
குழந்தை பிறந்த ஒரு வருடத்திலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்கு வருவதற்கு இரவு ஆகிவிடும்.
நல்வாய்ப்பாக என்னுடைய பெண் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அவளுடைய தாத்தா பாட்டியும் என்னுடைய தங்கைகளும் இருந்தனர். என்னுடைய அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அதிக தூரம் இருந்தாலும் என் உறவுகளுக்காகவே நான் வீட்டை அலுவலகத்திற்கு அருகே மாற்றிக் கொள்ளவில்லை.
மகளை வளர்ப்பதற்காக உறவினர்களோடு முரண்படுவதையும் கவனமாகத் தவிர்த்து விட்டேன். அதனால் அவளுக்கு எல்லா சொந்தங்களும் கிடைத்தது. அவள் தனிமையை உணரக்கூடாது என்பதில் எனக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. மகளை நல்லபடியாக வளர்ப்பதும் முக்கியம் என் வேலையும் எனக்கு முக்கியம் என்பதால் உறவுகளிடம் எப்போதுமே ஒரு நல்லுறவைப் பாதுகாத்தேன்.
குழந்தையுடன் இருக்க நேரம் அமையாது. ரொம்ப கஷ்டமாக இருக்கும். வீட்டிலிருக்கும் நாள்களில், அவளுடன் முழு நேரத்தை செலவழிப்பேன். எங்காவது வெளியே அழைத்துச்செல்வேன். கண்டிப்பாக எங்காவது பயணம் போவது வழக்கம். இப்படித்தான் ஈடுசெய்ய வேண்டி இருந்தது.
வேலைக்கும் போய்க்கொண்டு வீட்டையும் கவனிப்பது என்பது மிக மிக சிரமமானது. பொதுவாக வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்க பெண்கள் வீட்டு வேலைக்கென தனியாக ஆள் வைத்துக் கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை அனாவசிய பொருட்செலவுகளை தவிர்த்து விட்டு நான் இதற்கு முக்கியத்துவம் அளித்தேன். என் நேரத்தை சேமிக்கவும் குழந்தையுடன் குவாலிட்டி டைம் செலவிடவும் இது எனக்கு உதவியது. என் வீட்டில் வேலை செய்த எல்லா அக்காக்களும் இன்றும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களைப் போலவே இருக்கிறார்கள்.
எனக்கிருந்த சப்போர்ட் சிஸ்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். எங்காவது மகளைக் கிளப்பி அழைத்து வரச் சொன்னாலும், அவர்கள் கூட்டி வருவார்கள். நான் வீட்டுக்கு வரும் வரை இருக்கச் சொன்னாலும் இருப்பார்கள்.
நேரம் கிடைக்கும்போது மகளோடு நிறைய பேசுவேன். ஆனாலும் பள்ளி நாள்களில் ‘என்னை ரொம்ப மிஸ் பண்ணியதாக’ சொல்லுவாள். நான் வீட்டுக்கு வருவதற்கு தாமதமானால் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்வாள். ரொம்ப கஷ்டம்தான். ஆனால் ஒரு பெண் சுதந்திரமாகவும் தற்சார்பாகவும் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவள் என்னிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.