
அந்திமழை அலுவலகத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த மிஸ்டர் கில்லை அழைத்தார் மிஸ்டர் முள். பழைய பாக்கியைக் கேட்காத, வழக்கமான டீக்கடையில் ‘ஒன் பை டூ’ சொல்லி அமர்ந்தார்கள்.
மிஸ்டர் முள்: தமிழ் சினிமாவில் கம்பேக் நாயகன் என்றால் முதலிடத்தில் யாரை வைக்கலாம்னு நினைக்கிறீங்க?
மிஸ்டர் கில்: பல தோல்விப் படங்களுக்குப் பின்னால் கருப்பு என்ற படம் மூலம் வெற்றியை சூர்யா ருசித்திருக்கிறார். இது அவருக்கு கம்பேக் என்று சொல்லலாம். அதேபோல் பல தோல்விப் படங்களுக்குப் பின்னால் எப்போதும் ஒரு கம்பேக் கொடுக்கறத வழக்கமாக வைத்திருப்பவர் நடிகர் அர்ஜுன்தான்! பெரிதாக அவர் பெயர் பேசப்படாதபோது திடீரென்று, தானே இயக்கி ‘சேவகன்’ என்று ஒரு கம் பேக் கொடுத்தார்! அப்புறம் அவருக்கு ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் ஒரு முக்கியமான கம் பேக்! சில படங்களுக்குப் பிறகு ஜெய்ஹிந்த் என்று ஒரு கம்பேக். சில வருடங்களுக்குப் பிறகு முதல்வன் என்று ஒரு கம்பேக். அதன்பிறகு பார்த்தால் திடீரென்று அஜீத்தின் மங்காத்தாவில் ஒரு கம்பேக் கேரக்டர். பிறகு லியோவில் ஒரு கம்பேக். “கேரக்டர்ல வந்து மட்டும் தான் கம்பேக் குடுப்பேன்னு நெனைச்சீங்களா.. இந்தா ஹீரோவாவே ஒரு கம்பேக் தரேண்டா”ன்னு இப்ப “பிளாஸ்ட்”ல ஒரு அதிரிபுதிரி கம்பேக். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தன்னை நிரூபிச்சிட்டே இருக்காரு!
மிஸ்டர் முள்: நடிகை ஸ்வாசிகா ஒரு கிளாசிக் கம் பேக் கதை இல்லையா?
மிஸ்டர் கில்: ஆமாங்க… சில படங்கள் தமிழில் நடிச்சிட்டு 2015-ல மலையாளத்துக்குப் போயிட்டாங்க.. இப்படி ஒருத்தங்க இருந்தாங்கன்னு எல்லோரும் மறந்த நிலையில் ‘லப்பர் பந்து’ன்னு பத்து வருசம் கழிச்சு வந்து நின்னாங்க பாருங்க… அசத்திட்டாங்க.. இப்ப கருப்பு, நூறு சாமின்னு இன்னொரு சுற்றுவர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த சிறப்புப் பக்கங்களுக்கு ரொம்ப சரியான பொருத்தம் ஸ்வாசிகாதான்!
முள்: சரியா சொன்னீங்க. இருந்தாலும் அவங்களைக் கண்டுபிடிச்சு கொண்டுவந்த தமிழரசன் பச்சை முத்துக்குத்தான் அந்த பெருமை போய்ச்சேரணும்.
கில்: அதுதான் தேசிய விருதுப் பட்டியலில் லப்பர் பந்து படத்தைப் புறக்கணிச்சு பெருமை சேத்திட்டாங்களே…
முள்: அரசியல் பேச வேண்டாம் கில்!
முள்: நான் தேசிய விருது பத்தித்தானே பேசினேன்.. அரசியல் எங்க பேசினேன்… ஓ.. அதுல இது கலந்துருக்குன்றீங்களா… சரி… குணச்சித்திர, வில்லன் நடிகர்களாக கம் பேக் கொடுத்து தமிழ் சினிமாவை அசத்தின ரெண்டு பேரு இருக்காங்க…
கில்: உங்களுக்குத்தான் வயசு அதிகம். அதனால் நீங்க சொன்னா சரியா இருக்கும்
முள்: ம்ஹூம் அப்படியா செய்தி… நடிகர் ஜெய்சங்கர் மிகப்பெரிய வெள்ளிவிழா திரைப்பட நாயகராக தமிழ்சினிமாவில் வலம் வந்தவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.
கில்: அவர் நடிச்ச ஜம்பு படம் பார்த்திருக்கேன்.
முள்: அடப்பாவி… அந்தப் படம்தானா உங்களுக்கு ஞாபகம் வருது? அவர் ஹீரோவா நடிக்கிறது நின்னுபோயிருந்த சமயம் அவரை ‘முரட்டுக்காளை’ படத்துல வில்லனா நடிக்கக் கூட்டி வந்தாங்க. அதிலேர்ந்து அவர் தொடர்ச்சியாக ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கம் பேக் குடுத்தார்.. அதே போல், வில்லன், ஹீரோன்னு நடிச்சு வாய்ப்புகள் ஓய்ந்த பின்னாடி நடிகர் ஆனந்தராஜ், இப்ப பாருங்க காமெடி கலந்த வேடங்களில் பின்னிப் பெடல் எடுக்கிறாரு…
கில்: வில்லன்னு சொன்னதும் ஞாபகம் வருது... தமிழில் ரொம்ப நாளைக்கு முன்னாடி ஹீரோவா நடிச்சிட்டிருந்தவர் சில பல சிக்கல்களால் காணாமல் போய் தெலுங்கு தேசம் ஒதுங்கிட்டார்.. ஆனா.. 2007-ல் ஒரு செம கம்பேக் வில்லனாக கொடுத்தார் யாரு சொல்லுங்க பார்ப்போம்!
முள்: யாரு கிட்ட… “ஆதிசேஷன்னா பொட்டு வெச்சுட்டுப் பொங்கல் சாப்டறவன்னு நெனைச்சியா?” அப்டினு சிவாஜி-ல கலக்கின சுமனை மறக்க முடியுமா?
கில்: கில்லிதான் நீங்க.
முள்: அரசியல் பேச வேண்டாம்னு சொன்னேனே..
கில்: அட.. கில்லின்னு சொல்றதுலாம் இப்ப அரசியலாய்டுச்சா.. சரி.. இந்த வரிசையில கம்பேக் குடுத்த இயக்குநர்கள் யாராச்சும் சொல்லுங்க பாப்போம்.
முள்: இப்ப யாரை நாஞ் சொல்லுறது? எனக்கு முன்னாடி கம் பேக் குடுக்க தவிக்கிற இயக்குநர்கள் பட்டியல்தான் ஓடுது. கம்பேக் குடுத்தவங்கன்னு சொல்ல முடியலயே…
கில்: சரி வுடுங்க… இவங்களை வெச்சு தனிக் கட்டுரை எழுதிடலாம்… அது சரி.. தொடர்ச்சியா பல ஓட்டைப்படங்களில் நடிச்சுத்தள்ளி, இவர் நிலைமை இப்படி ஆயிடுச்சேன்னு எல்லோரும் வருத்தப்பட்டப்ப ஒரு டைம் லூப் படத்தில் கம்பேக் கொடுத்த சிம்புவை நாம குறிப்பிட்டே ஆகணும்!
முள்: உண்மைதான். அப்படின்னா மங்காத்தா அஜீத்துக்கு கம்பேக் படம்தான். மாதவனுக்கு இறுதிச் சுற்று. கார்த்திக்கு கைதி.
கில்: தனி ஒருவன்ல அரவிந்த் சாமி.
முள்: மியூசிக்க விட்டுட்டீங்களே.. அதுல அதிக கம்பேக் குடுத்தது நமம் யுவன் ஷங்கர் தான்..
கில்: அதென்னமோ அவரே ஒத்துப்பாரு..
முள்: சரி.. நான் கடைக்காரர் காசு கேக்கறதுக்குள்ள நைசா போய் ஒரு தம் அடிச்சுட்டு வந்துர்றேன்…(முள் எழுந்து செல்ல... கில்-லும் டாடா சொல்ல.. சபை கலைகிறது)