டாக்டர் ஜி.பி.ஹனிமன் எம்.டி.,
முன்னாள் தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சில் தலைவர்
டாக்டர் ஜி.பி.ஹனிமன் எம்.டி., முன்னாள் தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சில் தலைவர்

கொரோனாவில் எடுத்த ரிஸ்க்!

டாக்டர் ஜி.பி.ஹனிமன் எம்.டி.

மருத்துவ சிகிச்சையில் பல்வேறு இடர்களை சந்தித்திருக்கிறேன். கொரோனா காலத்தில் நான் எடுத்த ரிஸ்க் வித்தியாசமானது. ஆர்சனிக் ஆல்பம் என்னும் ஹோமியோபதி தடுப்பு மருந்தை கொரோனாவுக்குக் கொடுக்கலாம் என அரசும் அனுமதித்திருந்தது. ஆனால் பொது அடைப்பு நீடித்தது. மக்கள் மருத்துவர்களை அணுகுவதும், மருந்தினைப் பெறுவதும் சிரமமாக இருந்தது. எனவே சுமார் ஒரு லட்சம் பேரைத் தடுப்பு மருந்து சென்றடைய வேண்டுமென இலக்கு நிர்ணயித்தோம். மருத்துவர்கள் குழு அமைத்து கலந்து பேசினோம்.

அதற்கான மாத்திரைகளும் தயாராகின. ஆனால், அவற்றை சிறுசிறு டப்பாக்களில் அடைத்து கொடுக்கவேண்டும். ஒரு லட்சம் பாட்டில்களைத் தருவிப்பது சிரமமாக இருந்தது. அதையும் சிரமப்பட்டு வரவழைத்தோம். பின்னர் அந்த மருந்துகளை பாட்டிலில் போடவேண்டும். அதற்கான ஆட்கள் கிடைக்கவில்லை. எங்கள் மருத்துவர்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பணியில் வாரக்கணக்கில் இரவு பகலாக ஈடுபட்டார்கள்.

டப்பாக்களில் மருந்து நிரப்ப, நிரப்ப அது சக மருத்துவர்கள் மூலமாகவும், தொண்டு நிறுவனத்தினர் மூலமாகவும் தமிழகமெங்கும் உள்ள மக்களைச் சென்றடைந்தது. மருந்து தயாரிப்பிலிருந்து அது மக்களைச் சென்றடைவது வரை சுமார் மூன்று வாரங்கள் பெரும் ரிஸ்காகவே நகர்ந்தது. அதே நேரத்தில் மக்கள் அதைப் பயன்படுத்தி நோய்வராமல் தடுத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்தபோது பட்ட சிரமங்களெல்லாம் பஞ்சாய் பறந்தன. ரிஸ்க் எடுக்காமல் வெற்றி ஏது..?

ஜல்லிக்கட்டு ஒவ்வொரு முறையும் ரிஸ்க்!

தினேஷ், ஜல்லிக்கட்டு வீரர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர்நாடு பழையூர்பட்டி முருகன்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது-25) சிவில் இன்ஜினியர். ஆந்திராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தான் பிறந்த வெள்ளலூர் நாடு வீர விளையாட்டு வல்லவர் குழு என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொண்டு வருகிறார். இவர் தனது அனுபவத்தைக் கூறுகிறார்:

ஜல்லிக்கட்டுக்குப் போறோம்னு சொன்னால் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால் வீட்டிலேயே தொடங்கிவிடுகிறது. நான் ஜல்லிக்கட்டுக்கு முதன்முதலில் போகும் போது பலத்த எதிர்ப்புகளை சந்தித்துதான் போனேன். "இது கபடிப் போட்டி போலத்தான்"ன்னு சொன்னேன். ஆனால் இரண்டு மூணு போட்டிக்கு போயிட்டு வந்தபிறகு அவர்கள் ஆதரவளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெற்றோர், உறவினர்கள் உறுதுணையாக இருந்ததால் அவர்கள் அளித்த ஆதரவால் மட்டுமே என்னால் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது

ஜல்லிக்கட்டில் மாடுகளோடு ஓடலாம் ஆனால் அடக்குவது என்பது வெகு சிரமமானதாகும். பாய்ந்து வரும் மாடுகளின் திமிலைப் பிடித்து மாட்டை அடக்கணும். மாட்டை அவிழ்த்து விட்டவுடன் மாட்டின் கொம்பு நெளிவு அசைவுகளை கவனிக்க வேண்டும். அதைப் பற்றிய ஜாதகம் வினாடியில் நினைவுக்கு வரவேண்டும். அதற்கு ஏற்ப நம்மை நொடியில் தயார் செய்து மின்னல் வேகத்தில் பாய்ந்து கொம்புகளில் சிக்காமல் திமிலை பிடித்து திமிரும் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது ஒவ்வொரு முறையும் பெரும் சவாலாகும். இதுவரை 100 க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கி உள்ளேன்,’ என கூறி ஜல்லிக்கட்டினால் ஏற்பட்ட காயங்களால் தங்களின் உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள தழும்புகளைப் பெருமையுடன் காட்டுகிறார்.

கைதாகும் ரிஸ்க்!

ஜெ. அருளானந்தம்

இன்றைக்குக் கோட்டைப்பட்டினத்தில் (புதுக்கோட்டை மாவட்டம்) மீனவராகத் தொழில் செய்துவரும் அருளானந்தத்துக்கும் கடலுக்கும் இடையேயான நேரடி பரிச்சயம் 44 ஆண்டுகள். மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.

" பத்து வயசில கடலுக்குப் போனேன். அன்று தொடங்கிய ரிஸ்க் இன்னும் தொடர்கிறது. 54 வயதாகிறது. இன்னும் போயிட்டு இருக்கிறேன். கட்டுமரத்தில தொடங்கிய எனது மீன்பிடி தொழில் பயணம் இன்றைக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு வரை நீண்டிருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பின் போதெல்லாம் 60 நாட்கள் வரை கடலிலேயே இருந்திருக்கிறேன். கடலை அவ்வளவு நேசிக்கிற ஆள் நான். முன்னாடியெல்லாம் நெடுந்தீவு, கச்சத்தீவுன்னு இலங்கைப் பகுதியிலுள்ள தீவுகளுக்குப் போய் தங்கியிருக்கிறேன். அங்குள்ள மீனவர்களிடம் நட்பும் பகிர்தலும் இருந்தது. இனக்கலவரம் ஏற்பட்ட பிறகு இந்த உறவு அறுந்துபோச்சு. கடலுக்குப் போய் வந்தால்தான் சோறு என்பதுதான் இன்றைக்குப் பெரும்பாலான மீனவர்களின் நிலை.

1995ஆம் ஆண்டில் லிட்டர் டீசல் 9.35 பைசா. ஆயிரம் ரூபாய் இருந்தால் கடலுக்குப் போயிட்டு வந்திடலாம். ஆனால் இன்றைக்கு ஒன்றேகால் லட்சம் ரூபாய் தேவை. இதற்கு ஏற்ப போதுமான மீன் கிடைக்கணும். இல்லேன்னா நஷ்டம்தான். நம்ம பகுதியில அவ்வளவு மீன் கிடைக்காது. அதனால நம்ம மீனவர்கள் இலங்கை எல்லையை தொடுவாங்க. இதில் ரிஸ்க் அதிகமாகிவிட்டது. அந்த எல்லையைத் தொட்டாலே இலங்கை கப்பற்படை பிடிச்சிட்டுப் போய்விடுகிறது. அப்படி பிடிச்சிட்டுப் போனால் அத்தோடு வாழ்க்கை முடிஞ்சிடும். 40 லட்சம் ரூபாய் படகையும் சேர்த்து பிடிச்சிட்டு போயிடுவாங்க. நான் இலங்கை கடற்படையிடம் பலமுறை பிடிபட்டிருக்கேன். அவர்களும் எச்சரித்து அனுப்பிடுவாங்க.ஆனால் ஒரு முறை பிடிச்சிட்டுப் போய் தலைமன்னார் கடற்படை முகாமில் அடைச்சாங்க. பயமாக இருந்தது. அப்ப கிரிக்கெட் மேட்ச் நடந்துட்டு இருந்தது. எனக்கு கிரிக்கெட்டுன்னா அலாதி பிரியம். எங்க மாவட்ட அணிக்கு மேனேஜராக இருந்திருக்கிறேன். கேம்பில் அடைக்கப்படிருந்தபோது நான் சக மீனவர்களிடம் இலங்கை கிரிக்கெட் டீம் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் பேசிட்டு இருந்தேன். இதைக் கேட்ட அங்கிருந்த இலங்கை அதிகாரிக்கு என்னைப் பிடிச்சுப் போச்சு. நல்லா பழகினாரு. பதினைந்து நாட்களில் படகையும் எங்களையும் விடுவித்தார். இன்றைக்கும் மீன் கிடைக்கறதும் இலங்கை கடற்படையை எதிர்கொள்ளுதலும் எங்கள் தொழிலில் பெரிய ரிஸ்க் ஆகத்தான் தொடர்கின்றன," என்றார் அருளானந்தம்.

(தொகுப்பு: ப.திருமலை)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com