75 முறை நிராகரிப்பு... இன்று 9350 கோடிகள்... பொறுமை எனும் மாபெரும் முதலீடு

75 முறை நிராகரிப்பு...
இன்று 9350 கோடிகள்... பொறுமை எனும் மாபெரும் முதலீடு
Published on

இன்றைக்கு திரைப்படத்துக்குப் போகவேண்டுமானால் சடாரென இணையத்தில் புக்மைஷோ தளத்தில் டிக்கெட் எடுத்துவிடுகிறோம். இந்த புக் மை ஷோ என்ற டிக்கெட் புக் செய்து கொடுக்கும் தொழில் ஐடியா பிறந்த கதையே கேட்க சுவாரசியம்.

1997-இல் ஒரு விளம்பர கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஆசிஷ் ஹேம்ரஞ்சானி. அன்றைக்கு அவர் வாங்கிய சம்பளம் 6000 ரூபாய். அன்றைய நிலையில் பெரிய சம்பளம்தான். அலுவலகத்தில் எல்லோரும் பிடித்த சிகரெட் புகை இவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே கொஞ்சநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஆப்பிரிக்காவுக்கு தன்னந்தனியாக சுற்றுலா பொனார் இந்த இளைஞர். ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கேப்டவுனுக்குப் போய்க்கொண்டிருந்தபோது ஸ்டோர்ம்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்திருந்தபோது ரேடியோ விளம்பரம் ஒன்றைக் கேட்டார். ரக்பி விளையாட்டுக்கான டிக்கெட்டுகளை விற்கும் விளம்பரம். அதைக் கேட்டபோது அவருக்கு இந்தியாவிலும் சினிமா டிக்கெட்டுகளை விற்கலாமே எனத் தோன்றி இருக்கிறது. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றியதுபோல என தன்னைத் தானே அவர் கிண்டலடித்துக்கொள்கிறார். இதற்கடுத்து மேற்கொண்ட பயணத்தில் ஒரு இலவச ஒயின் பார்ட்டியில் முழுவதும் போதையேறிய நிலையில் தன் பாஸுக்கு இன்னும் நான்கு வாரம் விடுப்பு வேண்டும் என்று மெசேஜ் அனுப்ப, அவரோ, இந்த பக்கமே வராதே என வேலையை விட்டுத் தூக்கிவிடுகிறார்.

சுற்றுலா முடிந்து இந்தியா திரும்பியவர் தொடங்கியதுதான் புக் மை ஷோவுக்கான ஆரம்பகட்டம்.  தன்னுடைய பிசினஸ் பிளானைச் சொல்லி நிதி திரட்டினார். அதற்காக நிறுவனமும் தொடங்கினார்.  ‘டிக்கெட்டிங் இந்தியா’ என்பதுதான் அப்போதைய பெயர். ஆனால் சினிமா டிக்கெட் விற்பது இன்றுபோல் அன்று ஈஸியாக இல்லை. தியேட்டர்களை அணுகினால் மேலும் கீழும் பார்த்துவிட்டு, “நீங்கள் இந்த சில வரிசை சீட்டுகளை விற்கலாம். ஆனால் முன்கூட்டியே எங்களுக்கு பணம் கொடுத்துவிடவேண்டும்,” என்றனர்.  1999-இல் இன்றிருப்பதுபோல் இணையத் தொடர்பே இல்லாத காலகட்டத்தில், ஆன்லைன் பேமெண்ட் வசதிகள் போன் மூலம் கால்செண்டர்கள் அமைத்து விற்கத் தொடங்கினார்கள். போன் செய்து புக் பண்ணினால் வீட்டுக்கு வந்து டிக்கெட் கொடுத்து காசு வாங்கிச் செல்வர். அதிலும் ஏகக் குளறுபடிகள்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த நிலையில் 2001-இல் அமெரிக்காவில் டாட் காம் நிறுவனங்கள் வீழ்ந்தன. இவர்களுக்குக் கிடைத்த நிதியும் அதனால் பாதிக்கப்பட்டது. 150 பேர் வேலை பார்த்த இநிறுவனம் 6 பேர் கொண்ட நிறுவனமாகச் சுருங்கிற்று. 2001-இல் இருந்து 2007 வரை இந்த பிசினஸ் மாடலை வலுப்படுத்துவதிலும் மாற்றி அமைப்பதிலும் கவனம் செலுத்தினார்.

இந்த காலகட்டத்தில் எல்லா தியேட்டர்களுக்கும் போய்ப் பேசி டிக்கெட் விற்கும் தொழில்நுட்பத்தை அங்கே அறிமுகப்படுத்தி அமைத்துக்கொடுத்தார்கள். கணினிமயமானது டிக்கெட் விற்பனை.  விற்பனை வரி அதிகாரிகளுக்குக் காண்பிப்பதற்காக டிக்கெட்டின் கிழிந்த ஒரு பகுதியைக் கட்டுக்கட்டாகப் பலமாதங்களுக்குச் சேமித்து வைத்துக்கொண்டிருந்த நிலைமை மாறியது.

2007க்குப் பிறகு இந்தியாவில் இணைய தள இணைப்புகள் அதிகரித்தன. அப்புறம் ஆதார், யுபிஐ பணப்பரிவர்த்தனை அனைத்தும் சில ஆண்டுகள் கழித்து அறிமுகமாகிய நிலையில் அந்நிறுவனம் வளர்ச்சியை எட்டியது. லாபத்தில் இயங்கும் நிறுவனமாக 2017- 18களில் மாறியது.

ஆசிஷ் சொல்கிறார்: “எல்லோரும் இப்போது யுனிகார்ன் நிறுவனமா நீங்கள் எனக் கேட்கிறார்கள். ஒற்றைக் கொம்புடைய குதிரையை நான் கண்டதே இல்லை. எனக்கு அந்த விலங்காக மாற விருப்பம் இல்லை. நான் கரப்பான் பூச்சியைப் போன்றவன். நாங்கள் எந்த சூழலிலும் தாக்குப் பிடிப்பவர்கள். 26 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறோம். நாங்கள் அணு ஆயுதப் பேரழிவையும் தாக்குப் பிடிப்போம். எனவே தான் கரப்பான் பூச்சியைப் போல எனச் சொன்னேன். வளர்ச்சியைவிட உங்கள் வீழ்ச்சியை சரியாக சமாளித்தால், உங்கள் தொழில் நன்றாக வளரும் என்று என் அலுவகத்தில் சகாக்களிடம் சொல்வேன்.”

2001-ல் ஏற்பட்ட நெருக்கடியிலேயே அவர் துவண்டு போயிருந்தால் புக் மை ஷோ நிறுவனம் இன்றைய வளர்ச்சியை அடைந்திருக்காது பத்தாண்டுகளுக்கு மேல் பொறுமையைக் கடைப்பிடித்து தொழிலில் கவனம் செலுத்தியதுதான் வெற்றிக்குக் காரணம். இரண்டாண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் 100 கோடிக்கு மேல் நிகர லாபம் ஈட்டியது!

 பொறுமைக்கு உதாரணமாக நம்மூரில் பிறந்து வளர்ந்து படிப்படியாக வெற்றிக்கொடி நாட்டி இருக்கும் தைரோகேர் நிறுவனம் வேலுமணியைச் சொல்லலாம். கோவை அருகே விவசாயக் குடும்பத்தில் பிறந்தவருக்கு இளமையில் செருப்பு வாங்கக் கூடக் காசில்லை. கடின உழைப்பில் படித்து, கல்லூரியில் சேருகையில் பிஎஸ்சி படிக்க ஆசைப்பட்டார். ஆனால் பி.காம் படித்தால் கட்டணம் 100 ரூபாய் குறைவு என்பதால் அதில் சேர்ந்தார். ஒருமாதம் ஆனநிலையில் இவரது பேராசிரியர் ஒருவர் தன் கையில் இருந்து 100 ரூபாயைக் கொடுத்து பிஎஸ்சி வேதியியல் சேர்த்து விட்டிருக்கிறார்.

படிப்பு முடித்தபின் வேலை தேடுகையில் 15 இண்டர்வியூக்களில் நிராகரிக்கப்பட்டார். அதன் பின்னர் மாதம் 150 ரூபாய்க்கு ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 50 ரூபாய்க்குள் செலவுகளை முடித்துக்கொண்டு 100 ரூ தாயாருக்கு அனுப்பிவிடுவாராம். மூன்று ஆண்டுகளில் அவர் வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டது. அடுத்த வேலை தேடும் படலத்தில் கிடைத்தது தான் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு உதவியாளர் வேலை. தைராய்ட் சுரப்பி பற்றிய ஆய்வுதான். மும்பையில் 12 ஆண்டுகள் வேலை செய்தபின்னர் தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆர்வத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியிலும் 1995- இல் ஆரம்பித்ததுதான் தைரோகேர் நிறுவனம். அவரிடம் சேமிப்பில் 2 லட்ச ரூபாய் இருந்தது. அவரது மனைவியும் தன் வங்கி வேலையைத்துறந்து அவருக்கு உதவியாகக் களமிறங்கினார்.

மிகக் குறைவான கட்டணத்தில் தைராய்டு பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கினார். அதன் பின்னர் பிற ரத்தப் பரிசோதனைகளுக்கும் விரிவு படுத்தினார். 25 ஆண்டுகளில் அவரது நிறுவனம் மிகப்பெரிய ஆய்வக நிறுவனமாக வளர்ந்து நின்றது. கொரோனா காலகட்டத்தில் வேலுமணி, தைரோகேரில் தன்னுடைய பங்கை வேறொரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அதனால் இன்றைக்கு அவரது சொத்துமதிப்பு மட்டும் 5000கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

மேக்மைட்ரிப் இணையதளத்தை எடுத்துக்கொள்ளலாம். சுற்றுலாவுக்கும் பயணங்களுக்கு நம்மால் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிற இணையதளம். இது தொடங்கப்பட்டது 2000 ஆம் ஆண்டு. இணையம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்த காலம். தீபக் கல்ரா என்ற எம்பிஏ பட்டதாரி மேலும் சில நண்பர்களுடன் இணைந்து 2மில்லியன் டாலர்கள் முதலீடாக இவெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் பெற்றுத் தொடங்கினார். தீபக் கல்ரா இதற்கு முன்னதாக பலநிறுவனங்களில் வேலை பார்த்திருந்தார். தற்போது இந்தியர்கள் பயணம் செய்யும் முறையையே மாற்றி அமைத்துள்ளார்.

ஆரம்பத்தில். இந்தியா வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது கவனம் செலுத்தினர். ஆனால் தொடங்கிய ஆண்டிலேயே அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இரண்டு ஆண்டுகளில் மூடும் நிலையை சந்திக்க வேண்டி இருந்தது. 9/11 அமெரிக்க தாக்குதல், சார்ஸ் வைரஸ் தாக்குதல் ஆகியவற்றால் உலகப் பயணங்கள் பாதிக்கப்படும் நெருக்கடிகளையும் இந்நிறுவனம் எதிர்கொண்டு தடுமாறியது. மூடச் சொல்லி ஆலோசனைகள் வந்தபோது சொந்த பணத்தை போட்டும் ஏஞ்சல் இன்வெஸ்டர்களிடம் நிதிபெற்றும் நிறுவனத்தை லாபகரமாக ஆக்குவதில் கவனம் செலுத்தினார். 2003க்குப் பிறகு நிலைமை சரியானது. 2005இல் இந்தியாவுக்குள்ளும் கவனம் செலுத்தினர். அதன் பிறகு நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.

2023 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.84 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குத்து மதிப்பாக 25000 கோடிகள்!

கைப்பேசி செயலிகளில் ஒன்றான ரேபிடோவைப் பயன்படுத்தி பைக், கார், ஆட்டோ என அழைத்துப் பயணிக்கா தவர்கள் இன்று குறைவு. இதுபோன்ற பிற ஊபர், ஓலா நிறுவனங்களுடன் போட்டிபோட்டு ரேபிடோவும் வளர்ந்துள்ளது. இதன் நிறுவனம் தெலுங்கானாவைச் சேர்ந்த பவன் குண்டுபள்ளி என்பவர்.

கரக்பூர் ஐஐடியில் படித்தவர். தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்று தொடங்கினார். ஆனால் சரியாகப் போகாததால் மூட வேண்டி வந்தது. இதையடுத்து இந்த பயண வாகன அழைப்பு நிறுவனம் தொடங்கும் ஐடியாவை உருவாக்கினார். இதில் முதலீடு செய்யக் கேட்டு நிறுவனங்களை அணுகியபோது சோதனை காத்திருந்தது.  “கிட்டத்தட்ட 75 நிதி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டோம். ஆனால் இந்த நிராகரிப்புகளில் இருந்து கற்றுக்கொண்டோம்’ என்கிறார் பவன்.

பிற நிறுவனங்கள் இந்தியாவின் பெரு நகர பயணிகளின் மீது கவனம் குவித்தபோது ரேபிடோ இரண்டாம் நிலை நகரங்களின் மீது கவனம் செலுத்தியது. அத்துடன் லாபம் குறைவாக இருப்பினும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் உத்தியையும் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளுக்குப் பின் ரேபிடோவின் வளர்ச்சி அபரிமிதமானதாக மாறியது.

2025-இல் இதன் சந்தை மதிப்பு 9350 கோடிகளாக இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். ஆண்டு வருவாய் 1000 கோடிகளைத் தாண்டி உள்ளது. நிராகரிப்புகளை பொறுமையுடன் எதிர்கொண்ட ஒரு தனிமனிதரின் முயற்சியால் இந்த நிறுவன வளர்ச்சி சாத்தியமானது. ஆயினும் இதற்குப் பத்தாண்டுகள்  உழைப்பும் டன் கணக்கிலான பொறுமையும் அவசியமாக இருந்திருக்கிறது.

எந்தத் தொழிலுமே சரி; குறைந்தது பத்தாண்டுகளைத் தாண்டி தாக்குப் பிடிக்கையில் மட்டுமே நிலைபெற முடியும். அதற்கான பொறுமை எனும் முதலீடு மிக முக்கியமானது. நிதிமுதலீட்டைவிட எனச் சொல்லாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com