
புத்தகங்களை ஒருமுறை புரட்டினால் பிறர் குரலைக் கேட்கலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரின் குரலாகக் கூட அது இருக்கலாம். வாசிப்பது காலப்பயணத்துக்கு நிகரானது
– கார்ல் சேகன்
புத்தகங்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்றார் தாமஸ் ஜெபர்சன். அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவர். உலகின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்படும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் 1800-இல் நிறுவப்பட்டது. இது 1814-இல் பிரிட்டனுடன் நடந்த போரின் போது எரிக்கப்பட்டது. இதை மீண்டும் உருவாக்க தாமஸ் ஜெபர்சன் தன்னுடைய சேகரத்தில் இருந்த 6487 நூல்களை அளித்தார். இதற்காக 23,950 டாலர்கள் விலையாக அளிக்கப்பட்டன. இதைக் கொண்டு மேலும் நூல்களை வாங்கத் தொடங்கினார். மிகப்பிரபலமான புத்தக சேகரிப்பாளர்கள் வரிசையில் ஜெபர்சனுக்கு எப்போதும் இடம் இடம் உண்டு.
உலகின் மிகப்பெரிய நூலகங்கள் எனப் பட்டியல் போட்டுத்தேடினால் விக்கிபீடியா 33 நூலகங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. அதில் பத்து நூலகங்கள் அமெரிக்காவிலேயே அமைந்துள்ளன. குறைந்தது ஒரு கோடி நூல்களுக்கும் மேலாகக் கொண்ட நூலகங்களின் பட்டியல் இது. ஆசியாவிலிருந்து சீனா, ஹாங்காங் ஆகிய இரு இடங்களில் இருந்து மூன்று நூலகங்கள் இந்த பட்டியலில் உண்டு.
நூல்களைச் சேகரிக்க வேண்டுமானால் அவற்றை வாங்க பணம் வேண்டும்; அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க இடமும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை வாசிக்கும் நல்ல வாசகராகவும் இருக்கவேண்டும்.
ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் லேகர்பீல்டு என்கிற புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பாளர் பிரபலங்களின் பட்டியலில் அதிக நூல்களை வைத்திருப்பவர் என்ற இடத்தைப் பிடிப்பவராகக் கருதப்படுகிறார். “ என் வீட்டுக்கு வந்தால் புத்தகங்களைச் சுற்றித்தான் நடக்கவேண்டும். நூல்களைச் சேகரிப்பதே என்னுடைய முழுநேர வேலை. 3 லட்சம் நூல்கள் என்னிடம் உள்ளன,’ என்று அவர் 2015 ஆம் ஆண்டு தன்னுடைய உரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
மறைந்த பாப்பிசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கூட நல்லதொரு நூல் சேகரிப்பாளராக இருந்திருக்கிறார். அவரிடம் 10,000 புத்தகங்களுக்கு மேல் இருந்திருக்கின்றன. கவிதை நூல்களையே அவர் அதிகம் வாங்குவாராம். மிகச் சிறந்த வாசகராகவும் அவர் விளங்கி இருந்திருக்கிறார்.
பெரும் கலைஞர்கள் பெரும் வாசகர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எதிரிப் படையெடுப்பின்போதும் கலாச்சார படையெடுப்பின்போதும் நூல்களை அழிப்பது ஒரு வழக்கமாக இருந்திருப்பதை நாம் வரலாறு நெடுக்கக் காண்கிறோம். யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது கரும்புள்ளியாக நம் மனதில் பதிந்துள்ளது.
நமது மாநிலத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ந்து பிரமாண்ட அளவிலான பல நூலகங்களை அரசு அமைத்துவருகிறது. மிகப்பெரும் அறிவுக் களஞ்சியங்களாக அவை மாநிலத்தின் பல இடங்களில் அமைந்து அறிவுப்பரவலின் மையங்களாக உருவெடுப்பதைப் பாராட்டலாம். முறையாகப் பராமரிக்கப்பட்டால் இன்னும் சில ஆண்டுகளில் பெரும் சேகரங்களாக அவை உருவெடுக்கும்.
திருநின்றவூர் சந்தான கிருஷ்ணனை நம் வாசகர்கள் அறிவார்கள். அவ்வப்போது பழைய சினிமா தகவல்களுடன் நம் இதழில் கட்டுரைகள் எழுதுவார். அவர் ஒரு மிக அபூர்வமான திரை இசை சேகரிப்பாளர். 1902-இல் இருந்து 1975 வரை வெளியான 78 ஆர் பி எம் கிராமபோன் ரிக்கார்டுகள் மட்டும் 15000 எண்ணிக்கையில் சேகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரம் ஓடும் எல் பி ரெக்கார்டுகள் 8000, 15 நிமிடங்கள்் ஓடும் ஈபி ரிக்கார்டுகள் 7000 என சேகரித்து வைத்திருக்கிறார். ஆடியோ சிடிக்கள் 5000ஐத் தாண்டும். அரிய திரைப்படங்களின் டிவிடிகள் 20,000க்கும் அதிகமாக இருக்கும். பழைய சினிமாக்களின் ஆர்வலர்கள் அவரது இல்லத்துக்குச் சென்றால் நிச்சயம் வெளியே வரும்போது சந்தானகிருஷ்ணனின் கரங்களைப் பற்றி நன்றி சொல்லாமல் வெளியே வர இயலாது. அவ்வளவும் பழைமையின் பெருமையைப் பறைசாற்றும் சேகரங்கள்.
“மிகச் சிறுவயதில் டீக்கடையில் கிராமபோன் ரிக்கார்டுகள் ஓடும். அந்த இசையில் மெய்மறந்தேன். தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலைக்குச் சேர்ந்தபோது எனக்கு மாத சம்பளம் 80 ரூபாய். அதில் 50 ரூபாயை வீட்டுக்குக் கொடுத்துவிட்டு 30 ரூபாயில் இசைத்தட்டுகள் வாங்குவேன்,’ என்கிற சந்தானகிருஷ்ணனின் சேகரத்துக்கு இன்று விலைமதிப்பே கிடையாது. இசைத்தட்டுகள் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஆயிரக்கணக்கான சினிமா இதழ்களும் இவர் சேகரத்தில் அடங்கும். ஒரு நூற்றாண்டின் திரைப்பட வரலாற்றையே தனி மனிதராக சேகரித்து வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம் தான்.
‘இன்று எனக்கு 84 வயதாகிறது. ஆனால் இன்னும் அதே சிறுவயதில் என்னுள் இசை உருவாக்கிய தாக்கமும் அதன் மீது எனக்கு ஏற்பட்ட காதலும் குறையவே இல்லை. அதுதான் என்னை இயக்குகிறது’ என்று சமீபத்தில் நம்முடனான உரையாடலில் சொல்கிறார் அவர். கூடிய விரைவில் யூடியூப் சானலொன்றையும் தொடக்கி தன் சேகரங்களில் இருந்து அரிய தகவல்களையும் பகிர்ந்துகொள்ள இருப்பதாகக் கூறினார்.
தமிழ்நாட்டில் குறைந்தது பத்தாயிரம் நூல்களுக்கும் மேல் தங்கள் சேகரத்தில் வைத்திருக்கும் சிலரது நேர்காணல்கள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. பழமையான நூல்கள் வரை நேற்று வெளியான நூல்கள் வரை சேகரித்திருக்கும் இவர்கள் வெறுமனே நூல்களை சேகரிக்கவில்லை. அதன் மூலம் நம் மானுட அறிவைச் சேகரித்திருக்கிறார்கள்.
“ சொர்க்கம் என்பது நூலகமாகத்தான் இருக்கும் என்று நான் எப்போதும் கருதி வந்திருக்கிறேன்’’ என்றார் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ். இவர்களையும் சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள் என அழைக்கலாம் தானே…