நாட்டின் தலையெழுத்து இவர்களின் கையில்!

நாட்டின் தலையெழுத்து இவர்களின் கையில்!

சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தொலைதூர  அரசியல் அனுபவங்களை  தொகுத்துப் பார்க்கிறபோது,  அரசியல் கட்சிகளின் தொண்டர் பெருங்கூட்டம் ஒன்று  இன்று காணாமல் போய்விட்டதைப் போன்ற  உணர்வு ஏற்படுகிறது. இவர்கள், மரத்திற்கு வேர் இருப்பதைப் போல  அரசியல் கட்சிகளுக்கு  வேராய் அமைந்து,  உயிர்ப்பைத் தரும் திறன் கொண்டவர்கள். இவர்கள் இல்லாததால் உருவான வெற்றிடம் அரசியல் அடிப்படைகளை இன்று தகர்க்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வேர்கள் யார் என்றால் அவர்கள்தான் கட்சியின் தொண்டர்கள்.

பல வண்ணங்களில் புனையப்பட்ட ஓர் அழகிய பூமாலையைப் போன்றது இந்திய ஜனநாயகம். இங்கு ஒவ்வொரு வண்ணத்திலும் ஓர் அரசியல் கட்சி. இதன் சித்தாந்த இணக்கத்தில்தான், இந்திய நாட்டின் அரசியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு கட்சியும் அதன் இலட்சிய அரசியலை நிறைவேற்றுவதற்கு திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்குகிறது. இதைத்தான் கொள்கைப் பிடிப்பை உருவாக்குதல் என்கிறோம். இன்று இந்த கொள்கைப் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.

கொள்கைப் பிடிப்பை உருவாக்குவதில் முன்னணித் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சென்ற நூற்றாண்டில் இந்தத் தலைவர்களின், முன் மாதிரியில் அடுத்த கட்ட இளம் அரசியல் தலைவர்கள் உருவானர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, எளிமை ஆகியவை தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. அரசியல் உணர்வு, கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தது. இது கட்சிக்குள் ஒருவிதமான பங்கேற்பு ஜனநாயகமாக அமைந்திருந்தது. இதன் மூலம் மக்களை அரசியல் படுத்த அரசியல் கட்சிகளால் முடிந்தது.

இவ்வாறு சித்தாந்தத்தை, அனுபவ அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவர்கள்தான், கட்சியின் தொண்டர்கள் என்ற உயர் பொறுப்பை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் இந்தத் தொண்டர்கள்தான் கட்சியின் அடித்தளமாக பரிணாமம் பெறுகிறார்கள். ஜனநாயகத்திற்கு   குடிமக்கள்  எவ்வாறு  அடிப்படையோ அதைப் போலத்தான் கட்சிக்கு இந்த தொண்டர்கள் இயங்கியல் தொடர்பாட்டாளர்கள். கட்சியின் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு இவர்கள்தான் அடிப்படையாக இருக்கின்றனர்.

ஜனநாயகத்தில்  மக்களின் நேரடியான பங்கேற்பு  இல்லையென்றால்  அது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வது என்பது  தவிர்க்க முடியாததைப் போலவே, அரசியல் கட்சிகளிலும் உறுப்பினர்களின் அரசியல் பங்கேற்பு இல்லை என்றால் அங்கு என்னென்னவோ எல்லாம் நிகழ்ந்து விடுகிறது.

சென்ற நூற்றாண்டில் அரசியல் கட்சி தொண்டர்களாலேயே கட்சி நடத்தப்பட்டது. இன்றும்  தமிழகத்தின் விரிந்த அரசியல் களத்தை கொஞ்சம் பொறுப்புணர்வோடு திரும்பிப் பார்த்தால்,  முதுமையோடு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பல அர்ப்பணிப்புள்ளத் தொண்டர்களைப் பார்க்க முடிகிறது. இவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கம், திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம் என்று தங்கள் இளமைக் காலம் முழுவதையும் அரசியலுக்கு அர்ப்பணித்து விட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர்வதைப் பாரக்கிறோம். இவர்கள் ஒருபோதும் உயர் பதவிகளுக்கு சென்றதில்லை.

இன்று இந்த அர்ப்பணிப்பு மிகுந்த தொண்டர்களுக்கானப் பயிற்சி அரசியல் கட்சிகளில் இருக்கிறதா? எதிர்காலத்தில் இத்தகைய அர்ப்பணிப்பாளர்கள் அரசியலில் தோற்றம் பெற முடியுமா? இன்று அரசியல் கட்சிகளில் நுழைகின்றவர்களின் நோக்கம் வேறாக இருக்கிறது. பணத்தைப் பற்றி கவலையில்லாமல் செய்யும் பெருஞ்சேவை உணர்வு இவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. இது அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய வீழ்ச்சியை உருவாக்கக் கூடியது?

1950, 60 ஆம் ஆண்டுகளில், கட்சிக்காக குழி வெட்டி கம்பங்களை நட்டு தன் கையாலேயே கொடியேற்றிய தொண்டர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். பொதுக்கூட்டம் என்று சொன்னால், மேடையை தங்கள் கைகளாலேயே கட்டி முடித்தார்கள் -  இருபது மைல், முப்பது மைல்  வேர்வை பெருக்கெடுக்க சைக்கிள் மிதித்து வந்து, மேடை வழியாக அரசியலில் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் இல்லாமலேயே போய்விட்டார்கள். கூட்டத்தைப் பெரிதாகக் காட்ட கூலிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் தலைவிரித்து ஆடுகிறது. இதைத் தவிர ஒரு ஒப்பந்தகாரர் கையில் எல்லா கட்சிகளின் கொடியும், தலைவர்களின் கட் அவுட்டும் இருக்கிறது. இவர்களிடம் கொள்முதல் செய்துகொள்பவர்களாக அரசியல் கட்சிகள் மாறிவிட்டன.

பேராசிரியர் க.பழனிதுரை தமிழக சமூக செயல்பட்டாளர்கள் அனைவரும் நன்கறிந்தவர். அவர் தொடர்ந்து கூறி வரும் கருதுகோளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் சந்தைக்குள் சென்று விட்டது என்று தொடர்ந்து எழுதியும், பரப்புரை செயல்பாடுகள் செய்தும் வருகிறார். அவர் பேசுவதில் பெரும் பகுதி உண்மையிருக்கிறது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் அதன் தொண்டர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தனது கட்சிக்காக  தேர்தல் கொள்கையை  அந்தக் கட்சி முடிவு செய்கிறது என்பதை விட, கார்ப்பரேட்டுகள் தான் முடிவு செய்கிறார்கள். கட்சியின் லட்சியங்களை விட சூழ்ச்சி மிக்கத் தந்திரங்களே இங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. இன்றைய கணினி யுகத்தில் இதற்கென்று கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் நிறுவனங்கள் தோன்றிவிட்டன. எப்படியோ நாட்டின் தலையெழுத்து இவர்கள் கைக்கு சென்றுவிட்டது.

இதற்கான மாற்றம்தான் என்ன என்பது இப்போதைய கேள்வி. அரசியல் கட்சிகளின் அதிகாரம் அதன் உறுப்பினர்களுக்கு வேண்டும். அரசியல் கட்சிகளில் எடுபிடிகள் மறைந்து, அரசியல் விழிப்புணர்வு கொண்ட வீரியமிக்க தொண்டர்கள் தோற்றம் பெற வேண்டும். இது மக்களிடம் பங்கேற்பு ஜனநாயகத்தில் நுழைவதற்கான வாசல்கதவு.

காந்தியடிகள், அம்பேத்கர், பெரியார், ஜீவா என்கிறோம். இவர்கள் அதிகாரத்திற்கு செல்ல குறுக்கு வழிகளை யோசித்ததில்லை. இவர்களின் வழி நேர்வழி. இந்தப் பாதையில்தான் தரமுள்ள அரசியல் தொண்டர்களைக் கட்சிகளால் உருவாக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com