தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

வீடு தேடி வந்த மளிகைப் பொருள்

என் முதல் கவிதைத்தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் வெளியான போது தலைவரைச் சந்தித்து அதைக் கொடுப்பதற்காகப் போயிருந்தேன்.

அவரிடம் தந்தபோது அதில் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கும்படி கேட்டார். எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. எவ்வளவு பெரிய தலைவர்? அவருக்கு நாம் கையெழுத்துப் போட்டுத் தருவதா? ‘நீ பிறந்த நாளுக்கு திருமண நாளுக்கு வாழ்த்துப் பெறுவதுபோல் அல்ல இது. ஓர் எழுத்தாளருக்குண்டான மரியாதை இது' என அவர் சொல்ல, நான் தடுமாறினேன். என்னிடம் பேனா ஏதும் இல்லை. அடுத்து நிகழ்ந்ததுதான் என்னால் மறக்கவே முடியாத அற்புதம்! பல காவியங்களை இயற்றிய தலைவர் தன்னுடைய பேனாவை சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். அதைக் கொண்டுதான் அன்று கையெழுத்திட்டேன். ‘ஒப்புயர்வில்லாத தமிழினத் தலைவருக்கு' என எழுதிக்கொடுத்தேன். அந்த தருணம் என்றென்றைக்கும் மறக்கவியலாதது.

மஞ்சணத்தி என்கிற என் கவிதைத் தொகுப்பு வெளியானபோது அதற்கு அட்டைக்கு ஓவியர் மருது படம் வரைந்து இருந்தார். அந்த தலைப்பும் மரத்தின் பட்டையைப் போன்றதொரு எழுத்துருவில் வடிவமைத்து இருந்தார். அந்த வடிவமைப்பு இடம்பெறும்வகையில் அதற்கான அழைப்பிதழும் உருவாக்கப்பட்டது. தலைவரிடம் அந்த அழைப்பிதழைக் கொடுக்கச் சென்றேன். அவருடன் பலர் அமர்ந்து இருந்தார்கள். அழைப்பிதழை அவருக்குக்கொடுத்தபோது, எல்லோரும் பார்த்தார்கள். கூட இருந்த ஒருவர்,  ‘என்ன இது ஒன்றுமே புரியவில்லையே' என்றார். தலைவர், சட்டென்று பதில் சொன்னார்: ‘இது புரியாதவன் மரம்'. அதாவது எல்லோரும் ஒரே சமயத்தில்தான் அழைப்பிதழைப் பார்க்கிறார்கள். ஆனால் கூர்மையாகப் பார்த்து புரிந்துகொண்டது மட்டுமல்லாமல் சிலேடையாக சட்டென்று பதில் தந்த ஆளுமைத் திறன் அவருக்கு மட்டுமே இருந்தது.

என் திருமணம் மதுரையில் நடைபெற்றது. தலைவர்தான் வந்து நடத்தித் தந்தார்கள். பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி. வழக்கம்போல் குதட்ச்tடடி தீஞுஞீண் இடச்ணஞீணூச்ண்ஞுடுடச்ணூ என்று தெர்மோகோலால் வடிவமைத்திருந்தனர். உள்ளே வரும்போதே அதை கலைஞர் கவனித்துவிட்டார். தன் வாழ்த்துரையில் அதைச் சுட்டிக்காட்டி, ‘ஏதோ போனால் போகிறது என்று சுமதி சந்திரசேகரை மணக்கிறார் என்கிற மாதிரி எழுதப்பட்டுள்ளது. ‘சுமதி சந்திரசேகர் வெட்டிங்' என்று இந்த இருமணம் கலந்த நிகழ்வுக்கு எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லவா?' எனப் பேசிவிட, அரங்கில் மகிழ்வொலி.

உளியின் ஓசை படத்தின் படப்பிடிப்பின்போது அதில் ஓரங்க நாடகம் ஒன்று அமைய திட்டமிடப்பட்டது. மீரா ஜாஸ்மின் அதில் நடித்தார். கலைஞரின் எழுத்தில் அமைந்த அந்நாடகத்துக்கு என்னை குரல் அளிக்க அழைத்தார்கள். என்னதான் தெளிவாக தமிழை உச்சரிக்கப் பழகி இருந்தாலும் இந்நாடகத்துக்காக அந்நாடகச் சொற்களை நான் உச்சரிக்க உச்சரிக்க கேட்டு என்னைத் திருத்தியவர் கலைஞர். நான்கு நாட்கள் அதற்காக எனக்குப் பயிற்சி அளித்தார். ஒவ்வொரு சொல்லையும் எப்படி உச்சரிப்பது, ழகர உச்சரிப்பு என்று எனக்கு தலைவரே ஆசானாக இருந்து சொல்லித் தந்தது மிகப்பெரிய பாடம். படத்தில் என் குரல் இடம்பெறாமல் போய்விட்டாலும் அந்த அனுபவம் இன்னும் வழிநடத்துகிறது.

என் தந்தை தங்கபாண்டியன் மரணத்தின்போது மிகவும் உடைந்துபோய்விட்டார். அன்று முழுவதும் அவர் கண்ணீருடன் இருந்தார். எங்களை விட அதிகம் வருந்தியிருப்பாரோ என்றொரு தோற்றம். அதன் பிறகு அவர் ஒரு ஹைகூ தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அச்சமயம் அவர் எழுதிய ஹைகூ ஒன்று என் தந்தை மீதான அவரது அன்பைக் குறித்தது:

அரங்கம் நிரம்பி இருக்கிறது

ஒரு இடம் காலி

நான் அழுகிறேன்.

எமர்ஜென்சி காலத்தில் அப்பா கைதானார். அவர் மட்டுமல்ல; கழகத்தின் ஏராளமான முன்னோடிகள் கைதாகிவிட்டனர். அவர்கள் எந்த சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதேகூட குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை. என் அம்மா அப்போது குழந்தைகளாக இருந்த எங்களையும் அழைத்துக் கொண்டுபோய் கலெக்டர் அலுவலகத்தில் பழியாய்க்கிடப்பார். அச்சமயங்களில் தலைவர் மட்டுமே கைதாகாமல் இருந்த ஒரே தலைவர். அச்சமயம் எங்கள் வீடுகளுக்கெல்லாம் மளிகை பொருட்களையும் அரிசி போன்ற பொருட்களையும் தேவை அறிந்து வழங்கிட உதவி செய்தவர் அவர்தான். குடும்பத் தலைவர் சிறையில் இருக்கும்போது அக்குடும்பம் என்ன பாடுபடுமோ என அறிந்து பொருட்களாக வழங்கிட ஏற்பாடு செய்ததால்தான் அவரை இந்த கழகத்தினர் குடும்பத் தலைவர் என அழைக்கிறோம்! கழகமே குடும்பம் என்பதில் பெருமை கொள்கிறோம்!

அமைச்சராக இருந்த எங்கள் தந்தை மறைவுக்குப் பின் சென்னையில் வாடகை வீட்டில்தான் இருந்தோம். ஒருமுறை சாதாரணமாக கோபாலபுரம் இல்லம் சென்று பேசிக்கொண்டிருக்கையில் என் அம்மாவிடம் தயாளு அம்மா (அவரையும் அம்மா என்றுதான் அழைப்போம்) எங்கே தங்கி இருக்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார். வாடகை இல்லம் என்ற தகவலை மட்டும் அம்மா பேச்சுவாக்கில் சொல்லி இருக்கிறார். வேறெதுவும் கேட்கவோ சொல்லவோ இல்லை. திரும்பியாகிவிட்டது. அடுத்தவாரமே முதல்வரின் சிறப்புரிமைப்படி அம்மா பெயரில் பெசன்ட் நகரில் ஒரு மனை ஒதுக்கித் தரப்பட்டது. கேட்காமலேயே  உதவி செய்த அருங்குணம் அவருடையது!

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com