இந்தியத்தை வென்ற கலைஞர்!

இந்தியத்தை வென்ற கலைஞர்!

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் காலத்தில் கருத்தியல் இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியியல் கழகமாக மாற்றியதில் தான் தமிழினத் தலைவர் கலைஞரின் சிறப்பும் அடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா கேட்டது 'திராவிடநாடு' தான். ஆனால், இந்தியத்தையே வசப்படுத்தினார் கலைஞர். தாய்த் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி ஆண்ட அண்ணாவுக்கு முதலமைச்சர் பதவி என்பது நிறைவு தருவதாக அமைய வில்லை. இதனை, 'அதிகாரமற்ற பதவி' என்றே கருதினார். 'இதனை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிடப் போகிறேன்?' என்று ஏங்கினார். 'என்ன செய்து விட முடியும்?' என்று வெதும்பினார் அண்ணா. உடலுள் இருந்த புற்றை விட, வெளியில் கண்ட காட்சிகள் தான் அவரைச் சற்றே சுணங்க வைத்தன. 'சூழ்நிலைக் கைதி ஆகிவிட்டேன் தம்பி' என்று சொல்லியபடியே அணைத்தார் அண்ணா.

அண்ணனின் வேதனையை வென்று காட்ட வேண்டும் என்று உறுதி எடுத்தார் கலைஞர். இருந்த சூழ்நிலையை வென்றார் கலைஞர். இதில்தான் கலைஞரின் பெருமையும் சிறப்பும் அடங்கி இருக்கிறது.

'தெருவில் பேசிக் கொண்டிருக்கும் உங்களால் சட்டமன்றத்துக்குள் வர முடியுமா?' என்று கேட்டவர்களுக்கு, சட்டமன்றத்துக்குள் நுழைந்தும் - சட்டமன்ற மேடைகளை திமுக பொதுக்கூட்ட மேடைகளாக மாற்றியதும் அண்ணாவின் வெற்றி என்றால் - 'திமுக மாநிலக் கட்சிதானே? ' என்று கேட்டவர்களுக்கு மத்தியில் - இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்த வகையில் ஒன்றிய அரசையும் திசை காட்டி அழைத்துச் செல்லும் வல்லமையை தி.மு. கழகத்துக்குக் காட்டியது கலைஞரின் வெற்றி.

சிலேட் - நோட்டு - தாள் - கரும்பலகை - திரைச் சீலை & என குறிப்பிட்ட அளவுக்குள் ஓவியம் வரைந்து கொண்டிருந்த ஓவியருக்கு - தெருவையே காட்டி முழுமையாக வரையைச் சொன்னால் எப்படி இருக்கும்? அந்தளவுக்கு தனது கண்களை கனவுகளோடு விரித்துப் பார்த்ததில் தான் கலைஞரின் பெயர் இத்தனையாண்டுகள் கடந்தும் பேசப்படுகிறது. இதனாலேயே கலைஞர் மீது பலரும் பாசம் கொள்கிறார்கள். சிலருக்கு பயமுறுத்துபவராக இன்றும் கலைஞர் காட்சி தருகிறார்.

'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற அண்ணாவின் ஏக்கத்தை - 'தெற்கு வாழ்கிறது; வடக்கு வருந்துகிறது' - என்று சொல்ல வைத்தவர் கலைஞர்.

அன்னை இந்திரா அம்மையார் முதல் மன்மோகன்சிங் வரை இந்தியப் பிரதமர்கள் ஏழு பேருடன் அரசியல் நல்லுறவு!

சஞ்சீவி ரெட்டி முதல் பிரதீபா பாட்டீல் வரை குடியரசுத் தலைவர்கள் எட்டுப்பேருடன் நிர்வாகத் தொடர்புகள் - ஆகியவற்றின் மூலமாக ஒரு மாநிலக் கட்சியை இந்தியக் கட்சியாக விரிவுபடுத்தினார் கலைஞர்.

'நண்பராக இருந்தாலும் எதிராக இருந்தாலும் உறுதியாக இருப்பவர்' என்று பட்டயம் கொடுத்தார் இந்திரா காந்தி. ' உடனுக்குடன் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிவர்' என்று இவரைச் சொன்னார் ஜெயப்பிரகாஷ் நாராயண். ' இவர் எந்த நாற்காலியில் அமர்ந்தாலும் அந்த நாற்காலிக்குப் பெருமை' என்றார் பாபு ஜெகஜீவன்ராம். ' கொள்கைக்காக, லட்சியத்துக்காக வாழ்பவர்' என்று கணித்தார் வி.பி.சிங். ' சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்காக போராடுபவர்' என்றார் அடல்பிஹாரி வாஜ்பாய். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வைத்ததன் மூலமாக இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் விடிவெள்ளியாக கலைஞர் அவர்கள் திகழ்ந்தார். இதனை மனதில் வைத்துத்தான் 'சமூக நீதியின் தலைநகரம்' என்று தமிழ்நாட்டைச் சொன்னார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். 'நான் டெல்லியில் பிரதமராக இருந்தாலும், சென்னை தான் இந்தியாவின் தலைநகராக இருந்தது' என்று தேவகவுடாவைச் சொல்ல வைத்தார் கலைஞர்.

மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டியதன் மூலம் இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி தத்துவத்தின் வழிகாட்டியாக உயர்ந்து நின்றார் கலைஞர். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தார் கலைஞர். முதல் தடவை ( 1969) முதலமைச்சர் ஆகி டெல்லி சென்றபோதே, மாநில சுயாட்சிக் குரலை எதிரொலித்தார். தான் கலந்து கொண்ட முதல் தேசிய வளர்ச்சிக் கூட்டத்திலேயே, மாநில சுயாட்சி தேவை என்றார். மாநில சுயாட்சியை உருவாக்க முதலமைச்சர்களின் குழுவை அமைக்க வேண்டும் என்றார். 'இந்த விவகாரம் பற்றி பேசிய ஒரே முதலமைச்சர் இவர் தான்' என்று யு.என்.ஐ. செய்தி வெளியிட்டது. அந்தக் கூட்டத்தில் தான் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னார். 'இது சாத்தியமில்லை' என்று சொன்னார் துணை பிரதமர் மொரார்ஜி. ஆனால் பிரதமர் இந்திரா இதனை ஏற்று செயல்படுத்தினார். 14 வங்கிகளை தேசியமயமாக்கிய பிரதமர் இந்திராவுக்கு 14 தமிழ்நாட்டுப் பொருட்களை பரிசாக வழங்கியவர் கலைஞர்.

பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார். 'மாநிலக் கட்சிகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தவே வந்திருப்பதாகச் சொன்னார் கலைஞர். காஷ்மீர் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு திமுக குழுவை அனுப்பி வைத்தார். மாநில சுயாட்சியை ஆராய குழு அமைத்தார். அந்த அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் கலைஞர். ( 1974 ஏப்ரல் 20) இந்திய சட்டமன்ற வரலாற்றில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றிய முதல் சட்டமன்றம் தமிழ்நாடு சட்டமன்றமே. அதன்பிறகு இந்தியாவின் பல முதலமைச்சர்கள் இது பற்றி பேசினார்கள்.

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் (1970) பேசும் போது, 'மாண்புமிகு பிரதமர் அவர்கள் சேலம் உருக்காலைத் திட்டத்தை கொண்டு வந்தே தீர வேண்டும், அதற்கான உறுதி மொழியை இங்கு தந்தே தீர வேண்டும்' என்று முதலமைச்சர் கலைஞர் பேசினார். பிரதமர் இந்திரா அந்தக் கூட்டத்திலேயே ஏற்றுக் கொண்டார். இந்தக் கூட்டம் நடந்தது மார்ச் 21. சேலத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது செப்டம்பர் 16. இதுதான் கலைஞர்.

இப்படி அவர் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசியதை குறிப்பிட்டு அப்போது, 'இந்துஸ்தான் டைம்ஸ்' என்ன எழுதியது தெரியுமா?

முதலமைச்சர் ஆவதற்கு முன்னால் டெல்லிப் பக்கம் வந்திருப்பாரா, வந்திருக்க மாட்டாரா என்று சொல்ல முடியாத தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, அடுத்த பத்து ஆண்டுகளில் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பார்‘ - என்று 1970 மார்ச் மாதம் எழுதியது. அதனைத்தான் அடுத்தடுத்த ஆண்டுகள் காட்டியது.

அதிகாரம் பொருந்திய காங்கிரஸ் நிறுத்திய குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தோற்கடித்து வி.வி.கிரியை வெற்றி பெறவைத்தார் கலைஞர். காங்கிரஸ் பெரியமனிதர்கள் எல்லாம் சிண்டிகேட் காங்கிரஸ் அமைத்து இந்திராவை பலவீனமாக்கியபோது, 1971 தேர்தலில் இந்திரா மீண்டும் வெற்றி பெற துணை புரிந்தார். அவசர நிலையை இந்திரா கொண்டு வந்தபோது ஒற்றை மனிதராக இருந்து அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினார். மிசாவை எதிர்த்து தீர்மானம் போட்ட ஒரே ஆளும் கட்சி திமுக தான் என்பதை நிலைநிறுத்தினார்.

இந்திராவுக்கு எதிரான கட்சிகளின் முதல் கூட்டத்தை டெல்லியில் இரா.செழியன் இல்லத்தில் கூட்டி ஒரு ஐக்கியத்தை 1977 ஆம் ஆண்டு உருவாக்கி ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தார். அது சனாதனச் சக்திகளின் அணிச் சேர்க்கையைப் போல அமைந்த நிலையில், மீண்டும் இந்திராவை 1980 தேர்தலில் ஆதரித்து ஆட்சி அமையக் காரணமாக அமைந்தார். இந்திரா மறைவுக்குப் பிறகு அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு எதிரான தேசிய முன்னணியை வி.பி.சிங் தலைமையில் கட்டி 1989 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்.

1996 ஆம் ஆண்டு மூன்றாவது அணியின் ஆட்சியை உருவாக்கி பிரதமராக தேவகவுடாவையும் குஜராலை அமர்த்திப் பார்த்தார். வாஜ்பாய் அமைச்சரவையை ஜெயலலிதா கவிழ்த்தபோது, நிலையான அரசுக்காக பாஜகவை ஆதரித்து நின்றார். அந்த சூழலிலும் பாஜகவின் எந்த அஜென்டாவையும் நிறைவேற்ற விடாமல் கவனமாக இருந்தார். 'கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் தலைதூக்காது' என்று சி. சுப்பிரமணியத்தையே சொல்ல வைத்தார். பின்னர் 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியை உருவாக்கி மன்மோகன்சிங் பிரதமராக வழிவகை செய்தார். இவை அனைத்தையும் 'மாநிலக்கட்சித் தலைவராக' இருந்தபடியே செய்தார் கலைஞர்.

இந்திய அரசியலில் 1977, 1980, 1989, 1996, 1999, 2004, 2009 ஆகிய நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்றியதன் மூலமாக ஆட்சிமாற்றங்களை உருவாக்கிய அகில இந்தியத் தலைவர் கலைஞர். உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற அவரது பாதை - அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் பாதையாக அமைந்தது. இத்தகைய ஆட்சி மாற்றங்களின் மூலமாக தமிழ்நாட்டுக்கான நன்மைகளை நகர்த்திவந்தார் கலைஞர்.

தமிழ் செம்மொழியானது. செம்மொழி உயராய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.காவிரி கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. தேசிய முன்னணி ஆட்சியின் போது மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. சேது சமுத்திரத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திய அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டது. தேசிய சித்தமருத்துவ ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.

சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் ரூ.470 கோடி முதலீட்டில், மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்பட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் அமைக்கப்பட்டது. சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்கப் பட்டுள்ளது. சேலம் உருட்டாலையைச் சர்வதேச அளவுக்கு உயர்த்தி, ரூ.1,553 கோடி செலவில் புதிய குளிர் உருட்டாலை (Cold Rolling Mill) அமைக்கப்பட்டுள்ளது. சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ரூ.120 கோடி செலவில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம், மதுரவாயில் இடையே பறக்கும் சாலை அமைத்திட அனுமதிக்கப் பட்டு, 08.01.2009 அன்று, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கப்பட்டன.

பன்னாட்டு விமானநிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயர். உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயர். நெசவாளர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சென்வாட் வரி நீக்கப்பட்டுள்ளது. அடக்குமுறை பொடா சட்டம் ரத்து ஆனது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம் வந்தது. சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் வந்தது

தேசிய நெடுஞ்சாலைகளில் மிதக்கிறோம். பாலங்களில் பறக்கிறோம். சுரங்கப் பாதைகளில் விரைகிறோம். கப்பல் போக்குவரத்து திட்டங்களில் மூழ்கினோம். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக தாகம் தணித்தோம். மீட்டர் கேஜ் ரயில்பாதைகள், அகல ரயில்பாதைகளாக ஆனதன் மூலமாக பயணங்கள் தாலாட்டாக மாறியது. சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் உயரத்துக்குக் கொண்டு சென்றது பயணிகளை. கலைஞர் நினைவுகூரப்படுவது இந்த நன்மைகளின் மூலமாகத் தான்.

‘ஒருவனின் வாழ்நாள் அவனது மரணத்துக்குப் பின்னால் கணக்கிடப்பட வேண்டும்' என்றவர் கலைஞர். இந்தத் திட்டங்கள், பயனளித்து வரும் காலமெல்லாம் கலைஞர் வாழ்வார்.

‘அதிகாரம் இல்லாத பதவியில் இருக்கிறேனே தம்பி' என்று வருந்திய அண்ணாவின் வருத்தம் போக்க, தெற்கை வாழ வைத்தவர் கலைஞர். இந்தியத்தை தெற்கு நோக்கி அழைத்து வந்தவர் கலைஞர். ஒரு மாநிலக் கட்சியை இந்தியாவின் திசை காட்டியாக மாற்றிக் காட்டியவர் கலைஞர். கூட்டாட்சி இந்தியாவின் குறியீடாக அவர் இருப்பார். சுயாட்சி மாநிலங்களின் மகுடமாக இருப்பார். இந்தியா வாழும் வரை வாழ்வார். இந்தியத்தை அவர் கொள்கை ஆளும்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com