ஊர்ப்புறத்திலிருந்து நகர்நாடிப் பிழைக்க வந்த பிறகுதான் நொய்யலைக் கண்ணாரக் காண வாய்த்தது எனக்கு. நாற்பதாண்டுகட்கு முன்னர்வரை இப்பகுதி வாழ்வினர் யாவரும் நிலைத்த நிலவாழ்வினராகத்தான் இருந்தோம். என் பள்ளித்தோழன் வேலுச்சாமி தன்னுடைய இருபதாம் அகவைவரை அவிநாசிக்கு வடக்கே எப்போதும் சென்றிராத ஒருவராகத்தான் வாழ்ந்தார். கொங்குநாட்டின் பல பகுதிகளில் வாழ்வோர்க்கும் இஃதே நிலைமை.
தாராபுரத்தார்க்கு மேட்டுப்பாளையத்தையோ சிறுமுகையையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. தொண்டாமுத்தூர்க்காரர் நத்தக்கடையூரோ வெள்ளூலூரோ தெரியாது. கோபியிலிருப்பவர் பொள்ளாச்சிக்கோ உடுமலைக்கோ போயிருக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இதன் தெளிந்த பொருள் என்னவென்றால் கொங்குநாடு பரந்து விரிந்த பெரும்பரப்பு என்பதுதான். அதன் பெரும்பரப்பளவோடு மேடும் பள்ளமுமான புவியமைப்பு முற்காலத்தில் எங்களின் இடப்பெயர்வுகளை இயலாததாக்கின.
நான் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளியானது நொய்யற்கரையில் அமைந்திருந்தது. அது முதற்கொண்டு நொய்யலைப் பார்த்து வளர்வதே எனது வாழ்க்கையாயிற்று. இப்போதும் நொய்யற்கரையின் வழியாகத்தான் எனது அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாகச் சென்று வருகிறேன். நீங்காத் தோழமையாக எப்போதும் உடன்வருகிறது. நொய்யலாற்றின் அருமை என்னவென்றால் அதன் துணையாறுகள்கூட அதனைப்போலவே பெரிதாக இருக்கும். நொய்யலாறு பார்ப்பதற்குச் சிற்றாறுபோல் இருப்பினும் பெருவெள்ளத்தின்போது அதன் வெள்ளத்தில் கால்வைப்பதற்கு எங்கள் பகுதியில் இடமேயில்லை. இவ்வாறு இன்றைய நிலையில் மக்கள் தொடத்தகாத நிலையில்தான் நான் வாழும் திருப்பூரில் காணப்படுகின்றது.
உலகமெங்கும் நடுநகர்வழியாகச் செல்லும் ஆறுகள் ஆறுகளாகவே இருக்கும்போது நம்நாட்டு ஆறுகள் மட்டும் ஏன் சாக்கடைக் கால்வாய்களைச் சேர்ப்பிக்கும் கழிவாறாகத் திகழ்கின்றன?
“நகரத்தில் குறுக்கே பாய்ந்தால் நாய் பூனைகள் அடிபட்டுச் சாவதைப்போல நதிகளும் சாகின்றன” என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். என்றாவது ஒருநாள் பெருவெள்ளம் பெருக்கெடுத்துப் பாயும்போது நொய்யல் தனது கழிவுச் சேர்க்கைகள் அனைத்தையும் கழுவிக்கொள்கிறது. அதன் பிறகு மீண்டும் சாக்கடைகள் ஓடும்படி ஆக்குவது நம் பொறுப்பு.
நொய்யலின் பெருங்கட்டமைப்பு என்பது ஒரு காட்டாற்றினைக் காட்டுக்குத் திருப்புகின்ற நீர்மேலாண்மை நிகழ்ந்த இடமாகும். உதகைமலைத் தொடரில் உருவாகும் நல்லாறு என்னும் சிற்றாறானது நொய்யலின் நல்ல துணையாறுகளில் ஒன்று. அதன் வழிநெடுகத் தடுப்பணைகள் கட்டப்பட்டு இப்பகுதியை வளமாக்கிய பொற்காலம் ஒன்றிருந்தது. தன் வழியில் பாய்ந்தும் தேங்கியும் சென்றாலே அப்பகுதியில் நிலத்தடி நீர்ப்பெருக்காகும். பயிர்த்தொழில் வளரும். தோன்றிவரும் இடந்தோறும் மடைமாற்றி வழிமாற்றி அமைத்ததில் நல்லாறு வந்த வழியைத் தேடவேண்டியிருக்கிறது. நல்லாறு நன்கு பாய்ந்திருக்குமானால் அவிநாசிக் கோவிலின் பின்புறமுள்ள ஏரியில் கடல்போல் நீர்நிறைந்திருக்கும். என் நினைவுக்குத் தெரிந்தவரை அவ்வேரியில் கடைசியாக நீர்நிறைந்த நாள் எந்நாள் என்றே நினைவிலில்லை.
நான் படித்த பள்ளி வடகரையில் அமைந்திருந்தது என்றால் தென்கரையில் நடராசா திரையரங்கம். அதற்குச் சிறிதே மேற்கே ஒரு தடுப்பணையும் இருந்தது. ஊர்க்கழிவுகள் சேர்வதற்கு முந்திய நன்னீர் வந்து சேர்கின்ற இடம் அதுதான். அதனில் வாய்க்கால் எடுத்து நகரில் இன்று பெருகியிருக்கின்ற பகுதி வழியாக மீண்டும் ஓர் அரைவட்டச் சுற்றாக்கி நொய்யலில் கலப்பது அவ்வாய்க்கால். இடையே சிறுகுளம் ஒன்றும் உண்டு. இன்றைக்கு அவ்வாய்க்காலும் குளமும் காணாமல் போய் அரசுத்திட்டக் கட்டடங்கள் முளைத்திருக்கின்றன.
எங்கள் சுற்று வட்டாரத்தின் மாபெரும் நீர்ப்பிடிப்புப் பகுதி பொங்கலூர்க்கும் பல்லடத்திற்கும் இடையே பெருங்கரிசல்மண்ணாய்ப் பரவிக்கிடக்கின்ற காட்டுப் பகுதிதான். அப்பரப்பானது உயர்மேட்டுநிலமாயும் விளங்குவது. அங்கே பெருமழை பெய்தால் சின்ன கரை ஓடையில் கரைபுரண்டு வெள்ளம் வரும். அவ்வெள்ளமானது பூம்புகார் என்ற பகுதியிலுள்ள பேரேரி ஒன்றில் தேங்கி சம்மனை ஆறாக வெளியேறும். சம்மனை ஆறுதான் நொய்யலின் எங்கள் பகுதித் துணையாறு. நொய்யலும் சம்மனையும் கலக்கும் பகுதிதான் எங்களுக்கு முக்கூடலாக, முக்கொம்பாக இருந்திருக்க வேண்டும். ஈராறுகள் கலக்கும் முக்கூடற்பகுதியானது எப்படித் தனியார் கைப்பற்றலில் இருக்கத் தகுமென்று இங்கே வந்தால் ஆழ்ந்து வியக்கலாம். நல்லாற்றின் நடுப்பணையாகும் நஞ்சராயன் குளத்துக் கரைமறுபுறம் தனியார்க்கு உடைமையாக நின்று கம்பிவேலியிடப்பட்டிருப்பது எவ்வாறு என்பது இன்னொரு புரியாத புதிர்.
நொய்யலைப் பற்றிய என் நினைவுகள் முழுவதும் அதன் அமைதியான குறையளவு நீர்ப்போக்குகள் என்பதாகவே உள்ளன. வெள்ளப் பெருக்காகும் காலத்தில் வண்டியெடுத்துச் சென்று கரையோரத்தில் நின்று காண்பது எங்களுக்கு மாறாத வழக்கம். அதன் வெள்ளப்பெருக்கு நாலைந்து நாள்களுக்கு நீடித்து நின்று இயல்பாவது. புதுவெள்ள வடிவுக் காலத்தில் தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர்கள் சிலர் இருப்பர். நான் சின்ன கரையோடையின் வெள்ளத்தில் மீன்பிடித்திருக்கிறேன். பூம்புகார் ஏரியில் நீச்சல் அடித்ததுண்டு.
ஆற்றைப் பற்றிய புத்துணர்ச்சிகள் மலர்ந்த பிறகு காசிபாளையத்துத் தடுப்பணை வழியாக வாய்க்கால் தடத்தினைச் சீரமைத்து மாணிக்காபுரத்து ஏரியை நிரப்பினார்கள். அவ்வேரியை நிரப்பிய பிறகு அருந்தகுமாற்றம் ஒன்றினைக் கண்ணாரக் கண்டேன். ஏரியின் உள்ளும் புறமும் எண்ணற்ற முள்மரங்கள் மிகுந்திருக்கும். நீர் நிரம்பிய அடுத்த நாள் முதல் அவ்விடம் பறவைகள் புகலிடமாக மாறியதுதான் அம்மாற்றம். மிகுந்த விருப்பத்தோடு ஒரு காண்பெருக்கியை (Binacular) வாங்கினேன். எனக்குப் புத்துணர்ச்சி வேண்டும் மாலைப்பொழுதுகளில் காண்பெருக்கியோடு மாணிக்காபுரம் ஏரிக்கரைக்குச் சென்று அமர்ந்துகொள்கிறேன். உலகின் எங்கெங்கோ மலைமுடிகளைத் தொட்டுப் பறந்த பறவைகளைக் கண்ணுக்கினிதாய்க் காண்கிறேன்.
என்றாவது நொய்யலும் தொடர்நீர் கண்டு கரைபுரண்டும் அலைபுரண்டும் ஓடும் என்றுதான் நம்புகிறேன். சுற்றுச்சூழல் சுழற்சியில் இம்மழைமறைவுப் பகுதியின் தலையெழுத்து மாறாதா என்ன ?