
நாம் வாழும் வாழ்க்கை, கிரிக்கெட் ஆட்டத்தின் பல்வேறு சீசன்களைப் போல இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. சில போட்டிகளில் நாம் ஆட்டத்தில் இடம்பெறுவோம். வேறு சில போட்டிகளில் நாம் மட்டுமே வெற்றிக்கான ஓட்டங்களை எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
இதற்கு நேர்மாறாக, சில சமயம் மைதானத்தில் பின்புறத்தில் நம் பாட்டுக்கு எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் பீல்டிங் செய்துகொண்டிருப்போம்; சில தருணங்களில் பார்த்தால் நம் அணிக்காக நம்முடைய பங்களிப்பு மட்டுமே இருக்கும். சில வேளை, செயல்திறனை மட்டும் அடிப்படையாக வைத்துத் தேர்ந்தெடுத்தால், அணியில் இடம்பெற முடியாத நிலைமையும் ஏற்படக்கூடும். ஆனால் கிரிக்கெட் ஆட்டம் தன்பாட்டுக்கு தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும்; நாமும் அதற்குள் பயணம் செய்தபடி இருப்போம். இப்படி மாறிமாறி வரும் வாழ்க்கைக் கட்டங்களில் நம்மை நிதானத்துடன் இயங்கச்செய்வது, நாம் கடைப்பிடிக்கும் பொறுமை.
நம்முடைய தோளில் எவ்வளவு பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் பேசுவதே இல்லை. இந்த வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நாம் சரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. நல்லபடியான ஒரு வேலையைப் பெற்றிருக்க வேண்டும், உருப்படியான பெற்றோராக இருக்கவேண்டும், வீட்டில் வந்து துணைசெய்வதற்கான ஒரு பங்காளியாக இருக்கவேண்டும், பெற்றோரைப் பராமரிக்க வேண்டும், நண்பர்களிடம் காட்டிக்கொள்ள வேண்டும், நம்பிக்கையான உடன்பிறப்பாக இருக்கவேண்டும், .... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்படியானவராக எல்லாம் நாம் இதுவரை இல்லாமல்கூட இருக்கலாம்.
எனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் மாயத்திரைக்குப் பின்னால் உள்ள பல உண்மைகள் தெரியவந்தன. பொதுவாக அதை மென்மையானதாகவும் பொலிவானது போலவும் பூதாகரப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மை என்பது கொஞ்சம் கூடுதலாகவே சிக்கலானது. குழந்தைப்பேறுக்குப் பிறகு என்னுடைய உடல் எனக்கு அந்நியமாகிவிட்டது. என்னுடைய மனம் பலவீனமாக ஆகிப்போனது. வாழ்க்கை முழுவதும் இதுவரை கொண்டிருந்த தன்னம்பிக்கை, திடீரென வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிலையில் சோர்வடையச் செய்வதாக இருக்கிறது.
பொதுவாக, மகப்பேறுக்குப் பிந்தைய காலத்தைப் பற்றி இங்கு யாரும் உரிய அளவுக்கு சரியாகப் பேசுவதில்லை. குறிப்பாக, அப்போதைய தனிமை, உணர்வுமயமான மீட்சி, மற்றவர்களுடன்கூட இல்லை நமக்கு உள்ளேயே இடைவிடாமல் கொண்டிருக்க வேண்டிய பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றி! நம்மால் அதைத் தாண்டிச் சென்றுவிட முடிகிறது என்பதால், எளிதில் இது பேசுபொருளாக ஆவதில்லை.
தாய்மை என்கிற கட்டத்திற்குள் செல்லும்போது நாம் இன்னும் கூடுதல் அழுத்தத்துக்கு உள்ளாகிறோம். பிற்பகல் நேரத்தில் உங்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் உங்கள் மேலாளர் உங்களை உருப்படியில்லாத ஆள் எனக் குறிப்பிடும்போது, அந்த நேரத்தில் உங்கள் குழந்தை அறைக்கதவை முட்டும்; அதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் மற்றவர்கள் பேசுவார்கள்.
குழந்தைக்கு அடுத்து என்ன உணவு தரவேண்டும், அது தூங்கிவிட்டதா என்பதைப் பார்க்கவேண்டும், என்ன உடை உடுத்திவிட வேண்டும், குழந்தையை எப்படி பார்த்துக்கொள்வது என்றெல்லாம் மனதில் நினைத்தபடியே நீங்கள் பதில் மின்னஞ்சல் அனுப்பியதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
நல்லபடியான பிள்ளைகளை வளர்த்தெடுப்பது, தொழில் வாழ்க்கையைச் சீராக வைத்துக்கொள்வது, குழந்தைப்பேறுக்குப் பிறகு எந்தக் குறையும் இல்லாமல் இருப்பது, தூக்கக்கெடுதிக்கு இடையேயும் வழக்கம்போல இயங்குவது, நடக்கிறதோ நடக்கவில்லையோ வருவாய்ரீதியாக தற்சார்புடன் இருப்பது, திருமண வாழ்க்கையைப் பேணிக் காப்பது, அதில் கொஞ்சம் தடுமாறினால்கூட குற்றஞ்சாட்டுவது என பெண்களிடம் பலவற்றை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். இரண்டாவதாக, நம்மிடம் குற்றவுணர்வு இயல்பாக இருக்கிறது. ஆக்சிஜனைப் போல அதைச் சுவாசிக்கிறோம் என்று சொல்லலாம்.
சத்தமாகச் சொல்லப்படும் அனைத்துவிதமான இந்தப் பொய்களுக்கு மத்தியில் நாம் மறக்கக்கூடாத ஒன்று : ஒவ்வொரு வாய்ப்பும் ஒவ்வொரு சமாதானமும் நம்மை அமைதியாக வைத்துக்கொள்ளும் ஒவ்வொரு தருணமும் தனிப்பட்டு நம்முடையதாகவே இருக்கிறது. வேறு யாரும் நம்முடைய வாழ்க்கையை வாழவில்லை; சுமையைத் தாங்கிக்கொள்ளவில்லை. நம் பாதையிலும் அவர்கள் நடந்துவரவில்லை. இப்படி இருக்கையில், இந்த உலகம் நம்மைக் கடுமையாக மதிப்பிடுவதைப் போலவே நாமும் நம்மையே சுயமதிப்பீடு செய்தால் எப்படி?
ஆகவே, என்னுடைய பொறுமையுடன் எனது பயணம் உண்மையிலேயே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இது வலிமையானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உயிர்ப்பானது.
இந்த உலகம் மிகப்பெரிய இலக்குகளையே விரும்புகிறது: "உங்கள் வழக்கத்துக்குத் திரும்புங்கள்!" "பழையபடி திரும்பிவாருங்கள்!" "பத்து கிலோ குறையுங்கள்!" ....இப்படியான வாசகங்கள், நாம் சோர்ந்து போகாமல் இருக்கும் நிலையில் மட்டுமே உற்சாகப்படுத்துபவை.
என் எதிர்பார்ப்பை ஒரு படி குறைத்துக்கொள்வது தோல்வி அல்ல; அது நான் ஏற்றுக்கொண்ட சிரமங்களுக்கான ஒரு மரியாதைதான்! முன்னேற்றத்தின் வேகம் நின்று பேச்சுவார்த்தையாக மாறுகிறது. நாம் செய்யும் வேலை கடினமானது அல்ல; ‘நீ பின் தங்கி இருக்கிறாய்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கும் குரலை அமைதியாக்குவதுதான் கடினமானது. ஆனால் நான் பின்தங்கி இருக்கவில்லை. நான் மறு உருவாக்கம் செய்துகொண்டிருந்தேன். அதற்கு பொறுமை மிகவும் தேவை. அது கவர்ச்சிகரமானதாகவோ சும்மா இன்ஸ்டாகிராமில் காட்டிக்கொள்வதைப் போன்றதோ அல்ல. அது மெதுவாக, திரும்பத் திரும்பச் சொல்லக்கூடியதாக, அடிக்கடி கண்ணுக்குப் புலப்படாமல் போகக்கூடியதும் ஆகும். கண்ணீருடனான ஓர் இரவுக்குப் பிறகு மறுநாள் காலையில் அது மீண்டும் உங்களை முயற்சி செய்யச் சொல்லும். இன்னும் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும் என நீங்கள் நினைத்த தருணத்தில், அப்போது ஏற்பட்ட சுழல்சிக்கல், சறுக்கல் ஆகியவற்றுக்காக உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளும்படி சொல்லும். ஆனால் இப்படியான பொறுமை அற்புதமான அதிதிறனாக மாறும் என்று யாரும் உங்களுக்குச் சொல்வதில்லை.
நம்மை நாமே எதிர்த்துப் போராடுவதை நிறுத்தும்போது, எல்லாமே மாறுகிறது. நாம் வேகமாகக் குணமாகவேண்டுமே என நினைப்பதில்லை! மற்றவர்கள் கருத்துகளுக்கு பயப்படுவதில்லை. நம் பயணப் பாதையில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு கருத்தையும் உள்வாங்குவதை நிறுத்திவிடுகிறோம். நாம் ஒரு காலத்தில் போராடிய இடங்களில், இப்போது நம் வலிமையைக் காணத் தொடங்குகிறோம்.
எனவே இப்போது திட்டமிடப்பட்ட மாறுபட்ட தேர்வுகளுடன் இருக்கிறேன். என் வாழ்க்கைக்கு உகந்த, என் குழந்தைக்கான நேரத்தை அளிக்க முடிகிற, வேலையைத் தேடிக்கொள்கிறேன். 25 தடவைகள் அதைத்தேடுவதில் தோல்வி அடைந்தாலும். 22 வயதில் இருந்ததுபோன்ற உடலை மீண்டும் பெறுவதற்கான உடற்பயிற்சிகளைத் தேடாமல் இப்போது நிலையான, புத்திகூர்மை அதிகரித்த, பணிபுரியக்கூடிய நிலையில் இருக்கும் என் போன்ற பெண்ணுக்கான, டயப்பர் பைகளைச் சுமக்கக்கூடிய உடைகளை அணியக்கூடிய பெண்ணுக்கான பயிற்சிகளைச் செய்கிறேன்.
ஊட்டமும் உத்வேகமும் அளிக்கும் உணவைத் தேர்ந்தெடுப்பதில் ஆண்டின் 11ஆவது மாதத்திலும் எனக்குத் தோல்வி கிடைத்தாலும், அதில் ஈடுபடுகிறேன். காரணம், விக்டோரியா சீக்ரெட் மாடலைப் போல மேடையில் நடக்க விரும்புவதால் அல்ல, மாறாக ஒரு குழந்தையின் பின்னால் முழு மனதுடன் ஓடுவதற்கான ஆற்றலை விரும்புவதே! காலையில் செய்த தவறுகளைப் பார்த்து மெதுவாகச் சிரித்தபடி, ஏற்கெனவே எனக்குள் இருக்கும் தொலைநோக்குடன் என்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன்.
எனது தவறான செயல்பாடுகளை விமர்சனத்திற்குப் பதிலாக அன்புடன் அணுகக் கற்றுக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல, பிடித்தமான இன்னொருவரிடம் காட்டும் பொறுமையை என்னிடமும் காட்டப் பழகிக்கொள்கிறேன். ஒருவேளை இது பேட்டிங் ஆடாமல் பார்வையாளர் மாடத்திலிருந்து கிரிக்கெட்டைப் பார்க்கும் தருணமாக இருக்கலாம். உருவாகிக் கொண்டிருக்கும் என்னுடைய ஆளுமை குறித்து முன்னெப்போதையும் விட பெருமை கொள்கிறேன். ஏனென்றால், முதல்முறையாக, என்னுடைய முடிவுகள் உலகம் எதிர்பார்ப்பதைப் போல அல்லாமல் எனக்குச் சரியெனத் தோன்றுவதாக உள்ளன.
அதுதான் வெற்றியின் உண்மையான அடையாளம் என உணர்கிறேன்:
குழப்பத்தின் மத்தியிலும்கூட, இதமாக, பொறுமையாக என்னோடு நான் உடன் நிற்பது.