
ஆகஸ்ட் ஒன்பது 1965. பகல் பத்துமணி. வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் திடீரென ஒரு கணம் நிறுத்தப்பட்டன. அடுத்து ஒலித்தது ஒரு குரல். அது வெறும் அறிவிப்பாளரின் குரல் அல்ல. அது வரலாற்றின் குரல்.
v“தற்சார்ந்தும், சுதந்திரமாகவும் வாழமனிதருக்குள்ள பிரிக்க முடியாத உரிமையினால் இன்று முதல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனித்த இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, ஜனநாயகக் குடியரசாக மலர்கிறது சிங்கப்பூர்’’ என்ற லீ குவான் யூவின் அறிவிப்பு ஒலித்தது.
தன்னைத் தானே ஆண்டு கொள்கிற உரிமையை, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், எந்த விதப் போராட்டமும் இல்லாமல், ஒரு உயிரிழப்புக் கூட இல்லாமல் ஒரு தேசம் பெறும் போது அங்கே குதூகலமும் கொண்டாட்டமும் தானே கரை மீறிப் புரளும்?
ஆனால்-
அறிவிப்பைக் கேட்ட தேசம் திடுக்கிட்டது. திகைப்பில் விக்கித்துப் போய் நின்றது. வெடிகள்இல்லை வேட்டுக்கள் இல்லை. வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் இல்லை. விருந்து கேளிக்கை ஏதும் இல்லை. திகிலும் திகைப்பும் தேசத்தைச் சூழ்ந்து கொண்டது. கண்ணீர் மல்க அறிவிப்பை வெளியிட்ட லீ க்வான் யூ யாரையும் சந்திக்காமல், எவர் கண்ணிலும் படாமல், குடும்பத்தோடு சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மறைந்து கொண்டார்.
காதல் திருமணத்தை அங்கீகரிக்காத தகப்பன், வீட்டை விட்டு வெளியே போ எனத் துரத்தியதைப் போல திடீரென்று மலேசியாவுடனான உறவு அறுந்து விட்டது. உறவு அறுந்த தம்பதிகள் முன் நிற்கும் பிரச்னைகள் போல தேசத்தின் முன்னும் பிரச்னைகள் நின்றன என்ன பிரச்னைகள்?
1.உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பு, 2.பொருளாதாரம் (முதலில் தாக்குப் பிடித்தல் ,பின் வளர்ச்சி) 3. சமூக நல்லிணக்கம்
(இந்தியா விடுதலை அடைந்த போது நம் முன் நின்ற பிரச்னைகளும் இவைதான்.)
இந்தப் பிரச்னைகளை சமாளிக்க கைவசம் இருந்தது என்ன? பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சிங்கப்பூரிடம் ராணுவம் கிடையாது. சிறிய தேசம் ஆதலால் பெரிய அளவில் ஒரு ராணுவத்தை உருவாக்கிப் பராமரிக்கக் கட்டுப்படியாகாது. நாடோ இயற்கை அரண் ஏதுமில்லாத, நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அந்தச் சின்னஞ்சிறு தீவில் பெரிதாக இயற்கை வளம் ஏதும் கிடையாது. கனிமவளம் கிடையாது. பெட்ரோல் கிடையாது. மக்கள் தொகை அதிகம் இல்லை. சுமார் 18 லட்சம் பேர். (18,79,571) அவர்களில் பாதிப்பேருக்கு மேல் எழுத்தறிவு இல்லை. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சேரிகளில் வசித்தார்கள். வறுமை பரவலாக இருந்தது. வேலை இல்லாதவர்கள் சராசரியாக 14 சதவீதம்.
இத்தனை இல்லாமைகளுக்கு நடுவில் அவர்களிடமிருந்த ஒரு செல்வம், ஒரே ஒரு செல்வம் என்று கூடச் சொல்லுவேன், அவர்களது தலைவர்கள். எப்போதும் ஒரு கிரிக்கெட் டீமைப் போல வெள்ளைக் கால்சாராயும் சட்டையும் அணிந்து காணப்பட்ட அந்த பத்துப் பேர் – அவர்கள்தான் நாட்டின் முதல் அமைச்சரவை- அந்த நாட்டைத் தலைகீழாக மாற்றிக் காட்டினார்கள்.
இன்று சிங்கப்பூர் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்று. சேரிகள் இல்லை. 99சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் (அங்கு ‘சொந்த வீடு’ என்பது 99 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தால் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது) வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை சராசரியாக 1 சதவீதம்.
இந்த வெற்றிக்கான மகுடம் லீ க்வான் யூவிற்குச் சூட்டப்படுகிறது. சந்தேகமில்லாமல் வெற்றியின் முகம் அவர்தான். ஆனால் கனிகள் ஆடும் மரத்தைக் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் தாங்கி நிற்பது போல், அவருக்கு உற்ற துணையாக சுற்றி நின்றவர்கள் 9 பேர்.
உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்காத ஒரு நல்வாய்ப்பு லீ குவான் யூவிற்குக் கிட்டியது. அவரோடு சேர்ந்து சிங்கப்பூரைக் கட்டி எழுப்பியவர்களில் பலர் பதவிக்கு வரும் முன்னேரே அவருடைய நெருங்கிய நண்பர்கள். சிலரை அவர் அவரது கல்லூரி நாள்களிலிருந்தே அறிவார். அனேகமாக எல்லோரும் மெத்தப் படித்தவர்கள். அயல் நாட்டில் சென்று கல்வி பெறும் வாய்ப்புக் கிட்டியவர்கள். அங்கு கல்வியில் முன்னணி மாணவர்களாகத் திகழ்ந்தவர்கள். ஒவ்வொருக்குமே நாட்டிற்குத் தலைமை ஏற்கும் தகுதியும் திறமையும் இருந்தது. ஆனால் அவர்கள் லீயைத் தங்கள் தலைவராக ஏற்றார்கள். அந்த விசுவாசத்திலிருந்து கடைசி வரை அவர்கள் மாறவே இல்லை. அவர்களில் ஒருவர் சின்னத்தம்பி ராஜரத்தினம்.
தமிழர் என்பதைப் பெயரே சொல்லிவிடும். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தை மலேயாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கு இவருக்கு முன் பிறந்த இரு குழந்தைகள் இறந்து போனாதால் இடம் ராசியில்லை என்பதால் பிரசவத்திற்காக இவரது தாய் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். சட்டம் படிக்க இங்கிலாந்திற்குப் போனார். ஆனால் முதல் உலகப் போர் காரணமாக அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த உதவித் தொகை தடைப்பட்டது. பத்திரிகையாளராக ஆனார். ஸ்பெக்டேட்டர் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதினார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லின் அபிமானத்தைப் பெற்றதால் பிபிசியில் வேலை கிடைத்தது. லண்டனில் இருந்தபோது ஒரு ஹங்கேரியப் பெண்ணை மணந்து கொண்டார். (ஆனால் இவரது தாயார் கடைசிவரை அவரை மருமகளாக ஏற்கத் தயாராக இல்லை). சிங்கப்பூரின் அயலகக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியமானவர். ஆசியான் அமைப்புத் தோன்றக் காரணமானவர்.
குடியரசாக மலர்ந்த சிங்கப்பூர் இரண்டு பெரிய நாடுகளிடையே ‘சிக்கி’க் கொண்ட குட்டித் தீவாக இருந்தது. ஒரு பக்கம் மலேசியா. கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வந்தாயிற்று.இன்னொரு புறம் இந்தோனேசியா... மலேயாவும் சிங்கப்பூரும் இணைந்து மலேசியாவாக ஆனதிலிருந்தே அது கறுவிக் கொண்டிருந்தது.
அப்போது இந்தோனேசியா சுகர்னோ ஆட்சியில் இருந்தது. அவர் சீனத்தோடும் வேறு சில கம்யூனிச நாடுகளோடும் இணைந்து ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான் அணி’ ஒன்றை உருவாக்குவதில் முனைந்திருந்தார். மலேயாவையும் சிங்கப்பூரையும் இணைத்து ஒரே நாடாக்கியது அந்த வட்டாரத்தில் கம்யூனிசத்தை ஒழிக்க பிரிட்டீஷ் செய்யும் முயற்சி என அவர் கருதினார். அதை “நொறுக்குவேன்” என பகிரங்கமாகச் சபதமும் செய்திருந்தார். அதற்காக “ எதிர் கொள்” (ஆங்கிலத்தில் “Confrontation”, இந்தோனீசிய மொழியில் “Konfrontasi”) என்றொரு கொள்கைத் திட்டமும் வகுத்திருந்தார் அதனடிப்படையில் மிக அருகில் இருந்த சிங்கப்பூரில் சிவிலியன்களைப் போல ஊடுருவித் தாக்குதல் செய்ய முயற்சித்து வந்தார்(காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவுவது போல). ஒரு குண்டு வெடிப்பை 1964இல் வெற்றிகரமாக செய்தும் காட்டியிருந்தார்.
சிங்கப்பூரும் மலேசியாவும் பிரிந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் சிங்கப்பூரைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமானால் அது மலேசியாவைச் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு சிங்கப்பூர் குடியரசு தயாரில்லை. அந்தக் கோபம் இந்தோனேசியாவிற்கு இருந்தது.
மற்றொரு புறம் அருகில் உள்ள இன்னொரு நாடான வியட்நாமில் அமெரிக்கா போர் நடத்திக் கொண்டிருந்தது. அப்போது வியட்நாம் இரண்டாகப் பிரிந்திருந்தது. தெற்கு வியட்நாம் கம்யூனிசத்திற்கு எதிராக அமெரிக்கர்கள் ஆதரவில் இருந்தது. கம்யூனிச நாடான வட வியட்நாம் சீன, ரஷ்ய உதவியோடு அமெரிக்காவை எதிர்த்து தீரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தது.
சிறிய நாடுகள் பெரிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுவிடும் அபாயம் நிலவிய காலம் அது.
இன்னொரு நெருக்கடியும் சிங்கப்பூருக்கு இருந்தது. இந்தோனேசிய அச்சுறுத்தலைச் சமாளிக்க, பிரிட்டீஷ் படைகள் சிங்கப்பூரில் முகாமிட்டிருந்தன. அந்தப் படைகளை மெல்ல மெல்ல 1970களுக்குப் பின் விலக்கிக் கொள்வதாக பிரிட்டன் உறுதியளித்திருந்தது.
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக பிரிட்டனின் செலாவணியான பவுண்ட் செலாவணி விகிதம் குறைந்ததால் பலவீனமடைந்து பிரிட்டன் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதற்கு செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயம். அது 1970க்குள்ளாகவே தனது படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாகச் சொன்னது.
பிரிட்டன் படைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் அன்று சிங்கப்பூரிடம் இருந்தது 1000 படைவீரர்கள் 50 அதிகாரிகள்தான்! இரண்டு கப்பல்கள் மட்டும் கொண்ட தன்னார்வத் தொண்டர்களால் இயக்கப்பட்ட “கப்பல் படை” ஒன்றிருந்தது. விமானப் படை ஏதும் கிடையாது! படைவீரர்களில் பலர் மலாய் இனத்தவர். அவர்கள் மலேசியாவிற்குத் திரும்பிப் போக விரும்பி விலகல் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் விலகியும் சென்று விட்டிருந்தனர்.
அண்டை நாடுகளோடு இறுக்கமான உறவு. சர்வதேச அழுத்தங்கள். மிக மிக மெலிந்த படைபலம்.
இவற்றைக் கொண்டு எப்படி நாட்டைப் பாதுகாப்பது?
பாதுகாப்புக்குப் பெரும்பாலும் அச்சுறுத்தல் அண்டை வீட்டிலிருந்துதான் வரும். அண்டை வீட்டாரோடு ஒட்டுறவு இல்லை என்றால் தலைவலிதான். அது பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாளப்பட வேண்டிய விஷயம். அது வேறெவரையும் விட லீக்கு நன்றாகத் தெரியும். அதனால் அயலுறவுத் துறையை நிர்வகிக்கத் தமிழரான ராஜரத்தினத்தைத் தேர்ந்தெடுத்தார். ராஜரத்தினம் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்.
அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை சிங்கப்பூரை ஒரு தனி நாடாக உலகம் ஏற்கச் செய்வது. குடியரசாக அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாள், ஆகஸ்ட் 11 ஆம் தேதி அவர் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார். சிங்கப்பூர் ஒரு காலத்தில் பிரிட்டீஷ் காலனி. அவர்களது படைகள் சிங்கப்பூரில் இருந்தன.மலேசியாவிலிருந்து சிங்கப்பூரும் பிரிவதை அரசியல் காரணங்களுக்காக பிரிட்டன் விரும்பவில்லை. கடைசி நிமிடத்தில் கூட தனது தூதரை அனுப்பி பிரிவினையை நிறுத்தப் பார்த்தது. அதனால் அதை முதலில் ‘கன்வின்ஸ்’ செய்ய வேண்டும்.
அதில் சில சாதகங்களும் இருந்தன. பிரிட்டன் அங்கீகரித்து விட்டால் பல காமென்வெல்த் நாடுகள் அங்கீகரித்து விடும். முக்கியமாக ஆஸ்திரேலியா. அது சற்றுத் தொலைவில் உள்ள அணடை நாடு. பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் அங்கீகரித்து விட்டால் அமெரிக்காவும் அங்கீகரித்துவிடும். பொருளாதாரத்தை வலுப்படுத்த அது மிகவும் அவசியம்.
ராஜரத்தினத்தின் அணுகுமுறை பலன் தந்தது. பிரிட்டன் சிங்கப்பூரைத் தனி இறையாண்மை கொண்ட குடியரசாக அங்கீகரித்தது. அது பல கதவுகளைத் திறந்தன. குடியரசான மூன்று மாதங்களில் சிங்கப்பூர் காமென்வெல்த்தில் இணைந்தது. அதற்கு ஒரு மாதம் முன் ஐக்கிய நாடுகள் சபையில்.
அப்போது உலகம் இரு கோளங்களாகப் பிளவுண்டு கிடந்தது. கம்யூனிசத்தை ஏற்காத அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான நாட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்) ஒரு புறம். சோவியத்தின் தலைமையில் கம்யூனிசக் கொள்கைகளை ஏற்ற கிழக்கு, மத்திய, ஐரோப்பிய நாடுகளை கொண்ட வார்சா ஒப்பந்த நாடுகள் மறுபுறம்.
யாரோடு சேர்ந்து கொண்டாலும் ராணுவ உதவியும் பொருளாதார உதவியும் கிடைக்கும். ஆனால் வேறு சில நிர்பந்தங்களில் சிக்கிக் கொள்ள நேரிடும். எந்தப் பக்கம் சாய்ந்தாலும் அது தங்களது சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என ராஜரத்தினம் நினைத்தார்.
அதனால் ஐம்பெரும் தலைவர்கள் ( யுகோஸ்லோவியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ, கானாவின் நெக்ரூமா) உருவாக்கிய அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பில் சேர சிங்கப்பூர் முடிவு செய்தது. அன்றைய நாளில் அது வல்லரசுகள் எதிர்பார்க்காத ஓர் ஆச்சரியம். ஏனெனில் சுகர்ணோ சிங்கப்பூருக்குத் தலைவலி கொடுத்து வந்தவர். டிட்டோ கம்யூனிஸ்ட். ஏன் ஐம்பெரும் தலைவர்களுமே இடதுசாரிச் சிந்தனையாளர்கள். சிங்கப்பூர் கம்யூனிசத்தை எதிர்க்கும் நாடு!
இதுதான் சிங்கப்பூரின் அடிப்படையான அணுகுமுறை:“நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் நம் கொள்கை. புத்தகங்களில் உள்ள தத்துவங்கள் அல்ல”. யதார்த்தங்களின் அடிப்படையில் கொள்கைகளை மதிப்பிடுகிற. பயன்படுத்திக் கொள்கிற இந்த அணுகுமுறை நடைமுறைவாதம் (Pragmatism).
வல்லரசுகளைக் கையாள்வதை விட அண்டை நாட்டாரைக் கையாள்வதற்கு அதிக சாமர்த்தியமும் மதிநுட்பமும் வேண்டும். இந்தியாவிற்குப் பாகிஸ்தானைப் போல சிங்கப்பூருக்கு மலேசியா. தனிக் குடியரசாக மலர்ந்து விட்ட போதிலும் வேர்களில் சில அங்கு பரவிக் கிடந்தன. பல சிங்கப்பூரர்களின் உறவுகள் அங்கே வசித்தார்கள். வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன. இரு தரப்பு இலக்கியமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் சாயல் கொண்டிருந்தன. சிங்கப்பூரில் மலாய் மொழியினர் சிறுபான்மை. மலேசியாவில் சீன மொழியினர் சிறுபானமை. சிறு உரசலும் தீப்பொறியாகும் தீப்பெட்டிச் சூழல்.
சிங்கப்பூர் இந்தச் சூழ்நிலையைக் கெட்டிக்காரத்தனமாகக் கையாண்டது. மலாய் மொழி தேசிய மொழியாகத் தொடரும் என அறிவித்தது. சிங்கப்பூரின் தேசிய கீதமாக மலாய் மொழியில் அமைந்த பாடலை ஏற்றது. யூசஃப் பின் இஷாக் என்ற இஸ்லாமியரை அரசின் தலைவராக (ஜனாதிபதியைப் போல அலங்காரப் பதவி, Head of the State) அறிவித்தது. அதே சமயம் இரு நாட்டிற்கும் பொதுவாக இருந்த விமான நிறுவனம், பங்குச் சந்தை, ரப்பர், வங்கி வணிக அமைப்புக்கள் இவற்றிலிருந்து விலகித் தனக்கெனத் தனி அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டது.
இந்தோனேசிய உறவை ‘விலை கொடுத்து’ வாங்கியது. அந்நாட்டு வர்த்தகர்களுக்கு 15 கோடி டாலர்கள் கடனுதவி செய்தது. ஆனால் உறவுகள் மேம்பட்டு வருகிற நேரம் சறுக்கல்களும் நேர்ந்தன. 1964ல் நடந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய இரு இந்தோனேசிய படைவீரர்களுக்கு 1968 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை அடுத்து இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்த சிங்கப்பூர் தூதரகமும், தூதர் வீடும் தாக்குதலுக்குள்ளானது. பின்னர், 1973இல், லீ குவான் யூ இந்தோனேசியா சென்ற போது அந்த வீரர்களது கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் வரை இரு தரப்பிலும் இறுக்கம் இருந்தது
சிங்கப்பூரை ஆயுதத்தால் பாதுகாத்தவர்களுக்கு சற்றும் குறைவில்லாதது அறிவால் பாதுகாத்த ராஜரத்தினத்தின் பணி. ஆனால் பின்னர் வந்த தலைமுறை அவரது பெயரால் அமைந்த S.Rajaratnam School of International Studies என்ற உயர்கல்வி நிலையத்தை RSIS என்று சுருக்கிவிட்டார்கள். ரத்தினச் சுருக்கம்!
“இந்த வானுயர்ந்த கட்டிடங்கள் என்னைக் கவர்ந்துவிட்டன. நான் உடனே இந்தக் கட்டிடங்களின் புகைப்படங்கள் கொண்ட ‘பிக்சர் கார்டை’வாங்கி எங்கள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.”
சிங்கப்பூரில் உள்ள அயல்நாட்டுப் பத்திரிகையாளர்கள் உடபட அனைத்துப் பத்திரிகையாளர்களும் கூடியிருந்த கூட்டத்தில் இப்படிச் சொன்னவர் துரைமுருகன். ஆண்டு 1974 . அப்போது சட்ட மன்ற உறுப்பினராக இருந்த துரைமுருகன் சிங்கப்பூர் சென்றிருந்தார் சட்டமன்ற உறுப்பினராக அல்ல. ‘ரைசிங் சன்’ என்ற வாரப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநராக. மலேசியன் ஏர்லைனஸ், கோலாலம்பூருக்கும் சென்னைக்கும் இடையே விமான சேவையைத் துவக்கியதை அடுத்துச் சில பத்திரிகையாளர்களை சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் அழைத்துச் சென்றது. அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவராக துரைமுருகன் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்
இந்தப் பத்திரிகையாளர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளேடான தமிழ் மலர் ஒரு நட்சத்திர விடுதியில் வரவேற்பு ஒன்று அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில்தான் துரைமுருகன் இதைச் சொன்னார்.
துரைமுருகனுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூர் செல்கிற பலரும் அண்ணாந்து பார்த்து பிரமிப்பது இந்த வானளாவிய குடியிருப்புகளைத்தான். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட இந்த பிரமிப்பு நீங்கிவிடவில்லை.
அதற்குப் பின் இருப்பது லீ குவான் யூவின் கனவு
லீ குவான் யூவின் அந்தக் கனவுதான் என்ன?
ஒரு தேசம் உறுதியாக நிற்க (Stable) வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக நிற்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். இது லீ யின் சிந்தனைகளில் ஒன்று.
சிந்தனை சரிதான். ஆனால் நடைமுறையில் சாத்தியமா?
நடைமுறை சாத்தியமில்லை என்றுதான் மற்ற நாடுகள் நினைத்திருக்கும். ஆனால் ஏன் சாத்தியமாக்கக் கூடாது என்று லீ நினைத்தார். சிங்கப்பூரின் வெற்றி மந்திரங்களில் ஒன்று இந்த Why not? அதாவது ‘ஏன் கூடாது’?. ஏன் என்ற கேள்வி சில நேரங்களில் சோர்வளிக்கும். ஏன் கூடாது என்ற கேள்வி ஊக்கமளிக்கும் என்பது உளவியல்
குடியரசாக மலர்வதற்கு முன்பு, சுய ஆட்சி அரசு (பிரிட்டீஷ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ், குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு) உருவான காலத்திலேயே அதற்கான வேலைகளைத் துவக்கினார் லீ. சுய ஆட்சி அரசுக்கான 1959ல் நடந்த தேர்தலில் லீயின் கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது (மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்கள்) லீ பிரதமானார்,
அப்போது, 1960ல், அவரது அரசு வீட்டு வசதிக் கழகத்தை (வீ.வ.க) உருவாக்கியது தெளிவான இலக்கு, எளிதான நடைமுறை என்ற இரு அம்சங்கள் அதன் ஆணி வேர்.
ஆண்டுக்கு 10 ஆயிரம் வீடுகள் என்ற அடிப்படையில்10 ஆண்டில் லட்சம் வீடுகள் அரசு கட்டும். அவை தவிர ஆண்டுக்கு 2500 வீடுகள் கட்டும் பொறுப்பு தனியார் துறைக்கு வழங்கப்படும். இது இலக்கு. வீடு கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவது, அனுமதி அளிப்பது, கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்வது என அமைக்கப்பட்ட 35 கமிட்டிகளைக் கலைத்து விட்டு ஒரே அமைப்பின் கீழ் அவற்றைக் கையாள்வது. இது எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை.
திட்டம் காகிதத்தில் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆண்டுக்குப் பத்தாயிரம் வீதம் பத்தாண்டில் லட்சம் வீடுகள் கட்டுவது என்றால் நிலத்திற்கு எங்கே போவது? டைமண்ட் வடிவத்தில் உள்ள சிங்கப்பூரில் மிக விலகிய இரு இடங்களுக்கிடையே தூரம் 52 கிலோ மீட்டர்கள்தான்.
நிலமில்லாவிட்டால் என்ன? வானம் இருக்கிறதே! அகலமாக வளர்வதற்கு பதிலாக உயரமாக வளரலாம் என முடிவெடுக்கப்பட்டது. 12 மாடி 16 மாடி என அடுக்குமாடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டது.
பிரமிக்கத்தக்க விதத்தில் வீ.வ.க. செயல்பட்டது. உருவாக்கப்பட்ட இரண்டாண்டுகளில் 26168 வீடுகளை அது கட்டி முடித்தது. வீவக உருவாவதற்கு முன் வீடுகள் கட்ட ‘சிங்கப்பூர் வளர்ச்சி அறக்கட்டளை ‘ (Singapore Improvement Trust- SIT) என்ற அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் ஒன்றிருந்தது. 32 ஆண்டுகளில் SIT கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை வீவக இரண்டாண்டுகளில் கட்டி முடித்தது! ஐந்தாண்டுகளில், அதாவது சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த 1965ல், அதன் இலக்கான 50 ஆயிரம் வீடுகள் என்பதைத் தாண்டி, 53 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்திருந்தது.
அரசு கைப்பணத்தைப் போட்டோ, கடன் வாங்கியோ, மூலதனம் திரட்டியோ ஆயிரக் கணக்கில் வீடுகளைக் கட்டிவிடலாம். ஆனால் அவற்றை இலவசமாகக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு அதன் அருமை புரியாது என்பது மட்டுமல்ல, தொடர்ந்து அரசால் வீடுகள் கட்ட முடியாது. பொருளாதாரம் முடங்கி ஒரு இடத்தில் மொத்த திட்டமும் தடைப்பட்டு முடங்கி நிற்கும். ஆண்டுக்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற இலக்கை அடையமுடியாது.
இதற்குத் தீர்வு கட்டப்பட்ட வீடுகளை விற்பதுதான். விற்கலாம்தான். ஆனால் யார் வாங்குவார்கள்? குடிசைகளில் வாழுகிற மக்களிடம் வாங்கும் சக்தியிருக்குமா?
அங்குதான் ஒரு புரட்சிகரமான அணுகுமுறையை அரசு மேற்கொண்டது. அதுதான் மற்ற பல நாடுகளில் வெற்றி காணாத வீட்டு வசதித் திட்டம், சிங்கப்பூரில் வெற்றி கண்டதற்குக் காரணம். அது-
வீடுகளுக்குக் குடிபெயர்வோர், வீட்டின் விலையில் 20 சதவீதம் முதல் தவணையாகக் கொடுக்க வேண்டும் வீட்டின் மதிப்பு 4000 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) என்றால் 800 வெள்ளி முதலில் கட்ட வேண்டும். மீதமுள்ள தொகையை வீ.வ.க. மிகக் குறைந்த வட்டியில் கடனாகக் கொடுக்கும். அந்தக் கடனுக்கு மாதா மாதம் தவணை கட்டி வர வேண்டும், வாடகை செலுத்துவதைப் போல.
சரி கையில் ரொக்கம் இருந்தால்தானே கொடுக்கமுடியும்? கையிலிருந்து கொடுக்க வேண்டாம். சேமிப்பாக இருக்கும் வருங்கால வைப்புத் தொகையிலிருந்து (பிராவிடண்ட் பண்டிலிருந்து) அந்த 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். மாதத்தவணையைக் கூட அதில் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம். இதற்கு வகை செய்யும் விதமாக பிராவிடண்ட் பண்ட் சட்டம் 1968ல் திருத்தப்பட்டது. 1970ல் நாற்பதாயிரம் குடும்பங்கள் சொந்த வீடு வாங்கியிருந்தன!