ஈழத்தில் இருந்து சென்னையில் நடக்கும் திருமணத்திற்காக இங்கே வந்தால் எப்படியாவது தேடிப்பிடித்து நம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். "தம்பி மறக்காமல் காலம்பிறையே மண்டபத்திற்கு வந்திடும் என்ன. நம்ம உறவுகள் இல்லாமல் என்னப்பன் வாழ்க்கை...! இப்படி நமக்கே கண்கலங்கும் அளவுக்கு கல்யாணப்பத்திரிகை வைப்பார்கள். இதெல்லாம் கல்யாணத்திற்கு போகும்வரைதான். நாம் உணர்ச்சி வசப்பட்டு அரக்கப்பரக்க குளித்து மண்டபத்திற்கு போனால் கமேரா மேன் மட்டுமே உங்களைக் கவனிப்பார். அதுவும் அவருக்கு தேவையான ஒளிப்படம் கிடைக்கும்வரைதான். அதற்கு பிறகு நீங்கள் விரும்பினால் சாப்பிடலாம் அல்லது சாப்பிடாமல் கூட வீடு திரும்பலாம். அது உங்கள் பிரச்சினை!.
ஈழத்திலிருந்து வந்த எனது நண்பர் ஒருவருடனான அனுபவம் இன்னும் முக்கியமானது! முகநூல் நட்பின் பயனாக அவருக்கு சென்னையில் பல நண்பர்கள். குறிப்பாக கலைஞர்கள் உறவு. சென்னை வந்தவர் ஒவ்வொருவராக அணுகினார். பலரும் ஆளைத் தட்டிக்கழிக்கவே இறுதியில் என்னுடைய எண்ணுக்கு அழைத்தார். முதலில் என்னுடைய எண்ணை வாங்கியவர் இறுதியில்தான் என்னை அழைத்தார். எடுத்ததும் புலம்பல் தொடங்கியது. தேனாகப் பேசினார்கள். ஆனால், வந்து அழைத்தால் போனே எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. நான் சாதாரணமாக ஒரேயொரு வார்த்தைதான் ஆலோசனை சொன்னேன். நான் ஈழத்துக்காரன்தான். ஆனால் லண்டனில் இருந்து வந்து நிற்கிறேன் என்று சொல்லச்சொன்னேன். அடுத்த நாளில் இருந்து அத்தனை கதவுகளும் திறந்து கொண்டன! கிட்டத்தட்ட மாப்பிள்ளை வரவேற்பு நடந்தது. ஆளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. என்னையே கிட்டத்தட்ட மறந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டு இரவு பயணம் இருப்பதால் இன்றே பார்த்தாகவேண்டும் என்றார். நாமளும் அதே வம்பு ஊர்க்காரன்தானே! ‘மன்னிக்கவும் தம்பி, அண்ணன் இப்போது திருவனந்தபுரம் இலக்கிய மாநாட்டில் பங்கெடுக்கச் சென்று கொண்டிருக்கிறேன். ஒரே மண்ணில் பிறந்தோம் வளர்ந்தோம். இவ்வளவு தூரம் வந்தும் உங்களைச் சந்திக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. விதி நம்மை இன்னும் பிரித்து சதி செய்கிறது...’ என்றெல்லாம் சில வரிகள் சேர்த்துச் சொன்னேன்.
உண்மையில் அப்போது போரூர் செல்லும் பங்குக் கட்டண ஆட்டோவில்தான் நான் இருந்தேன். நம்ம பங்குக்கு ஒரு பாடத்தைப் புகட்ட எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. அடுத்த முறையாவது தம்பி என்னை முதலில் சந்திப்பான் என்று நினைக்கிறேன். அப்போது நான் திருவனந்தபுரத்தில் இல்லாமல் சென்னையில் இருப்பது என் கையில் இல்லை!.