
பல தமிழ்ச் செவ்வியல் நூல்களின் முதல் பதிப்புகள் எங்களிடம் உள்ளன!” – பெருமிதத்துடன் தொடங்கினார் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன்.
“1994இல் தான் இந்த நூலக சேகரிப்புகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. அதற்கான முன்னெடுப்பை சிகாகோ பல்கலைக்கழகம்தான் எடுத்தது. 1992இல் ரோஜா முத்தையா இறந்துவிட, அவரின் சேகரிப்பில் இருந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து, அவைகளை அவரின் குடும்பத்தினரிடமிருந்து வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தார்கள்.அதில், 50,000 நூல்கள், இதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், திரைப்பட போஸ்டர்கள் என எல்லாம் சேர்த்து ஏறக்குறைய ஒரு லட்சம் ஆவணங்கள் இருந்தன.
அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏ.கே.ராமானுஜன் தமிழ் பயிற்றுவித்துக் ்கொண்டிருந்தார். அவரின் முன்னெடுப்பில் ஒரு குழு அமைத்து, முத்தையாவின் சேகரிப்பில் உள்ள ஆவணங்களின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, அதைப் பாதுகாக்க தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், அந்தச் சேகரிப்பைத் தமிழ்நாட்டிலேயே வைக்க முடிவெடுத்தனர்.
இதற்காக ‘மொழி அறக்கட்டளை’யுடன் சேர்ந்து பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆவணங்களை நுண்படம் எடுத்து பாதுகாப்பதுதான் திட்டத்தின் நோக்கம். அதில், நானும் இணைந்தேன் (1994). அப்போதே 'ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்' என்ற பெயரும் சூட்டப்பட்டது. இன்று அது ஐந்து லட்சம் ஆவணங்களாக வளர்ந்துள்ளது.
2005ஆம் ஆண்டு, அப்போது தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், தொல்லியல் துறை பயன்படுத்திய இடம் காலியாக இருந்தது. அதை அரசாங்கத்திடம் கேட்டுப்பெற்று, முகப்பேரில் இருந்து தரமணிக்கு வந்தோம். 2010இல் கலைஞர் அரசு நீண்ட நாள் குத்தகைக்கு அந்த இடத்தைக் கொடுத்தது. அது எங்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.
2005ஆம் ஆண்டில் இருந்தே கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது, அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடத்துவது, கண்காட்சி நடத்துவது, மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துவது என எல்லாம் தொடங்கிவிட்டோம். இதுவரை 500க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். மூத்த வல்லுநர்கள், புதிய வளரும் அறிஞர்கள் என அனைவருக்குமான தளமாக இது உள்ளது.
2007ஆம் ஆண்டு ஐராவதம் மகாதேவன் அவர்களின் பரிந்துரையின்பேரில் 'சிந்துவெளி ஆய்வு மையம்' தொடங்கினோம். பிறகு ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் அறங்காவலராவும் இருக்கிறார்.
மேலும், சங்க இலக்கியங்களுடன் எப்படி ஒப்பிட்டுப்பார்ப்பது, குறியீடுகளைப் படிப்பது எப்படி என்பதிலும் கவனம் செலுத்தியுள்ளோம். ஐராவதம் மகாதேவன் 1977இல் சிந்துவெளிக் குறியீடுகளுக்கான தொடரடைவு ( Concord-ance) ஒன்றை நூலாக உருவாக்கியிருந்தார். அதை, தொல்லியல் துறையோடு சேர்ந்து இணையத்தில் வெளியிட்டுள்ளோம் (அதனை https://indusscript.in/ தளத்தில் காணலாம்).
தொடர்ச்சியாக, ’பொதுவியல் ஆய்வு மையம்' ஒன்றையும் தொடங்கினோம். சிந்துவெளி ஆய்வு மையம் வரலாற்றுக்கு முந்தைய கால ஆய்வுகளில் ஈடுபடுவதுபோல, இது நவீனகால ஆய்வுகளில் ஈடுபடுகின்றது,” என்றவரிடம், நூலகத்திலிருக்கும் மிக பழமையான நூல்கள் குறித்து கேட்டோம்.
“திருக்குறளின் முதல் பதிப்பு 1812இல் ஓலைச்சுவடியில் எப்படி இருந்ததோ, அப்படியே காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் இப்போது மொத்தம் 5 பிரதிகள்தான் உலகில் உள்ளன. அதில் ஒன்று எங்களிடம் உள்ளது. இது எங்களுக்கு மு. அருணாசலம் அவர்களின் சேகரிப்பில் இருந்து கிடைத்தது.ரோஜா முத்தையாவின் சேகரிப்பில் 1804இல் பதிப்பிக்கப்பட்ட ‘கந்தரந்தாதி’ என்னும் நூல் இருந்தது. அதன்பின்னர் எங்கள் கள ஆய்வில் 1796ஆம் ஆண்டைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்றைக் கண்டுபிடித்தோம். தவிர, டேனிஷ்-ஹாலே மிஷன் (சீகன் பால்கு தமிழ்நாட்டில் முதன்முதலில் தரங்கம்பாடியில் நிறுவிய அச்சுக்கூடம்) 1713ஆம் ஆண்டைச் சேர்ந்த முதல் பதிப்பில் ஒன்றை நமக்கு கொடுத்துள்ளனர். 300 ஆண்டுகால அச்சு வரலாற்றிற்கான இடம் இந்நூலகம்.” என்றவர், இப்போது முன்னெடுத்து வரும் முக்கியப் பணிகள் குறித்து சொல்லத் தொடங்கினார்.
“2025ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிந்துவெளி ஆய்வு மையத்தில் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்விருக்கை அமைக்க உத்தரவிட்டார். ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு ஊதியத்துக்கான மானியம் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, புதிய கட்டடம் கட்டுவதற்குக் கூடுதலான இடம் கொடுத்து ரூ. 2 கோடி நிதியுதவியும் செய்துள்ளது. மீதமுள்ள தொகையைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது நாங்கள் கட்டி எழுப்பி வரும் ‘தமிழ் அறிவு வளாகத்திற்குள்’ ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம், தமிழ் எழுத்துரு கூடம், அருங்காட்சியகம் என எல்லாமும் இருக்கும். இதற்காக உலகத் தமிழர்களிடம் நாங்கள் ’ஒரு சதுர அடி’ கட்டுமானப் பணிக்கான நிதியுதவி கேட்டுக் கோரிக்கை வைத்துள்ளோம். அவரவர் வசதிக்கேற்ப உதவலாம். ஒரு செங்கல்லைக்கூட வாங்கித்தரலாம். ஊர்கூடித் தேர் இழுக்கும் முறைதான் இது. இது எல்லா தமிழர்களுக்குமான இடம். இது நம் பண்பாட்டை, வரலாற்றை, தொன்மையைத் தெரிந்து கொள்வதற்கான ஓர் இடமாக இருக்கும். இங்கு புத்தகங்கள் இருக்கும், அதுவே நுண்படங்களாகவும் இருக்கும், அதைக் கணினிமயம் ஆக்கியிருப்போம், இணையத்திலும் பதிவேற்றியிருப்போம். ஓர் ஆவணம் எங்காவது ஒரு இடத்தில் காணாமல் போனால் கூட மற்றொரு இடத்தில் இருக்கும். யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதிலிருந்து கிடைத்தது இப்பாடம்.
வருங்காலத்தில் முதுகலை பட்டயப் படிப்புகளை நடத்தவுள்ளோம். முனைவர் பட்ட ஆய்வுகள் இங்கு பதிவு செய்வதற்கு ஏற்ப பல்கலைக்கழகங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.