வளத்தி ஐயா… எனக்கு முந்தைய தலைமுறைக்காரர். எந்தையின் நண்பர். பக்கத்து ஊர்க்காரர்.
எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது கட்டடத்தில் டீக்கடை வைத்திருந்தவர். ஆறரை அடி உயரமான மனிதர். சுருள் கம்பிகளால் செய்தது போன்ற உழைத்து இறுகிய கைகள். விடிகாலை நான்கு மணிக்கெல்லாம் டீ ஆற்றிக் கொண்டிருப்பார். (பள்ளி நாட்களில் காலை மூன்றரை மணிக்கெல்லாம் விழிக்கும் வழக்கம் கொண்டிருந்தவன் நான்). சைக்கிளில் வந்து கடையைத் திறந்து கடமையில் இறங்கிவிடுவார். அவர் கடையில் இருக்கும் வரை அந்த இடமே கூட்டமாக இருக்கும். நான் பள்ளி வண்டிக்காகக் காத்திருக்கும்போது,தோராயமாக காலை 7:30 மணிக்கு அவர் வீட்டுக்குக் கிளம்புவார். அவரின் மனைவி விட்ட டீயிலிருந்து தொடர்வார். கடையில் இருக்கும்போது அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. எப்போதும் சிரித்தவாறே இருக்கும் முகம்.
எல்லா நேரமும் சிரித்த முகத்தோடு இருக்க முடியுமா என்று வியப்பேன். மீண்டும் மாலை ஐந்து மணி போல அவரைக் கடையில் காணலாம். அதே பேசாத வாய். சிரித்த முகம். இரவு கடையை அடைத்துவிட்டு சுமார் ஒன்பது மணி வாக்கில் எங்கள் வீட்டுக்கு வருவார். எந்தையுடன் பேசிக் கொண்டிருப்பார். சாராய நெடி அவரைச் சுற்றிப் பரந்திருக்கும். அவரது பேச்சில், நடத்தையில் குடித்ததற்கான எந்தச் சுவடும் கிடைக்காது. பேசிவிட்டுக் கிளம்பும் போது, "யம்மா, ஜெயமணி" என்பார். சமையலறையில் இருந்து எனது தாய் செல்வார். தனது வேட்டி முடிச்சிலிருந்து எலுமிச்சைப் பழம் ஒன்றைத் தருவார். தாயும் உள்ளங்கையில் வாங்கிக் கொள்வாள். படித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கும் என்னை அழைத்துச் சொல்வார்,
"படி, படி, நல்லாப் புரிஞ்சு படி."
ஒழுங்கு குழையாமல் நடந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு நிதானமாகக் காலத்தை மிதித்து மிதித்துப் போய்க்கொண்டிருப்பார்.
தாயிடம் கேட்பேன், "எதுக்கு மா எலுமிச்சை தராறு?"
"தெரியாது, டா" என்பாள் தாய்.
இப்படி ஒருநாள் இருநாள் இல்லை.
தோராயமாக ஆறு வருடங்கள் இப்படியே நடந்தது. வருவார். பேசிக்கொண்டிருப்பார். தாயை அழைப்பார். எலுமிச்சை தருவார்.
"படி படி, நல்லாப் புரிஞ்சு படி" என்பார். காலத்தை மிதித்து மிதித்துச் செல்வார்.
ஒரு ஞாயிறு வழக்கத்திற்கு மாறாக மதியம் போல வீடு வந்தார். வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்திருந்தார். பேசிக்கொண்டேயிருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே அழுதார்.
என்னென்னவோ புலம்பினார்.
"சொர்க்கம் இருப்பது உண்மையென்றால் அது பக்கத்தில் நிற்கட்டுமே" என்று பாடியபடி எழுந்து ஆடினார். அசைந்தார். எனது தந்தை அவரது உடலைத் தாங்கி அமர வைத்தார். கொஞ்சம் பொறுத்து எனது தாயை அழைத்து எலுமிச்சைப் பழம் ஒன்றைத் தந்தார். தந்துவிட்டு கைகளை இறுகப் பிடித்து தனது கண்களில் ஒற்றிக்கொண்டார்.
கண்களைத் துடைத்துக்கொண்டு
'ரத்னம், நான் உங்க மெத்தைல படுத்துக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறிப்போய் அமர்ந்துகொண்டார்.
மாலை நேரம் 'வளத்தி' ஐயாவின் மனைவி அவரைத் தேடிக்கொண்டு வந்தார்கள். எனது தாய் மாடியில் உறங்குவதாகச் சொன்னாள். சொன்னவள் ஏதோ உணர்வு மேலோங்க அவளாகவே மாடிக்குச் சென்று பார்த்தாள். வளத்தி ஐயாவின் மனைவி என்னிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். நானும் எதையோ சொல்லிக்கொண்டிருந்தேன்.
திடீரென்று கதறும் குரல். மாடிக்குச் சென்ற தாயின் ஓலமிடும் குரல் கேட்டு கீழே இருந்த எல்லோரும் ஓடிப்போய்ப் பார்த்தோம்.
‘வெங்காய வெடி' வெடித்தது போல அவரது வாயிலிருந்து வெடிச்சத்தம் வந்துகொண்டேயிருந்தது. புகை புகையாக மாடியே புகைந்தது.
ஊரே எங்கள் மாடியில் கூடிவிட்டது. பூச்சி மருந்து டப்பாக்கள் இரண்டு அவரருகில் கிடந்தன. கூடியிருந்த பெண்களின் ஓலம் ஒருங்குகூடி என்னை அச்சுறுத்தியது. ‘வளத்தி' ஐயாவைத் தூக்கிக்கொண்டு கீழே வேகவேகமாக இறங்கினார்கள்.
அவரைப் பார்த்தவாறே நான் பின்னால் போனேன்.
இறந்துகொண்டிருந்த அவரது கண்கள் என்னைப் பார்த்தன. என்னையும் அறியாமல் ஓவென்று அழுதபடி விழுந்து புரண்டேன். அழுத மயக்கத்திலிருந்து எழுந்து நான் பார்த்தது, நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த பெரிய உடலையும் அதில் சிரித்தபடியே உறைந்திருந்த புன்னகையும்.
போலீஸ் வந்தார்கள். நடக்க வேண்டிய எல்லாம் நடந்தது. ஏன் அவர் மருந்து குடித்தார் என்று நிறைய கதைகள் சொல்லப்பட்டன.
எனக்கு ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் கண்டது.
"எந்த வம்புக்கும் போவாத ஆளுப்பா",
"பேசக்கூடத் தெரியாத அப்ராணி ஆச்சேப்பா"
"என்ன எழவு விதியோ"
"வப்பாட்டி சகவாசமும் நம்மாளுக்கு இல்லீயேப்பா"
அவரைப் பற்றி ஒரு குறையும் ஒரு வாயும் சொல்லவில்லை.
அமைதியான மனிதர்.
அதிராத பேச்சு.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டவர்.
அகத்திலும் புறத்திலும் ஒரே மாதிரி வாழ்ந்தவர்.
ஏன் இப்படியொரு சாவைத் தேடிக்கொண்டார்?
இன்றும் என் நினைவில் நெருடும் இந்த எதிர்பாராத நிகழ்வு. இன்னும் அவரின் நினைவிலிருந்து மீளவில்லை!