தமிழ் வெப் சீரிஸ்கள்
எதைத் தவற விட்டிருக்கிறோம்?

தமிழ் வெப் சீரிஸ்கள் எதைத் தவற விட்டிருக்கிறோம்?

பார்வையாளரின் ரசனை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டிருப்பதோடு பொழுதுபோக்கு ஊடகங்களின் வளர்ச்சியும் மூர்க்கத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா ஒவ்வொரு காலத்திலும் ஏராளமான மாற்றங்களை கடந்துவந்தாலும் அடிப்படையில் கதை சொல்வதற்கான ஊடகமாகவே நூறாண்டு காலமாக இருந்துவருகிறது.

வெவ்வேறு வகையான திரைப்படங்கள் மாற்று முயற்சிகளாக  எடுக்கப்பட்டிருக்கபோதும், பெருவாரியான சினிமாக்கள் கதைசொல்லுதலையே பிரதானமாகக் கொண்டுள்ளன.  வணிக சினிமாவின் கதைகளை சில குறிப்பிட்ட வகைமைகளுக்குள் அடக்கிவிடமுடியும். குறிப்பாக தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் பெரும்பகுதியான திரைப்படங்களின் கதைகள் திருமணத்தை நோக்கிய பயணமாகவே இருக்கின்றன. அந்தவகையில் நமது திரைப்படங்கள் குடும்பத்தைச் சுற்றி இயங்குவதாக இருக்கின்றன. மிகச் சிலத் திரைப்படங்களின் கதைகள் மட்டுமே இதற்கு வெளியே இருந்திருக்கின்றன.

தொடக்ககாலத்தில் நாடகங்களிலிருந்தே சினிமாக்களுக்கான கதைகள் உருவாக்கப்பட்டதால் நிறைய பாடல்கள் அடங்கிய புராணக் கதைகளே சினிமாக்களாக உருவாகின. சமூகத் திரைப்படங்கள் உருவாகவே நமக்கு சில பத்தாண்டுகள் தேவைப்பட்டன என்பது கசப்பான நிஜம்.

வெப் சீரிஸ்கள் என்னும் நெடுந்தொடர் வடிவம் இந்தியாவிற்கு வெளியே கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாகவே பரவலாக கவனிக்கப்பட்டு வந்தாலும் தமிழில் அதிகம் கவனிக்கப்பட்டது கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்தான். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் உலகம் முழுக்க பிரபலமாகி அதன் கடைசி சீசன் ஒளிபரப்பான காலகட்டத்தில் நிறைய இடங்களில் பார்களிலும் பொது இடங்களிலும் பெரும் பார்வையாளர் பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறியதை நாம் கவனித்திருப்போம். ஹெச்.பி. ஓ சேனலில் அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவும் இந்தியாவில் திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்குமாக ஒளிபரப்பானபோது இங்கு வேலைக்குச் செல்கிற பெருநகர வாசிகள் அந்தத் தொடரைக் காணவேண்டும் என்பதற்காகவே திங்கள்கிழமை காலைகளில் தாமதமாக வேலைக்குச் சென்றனர். எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறு இரவும் இதற்காகவே நண்பர்கள் கூடுகை திட்டமிடப்பட்டு திங்கள்கிழமை காலை இந்தத் தொடரை கூட்டமாகக் கண்டோம். அந்த அளவிற்கு பொழுதுபோக்கு சினிமாக்களுக்கு இருக்கும் பெரும் வரவேற்பு இந்த வெப்சீரிஸ்களுக்கும் இருக்கிறதென்பதை உணர்த்தவே இதனைக் குறிப்பிடுகிறேன்.

லட்சுமி சரவணகுமார்
லட்சுமி சரவணகுமார்

இன்றைக்கு உலகம் முழுக்க வெப் சீரிஸ்கள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. ஒரு சினிமாவில் சொல்லமுடியாத அப்படி எதை வெப் சீரிஸ்கள் சொல்லிவிடுகின்றன என்று கேட்டால் நிறைய இருக்கிறது. முக்கியமாக ஒரு படைப்பாளிக்குக் கிடைத்திருக்கும் மகத்தான சுதந்திரம். நீங்கள் யோசிக்கும் கதையை நேர அளவுகளைப் பொருட்படுத்தாமல் விரிவாக எழுதலாம். இரண்டு மணிநேர சினிமாவில் முழுமையாக சொல்லமுடியாத ஒரு வாழ்வை இங்கு இரண்டு மூன்று பருவங்களுக்கு நிறையப் பகுதிகளாகப் பிரித்துச் சொல்ல முடியும். இந்த வசதி காட்சி ஊடகத்தில் மிக முக்கியமானது. சினிமா டிஜிட்டல் மயப்பட்ட புரட்சியின் விளைவாக இதனை நாம் எடுத்துக்கொள்ள முடியும். பிலிம் ரோல்களில் ஒவ்வொரு அடியையும் நாம் கணக்கிட்டு படம் பிடித்துக் கொண்டிருந்ததெல்லாம் போய் இன்றைக்கு ஒருவர் தான் எடுக்க நினைக்கும் காட்சியை எவ்வளவு மெனக்கெட்டு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்கிற வாய்ப்பை டிஜிட்டல் கேமராக்கள் கொடுத்திருக்கின்றன. அதே நேரத்தில் இதுபோன்ற தொடர்களைப் பார்ப்பதற்கான பெரும் சந்தையையும் இந்த ஊடகங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. இந்த வாய்ப்பைப் படைப்பாளிகள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் இங்கு விவாதம்.

தமிழ் வெப்சீரிஸ்களை எடுத்துக் கொண்டால் அவை இப்போதுதான் தனது பயணத்தைத் தொடங்குகின்றன.

இந்தியில் சேக்ரட் கேம்ஸ், பாதாள் லோக், டெல்லி க்ரைம், காலா பாணி நேற்று வெளியான ரயில்வே மேன் வரை ஏராளமான சிறந்த தொடர்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இந்திய அளவில் வெப் சீரிஸ்களுக்கான பெரும் சந்தையும் நிதியும் உருவாகியிருப்பதை எவரும் மறுக்க முடியாது. பிரபல நடிகர்கள், புகழ்பெற்ற இயக்குநர்கள், பிற கலைஞர்கள் எல்லோரும் இந்த வடிவத்தில் இயங்குவதை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் பொழுதுபோக்கு  சினிமாவிலிருந்து விலகி தீவிரமான கதைகளை அவர்கள் கையாளத் தொடங்கியிருப்பதுதான். ரயில்வேமேன் போபால் விஷவாயு தாக்குதல் நடந்த அந்த இரவை நான்கு மணிநேரங்களுக்கும் மேலாக விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இரண்டு மணிநேர சினிமாவில் இது சாத்தியமாக வாய்ப்பில்லை. பத்து நிமிட அதிர்ச்சிகரக் காட்சியாய்க் கடந்துபோயிருக்கும், அதைவிட முக்கியமாக இந்த பேரழிவிற்குக் காரணமானவர்களின் பெயர்களைச் சொல்லமுடியாத அளவிற்கு தணிக்கை செய்யப்பட்டிருக்கும். இதுபோன்ற எந்தத் தடைகளுமில்லாமல் உண்மைக்கு நெருக்கமாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதன் வெற்றி. தமிழில் வெளியான, அல்லது வெளியாகவிருக்கிற நெடுந்தொடர்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் குறிப்பிட்டுச்சொல்லும்படியானவை என ஒன்றிரண்டைச் சொல்ல முடியும். ஆனால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஸ்பானிய, ஃப்ரஞ்சு மொழிகளிலும் வெளியான எந்தத் தொடர்களோடும் இவற்றை ஒப்பிட முடியாது.

தமிழ் சினிமா அதன் தொடக்க காலத்திலிருந்தே எழுத்தாளர்களுக்கான சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை, சொல்லப்போனால் எழுத்தாளர்களையே அனுமதிக்கவில்லை. சகலதுறைகளிலும் இயக்குநரின் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழியில் வந்த நமக்கு வெப் சீரிஸ்கள் எழுத்தாளர்களுக்கான தளமாக அமையும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் இங்குமே பெரும் நிறுவனங்கள் புகழ்பெற்ற இயக்குநர்களையே முதலில் அணுகிச் செல்கின்றன. பிரபல தளங்களில் பிரபல இயக்குநர்கள் இயக்கிய ஒன்றிரண்டு நெடுந்தொடர்கள் வரவேற்பில்லாமல் போனதற்கு முக்கியக் காரணம் அவர்களின் திரைப்படங்களிலிருந்து இந்தத் தொடர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை. அதேபோல் போதுமான அளவிற்கு எழுத்தாளர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 

வெகுசன சினிமாக்களை உருவாக்கும் தயாரிப்பாளர்களிலிருந்து விலகி புதிய முயற்சிகளுக்கான தளமாக அமையவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கிறதுதான். ஆனால் ஆக இறுதியாக ஒவ்வொரு தொடரும் எவ்வளவு பேரைச் சென்றடையும் என்கிற எண்ணிக்கையே முக்கியக் கேள்வியாக மாறும்போது புதியவர்களை நம்புவதற்கான புதிய கதைகளை நம்புவதற்கான அச்சங்கள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. சுழல், வதந்தி, விலங்கு போன்ற ஒரு சில வெப்சீரிஸ்கள் விதிவிலக்காக சொல்லிக் கொள்ளும்படியாக வந்திருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் மற்ற மொழிகளுக்குச் சவால்விடும்படியான பத்து நெடுந்தொடர்களையாவது உருவாக்க நாம் தவறியிருக்கிறோம் என்பதுதான் கசப்பான நிஜம்.

பாதாள் லோகோ, சேகர்ட் கேம்ஸோ நிச்சயமாக ஒரு வெகுசன சினிமாவில் சாத்தியமில்லை.

சாத்தியமில்லாதவற்றுக்கான புதிய கதைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும்போதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும். அடிப்படையில் இதற்கு தேவை கதைக்கான தேடுதலும், புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்தலும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் தமிழ் எழுத்தாளர்களுக்கு சினிமாவின் மீது இருந்த ஒவ்வாமை இந்தத் தலைமுறை எழுத்தாளர்களுக்கு இல்லை. மாறாக சினிமாவிற்குத் தயாராகும் எண்ணத்திலேயே பெரும் பகுதியானவர்கள் சினிமாவிற்கான கதைகளாக அதே தன்மைகளோடு எழுதத் தொடங்கிவிட்டார்கள்.

சினிமா எழுத்தாளர்களிடம் எதிர்ப்பார்ப்பது முற்றிலும் புதிதான ஒன்றைத்தான். நீண்டகாலமாக சினிமாவிற்கும் இலக்கியத்திற்கும் இடையிலிருந்து இடைவெளி பேசித் தீர்க்கப்பட வேண்டிய காலம். தரமான எழுத்தாளர்கள் உருவாக வேண்டுமானால் அவர்களுக்கு தேர்ந்த வாசிப்பும் தேடலும் முக்கியம். எழுத்தாளன் தனது புதிய இலக்கிய முயற்சிகளில் வெற்றிகண்டு சினிமாவிற்கு வருவதுதான் ஆரோக்கியமான வருகை.

ஒரே நேரத்தில் எழுத்தாளனாகவும் இயக்குநராகவும் இருப்பதால் அடிப்படையான சிக்கல்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்தப் பிரச்னைகளைக் களையக்கூடிய இடத்திற்கு நான் இன்னும் சென்றடையவில்லை. மேலும் இது ஒரு தனிநபர் செய்யக்கூடிய காரியமும் அல்ல. இதனைக் கருத்தில்கொண்டுதான் கடந்த வருடத்தில் ஓடிடி தளங்கள் ஒரு புரிதல் என்னும் ஒரு முழுநாள் கருத்தரங்கை நடத்தினேன். தமிழின் பிரபல இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் திரைக்கதை எழுத்தாளர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வு தமிழ்ச்சூழலில் ஓடிடி தளங்கள் குறித்து நடத்தப்பட்ட முதல் நிகழ்வு. அதற்குப் பிறகு எழுத்தாளர்களைத் தனியாக ஒருங்கிணைத்து ஓடிடி தளங்களில் என்ன நடக்கிறதென ஒரு நிகழ்வை நடத்த விரும்பினேன். ஆனால் நேரமும் பொருளாதாரமும் அனுமதிக்கவில்லை.

ஒரு புதிய கலைவடிவத்தைப் பயன்படுத்துகையில் அதன் சாத்தியங்களைப் புரிந்துகொண்டு அதற்கான முழு உழைப்பையும் கொடுக்கவேண்டியது முக்கியம். தமிழ் சினிமா சூழலிலேயே கடந்த நூறு வருடங்களில் அப்படி புரிதலோடு உருவானத் திரைப்படங்களின் எண்ணிக்கை நூறுக்குள்தான் இருக்கும். அப்படியானால் புதிதாக உருவாகியிருக்கும் இந்த நெடுந்தொடர்களை நாம் புரிந்துகொள்ளப் போவது எப்போது? நமக்கு முன்னாலிருக்கும் சவால்களைக் கடந்து தரமான படைப்புகளை உருவாக்கப் போவது எப்போது?

ஓடிடி தளங்களில் இருக்கும் பெரும் சவால் ஒரு படைப்பு திரைவடிவமாக எடுத்துக்கொள்ளும் கால அளவு. கதை திரைக்கதை, முன் தயாரிப்பு என எல்லாவற்றுக்குமே நீண்ட உரையாடல்களும் வேலைகளும் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நீண்ட காத்திருப்பில் சலிப்புற்று பாதியிலேயே சினிமாவிற்குத் திரும்பிச் சென்றவர்களையும் நான் கவனிக்கிறேன். வேறு வேலைகள் சலித்துதான் சினிமாவிற்கு வருகிறோம். இன்றைக்கு தமிழ் சினிமாவின் வியாபாரச் சூழலில் லட்சத்தில் ஒருவரே புதிதாக இயக்குநராகி வெற்றிகரமானவராக முடிகிறது என்று இருக்கிறபோது இந்த புதிய ஊடகத்தினை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம். வாய்ப்பிற்காக மட்டுமில்லாமல் வழமையான திரைப்படங்களிலிருந்து விலகி புதிய கதைகளை உருவாக்குவதற்கான ஒரு வழியாகவும் இதனைப் பார்க்கலாம். முதல் ஓரிரு முயற்சிகளில் சிரமமிருக்கலாம், ஆனால் இது கைவரப்பெற்றால் இங்கு நாம் சிறப்பான படைப்புகளை உருவாக்க முடியுமென்பதுதான் எனது புரிதலாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com