அந்த ஏழாண்டில் அமைந்த அரசியல் அடித்தளம் - 2004 காங்கிரஸ் கூட்டணியில் திமுக

கால்நூற்றாண்டு தமிழகம் - அரசியல்
கலைஞர் கருணாநிதி, டாக்டர். மன்மோகன் சிங், சோனியா காந்தி
கலைஞர் கருணாநிதி, டாக்டர். மன்மோகன் சிங், சோனியா காந்தி
Published on

தமிழகத்தோடு, இந்திய அரசியலிலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்திய காலகட்டம் அந்த ஏழாண்டுகள். அதற்கு முன்னரும் பின்னரும் ஒன்றியத்தில் கூட்டணிகள் ஆட்சியமைத்துள்ளன. ஆனால் 2004–2011 தனித்துவமானது.

இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரித்த, மன்மோகன் சிங் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. காங்கிரஸ் கட்சியையடுத்து அதிக இடங்களைப் பெற்றிருந்த திமுக அமைச்சரவையில் பங்கேற்றதுடன், மையமான ஏழு துறைகள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாநிலக் கட்சிகள் வலுவாகப் பங்கேற்கிற கூட்டாட்சியால் நாடு மொத்தத்திற்கும் நன்மையளிக்கிற செயல்களை மேற்கொள்ள முடியும் என்பதை மக்கள் பார்த்தார்கள். அதற்கோர் அடிப்படையாக, கூட்டணி அரசுக்கென இடதுசாரிகள் முன்மொழிந்து, திமுக வழிமொழிந்த குறைந்தபட்ச பொதுத் திட்டம் முதல் முறையாக (இதுவரை கடைசியாகவும்) உருவாக்கப்பட்டது.

இந்திய மொழிகளில் முதல் முறையாக தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது அப்போதுதான் (2004). அதுவே சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகியவையும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட முன்னுரையானது.

கிராமப்புற நூறு நாள் வேலை, தகவல் உரிமை, கல்வி உரிமை, உணவு உறுதி போன்ற என்றும் பயனளிக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நாற்கரச் சாலைகளுக்கான சுழி வாஜ்பாய் அரசு போட்டது என்றாலும், நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில், விரிவாக அந்தச் சாலைகளை அமைப்பதற்கான வழி இக்காலத்தில்தான் திறக்கப்பட்டது (அது ‘டோல் கேட்’ வசூல் ஏற்பாடாகவும் மாறியது வேறு கதை). பிஎஸ்என்எல் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதைச் செய்ய வேண்டியதாயிற்று. இவ்விரு துறைகளின் அமைச்சர்கள் தமிழகத்தின் டி.ஆர்.பாலு, ஆ.ராசா.

145 ஆண்டுக் கனவான சேதுக் கால்வாய்க்கு 2005ல் மதுரையில் தொடக்கவிழா நடத்தப்பட்டது. மதப் புராணத்தைக் காட்டி ஒரு பகுதியினரும், கடல் அறிவியலின் அடிப்படையில் வெறொரு பகுதியினரும் எதிர்த்த அத்திட்டத்திற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆட்சி மாறியபின் மறுபடி அது கனவாகிப் போனது.

இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகளை ஆராய 2006ல் நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி 15 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பங்களித்த திமுக தனது ஆதரவுத் தளங்களில் ஒன்றான தமிழக முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது.

ஐமுகூ அரசின் முதலாம் ஐந்தாண்டு முடிவதற்குள்ளாகவே, அமெரிக்காவுடனான அணு உடன்பாட்டை ஏற்க மறுத்து இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இரண்டாம் ஐந்தாண்டு முடிவதற்குள் 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கீடு விவகாரங்கள், செயலாக்கத் துறை சோதனைகள் பின்னணியில், இலங்கைத் தமிழர் நிலை தொடர்பான அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக விலகிக்கொண்டது. 2014லிருந்து பாஜக கூட்டணி ஆட்சிகளும், மதவாதத்தில் தோய்ந்த அதன் நடவடிக்கைகளும் தேசத்தின் அனுபவமாகியிருக்கிறது.

இந்த நிலைமை, தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சனாதனவாத அரசியலைத் தடுக்கிற, கொள்கைக் கூட்டெனும் கட்டுமானத்தை விரும்புவோர் மகிழத்தக்க நிகழ்வுப்போக்கிற்கும் (அவ்வப்போது உரசிக்கொண்டாலும்) இட்டு வந்திருக்கிறது. அதற்கோர் அடித்தளம் அமைத்தது அந்த ஏழாண்டு என உறுதியாகச் சொல்லலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com