வீரப்பன் என்கவுண்டர்: கதைகளின் மறுபக்கம்

veerappan
வீரப்பன்
Published on

அன்று இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். சக செய்தியாளர் நண்பர் சேலம் கதிரவன் அழைத்தார். ‘ஜெயா டிவி பாருங்க’ என்றார். வீரப்பன் சுட்டுக்கொலை என்று ஒரு வரிச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. நான் அப்போது ஆத்தூரை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பிணையில் இருந்தேன். அது 2004, செப்டம்பர் 18. உடனே காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு சம்பவம் நடந்த இடம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி எனக் கண்டறிந்தேன். சக செய்தியாளர்கள் விரைந்தனர். அன்று இரவு இரண்டரை மணிக்குத்தான் வீரப்பன் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் காட்டப்பட்டது. அதிரடிப்படை மூத்த அதிகாரிகள் முன்னிலையில். படையின் தலைவர் விஜயகுமார் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றப் போய்விட்டார்.

வீரப்பனை முதன் முதலில் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தியதில் இருந்து கடந்த நாற்பதாண்டு காலமாக வீரப்பனை செய்தியாளனாகப் பின் தொடர்ந்து வருபவன் நான். சம்பவம் தொடர்பாக மறுநாள் காவல்துறை சார்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மைதானா என்று உறுதிப் படுத்திக்கொள்ள துடித்தேன். ‘வீரப்பனுக்கு கண் பார்வைக் கோளாறு, அதை வைத்து அவனை நெருங்கி, விடுதலைப் புலிகளிடம் கொண்டு போய் சேர்ப்பதாக வலைவிரித்துப் பிடித்தோம். சரண்டையாததால் என்கௌண்டர் செய்தோம்’ என்று காவல்துறையினர் கூறி இருந்தனர். ‘வீரப்பனின் முழு வரலாறும் நீங்கள்தான் எழுதவேண்டும்’ என கதிரவன் இதைத் தொடர்ந்த தகவல் பரிமாற்றத்தில் கூறினார்.

வீரப்பனைப் பற்றி அதிரடிப்படையினர் வைத்திருக்கும் டைரியில் அவரது அன்றாட நடவடிக்கைகள் பற்றி இருக்கும். அதன் பிரதி கிடைத்தால் நூல் எழுத வசதியாக இருக்கும் என முயற்சி செய்தேன். ஆனால் தலைவர் விஜயகுமார் நூல் எழுத இருப்பதால் அதை மொத்தமாக எடுத்துச் சென்றுவிட்டார் எனத் தகவல் கிடைத்தது. நான் கர்நாடக அரசு தொடுத்த என்மீதான வழக்குக்காக அங்கே சென்றுவந்த நிலையில் பழக்கமான அம்மாநில அதிகாரிகளிடம் வீரப்பன் பற்றிய டைரிக்குறிப்புகளைப் பெற்றேன். அதைக் கொண்டு அவரைப் பற்றி தொகுத்து எழுதிவந்தேன். அதற்காக சம்பந்தபட்ட நபர்களிடம் பேசி அவ்வப்போது கள ஆய்வும் மேற்கொண்டு வந்தேன். புதிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தமிழக அதிரடிப்படை அதிகாரிகளோ எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லை.

வீரப்பன் படுகொலையைத் தொடர்ந்து உண்மை அறியும் குழு ஒன்று விடுத்த அறிக்கையில் அவருக்கு மோரில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாகக் கூறியது. ஆனால் அவர் எப்போதும் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பார் என்பதை நான் அறிவேன். எனவே இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பல ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய வீரப்பன் பற்றிய நூல் 2017-இல் வெளியானது. அதில்தான் எனக்கொரு நூல் முனை கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு வீரப்பன் கொம்புதூக்கி காட்டுப்பகுதியில் தங்கி இருந்ததாகவும் அங்கிருந்த காலகட்டத்தில் ஒருவரைச் சந்தித்ததாகவும் அவர் மூலமாக திருச்சி மாவட்டத்தில் ஒரு பெரியவரைப் பார்த்துவரச் சொல்லியதாகவும் தகவல் இருந்தது. அவர் உளவுத்துறைக் காவலரான பாண்டிக்கண்ணனுக்கு இருந்த நட்பின் அடையாளமாகத்தான் இந்த தகவலைச் சொன்னதாக எழுதி இருக்கிறார்.

மாதேஸ்வரன் மலை அருகே இருக்கும் கொம்புத்தூக்கிக்கு விரைந்தேன். அங்கு விசாரித்ததில் பழங்குடிமக்களுக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுத்த ஒப்பந்தக்காரர் ஒருவரைப் பற்றி அறிந்தேன். அவரைத் தேடிப் பிடித்தேன். இரண்டரை மாதம் அலைச்சலுக்குப் பிடித்துப் பேசினேன். தன்னிடம் ஆறேழு மாதம் பாண்டிக்கண்ணன் வேலைக்கு இருந்ததாகவும் காவலர் என்று தெரிந்ததும் அனுப்பிவிட்டதாகக் கூறினார். பிறகுதான் தெரிந்தது வீரப்பனுக்கு இவரது தங்கை கணவர் நெருக்கம் என்பதும் அந்த வழியில்தான் வெளியுலகத் தொடர்புக்கு இவரைப் பயன்படுத்தினார் என்றும் புரிந்தது.

இவர் மூலமாக சந்தித்த பெரியவர் யார்? அது புலவர் கலியபெருமாள். அவர் சில முறை வீரப்பனை சந்தித்திருக்கிறார் என்பதை வேறொருவர் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். இவர் மூலமாக மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தோழர்களுடன் வீரப்பன் இணைய விரும்பி இருக்கிறார். சில தோழர்களும் சென்றுள்ளனர். இது அனைத்தும் அதிரடிப்படையால் உற்று நோக்கப்பட்டது. இதில் ஒரு தோழரை அதிரடிப்படை கைவசப்படுத்திவிட்டது. இதில் தொடர்புடைய அதிகாரிகளுடன் சில மனந்திறந்த உரையாடல்களுக்குப் பின் உண்மையில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு நான் வந்தடைந்தேன்.

வீரப்பன் தன் குழுவினர் நால்வர் மட்டுமே இருந்த நிலையில் அதிக ஆட்களை சேர்க்க எண்ணி மாவோயிஸ்டுகளுடன் பேசுகிறார். அவருக்கு ஏற்கெனவே காவல்துறை வசம் வந்துவிட்ட தோழர் மூலமாக இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் அனுப்பப்படுகின்றன. சில கையெறிகுண்டுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த நால்வர் குழுவுக்கு கையெறி குண்டுகள் இயக்கும் பயிற்சிக்காக ஒரு தோழர் செல்லவேண்டும். அவருக்குப் பதிலாக உள்ளே செல்பவர் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர். அந்த கையெறிகுண்டுகள் ஸ்டன் கிரனேடு வகையைச் சேர்ந்தவை. அவை வெடித்தால் சுற்றி உள்ளவர்கள் சில மணி நேரத்துக்கு செயலிழந்துவிடுவர். வீரப்பன் முதலிய நால்வர் குழுவுக்கு இதை டெமோ செய்துகாட்டுகையில் அந்த குண்டை வெடிக்கசெய்து அனைவரும் மயக்கமாகின்றனர். இது நடப்பது பெண்ணாகரம் அருகே தும்கல் என்ற காட்டுப்பகுதியில் தங்கான் என்கிறவரின் வீடு. இந்த வீட்டைக் கண்காணிக்கும் ஒரு காவலர் குழு வெடிச்சத்தம் கேட்டதும் உள்ளே போய் காவலரை அப்புறப்படுத்தி மீதி நால்வரைப் பிடிக்கிறது. உயரதிகாரிகள் திட்டப்படி மறுநாள் இரவுதான் காவல்துறை சொன்ன கக்கூன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் செயல்பட்ட குழுக்களுக்கு இன்னொரு குழு என்ன செய்கிறது என்று தெரியாது. அந்த அளவுக்கு சங்கிலித்தொடர் செயல்பாடுகள் கொண்டது இந்த ஆபரேஷன்.

(பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியன், வீரப்பன்: வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலாசிரியர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com