சௌமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம்
ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்று மகாகவி சுப்ரமணிய பாரதி பாடிய பாடல் அன்றும் இன்றும் பொருத்தமாக இருக்கிறது.
பாப்பா என்று சொல்லும்போது அது ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும், பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும். பெரும்பாலும் நாம் பேச்சுவழக்கில் பெண் குழந்தைகளையே பாப்பா என்றே குறிப்பிடுவோம்.
இந்தியாவில் தற்போது மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போட்டிகளை தொலைக்காட்சியில் நானும் எனது கணவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். விளையாட்டு மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. லட்சோப லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறார்கள். வீராங்கனைகளின் பெயர்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தி ரசிகர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.
எனக்கு மட்டைப்பந்து விளையாட்டில் ஆர்வமில்லை, என் கணவர் மருத்துவர் அன்புமணி, இறகுப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, நீச்சல், ஹாக்கி, கூடைப்பந்து, தொடர் ஓட்டம் என எல்லா விளையாட்டுகளையும் பார்த்து ரசிப்பார். உயிரைக் கொடுத்து விளையாடி கால் இறுதிச் சுற்று, அரை இறுதிச் சுற்று, இறுதிச் சுற்று வந்து நாட்டின் பெருமையை நிலைநாட்டும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்துவிடுவார்.
ஆண்கள் விளையாட்டு வீரர்களாக உருவாகுவதற்கு மிகப்பெரிய சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி, பொறாமை, பொருட்செலவு என பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பட்டப்படிப்புக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிக்குக் கிடைப்பதில்லை. பெற்றோரின் ஒத்துழைப்பு, கல்வி நிலையங்களின் ஒத்துழைப்பு, ஊக்கம், உற்சாகம், அரசு மற்றும் விளையாட்டுத் துறையின் பங்களிப்பு, பயிற்சியாளரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இதே ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும், தியாகமும், பெண்கள் விளையாட்டு வீரர்களாக மிளிர வேண்டுமென்றால் இரு மடங்கு தேவைப்படும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பன்மடங்கு தேவைப்படும். பயிற்சியாளருடன் பிரச்னை என்றால் பயிற்சி தடைபடும். தேர்வு நேரம் என்றால் தேர்வுக்குத்தான் முதல் மரியாதை தரப்படும். விளையாட்டுப் பயிற்சி பின்னுக்குத் தள்ளப்படும். எல்லாவற்றையும்விட தன் மகளுக்காக இடம் பெயர்தல், மகளின் திருமணத்திற்கு சேமித்த வருவாயை விளையாட்டுப் போட்டிகளுக்காக செலவு செய்தல் என வீராங்கனைகள் உருவாகுவதற்கு பன்மடங்கு தியாகங்களும், சவால்களும் தேவைப்படும். சவால்களைச் சமாளிக்கும் விளையாட்டு வீராங்கனைகள், அவர்களைத் தாங்கிப்பிடிக்கும் பெற்றோர், சமுதாயம், அரசு, தொழில் நிறுவனங்கள் என இன்று நிலைமை நிறைய மாறியிருக்கிறது.
பெண் குழந்தைகள் திருமணத்திற்குப் பின்னர் கணவர் பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. தந்தையின் பெயருக்குப் பதில் கணவர் பெயரை இணைத்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து, சிந்தி மக்களில் தங்கள் இயற்பெயரையே மாற்றிக்கொண்டு விடுவார்கள். பிறந்ததிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை ஒரு பெயர், திருமணமானபின் வேறு பெயராலேயே அழைக்கப்படுவார்கள். 21 வயதிற்குமேல் பெயரை மாற்றினால் அது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று நினைப்பேன். நம்மைத்தான் அழைக்கிறார்களா அல்லது வேறு யாரையாவது அழைக்கிறார்களா என்று ஒரு நிமிடம் குழம்பிவிடுவோம். ஆனால் இன்றும் அந்தப் பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. காலம் மாறி இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய மூன்று மகள்களில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர்கள் தங்கள் பள்ளிச் சான்றிதழில் உள்ள பெயரையே இன்றுவரை தொடர்ந்து வைத்துள்ளார்கள்.
சம்யுக்தா சௌமியா அன்புமணி, சங்கமித்ரா சௌமியா அன்புமணி - ஆம், என் மகள்களின் பெயர்களுக்குப் பின்னால் தாயான என் பெயரையும் சேர்த்து தான் பதிவுசெய்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம், என் கணவர். தாயின் பெயர் கட்டாயம் பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால் இருக்கவேண்டும் என்று அரசு கெசட்டில் பதிவு செய்துவிட்டார். எங்கள் பேரக் குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் அவரவர் அம்மா, அப்பா பெயருடன் சேர்ந்தே வரும். அவ்வாறே பதிவு செய்திருக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) என அனைத்துச் சான்றிதழ்களிலும் இயற்பெயர், தாய் தந்தை பெயருடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதில் எல்லாவற்றையும்விட அழகு, எங்கள் இல்லத்திற்கு வந்த மருமகன்களும் அதை இயல்பாகப் புரிந்துகொண்ட விதம்தான். பெண்களுக்கு முன்னுரிமை தருவதைப் பெருமையாகக் கருதும் மனஉறுதி படைத்தவர்கள்.
இன்றைய சூழலில் முடிவுகளை எடுப்பதிலும் ஆண், பெண், கணவன், மனைவி, மகள், மகன், அப்பா, அம்மா என்று இரு பாலருமே இணைந்து செயல்படுகிறார்கள். முன்னரெல்லாம் அம்மாவைக் கேட்டுச் சொல்லு என்று அப்பாக்கள், வீட்டுப் பெரியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால், இப்பொழுதெல்லாம் "அண்ணியைக் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறேன்" என்று அண்ணனும் "அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டாயா?" என அப்பாவும் கேட்பது சகஜமாகிவிட்டது. எங்கள் அன்பு இல்லத்தில் இருவரும் அனுமதி கொடுத்தால்தான் மகள்கள் முடிவு செய்ய முடியும். யாராவது ஒருவர் அனுமதி கிடைக்கவில்லை எனில், முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வது, கதவை அறைந்து சாத்துவது, சண்டை போட்டுச் சாப்பிடாமல் இருப்பது போன்ற கோப நாடகங்களுக்கு இடம் அளிப்பதில்லை. எங்களிடம் பேசி ஒத்துக்கொள்ள வைப்பார்கள், சகோதரிகளின் ரெகமண்டேஷனுடன் அனுமதி பெற்று விடுவார்கள். பல சமயங்களில் சில கட்டுப்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் ஆசைப்பட்டது செய்து தரப்படும்.
இங்கே ஒருவரின் கட்டளை என்பதைவிட, பெற்றோர் இருவரின் சம்மதம் முக்கியம் என்பது புரியவைக்கப்படுகிறது. எவ்வளவோ மாற்றங்கள், முன்னேற்றங்கள், அத்தனையும் பாசிட்டிவான விஷயங்கள்.
பெண்கள் சமத்துவம், முன்னேற்றம், மகிழ்ச்சி என்ற பெரிய கோடு போட்டுவிட்டு அதைவிடப் பெரிய கோடாக 'பெண்கள் பாதுகாப்பு' என்ற கேள்விக்குறியைப் பெரிதாகப் போட்டுவிட்டதால் பெண்கள் மகிழ்ச்சி என்ற கோடு சிறியதாகத் தெரிகிறது.
படிப்புக்காகவும், வேலைக்காகவும் பெண்கள் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது; இரவு நேரங்களில் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது; அறிமுக மில்லாத நபர்களிடம் பேச வேண்டியிருக்கிறது; பள்ளி, கல்லூரி, அறிமுகமானவர், உறவினர் வீடுகள், பணியிடங்கள் என்று பாலியல் தொந்தரவுகள் அதிகமாகி இருக்கின்றன. அது மட்டுமல்ல, பயணத்தின்போது ஏற்படும் பாலியல் சீண்டல்கள், பெண்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்துவிடுகிறது. மது, போதை, வக்கிர எண்ணங்கள் தான் இதற்குக் காரணமே தவிர, பெண்களின் உடை, அவர்கள் பயணிக்கும் இரவு நேரம் என்று காரணங்கள் சொல்வது தவறானது.
பெண்களுக்கு விருப்பமில்லை என்றால் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பது கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். கட்டாயமாக ஆண் குழந்தைகள் மனதில் அன்பு, கருணை, சக உயிரிடத்தில் மரியாதை என்பது கட்டாயமாக கற்றுத்தரப்பட வேண்டும். அடிமைப்படுத்துவது, ஆதிக்க மனோபாவத்தை அடியோடு அனுமதிக்கக் கூடாது. ‘இரவு நேரத்தில் அரைகுறை ஆடையுடன் வெளியே நடமாடக்கூடாது; அதனால் அப்படிப்பட்ட பெண்களுக்கு, பாடம் கற்றுக்கொடுப்பது ஆண்களின் தலையாய கடமை’ என்ற எண்ணம் இருக்கும்வரை பெண்களின் பாதுகாப்பிற்கு என்றுமே ஆபத்துதான்.
பெண்களுக்குத் தரப்படும் வாய்ப்புபோல, பெண்களுக்குத் தரப்படும் மரியாதையும் முக்கியம். அவ்வாறு செய்தால் தைரியமாக பெண்கள் ஓடி விளையாடலாம். உலகில் உள்ள மீதி பாதி பேரும் மகிழ்ச்சியாக, தன்னம்பிக்கையுடன், தைரியமாக உலா வரலாம், முயற்சி செய்வோம்.