உலகை உலுக்கிய வங்கிக் கொள்ளை!

அமெரிக்க ரிசர்வ் வங்கி
அமெரிக்க ரிசர்வ் வங்கி
Published on

அது 2016 ஆம் ஆண்டில் ஒருநாள். நியூயார்க்கில் உள்ள ரிசர்வ் வங்கி வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் வங்கதேச நாட்டின் அரசு ரிசர்வ் வங்கி ஒரு கணக்கு வைத்திருக்கிறது. தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறு 35 கோரிக்கைகள் வங்கதேச வங்கியின் சார்பில் வழங்கப்பட்டன. அதன் படி முதல் ஐந்து கோரிக்கைகளுக்கு ஏற்ப சுமார் 81 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கணக்குக்கும் 20 மில்லியன் டாலர்கள் இலங்கையில் ஒரு கணக்குக்கும் மாற்றப்பட்டன. அடுத்த கோரிக்கையை பரிசீலித்த ஊழியருக்கு அதில் ஒரு சின்ன பிழை இருப்பது தெரிகிறது. ஏதோ பிரச்னை என்று அவர் விசாரிக்கப்போக, மொத்தமும் மோசடி வேலை எனத் தெரிந்து மீதி முப்பது பணப்பரிவர்த்தனைகளையும் நிறுத்திவிட்டார்கள்.

இந்த மோசடி வேலை சர்வதேச வங்கிகளின் பாதுகாப்பான பணபரிவர்த்தனையை பெரும் கேள்விக்கு உள்ளாக்கியது. சர்வதேச அளவிலான ஏஜென்சிகள் இந்த திருடப்பட்ட பணத்தை மீட்க களமிறங்கின. பிலிப்பைன்ஸுக்குப் போன பணத்தில் கொஞ்சம் மீட்கப்பட்டது. இலங்கைக்குப் போன பணம் முழுவதுமாக மீட்டுவிட்டார்கள்.

இந்த திருட்டுப்பணம் பிலிப்பைன்ஸில் நான்கு கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, பின் அந்த பணம் முழுவதும் அங்குள்ள சூதாட்ட கேசினோக்களில் சுற்றுக்குப் போய் இருந்தது. இந்த கேசினோக்களில் கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படும். பிலிப்பைன்ஸில் இந்த கேசினோக்கள் மீது கடுமையான கண்காணிப்பு இல்லை என்பதோடு இந்த மோசடியில் ஈடுபட்டோர் எந்தவிதமான மின்னணு தடயங்களும் இல்லாமல் செய்துவிட்டதால் இந்த திருட்டுப்பணத்தை மீட்க முடியாமல் போனது.

வங்கதேச வங்கியின் கணினி அமைப்பில் மால்வேர் எனப்படும் மென்பொருள்கள் மூலம் ஊடுருவி இந்த மோசடியை நிகழ்த்தி இருக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று டாக்காவில் உள்ள இந்த வங்கியின் பத்தாவது மாடியில் இருக்கும் பிரிண்டர் காலை 8:45 மணி அளவில் ரிப்பேர் ஆகிறது. இந்த பிரிண்டர் சாதாரண பிரிண்டர் இல்லை. வங்கியின் கோடிக்கணக்கான டாலர்கள் பரிவர்த்தனைகளை பிரிண்ட் செய்யக்கூடியது. ‘நாங்கள் இது சாதாரண ரிப்பேர் என்றுதான் நினைத்தோம்’ என்கிறார்கள் அந்த வங்கி அதிகாரிகள். ஆனால் அந்த சமயத்தில்தான் சைபர் கிரிமினல்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் திட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

இந்த மோசடி நடந்து ஒருமாதம் ஆகியும் வெளியே லீக் ஆகிவிடாமல் அந்த வங்கித் தலைவர் வைத்திருந்தார் என்பது இன்னும் பெரிய கூத்து. அதன்பின்னர் அவர் மாற்றப்பட்டார்.

இதுதொடர்பான விசாரணைகள் வடகொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவு சைபர் கிரிமினல்களின் தொடர்பு இருக்கலாம் எனக் கைகாட்டின. சைபர் கிரிமினல்களைப் பிடிப்பதில் நாடுகளின் எல்லைப் பிரச்னைகள் இன்றும் பெரிய தடையாகவே இருந்துவருகின்றன.

ஓகே… யாரு இந்த வடகொரிய சைபர் கிரிமினல் குழு?

இணைய பாதுகாப்புவல்லுனர்கள் மத்தியில் இவர்கள் லசாரஸ் குழு என அறியப்படுகிறார்கள். பைபிளில் மரணத்தில் இருந்து ஏசு கிருஸ்துவால் உயிர்ப்பிக்கப்பட்டாரே அந்த லாசர் பெயர்தான்!

அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்பு இந்த குழுவைச் சேர்ந்த ஒருவரை அடையாளம் கண்டுள்ளது. அவர் பெயர் பார்க் ஜின் ஹயோக். பார்க் பகலில் ஒரு கணினிப் பொறியாளராகவும் இரவில் பயங்கரமான கணிப்பொறி ஹேக்கராகவும் இருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது. சிலகாலம் சீனாவில் வேலை பார்த்தவர் பிறகு வடகொரியாவுக்குத் திரும்பிவிட்டார். இவர் சிக்கினால் 20 ஆண்டுகள் அமெரிக்க சிறையில் இருக்க நேரிடும்.

பார்க் ஒரேநாளில் ஹேக்கர் ஆகிவிடவில்லை. வடகொரியாவில் பள்ளிப்பருவத்தில் இருந்தே கணிதத்தில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கணிப்பொறிப் போராளிகள் ஆக மாற அந்நாட்டு அரசே பயிற்சி அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த குழுவில் இருந்து தான் வங்கதேச வங்கிக் கொள்ளை திட்டமிடப்பட்டு பிலிப்பைன்ஸுக்கு பணம் போய் அங்கிருந்து சீனத்தின் மக்காவ் பகுதிக்குப் போய் வடகொரியாவுக்குப் போய்விட்டது என்று கூறப்படுகிறது.

வங்கதேச வங்கி, அமெரிக்க ரிசர்வ் வங்கியில் வைத்திருந்த மொத்த பணமுமே கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள்தான். அவ்வளவையும் துடைத்து எடுக்கப் பார்த்த இந்த நடவடிக்கை ஒரு சின்ன விஷயத்தால் சுமார் 81 மில்லியன் அளவுடன் போனது. அந்த சின்ன விஷயம் என்ன? பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஜூபிடர் தெரு என்ற இடத்தில் உள்ள வங்கிக் கணக்குக்குத்தான் இந்த பணம் மாற்றப்படுகிறது. ஜூபிடர் என்ற பெயரில் இருந்த ஒரு ஈரான் கப்பலுக்கு அமெரிக்கா தடைவிதித்திருந்தது. இந்த ஜூபிடர் என்ற சொல்லைப் பார்த்ததும் வங்கிக் கணினிகள் அலறின. அதன் பின்னர்தான் இந்த பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டன. இலங்கையில் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்புக்கு 21 மில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்யப்பட்டது. அதிலும் ஒரு சின்ன எழுத்துப் பிழை இருக்கவே அந்த பணம் திரும்பிவிட்டது!

வடகொரியாவைக் குறை சொல்லும்போது ரஷ்யாவை விட்டு வைக்கலாமா? அந்நாட்டு ராணுவமே சேண்ட்ஸ்டோர்ம் என்று ஒரு சைபர் தாக்குதல் குழுவை வைத்துள்ளது. உக்ரைன் போரில் அந்நாட்டு கணிப்பொறிகளில் ஊடுருவி அட்டகாசங்களைச் செய்துவருகிறது, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இவர்களின் வைரஸ் தயாரிப்புகளின் தாக்குதல்கள் உண்டு. இந்த சைபர் ராணுவ அதிகாரிகள் ஆறு பேரை தங்கள் ‘ மோஸ்ட் வாண்டட்’ லிஸ்டில் அமெரிக்கா வைத்துள்ளது. 2017-இல் இந்த குழுவினரின் தயாரிப்பான நாட்பெட்யா என்ற மால்வேர், உலகின் பல பெரு நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவி அவற்றை முடக்கியது. இதன் மூலம் 10 பில்லியன் அமெரிக்கடாலர்கள் இழப்பு ஏற்பட்டதாகக் கணிக்கப்படுகிறது. 60 நாடுகளில் ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களின் அடிமடியில் இந்த தாக்குதல் கைவைத்தது. இவை ரேன்சம்வேர் எனப்படும் வகையைச் சேர்ந்த மென்பொருட்கள். உங்கள் கணினியில் ஊடுருவி இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட பணம் செலுத்தினால்தான் விடுவிக்கும். ஆனால் இந்த நாட்பெட்யா நீங்கள் பணம் கொடுத்தாலும் விடாது; கெஞ்சினாலும் விடாது. உங்கள் கணினியைத் துடைத்துவிடும்.

ரஷ்யா, வடகொரியா மட்டும்தான் சைபர் கிரைமில் கில்லாடிகள்.., அமெரிக்கா விரல் சூப்பும் குழந்தையா என்ன? நீங்கள் எல்லா பச்சாஸ்.. நான் தான் டாடி என்கிறமாதிரி இந்த வேலைகளுக்கு அமெரிக்காவும் பெயர்போனதுதான்.

2009-இல் ஈரான் அணு ஆயுத பரிசோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அணுவினை செறிவூட்டும் கருவிகள் அங்குள்ள நாடான்ஸ் அணு மையத்தில் பயன்பாட்டில் இருந்தன. திடீரென சுமார் ஆயிரம் கருவிகள் ரிப்பேர் ஆகிவிட்டன. எப்படி? இந்த அணு மையத்தில் ஒரு ஆளைக் கொண்டு யுஎஸ்பி டிரைவ் ஒன்றின் மூலமாக ஒரு மென்பொருளை கணினியில் சேர்த்துவிட்டார்கள். இந்த மென்பொருளின் பெயர் ஸ்டக்ஸ்னெட். அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத் தயாரிப்பு இது. உலகின் முதல் சைபர் ஆயுதம் என இதைச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த மென்பொருள் சுமார் 1000 செறிவூட்டும் கருவிகளை காலி செய்துவிட்டது. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் சில ஆண்டுகளேனும் தடைப்பட்டு நின்றுவிட்டது. ஈரானுடன் நிற்காமல் இந்த மென்பொருள் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவி பல தொழிற்சாலைகளின் கணினிகளை முடக்கிப் போட்டது.

இதைத் தொடர்ந்து பல நாடுகள் விழித்துக்கொண்டு தங்கள் கணிப்பொறிப் பாதுகாப்பு திட்டங்களை வகுத்தன. நாட்டின் உள்கட்டமைப்பையே பாதிக்கக்கூடிய அளவுக்கு இந்த சைபர் தாக்குதல்கள் மாறக்கூடும் என்பதால் இதற்கேற்ப கொள்கைகள் வகுக்கப்பட்டன. தனிநபர்களைத் தாண்டி நாடுகளுமே எச்சரிக்கையாக இருந்தால்தான் இப்போது பிழைக்கமுடியும் என்பதே உண்மை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com