அண்ணாவும் காமராஜரும்
அண்ணாவும் காமராஜரும்

"அவர் செத்துட்டார்ன்னு பேசாதப்பா!'

தேர்தலில் நான் சின்னப் பையன். அப்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் என்பது சுவர் எழுத்தும், துண்டுப் பிரசுரமும்தான்.

பொதுக்கூட்டம் என்பது பெரிய தலைவர்கள் யாராவது வந்தால் நடக்கும். ஒரே கூட் டம்தான்; அதைப் பெருங்கூட் டமாகக் கூட்டுவார்கள். நான் ராமநாதபுரத்தை சேர்ந்தவன். அங்கு நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் பெரும்பாலும் காமராஜர், முத்துராமலிங்கம் தான் பேசுவார்கள்.

இதுபோக, ஓட்டுப்போட வருகிறவர்களுக்கு உப்புமா, இட்லி போன்றவற்றுடன் ஒரு ஸ்பூன் சீனி தருவார்கள், காங்கிரஸ்காரர்கள். அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு மக்கள் ஓட்டுப்போடுவார்கள்.

நான் பார்த்த ரொம்ப சூடான தேர்தல் பிரச்சாரம் என்றால், 1967இல் நடைபெற்றதுதான். தி.மு.க.வினரும், அதன் கூட்டணியிலிருந்தவர்களும் காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தனர். பல கிராமங்களில் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கப்படவேயில்லை. இந்தளவுக்குக் காங்கிரசை எதிர்க்கக் காரணம் 1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்.

1967 தேர்தலில் நாங்களெல்லாம் காமராஜரை எதிர்த்துப் போட்டியிட்ட பெ.சீனிவாசனுக்கு விருதுநகரில் வேலை பார்த்தோம். சி.பி.எம். கட்சி தி.மு.க. கூட்டணியிலிருந்தது. கடுமையான காங்கிரஸ் எதிர்ப்போடு, விலைவாசி உயர்வு குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது. விருதுநகரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட் டத்தில் பேசிய அண்ணா, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். கலைஞர் நாடகம் போட்டார்.

‘காங்கிரஸ் ஆட்சியில் கள்ள நோட்டும் கருவேல முள்ளும் பெருத்துப் போச்சு' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில்தான் கோவை கிருஷ்ணன் நூறு ரூபாய் அச்சடித்ததெல்லாம் நடந்தது. இதெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு போன்றவற்றால்தான் 1967ஆம் ஆண்டோடு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் வீழ்ந்தது. 'கல்விக் கண் திறந்த காமராஜரைத் தோற்கடித்துவிட்டார்களே' என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அப்போதிருந்த சூழல், ‘காங்கிரஸ், காமராஜர், கக்கன் என்பதெல்லாம் இல்லை; காங்கிரசில் யார் நின்றாலும் தோற்கடி' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

1967 தேர்தலின் மூலமாகத்தான் நிறைய மாணவ பேச்சாளர்கள் உருவானார்கள். பெ. சீனிவாசன், வைகோ, காளிமுத்து, போடி சுருளியர் போன்றோர் அப்படி உருவானவர்கள்தான்.

1962லிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்து தேர்தலிலும் பிரச்சாரத்துக்குப் போயிருக்கிறேன். காமராஜர், அண்ணா போன்றவர்கள் பேசிய கூட்டங்களில் நான் பார்வையாளராகக் கலந்துகொண்டு இருக்கிறேன்.

கலைஞர் கருணாநிதியோடு சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். தி.மு.க. - சி.பி.எம். கூட்டணி அமைந்தால் கூட்டணிக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களை ஐந்து நிமிடம் பேச வைப்பார் கலைஞர். எம்.ஜி.ஆர். அப்படி செய்ததில்லை.

ஏழை எளிய மக்களை நம்பி, அவர்களிடம் நிதி வசூல் செய்து தேர்தலை எதிர்கொள்கிற முறையைத்தான் சி.பி.எம். கடைப்பிடித்து வருகிறது. அன்றும் இன்றும் அதே நிலைதான். மற்ற கட்சிகளைப் போல், பிரமாண்டம் இருக்காது எங்களிடம். எங்கள் கட்சியைப் பொருத்தவரை பிரமாண்டம் என்பது, எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பதுதான்.

சி.பி.எம். பிரச்சாரம் என்பது பெரும்பாலும் ஆட்சியாளர்களை எதிர்த்துத்தான் இருக்கும். விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பிரச்னைகள் போன்றவைதான் பிரதானமாக இருக்கும்.

1957 தேர்தலில்தான் பாவலர் வரதராஜனால் சி.பி.ஐ கட்சியில் கலைக்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் பலர் தனித்தனியாக அரசியல் கலை நிகழ்ச்சி யை நடத்திக் கொண்டு இருந்தாலும், மேடையில் பெரிய கலைநிகழ்ச்சி நடத்தியது பாவலர் வரதராஜன் தான்.

1957 லிருந்து 1972 தேர்தல் வரை அவரின் பாடல்கள் ஒலித்தன. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரத்தில் பிரதான அங்கம் வகித்தவர் பாவலர் வரதராஜன் தான்.

1973இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில், உசிலம்பட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஒரு காங்கிரஸ்காரர் பேசினார். அவர் பேசும்போது, ‘எம்.ஜி.ராமச்சந்திரன்... எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்த மக்கள் “வெளியே போடா... நீ பேசாதே.... உட்காரு...' என்று கூச்சலிட்டார்கள். ஒரே சலசலப்பு.

உடனே நான் மேடையேறி மைக் பிடித்தேன். ‘எம்.ஜி.ஆர்' என்றேன். மக்கள், ‘வாழ்க' என்றார்கள். ‘எம்.ஜி.ராமச்சந்திரன் என்று சொல்லியது தப்புதான்' என்று நான் சொன்னதும், மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து வார்த்தை அன்னைக்கு மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது.

இத்தனைக்கும், எம்.ஜி.ஆர் வருவதாக சொல்லியிருந்த நாளில் வரவில்லை. மறுநாள் மாலை மூன்று மணிக்குத்தான் வந்தார். அவரைப் பார்க்க பல மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். அப்படி வேறு யாருக்கும் மக்கள் காத்திருக்கவில்லை.

முத்துராமலிங்கத் தேவர் தேர்தல் பிரச்சாரத் தில் பேசும்போது முதலில் தேவாரம், திருவாசகம் சொல்வார். பின்னர் நேதாஜி பத்தி அரை மணி பேசுவார், அதன் பின்னர்தான் அரசியல் பேச ஆரம்பிப்பார். அவரது அரசியல் பேச்சில் ‘காமராஜர் அட்டாக்'தான் இருக்கும். ‘நேத்துத்தான் நேதாஜி கூட பேசினேன்.' அப்படியெல்லாம் பேசுவார்.

ஒருமுறை கமுதியில் ஒரு கூட்டம். தேர்தல் பிரச்சார கூட்டத்துடன் தேவர் நினைவுநாள் கூட்டத்தையும் சேர்த்து நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது, ‘மறைந்த தேவர் அவர்கள்' என்று குறிப்பிட்டுப் பேசினேன். திடீரென கூட்டத்திலிருந்து, பெரியவர் ஒருவர் மேடைக்கு வந்து மைக் பிடித்தார்.

‘தேவர் இறந்துபோனார்னு நீ பேசுற' தேவர் இன்னும் சாகல. முந்தாநாளு கூட எங்கூர் மூக்கய்யாவோட மொளகா தோட்டதுல, தேவரும் நேதாஜியும் சந்தித்துப் பேசினாங்க. நேதாஜியோட பூட்ஸ் கால் தடமும்... தேவரோட செருப்பு கால் தடமும் இருக்கு. நீ வந்தீன்னா காட்டுறேன். தேவர் செத்துட்டார்னு பேசாதய்யா' என்று சொன்னார். அதற்கும் அந்த மக்கள் கைத்தட்டி பாராட்டினார்கள்.

சி.பி.எம். கட்சியைப் பொறுத்தவரை என். சங்கரய்யா பேச்சு ஆரவாரமாக இருக்கும். போராட்ட உணர்வைத் தூண்டுவார். நான் வியந்து பார்த்த தேர்தல் பிரச்சார பேச்சென்றால் அது இ.எம்.எஸ் நம்பூதிரிபாடுடையதுதான். 1977இல் நடைபெற்ற தேர்தலில், அவர் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் பேசியதை நான் தான் மொழிபெயர்ப்பு செய்தேன்.

அவர் பேசுவதில் ஒருவார்த்தை விட்டுவிட்டால் கூட, பேச்சை நிறுத்திவிட்டு, ‘நான் சொன்னதை நீங்க மாத்தி சொல்லிட்டீங்க' என்பார். அவருக்கு தமிழ் நல்லா தெரியும்.

அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து கடுமையாக பேசியதுக்கு அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தார்கள். விடுதலை போராட்டம் குறித்தும், அதில் அவர் பங்கேற்றது குறித்தும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் பேசினார். ரொம்ப அற்புதமான பேச்சு அது. அதேபோல், வைகோவின் பல பேச்சு அப்படி இருந்திருக்கிறது. தேர்தல் காலத்தில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்றால் அவரைத்தான் சொல்லாம். அவர், அரசியல், புராணம் என எல்லாவற்றையும் பேசுவார். எங்கள் கட்சி க்கு வெளியே எனக்கு பிடித்த பேச்சாளர் என்றால் அது வைகோதான்.

(எஸ்.ஏ.பெருமாள், பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் சிபிஎம் செயலாளராக இருந்தவர். செம்மலர் இதழின் முன்னாள் ஆசிரியர்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com