அரசு வேலைக்கு வந்த ஆபத்து!

அரசு வேலைக்கு வந்த ஆபத்து!
Published on

இது நடந்தது 1972 ஆம் ஆண்டில். அப்போது நான் சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி (கணிதம்) இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தின் வறிய சூழ்நிலை காரணமாக நான் நந்தனத்தில் உள்ள எம்.சி.ராஜா அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். படித்து முடித்தவுடன் ஏதேனும் ஓர் அரசு வேலையில் சேர்ந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் நான் இருந்தேன்.

அப்போது தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணைக்குழு தொகுதி-2 பணியிடங்களுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் கோரி விளம்பரம் வெளியிட்டிருந்தது. எனது வகுப்பில் இருந்த மூன்று நண்பர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை வாங்கி அதில் விவரங்களை நிரப்பிக் கொண்டு இருந்தனர். எதேச்சையாக அங்கு சென்ற என்னிடமும் ஒரு நண்பர் விண்ணப்ப படிவத்தைக் கொடுத்தார்.

தொகுதி- 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு இருந்தால் போதும் என்பதால் நாங்கள் நால்வரும் அதற்கு விண்ணப்பித்தோம். தேர்வுக்கான நேரம் வந்தபோது, நான் அந்தத் தேர்வுகளில் கலந்து கொண்டேன். நான் கணக்குப் பிரிவில் வகுப்பில் முதல் மாணவன் என்பதால் தேர்வாணைக்குழு நடத்திய தேர்வுகள் எனக்கு எளிதாக இருந்தன. எனவே நான் சிறப்பான இடத்தைப் பெற்று வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். அதற்கான கடிதமும் எனது கிராமத்து முகவரிக்கு வந்து அதனைப் பெற்றுக் கொண்டேன். எனக்கு வேலை கிடைத்த தகவல் தெரிந்தவுடன் என் பள்ளி ஆசிரியருக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. என் தாய் மிகவும் சந்தோஷப்பட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இனி தன் பாரத்தைச் சுமக்க மகன் வந்துவிட்டான் என்று.

தேர்வாணைக்குழுவின் கடிதத்தில் நான் ஒரு சிவில் மருத்துவரிடம் (Civil Surgeon) மருத்துவச் சான்றிதழ் பெற்று அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை நகரில் எனக்குத் தெரிந்த மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால், நான் திருவண்ணாமலைக்குச் சென்றேன். திருவண்ணாமலைக்கு பக்கத்தில் உள்ள பள்ளிக்கொண்டாப்பட்டு என்ற ஒரு சிறிய கிராமம் எனது சொந்த ஊர். எனவே, திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளரிடம் சென்று எனக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும்படி அவரிடம் தேர்வாணைக்குழுவின் படிவத்தைக் கொடுத்தேன். அவரும் அதில் விவரங்களை நிரப்பிக் கையொப்பமிட்டு, முத்திரையுமிட்டு என்னிடம் கொடுத்தார் அதனை நான் தேர்வாணைக் குழுவுக்கு உடனடியாக அனுப்பி விட்டேன். அதன் பின்பு தேர்வாணைக் குழு எனக்கு முறையான பதவி நியமன ஆணையை வழங்குவதற்காக வணிகவரித்துறை ஆணையாளருக்கு தகவல் அனுப்பி விட்டு, அங்கிருந்து எனக்குப் பணி நியமன ஆணை வரவேண்டும். அதனை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கத்திருந்தேன்.

இந்த சூழ்நிலையில் நான் தங்கி இருந்த அந்த அரசினர் மாணவர் விடுதியில் இரு மாணவர் பிரிவினர்களிடையே சச்சரவு ஏற்பட்டு, அது மோதலாக மாறிவிட்டது. நிலைமையை சமாளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் விடுதியை மூடி விட்டு எங்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டார். எனக்கு சென்னையில் தங்குவதற்கு வேறு புகலிடம் எதுவும் இல்லை. சென்னை மாநிலக் கல்லூரியில் என்னைப் போலவே எம்.எஸ்சி படிக்கும் நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகமானவர். அவர் என்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் தன்னுடன் ஒரு விருந்தினராகத் தங்கிக் கொள்ளும்படி அழைத்தார். அதனை ஏற்று நான் விக்டோரியா மாணவர் இல்லத்தில் சென்று தங்கிக்கொண்டேன். எனது புதிய முகவரி பற்றி எனது தாயாருக்கு உடனே தகவல் தெரிவிக்க மறந்து விட்டேன். பல நாட்கள் கழிந்துதான் தகவல் கொடுத்தேன்.

இரண்டு மாதங்கள் கழித்து, எங்களுக்கு எம்.எஸ்சி. படிப்புக்காக பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இறுதித் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டன. எனவே நான் தேர்வாணைக்குழுவின் தகவல் பற்றிய கவனத்தை விடுத்து, பல்கலைக்கழகத் தேர்வுகளில் முழுமூச்சாக கவனத்தை செலுத்தித் தேர்வுகளை எழுதினேன்.

இன்னும் நான்கு தேர்வுகள் எழுதவேண்டி இருந்த நிலையில் எனது ஊரிலிருந்து எனது தாயார் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் எனக்கு தேர்வாணைக்குழுவில் இருந்து ஒரு பதிவுத்தபால் வந்ததாகவும் அதனை எம்.சி.ராஜா மாணவர் இல்ல முகவரிக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒரே பரபரப்பாகிவிட்டது. அது பணி நியமன ஆணையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது தெரியவில்லை. பணி நியமன ஆணை என்றால் அது வணிகவரித்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும். ஆனால் இது தேர்வாணைக்குழுவிடமிருந்து வந்திருக்கிறதே! எனவே அது பற்றி விசாரிக்கலாம் என்று நான் முனைந்த போது, நண்பர்கள் “முதலில் எம்.எஸ்சி. தேர்வுகளை முறையாக முடித்துவிடு. அதன் பின்பு உன் தேர்வாணைக்கு குழு பிரச்சினையை நீ கவனிக்கலாம்” என்று ஆலோசனை வழங்கினார்கள். எம்.எஸ்சி. முடித்து நான் ஏதேனும் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றவேண்டும் என்பது எனது கனவு. எனவே, ‘இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவானேன்’ என்று கருதி அவர்களின் ஆலோசனையை ஏற்றேன். வாழ்நாளில் நான் கல்லூரி ஆசிரியராக ஆகவே இல்லை என்பது வேறு விஷயம்!

பல்கலைக்கழக தேர்வுகள் முழுவதையும் முடித்துவிட்டு, நான் தங்கி இருந்த நந்தனம் அரசினர் கல்லூரி மாணவர் விடுதிக்குச் சென்றேன். அந்த விடுதி அப்பொதும் பூட்டப்பட்டு இருந்தது. வெளியில் இருந்த இரவு காவலரிடம் எங்கள் விடுதியின் வார்டன் முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, பஸ் பிடித்து, அவர் வீடு இருக்கும் பட்ரோடு நந்தம்பாக்கத்துக்கு சென்றேன். நல்ல வேளையாக நான் சென்ற நேரம் அவர் வீட்டில் இருந்தார். அவரிடம் எனக்கு எங்கள் கிராமத்தில் இருந்து விடுதி முகவரிக்கு ஒரு பதிவுத்தபால் வந்ததாக சொல்லி, அதனை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டேன். வார்டன் மிகவும் கண்டிப்பானவர். நான் முதுநிலை பட்டப்படிக்கும் மாணவன் என்பதால் அவருக்கு என் மீது கொஞ்சம் கரிசனம் உண்டு. அவர் “தம்பி, விடுதி பூட்டப்பட்டிருப்பதால் அங்கு வரும் எல்லாக் கடிதங்களையும் அந்தந்த தபால் நிலையத்துக்கே திருப்பி அனுப்பி விட்டோம். அதனால் உனது கடிதம் நந்தனம் தபால் நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. நீ அங்கு சென்று ‘என்ன ஆயிற்று’ என்று தெரிந்துகொள்” என்று கூறி என்னை அனுப்பி வைத்தார்.

நந்தனம் தபால் நிலையத்தில் அதனை மீண்டும் தேர்வாணைக்குழு அலுவலகத்துக்கே அனுப்பி விட்டதாகக் கூறினர். இரவெல்லாம் ஒரே சிந்தனை. அந்தக் கடிதம் பணி நியமன ஆணையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது தெரியவில்லை. கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை வேறு. இரவில் சரியாகவேத் தூங்கவில்லை.

மறுநாள் காலையில் முதல் வேலையாகத் தேர்வாணைக்குழு அலுவலகத்துக்கு சென்றேன். போகும் வழியில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து ‘ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பச்சை விளக்கு திரைப்படப்பாடல் எனக்குக் கேட்டது! தேர்வாணைக்குழு அலுவலகத்திலிருந்த வரவேற்பு அலுவலர் என்னை குப்புசாமி என்ற சார்புச் செயலாளரை சந்திக்கும்படி அனுப்பினார். அங்கு சீட்டு கொடுத்து விட்டு நான் வெளியே காத்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அந்த சார்புச் செயலாளர் என்னை உள்ளே அழைத்தார். அவர் வேட்டி சட்டையுடன் மேலே ஒரு கருப்புக் கோட்டையும் அணிந்துகொண்டு மிகவும் திவ்யமாகக் காட்சி அளித்தார். என்னை அன்பொழுகப் பார்த்து, ‘என்ன பிரச்சனை’ என்று கேட்டார். நான் நடந்தவற்றை விவரித்தேன். அவர் உடனே மேஜையின் மீது இருந்த மணியை அடித்து உதவியாளரிடம் சம்பந்தப்பட்ட கோப்பினை எடுத்து வரச்சொன்னார். அதைப் படித்துப் பார்த்துவிட்டு சார்புச்செயலாளர் என் மீது தன் கோபப்பார்வையை வீசினார்.

 “தேர்வாணைக்குழுவில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். அதில் உனக்கு மிகச்சிறந்த வேலை கிடைத்திருக்கிறது. அதை உன் கவனக்குறைவினால் கோட்டை விட இருக்கிறாயே, என்ன செய்வது?” என்று சொல்லி, மீண்டும் தொடர்ந்து, “நீ எந்த ஊர்? உன் தந்தை என்ன செய்கிறார்?” என்று கேட்டார். நான் “எனது சொந்த ஊர் திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டு என்ற கிராமம் ஆகும். எனது தந்தையார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நான் தான் மூத்த மகன்; குடும்பப் பொறுப்பு என் மேல் தான் விழுந்திருக்கிறது. எனவே இந்த வேலை எனக்குக் கட்டாயம் தேவை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள்” என்று வேண்டினேன்.

அவர் சொன்னார், “உன்னிடம் சிவில் மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்று அனுப்பும்படி கேட்டால், உதவி சிவில் மருத்துவரிடம் சான்று பெற்று அனுப்பி இருக்கிறாய். இதைத் தேர்வாணைக்குழு ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே உனது விண்ணப்பத்தை நிராகரிக்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.” நான் அவரிடம், “ஐயா, எனக்கு சிவில் மருத்துவர், உதவி சிவில் மருத்துவர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. நான் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை உயர் அதிகாரியிடம் இந்த மருத்துவ சான்றிதழ் படிவத்தைக் காட்டினேன். அவர் படித்துப் பார்த்துக் கையொப்பமிட்டு என்னிடம் கொடுத்தார். நானும் அவர் சிவில் மருத்துவர்தான் என்று நம்பி விட்டேன். தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். எனக்கு எப்படியாவது வேலை கிடைக்க வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்டேன்.

 அவர் என்னைப் பார்த்து “இவ்வளவு நல்ல பையனாக இருக்கிறாயே! கொஞ்சமாவது சாமர்த்தியம் இருக்க வேண்டாமா? என்று கேட்டார். எனக்கு அழுகையே வரும் போல ஆகிவிட்டது. அவர் சிறிது நேரம் கழித்து ஒரு சிறு துண்டுச் சீட்டில் ஒரு முகவரியை எழுதி என்னிடம் கொடுத்து, “இந்த முகவரிக்கு இன்று மாலை 7 மணிக்கு வந்து பார். நான் இருப்பேன். மற்றதை அங்கு பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்.

நான் தங்கி இருந்த விக்டோரியா மாணவர் விடுதிக்கு வந்து, எனது நண்பரிடம் நடந்தவற்றை விவரித்தேன். அவர் “அனேகமாக அந்த அலுவலர் உங்களிடம் ஏதோ எதிர்பார்க்கிறார் ஏன்று தோன்றுகிறது. எனவே நீ மாலையில் செல்லும் பொழுது கையில் ஏதேனும் சிறு தொகையை வைத்துக் கொள். கேட்டால் கொடுப்பதற்கு” என்று சொன்னார். அவரிடமிருந்து நானும் 50 ரூபாயைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, அன்று மாலையில் பஸ் பிடித்து அந்த அலுவலர் துண்டுச்சீட்டில் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றேன். வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.

சற்று நேரத்தில் நான் காலையில் பார்த்த அந்த சார்புச்செயலாளர் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். என்னை பார்த்தவுடன் புன்முறுவல் செய்தபடியே, ‘உள்ளே வா’ என்றார். நான் அவருடன் உள்ளே சென்றவுடன் “ஏதேனும் டீ, காபி குடிக்கிறாயா?” என்று கேட்டார். நான் பவ்யமாக மறுத்தும், அவர், ‘இல்லை டீ சாப்பிடு’ என்று சொல்லி, உள்ளே இருந்து டீ வரவழைத்துக் கொடுத்தார். நான் எனது சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டேன். பணம் பத்திரமாக இருக்கிறதா என்று! சந்தர்ப்பம் பார்த்து அதை அவரிடம் கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்தேன். டீ குடித்து முடிந்தவுடன் அவர் என்னை அழைத்துக் கொண்டு, “வா! நாம் இருவரும் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்” என்று சற்றுத் தள்ளியிருந்த மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்.

அந்தக் குடியிருப்பு வளாகத்தின் இரண்டாவது தளத்தில் ஒரு குடியிருப்புக்குச் சென்றோம். வீட்டின் வெளியே ஒரு பிரபல மருத்துவர் பெயருடன், அவர் சிவில் மருத்துவர் என்பதையும் குறிப்பிட்டு ஒரு பெயர்ப்பலகை இருந்தது. அழைப்பு மணி அழுத்தியவுடன் அந்த மருத்துவர் வெளியே வந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அந்த டாக்டரிடம், என்னுடன் வந்த சார்புச் செயலாளர் சொன்னார்: “நான் காலையில் தொலைபேசியில் சொன்னேன் அல்லவா சார். அந்தப் பையன் இவன் தான். தொகுதி-2 எழுத்து தேர்வில் பாடப்பிரிவுகளில் எக்கச்சக்கமான மார்க் வாங்கி இருக்கிறான். நல்ல புத்திசாலிப் பையன். ஆனால் கிராமப்புற சூழ்நிலை காரணமாக இவனுக்கு சிவில் சர்ஜனுக்கும், சிவில் உதவி சர்ஜனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதனால் இவனுடைய தேர்ச்சி ஒரு சிக்கலில் இருக்கிறது. நீங்கள்தான் உதவ வேண்டும்” என்றார்

உடனே அந்த மருத்துவர் ஒரு படிவத்தை எடுத்து என்னிடம் விவரங்கள் எல்லாம் கேட்டு அவற்றை அதில் தன் கைப்பட எழுதிக் கையொப்பமிட்டு அதில் என்னுடைய கையொப்பத்தையும் பெற்று, அந்தப் படிவத்தை சார்புச் செயலாளரிடம் கொடுத்துவிட்டார். சார்புச்செயலாளர் என்னிடம், “தம்பி பயப்படாதே. மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு வேலை கட்டாயம் கிடைக்கும். இனி வணிகவரித்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து உனக்கு நேரடியாக பணிநியமன உத்தரவு வரும். பயப்படாமல் போய்வா” என்று கூறினார். பின்பு அவர் அங்கேயே இருந்து கொண்டு என்னை மட்டும் வெளியே அனுப்பினார்.

நான் சட்டைப் பாக்கெட்டைத் தடவிக்கொண்டே யோசித்தேன். பணத்தை நீட்டி அந்த உயர்ந்த உள்ளங்களின் மனதை நோகடிக்க விரும்பாமல் மருத்துவர் இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

வேலைக்கான உத்தரவு கிடைக்குமா அல்லது வேறு ஏதேனும் சிக்கல் வருமா என்று மனம் அலைபாய்ந்தது.  இருப்பினும் தேர்வுகள் முடிந்து விட்ட காரணத்தால் நான் விடுதியை காலி செய்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பி விட்டேன்.  

எங்கள் ஊரில் யாரும் செய்தித்தாள் வாங்குவதில்லை. நான்கு மைல் தூரத்தில் உள்ள திருவண்ணாமலையில் படிப்பகங்களுக்குச் சென்றுதான் பத்திரி்கைகளைப் படிப்பார்கள். எனவே நான் எங்கள் ஊரில் உள்ள தபால் ஊழியரிடம் ஒரு ரூபாய் கொடுத்து திருவண்ணாமலைக்கு சென்று அங்குள்ள படிப்பகத்தில் பத்திரிகைகளை பார்க்கும்போது எம்.எஸ்சி தேர்வு முடிவுகள் வந்திருந்தால் அந்த பத்திரிகையைக் கடையில் வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் ஒவ்வொரு நாளும் என்னிடம் ‘இன்று தேர்வு முடிவுகள் வரவில்லை; நாளை பார்க்கலாம்” என்று சொல்வார்.

ஒருநாள் நான் எங்கள் ஊர் ஆற்றங்கரையில் உள்ள கல்மேடையில் ஊர்ச்சிறுவர்களுடன் ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தேன். நான் ஆடுகளாகவும், மற்றவரைப் புலியாகவும் கருதி ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். முதலில் வேண்டுமென்றே மூன்று ஆடுகளைப் பலி கொடுத்து, மீதி இருக்கின்ற பன்னிரண்டு ஆடுகளை வைத்தே அந்த புலியை மடக்கி பிடிப்பது எனக்குக் கைவந்த கலை.

அப்படி ஆடிக் கொண்டிருக்கும் பொழுது, என் உறவுக்கார பையன் ஒருவன் சைக்கிளில் வந்து என்னை ‘போஸ்ட் மாஸ்டர்’ கூப்பிடுகிறார் என்றும், உடனே வர வேண்டும் என்றும் தெரிவித்தான். நான் அவனுடன் சைக்கிளில் உட்கார்ந்து, எம்.எஸ்சி. ரிசல்ட் பற்றி நினைத்துக் கொண்டே போனேன். ‘போஸ்ட் ஆபீஸ்’ சென்றவுடன் ‘போஸ்ட்மேன்’ என்னைப் பார்த்து, “பிச்சாண்டி!  முதலில் நான் திருவண்ணாமலையில் படிப்பகத்தில் சென்று பார்த்த போது என் கண்களில் எம். எஸ்சி. முடிவுகள் தெரியவில்லை. எனவே நீ கொடுத்த ஒரு ரூபாயில் டிபன் சாப்பிட்டுவிட்டேன். தபால் கட்டுகளை எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது மீண்டும் அந்தப் படிப்பகத்தில் உட்கார்ந்து படித்தபோது தினமணியில் எம்.எஸ்சி. தேர்வு முடிவுகள் வந்துள்ளதைப் பார்த்தேன். ஆனால் கையில் காசு இல்லாததால் பத்திரிகை வாங்க முடியவில்லை. எனவே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எண்களை மட்டும் ஓரு துண்டுச்சீட்டில் குறித்து வந்துள்ளேன். இதில் உனது எண் இருந்தால் நீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். இல்லை என்றால் நீ திருவண்ணாமலைக்குச் சென்று நீ ‘பாஸா, பெயிலா’ என்பதைத் தெரிந்துகொள்” என்று சொல்லிவிட்டார். அவர் கொடுத்த அந்தச் சீட்டில் எனது தேர்வு எண் 913 சரியாக இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் தபால் நிலையத்திலிருந்து வெளியே வர முனைந்தபோது, உள்ளே இருந்த தபால் அலுவலர் என்னை அழைத்து “உனக்கு ஒரு பதிவுத்தபால் வந்திருக்கிறது, அதைப் பெற்றுக் கொள்” என்று சொல்லி அதை என்னிடம் கொடுத்தார். அது வணிகவரித்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அனுப்பிய கடிதம்! அந்த கடிதத்தில் என்னை சென்னை வணிகவரித்துறை அலுவலர் முன்பு நேரில் சென்று, உதவி வணிகவரி உதவி ஆணையர் பணியில் உடனே சேர்ந்து கொள்ளும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் நான் எம்.எஸ்சி. தேர்ச்சி பெற்ற தகவலும், எனக்குப் பணி நியமன ஆணையும் கிடைத்தன! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மனதார இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.

தேர்வாணைக்குழு சார்புச்செயலாளர் தான் சொன்னபடியே அந்தப் புதிய மருத்துவ சான்றிதழைக் கோப்பில் சேர்த்து எனக்கு ஆணை கிடைக்க வழி செய்திருக்கிறார். அவர் யாரோ! நான் யாரோ! உதவவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே அவரிடம் இருந்தது. “தர்மம் இன்னும் இருக்கிறது. ‘பண்புடையார் பட்டுண்டு உலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்’ என்று திருவள்ளுவரும், ‘தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையால் ...உண்டாலம்ம இவ்வுலகம்’ என்று புறநானூறும் கூறியுள்ளதற்கு நம் முன்பாகவே நடக்கும் பல சம்பவங்கள் சான்றாக விளங்குகின்றன” என்று நினைத்துக்கொண்டேன்.

சில ஆண்டுகள் கழித்து அந்த சார்புச் செயலாளரைச் சந்தித்து நன்றி சொன்னபோது அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com