ரிசர்வ் வங்கியும் கடன்களும்!

ரிசர்வ் வங்கியும் கடன்களும்!
Published on

கடன் என்று சிறப்புப் பக்கங்களில் எழுத வந்துவிட்டு நம் வங்கிகளைப் பற்றிப் பேசாமல் விட்டால் எப்படி? கடன் என்று ஒன்று இல்லாவிட்டால் வங்கி என்ற ஒன்று செயல்படவே முடியாது. கடன் கொடுத்து அதற்குப் பெறுகின்ற வட்டியில் அவை இயங்குகின்றன. இந்தியாவில் வங்கிகளை ரிசர்வ் வங்கி முறைப்படுத்துகிறது. வங்கிகளுக்கும் இதுதான் கடனும் வழங்குகிறது.

எளிமையாகச் சொல்லவேண்டுமானால் வங்கிகள் 100 ரூபாய் வைப்புத் தொகை பெற்றால் அதில் சுமார் 70 ரூபாய் வரைக்கும் கடன் கொடுத்தே ஆகவேண்டும். அவை பண இருப்பு விகிதம் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட அளவு பணத்தை ( தற்போதைய அளவு 4.5%) ரிசர்வ் வங்கியிடம் வைப்புத் தொகையாக வைத்திருக்கவேண்டும். 18 % பணத்தை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கவேண்டும். மீதி இருக்கும் பணத்தைத் தான் அவை கடன் கொடுக்கலாம்.

பொதுவாகச் சொல்வதென்றால் வாடிக்கையா ளர்கள் தம் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்தைத்தான் வங்கிகள் வெளியே வட்டிக்குக் கடன் கொடுக்கின்றன. திடீரென ஒருநாள் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுக்க வந்துவிட்டால் அன்றைக்கு வங்கியில் பணம் இருக்காது. அச்சமயம் என்ன செய்வது? அதை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம். சக வங்கிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம். இது வழமையான நடைமுறை. ஒவ்வொரு வங்கியின் கணக்கும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும். எந்த வங்கிக்கு இப்படி பணப் பிரச்னை ஏற்படும் என்பதை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

வங்கிகள் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி தற்கால சூழலுக்கு ஏற்ப கொண்டுவந்திருக்கும் சில கொள்கை மாற்றங்களை இனிப் பார்க்கலாம்.

பொதுவாக சிறிய அளவில் கடன் பெற நினைப்பவர்களுக்கு அது எட்டாக்கனியாகவே கணிசமான ஆண்டுகள் இருந்துவந்தது. நாட்டில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கிவந்த காலம் அது. கடன் பெறவேண்டுமென்றால் பிணை வைப்பதற்கு சொத்து வேண்டும். அது இல்லாத நிலையில் சிறு தொழில்முனைவோர் கந்துவட்டி, சொந்தக்காரர்களிடம் கடன் என்றுதான் இருந்தார்கள். தொழிலில் பிரச்னை என்றால் முதல் எல்லாம் போய்விடும். பொதுத்துறை வங்கிகளின் கொள்கையும் அப்படித்தான் இருந்தது. முதல்முறை கடன் வாங்க நினைப்பவர்களுக்குக் கொடுக்காது. பிணையம் இல்லாமல், அல்லது தொழில் நிறுவனத்தில் இருக்கும் பொருட்கள் மீதான பிணையம் இன்றி தரமாட்டார்கள். ஆகவே ஏற்கெனவே வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே திரும்பத் திரும்பக் கடன்வாங்கக் கூடிய நிலை இருந்தது. TRISEM, NRLM போன்ற அரசுத் திட்டங்களில் மட்டும் பிணையம் இன்றி கடன்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதில்தான் ரிசர்வ் வங்கி ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. நல்ல தொழில் யோசனை இருக்கும். ஆனால் அவர்களின் கடன் பெறுவதற்கான பிணையங்களோ, வங்கிக் கணக்கு ஆவணங்களோ இருக்காது. சின்ன கடையோ, சின்ன தொழில்நிலையம் வைத்திருப்பவர்களோ இருப்பார்கள் அவர்களுக்கு இந்த பிரச்னைகளால் கடன் கொடுக்க முடியாது.

ஆம். இவர்களுக்கும் பிணையம் இன்றி கடன் கொடுக்கலாம் என்ற கொள்கை மாற்றம்தான் ரிசர்வ் வங்கி கொண்டுவந்தது. கடன் கேட்பவர் ஏற்கெனவே ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருந்தால் அவரது வருவாயைப் பார்க்கலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கல்லாவில் விழுகிறது என்று பார்த்து, கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட திறன் இருக்கிறதா என்று பார்த்து பிணையம் இல்லாத நிலையில் கடன் கொடுக்கலாம். Cash flow lending என்ற முறையில் கொடுக்கலாம் எனக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை தனியார் வங்கிகள் சற்று முன்னரே செய்துவந்தன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தற்போது வங்கிகளில் தொழில்நுட்ப முறைகள் அதிகம் புழக்கத்தில் வந்துவிட்டன. ஜன்தன் கணக்குகள், ஆதார், மொபைல் ஆகிய மூன்றும் அறிமுகமாகின. ஜன்தன் திட்டம் மூலமாக எல்லோருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கியாயிற்று. ஆதார் அடையாள அட்டை வந்தது. வங்கிக்குச் செல்லாமல் மொபைல் மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

ஒரு சமோசா கடையில் எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பதை அறிய கடையில் எவ்வளவு தொன்னைகள் கொட்டிக்கிடக்கின்றன? எவ்வளவு பணம் கல்லாவில் விழுகிறது என்று நேரில் போய் பார்த்து அறியவேண்டும். இப்போது அதே சமோசா கடைக்காரரின் வங்கி எண்ணை வாங்கினாலே போதும். அவரது பரிவர்த்தனைகளை அறிந்து அவரது விற்றுமுதலை அறிந்து, அவருக்கு பைனல் ஸ்கோர் கொடுப்பார்கள். அதை வைத்து கடன் வழங்கலாம்.

இதன் சமீபத்திய வடிவம்தான் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யு.எல்.ஐ. (ULI -Unified lending interface). இதன் மூலம் இதுவரை 15 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் முறையில் ஒருவருக்கு இருக்கும் அனைத்து பதிவுகளையும் ஒன்றிணைக்கப்படுகிறது. டிஜிட்டல் நிலப் பதிவு, அதன் மூலம் சொத்து மதிப்பு, ஆதார், டிஜிலாக்கர் என அனைத்தையும் அணுகலாம். கடன் கேட்பவரின் எல்லா வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனை தரவுகளையும் ஆர்பிஐ உரிமம் கொடுத்து வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் தரவு சேகரிப்பாளர் (Account aggregator agency) இடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இவற்றைப் பரிசீலித்து ஒருவருக்கு கடன் பெறத் தகுதி இருக்கிறதா எனப் பார்த்து கடன் அளிப்பார்கள்.

உங்கள் சிபில் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் எனப்படுவதை வைத்துத்தான் கடன்கள் பொதுவாக வழங்கப்படுகின்றன. இந்த ஸ்கோர் மீது பலர் மனவருத்தத்தில் உள்ளனர். திடீரென குறைக்கிறார்கள். கடன் ஒழுங்காக கட்டினாலும் அதில் மாற்றம் ஏதும் இல்லை என்ற வருத்தங்கள், குறைகள் உள்ளன. சிபிலையும் சேர்த்து இக்யுபாக்ஸ், எக்ஸ்பீரியன், ஹைமார்க் என நான்கு ஏஜென்சிகள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் இவற்றைப் பொறுத்தவரையில் வங்கிகள் நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்கி இருக்கும் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சொல்லவேண்டும். ரெப்போ ரேட் குறைந்தால் ஃப்ளோட்டிங் லோன் வாங்கி இருப்பவர்களுக்கும் தானாகக் குறையவேண்டும். வாடிக்கையாளர்கள் குறைகள் நீக்க சி.எம்.எஸ் என்ற தளத்தில் (cms.rbi.org.in) புகார்களை அனுப்பலாம். ஆர்பிஐ வங்கிகள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கும். இங்கே வருவதற்கு முன்னதாக வங்கிகளுக்கு புகார் அனுப்பி அவை நடவடிக்கை எடுக்காவிட்டால் இங்கே வரலாம்.

கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள் மீது புகார் இருந்தாலும் முதலில் அவர்களிடம் புகார் தெரிவிக்கவேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.எம்.எஸ் தளத்தில் புகார் அளித்தால் ஆர்பிஐ ஒரு மாதத்துக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறு நிறுவனங்களுக்கு கடன்கள்

கடன்களைப் பொறுத்தவரையில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடலாம். TReDS எனப்படும் Trade Receivables Discounting System. உதாரணத்துக்கு ஒரு பெரிய நிறுவனத்தைச் சுற்றி நிறைய சிறு நிறுவனங்கள் இருக்கும். அவை பெரிய நிறுவனத்துக்கான சிறுசிறு பொருட்களை தயாரித்துக் கொடுக்கும். அந்த பெரிய நிறுவனம் ஆறுமாதமாக பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தரவில்லை என்றால் சிறு தயாரிப்பு நிறுவனங்கள் என்ன செய்வது? தங்களுக்கு வரவேண்டிய பணம் சுமார் 50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பில்களை இந்த TReDS எனப்படும் இணையதளத்தில் இதற்காகவே இருக்கும் ஏஜென்சிகளிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம். அவை தங்கள் கமிஷனை கழித்துக்கொண்டு பணம் தரும். 50 லட்ச ரூபாய்க்கு பில்கள் இருந்தால் உதாரணத்துக்கு சுமார் 48 லட்சம் வாங்கிக் கொள்ளலாம். அந்த ஏஜென்சிகள், குறிப்பிட்ட பெருநிறுவனங்களிடம் இருந்து முழுத் தொகையையும் வசூலித்துக் கொள்ளலாம். அவற்றுக்கு இந்த 2 லட்சம் லாபம். சிறு நிறுவனங்களுக்கு தேவையான பணம் உடனே கிடைக்கிறது! இதையும் ரிசர்வ் வங்கி முறைப்படுத்தி அறிமுகம் செய்து உள்ளது. (சிறு நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனம் 45 நாட்களுக்குள் பணம் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால் இந்த சட்டத்தை மீறுகிறவர்கள் மீது சிறு நிறுவனங்கள் புகார் அளிக்கவேண்டும். அது சாதாரணமாக நடப்பதில்லை).

உங்க சிபில் ஸ்கோர் எவ்வளவு?

நமக்குக் கடன் கொடுக்கவேண்டுமென்றால் முதலில் வங்கிகள் நம் கடன்பெறும் தகுதியைப் பரிசோதிக்கின்றன. நம் தரத்தை நிர்ணயிக்க அவை அணுகும் ஏஜென்சிகள்தான் சிபில் முதலிய நான்கு நிறுவனங்கள். இவை நான்குமே வெளிநாட்டைச் சேர்ந்த தாய்் நிறுவனங்களின் இந்திய வடிவங்கள். இவற்றில் சிபில் நிறுவனமே 80% அளவுக்கு சந்தையை ஆக்கிரமித்து லாபம் ஈட்டுகிறது. மீதி மூன்றும் இன்னும் லாபகரமாக மாறவில்லை. ஒவ்வொரு ஏஜென்சியும் தனிப்பட்ட சில சிறப்புத் திறன்களைக் கொண்டுள்ளன. நம் கடன் தகுதி ஸ்கோர்கள் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். அவற்றின் தரவு ஆய்வுகள் முறையில் மாற்றங்கள் உள்ளன. நாம் வசிக்கும் பகுதிகூட, நாம் ஒழுங்காகக் கடன் கட்டினாலும் நம் ஸ்கோரை நிர்ணயிப்பதில் பங்கு வகுக்கின்றது. இவைமூலம் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் ஆர்பிஐ கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த ஸ்கோர் வழங்குவதற்காக இந்திய நிறுவனம் எதுவும் ஏன் தொடங்கப்படவில்லை என்றால் அந்த வெளிநாட்டு நிறுவனங்களின் ஆய்வுமுறைகள் போல இந்தியாவில் தொழில்நுட்பத் திறன் இல்லை என்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இந்திய மண்ணில் தோன்றிய நிறுவனம் ஒன்று இவற்றுடன் போட்டிபோடும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com