பர்மா பஜாரில் டாரன்டினோ!

கால்நூற்றாண்டு தமிழகம் - சினிமா
மாநகரம்
மாநகரம்
Published on

இன்று நீங்கள் படமெடுக்க அல்லது படமெடுக்க கற்றுக்கொள்ள யாரிடமும் உதவியாளராக சேரவேண்டாம். நீங்களே யூடியூப் பார்த்து கற்றுக்கொள்ளலாம். மொபைல் கேமராவில் படமெடுத்து அதிலேயே எடிட் பண்ணி இசைசேர்த்து வெளியிடலாம். இயக்குநர் ஆவதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. உதாரணத்திற்கு லவ்டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை எடுத்துக்கொள்வோம். இவர் கோமாளி படத்தை எடுப்பதற்கு முன் யாரிடமும் உதவியாளராக வேலை பார்த்தவரில்லை. ஒரு தனியார் நிறுவனம் நடத்திய குறும்படப்போட்டியில் கிடைத்த வெற்றியே அவருக்கு முதல் பட வாய்ப்பை பெற்றுக்கொடுத்துவிட்டது. அதுவும் 25 வயதிலேயே!

2009க்கு முன் வரை ஒருவர் இயக்குநர் ஆகவேண்டும் என்றால் அது ஒரு நீண்ட நெடிய ப்ராசஸ். முதலில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்புத்தேட வேண்டும். வாய்ப்பு கிடைத்தாலும் முதலில் கடைநிலை உதவி இயக்குநராக ஆகவேண்டும். முதலில் டீ காபி வாங்கிக்கொடுப்பது, சமையல் உதவிகள் செய்வது, இயக்குநருக்கு நேரத்துக்கு உணவு பரிமாறுவது, வாந்தி எடுத்தால் சுத்தம் பண்ணுவது என சில ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அதற்கு சம்பளமும் சரியாகக் கிடைக்காது.

இப்படி படிப்படியாக போராடி உதவி இயக்குநராக கிளாப் பிடித்து, பிறகு ஷூட்டிங்கில் கூடமாட ஒத்தாசையாக இருந்து, டயலாக் சொல்லிக்கொடுக்கிற அசோஸியேட் இயக்குநர் ஆகி… அதற்கு பிறகு இயக்குநரின் ஆசியோடு வெளியே வந்து தனக்கென ஒரு கதையைத் தயார் செய்து அதை தயாராப்பாளரிடம் கொடுத்து படம் பண்ணுவதற்குள் பத்து பதினைந்து ஆண்டுகள் போய்விடும். இருபத்தைந்து வயதில் தொடங்குகிற பயணம் நாற்பதுக்கு அருகில்தான் முதல் படமாக முடியும்! தமிழின் முன்னணி இயக்குநர்கள் எல்லோருமே இப்படி வந்தவர்கள்தான். எல்லாமே தமிழ்சினிமா டிஜிட்டல் புரட்சிக்கு முன் வரை.

ஆனால் 2000களின் மத்தியில் பர்மா பஜாருக்கு குவன்டீன் டாரன்டீனோவும், மஜீத் மசீதியும் குப்ரிக்கும் கிம்கிடுக்கும் வந்தனர். பல்ப் ஃபிக்சனும் சிட்டி ஆஃப் காடும் சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் வந்தன. பல உலக சினிமா இயக்குநர்களும் பர்மா பஜார் தெருக்களின் குட்டி குட்டி கடைகளின் சிடிகள் வழியே நம்மை வந்தடையத் தொடங்கினர். இன்னொரு பக்கம் டிஜிட்டல் கேமராக்களின் வரவு படமெடுப்பதை இலகுவாக்கியது. சினிமாவுக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்க முடியாதவர்கள் வேலை செய்துகொண்டே தங்களுடைய இடத்திலேயே குறும்படங்களை இயக்கி வெளியிடத்தொடங்கினர். இது ஒரு பெரிய புரட்சியாக உருவெடுக்கத்தொடங்கியது.

திருப்பூர் போன்ற சிறுநகரங்களில் சினிமா கனவுகளோடு இருந்த இளைஞர்கள்கூட அவர்களுக்குள் பேசி குறும்படங்களை இயக்க முடிந்தது. அவர்கள் இயக்கிய குறும்படங்களே அவர்களை இன்று தமிழ்சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் ஆக்கி இருக்கிறது.

2009இல் நாளைய இயக்குநர் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி பெரிய கவனம் பெற்றது. அது தமிழ்சினிமாவின் திருப்புமனையாக அமையும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஏராளமான இயக்குநர்களையும் திரைக்கலைஞர்களையும் நமக்குப் பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி அது.

இன்னொரு பக்கம் இளைஞர்கள் அவர்களாகவே யூடியூப் வழி குறும்படங்களை வெளியிடத்தொடங்கினர். அதன் மூலம் சினிமா வாய்ப்பு பெற்றனர். அட்லீ கூட சிவகார்த்திகேயனை வைத்து குறும்படம் எடுத்து யூடியூபில் வெளியிட்டார். சினிமாத்துறைக்குள் நுழையும் மரபான வழிகள் மாறத்தொடங்கியது இந்த 2009 காலக்கட்டங்களில்தான்.

ஒரு பக்கம் உலக சினிமா பற்றிய அறிவு சாமானியர்களுக்கும் விரிவடையத் தொடங்கியது. சினிமாவின் நுட்பங்களை கற்றுக்கொள்ள அது வாய்ப்பாக இருந்தது. இன்னொரு பக்கம் குறும்படங்கள் வழியே புதிய இயக்குநர்கள் தமிழ்சினிமாவுக்குள் நுழையத்தொடங்கினர். கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி, அல்போன்ஸ் புத்திரன், நித்திலன், ரவிகுமார், ராம்குமார், அருண்குமார், அருண்ராஜா காமராஜ், பாலாஜி மோகன், லோகேஷ் கன்கராஜ் என நீண்ட பட்டியல் உண்டு. இவர்கள் எல்லோருக்கும் இருந்த ஒற்றுமை இவர்கள் யாரிடமும் வேலை பார்த்தவர்கள் இல்லை! தானாகவே எழுந்துவந்த சுயம்பு லிங்கங்கள்!

இந்த புதிய அலை இயக்குநர்கள் வெறும் குறும்படங்களோடு மட்டும் தமிழ்சினிமாவுக்குள் வரவில்லை. சுயசிந்தனைகளோடு வந்தனர். அதுவரை இருந்த தமிழ்சினிமா பாணிகளையும் உடைக்கத் தொடங்கினர்.

நலன் குமாரசாமி டார்க் ஹ்யூமரை முன்னெடுத்தார். ரவிக்குமார் அறிவியல் புனைகதைகளை முயற்சி செய்யத்தொடங்கினார். நித்திலன், அருண்குமார் போன்றவர்கள் நாயகர்களைத் தாண்டிய கதைகளை வெளிப்படுத்தினர். கார்த்திக் சுப்பராஜ் பல வித ஜானர்களில் புதிய பாணியை உருவாக்கினார். இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் எந்த இயக்குநர்களிடமும் வேலை பார்க்காமல் தாங்களாகவே சினிமாவைக் கற்றுக்கொண்டதுதான். அவர்கள் பிறநாட்டு இயக்குநர்களிடம் ஏகலைவனாக தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர் என்பதும்தான். மரபான தமிழ்சினிமா நெருக்கடிகளை அறியாது உள்ளே நுழைந்தவர்கள் என்பதும்தான்.

ஆனால் இனிமேலும் இந்த ட்ரெண்ட் தொடருமா என்பது சந்தேகம்தான். காரணம் லட்சககணக்கானோர் குறும்பட இயக்குநர்கள் ஆகிவிட்டதுதான்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com