினோம்.

சேத்தனின் மொபைல் லொக்கேஷைனை ட்ராக் செய்தோம். அவர் ஊட்டியில் இருப்பதாகக் காட்டியது. நாங்கள் ஊட்டிக்கு அவரைப் பிடிக்க சென்றுக் கொண்டிருக்கும்போதே, அவர் லொக்கேஷன் ஹைதராபாத்துக்கு சென்று விட்டதாகக் காட்டியது. நாங்கள் வேறு வழியின்றி சென்னை திரும்பிவந்துவிட்டோம். ஆனாலும் இந்த வழக்கை விட்டுவிடக் கூடாது என உறுதியாக இருந்தோம். மீண்டும் அவரின் லொக்கேஷனை ட்ராக் செய்து, தெலங்கானாவில் உள்ள சைபராபாத்தில் இருப்பதாகக் கண்டுபிடித்தோம். உடனே அங்குள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவரை நேரடியாகச் சென்று கைது செய்தோம்.

இங்குதான் ஒரு பெரிய திருப்பம். இவர் மெட்ரிமோனியல் தளத்தில் வைத்துள்ள படத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும் தொடர்பே இல்லாமல் இருந்தார். அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். அந்த பெண் கொடுத்த மூன்றரை லட்சம் ரூபாயை நீதிமன்றம் மூலமாக வாங்கிக் கொடுத்தோம். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சைபர் கிரைம் குற்றத்தில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரக்கூடிய வீடியோ கால்களை எடுக்காமல் இருக்கலாம். தெரியாதவர்களிடம் இருந்து வரக்கூடிய போன் கால்களை தவிர்த்தாலே, பெரும்பாலான இணைய குற்றங்களிலிருந்து தப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக முதலீடு அல்லது வணிகம் செய்யுபோது மிக கவனமாக இருக்கவேண்டும்.

நம்முடைய பெயரில் உள்ள சிம் கார்டு, வங்கிக் கணக்கை மற்றவர்களுக்கு தரக்கூடாது. தேவையற்ற லிங்குகளை க்ளிக் பண்ணுவதைத் தவிர்க்கவேண்டும்.

இணையம் வழி மோசடிகளால் பணத்தை இழந்தால், உடனே 1930 என்ற எண்ணுக்கு புகார் அளித்தால், வங்கிக் கணக்கை லாக் பண்ணி வைப்பார்கள். அதேபோல், cyber crime.govt.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com