மீ டூவில் போட்டுத்தள்ளி விடுவார்களோ?

மீ டூவில் போட்டுத்தள்ளி விடுவார்களோ?

உங்கள் வாழ்விலேயே நீங்கள் எடுத்த அதிக ஆபத்தான முடிவு எது என்ற கேள்விக்கு இந்தத் தமிழ்ச் சமூகத்தோடு உறவாடியும், முரண்பட்டும் நிற்கும் எழுத்தாளர்களால் சுலபமாக பதில் சொல்லி விட முடியும். ஆனால் இந்த சமூகத்திலிருந்து முற்றாக விலகி ஓர் அந்நியனாக இந்த சமூகத்திலேயே வாழ்ந்து எழுதிக் கொண்டிருக்கும் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால், நான் எடுத்த ஒவ்வொரு முடிவுமே ஆபத்தானதுதான். என் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், என்னைப் போன்ற கலக மனோபாவம் கொண்ட ஒருவன் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்தது ஓர் ஆபத்தான முடிவு. அது போகட்டும் என்று பார்த்தால், அதைத் தொடர்ந்து தில்லிக்குப் போய் தில்லி மாநில அரசில் சேர்ந்தது. அதை விட ஆபத்து, மீண்டும் தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்து அஞ்சல் துறையில் சேர்ந்தது. அந்தத் துறை என் காலத்தில் கொத்தடிமைகளின் கூடாரமாக இருந்தது. அதிகாரியின் அறைக்குள் நுழைவதானால் காலணிகளை வெளியே கழற்றிப் போட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

இன்னொரு ஆபத்தான காரியம், அவந்திகாவைத் திருமணம் செய்தது. அவந்திகா அப்போது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மாத்திரைகளை (anti-depressant) உட்கொண்டு வந்தாள். ஒவ்வொரு கணமுமே தற்கொலை உணர்வு தூண்டிக்கொண்டிருப்பதால் உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். நானோ விவாகரத்து சான்றிதழுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ஓரிரு தினங்களில் கைக்கு வந்து விடும். ஆனால் அவந்திகா பெரும் உயிர் ஆபத்தில் இருந்தாள். அதனால் ஒரு கோவிலில் வைத்து உடனடியாகத் திருமணம் செய்தேன்.

எங்கள் அலுவலகத்தில் நடவடிக்கை எடுத்தால் எனக்கு வேலை போய் விடும். இரண்டு மனைவிகள் இருக்கக் கூடாது என்ற சட்டத்தின்படி என்னை சிறையிலும் தள்ளலாம். என் உயர் அதிகாரி ஓர் எழுத்தாளர் என்பதால் அந்த அசம்பாவிதம் நேரவில்லை. ஆனாலும் தாலி கட்டும்போதுகூட தமிழ் சினிமாவில் வருவது போல் போலீஸ் வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அரசாங்க வேலையை இழக்கவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருந்தது நான் எடுத்த ஆபத்தான முடிவுகளில் ஒன்று. ஒரு வாரத்தில் விவாகரத்து சான்றிதழ் கிடைத்ததால் அதற்குப் பிறகு முறையாக எங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டோம்.

இந்தியக் குடும்ப அமைப்பில் குழந்தை பெற்றுக் கொள்வது இன்றியமையாத ஒரு கடமை. பரம்பரை பரம்பரையாக குடும்பத் தொடரின் சங்கிலி அறுந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். குழந்தைக்காக வாழ்வதே இந்தியர்களின் ஆதாரம். ஆனால் நானும் அவந்திகாவும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. ஆக, எனக்கு ரத்த வாரிசு கிடையாது. இதுவும் நான் எடுத்த ‘ரிஸ்க்’குகளில் ஒன்று. (இந்த ‘ரிஸ்க்’ என்ற வார்த்தைக்குத் தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை. ஒருவேளை தமிழர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டார்களோ, என்னவோ?)

எழுத்து வாழ்வை எடுத்துக் கொண்டால், என்னுடைய முதல் நாவலிலிருந்தே ஆபத்துதான். அதிலும் நான் ஆட்டோஃபிக்‌ஷன் என்ற வகையைச் சேர்ந்த சுயசரிதக் கதைகளையும் நாவல்களையும் எழுதிக்கொண்டிருந்தேன். கேட்க வேண்டுமா? செக்ஸ் எழுத்தாளன் என்ற பட்டம் கிடைத்தது. தமிழ் இலக்கியத்தின் பிதாமகராகத் திகழ்ந்த சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு போலி நாவல் என்று எழுதியதிலிருந்தே என் எழுத்து வாழ்க்கை தொடங்குகிறது. ஆக, என் ‘தந்தை’யைக் ’கொன்று’விட்டுத்தான் நான் எழுதவே ஆரம்பிக்கிறேன். (அதன் விளைவுகளை இன்றளவும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.)

ஜான் பால் சார்த்தர், மிஷல் ஃபூக்கோ, தெரிதா, ஜார்ஜ் பத்தாய் போன்ற ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களின் பெயரே தமிழ்நாட்டில் புதிதாக இருந்த போது இவர்களின் கோட்பாடுகளின் அடிப்படையில் நான் எழுதிக்கொண்டிருந்தது கண்ணி வெடிகள் புதைந்திருக்கும் நிலத்தில் நடப்பது போலவே இருந்தது. ஒரு குடி சந்திப்பில் நான் ஃபூக்கோவின் பெயரைச் சொன்னதால் ஒரு சக எழுத்தாளர் என்னை அடிக்கவே வந்து விட்டார். மதுரையில் நான் நிகழ்த்திய ரெண்டாம் ஆட்டம் நாடகத்தின் போது நடிகர்களையும் என்னையும் அடித்ததோடு அல்லாமல் நான் வளாகத்தை விட்டு வெளியே வந்தாலும் அடிப்போம் என்று ஒரு அறிஞர்கள் கூட்டம் காத்திருந்தது. (நாடகத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் நாடகத் துறை அறிஞர்கள்!) ஒரு சிறிய பாதுகாப்புப் படையுடன்தான் நான் வெளியேற முடிந்தது. நடந்த ரகளையில் நாடகமும் பாதியிலேயே நின்று போனது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட சென்னை புத்தக விழாவில் ஒரு கூட்டத்தில் நான் பேச ஆரம்பித்ததுமே பெரும் அடிதடி ரகளையாகி, என்னை அடிக்க நினைத்தவரின் ஆசை நிறைவேறாததால் ஒரு வாரத்தில் என்னைக் கொல்வேன் என்று சபதம் போட, அந்த ஒரு வாரமும் நான் போலீஸ் பாதுகாப்புடனேயே நடமாட வேண்டியிருந்தது.

இவ்வளவு ஏன், ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணுக்கு தோழமை வேண்டுகோள் கொடுப்பதற்குக் கூட பயமாக இருக்கிறது; மீ டூவில் போட்டுத்தள்ளி விடுவார்களோ என்று!

ஆடை ஆணிகலன் என்பது என் கலகச் செயல்பாடுகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதனால் கிழிந்த ஜீன்ஸ் போடுவதை வழக்கமாகக் கொண்டேன். “நீ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன்; இப்படியெல்லாம் ட்ரெஸ் போடக் கூடாது” என்று அவந்திகா உத்தரவு போட்டாள். அவள் பேச்சையும் கேட்க வேண்டும். என் கலகமும் கைவிட்டுப் போய் விடக் கூடாது. அதனால் ஒரு திட்டம் செய்தேன். தமிழ் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளைகள் போல் ஆடை அணிந்து கொண்டு வெளியே கிளம்புவேன். கையில் எப்போதும் ஒரு புத்தகப் பை இருக்கும். காரில் போகும்போது அமெரிக்க மாப்பிள்ளை ஆடைகளைக் கழற்றி விட்டு புத்தகப் பையில் கொண்டு வந்திருக்கும் கிழிந்த ஜீன்ஸை எடுத்து அணிந்து கொள்வேன். ஷூவையெல்லாம் கழற்றி விட்டுப் போட சிரமமாகத்தான் இருக்கும். என்ன செய்வது, கலகம் தழைக்க வேண்டுமே? நல்ல காலம், இந்தியாவில் இன்னும் வாடகைக் காரோட்டிகள் ஆண்களாகவே இருப்பதால் இது சாத்தியமாகிறது. பெண் காரோட்டிகளாக இருந்தால் நான் பேண்ட்டைக் கழற்ற ஆரம்பிக்கும்போதே கார் மகளிர் காவல் நிலையத்தில் போய் நின்றுவிடும். அப்புறம் வாழ்நாள் பூராவும் சிறையில் கழிக்க வேண்டும். என் சக எழுத்தாளர்களும் நான் ரேப்பிஸ்டேதான் என்று சாட்சி கூறி விடுவார்கள்.

இன்னொரு கொடுமை, இப்போது நான் கழுத்தில் அணிந்திருக்கும் தடித்தடியான மூன்று தங்கச் சங்கிலிகள். நான் இதை தென்னமெரிக்க ரெகே பாடகர்களை மனதில் வைத்து அணிந்தேன். இப்போது இதற்கு இரண்டு விதமான தாக்குதல்கள். ஒன்று, பார்ப்போர் எல்லாம் வரிச்சூர் செல்வம் என்று கிண்டல் செய்கிறார்கள். இன்னொன்று, திருட்டு பயம். திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி இலக்கிய விழாவில் என் நண்பரும் மலையாள எழுத்தாளருமான ஸக்கரியா “இந்த ஊரில் எப்படியும் உங்கள் சங்கிலிகள் திருடு போய் விடும். அதற்குள் அதை எனக்குக் கொடுத்து விடுங்கள்” என்றார். நண்பர் அராத்து, “எனக்கே temptingஆக இருக்கிறது, காமன்மேன்களைப் பற்றி என்ன சொல்ல?” என்று பயமுறுத்தினார்.

இப்படியாக நான் போடும் ஆடை அணிகலன்களிலிருந்து எழுத்து இயக்கம் வரை ஒவ்வொரு காரியத்திலும் ஆபத்தையேதான் எதிர்கொண்டு வாழ்கிறேன். மட்டுமல்லாமல், நான் இந்தப் பொதுச் சமூகத்திற்கு எதிரானவனாகவும், அந்நியனாகவும் இருப்பதால் நான் எதைச் செய்தாலும் எதை எழுதினாலும் அது பெரும் ஆபத்தாகவே கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com