மீட்புக் குழுவினருடன் முத்துகிருஷ்ணன்(வலமிருந்து இரண்டாவது)
மீட்புக் குழுவினருடன் முத்துகிருஷ்ணன்(வலமிருந்து இரண்டாவது)

முகத்துக்கு நேராகப் பாய்ந்த புலி!

கால்நடை மருத்துவர் எஸ். முத்துகிருஷ்ணன்

கால்நடை மருத்துவத் தொழிலில் பல ரிஸ்க்குகள் உண்டு. முக்கியமானது விலங்குகளால் தாக்கப்படுவதும் அவற்றின் நோய்த் தொற்றும்தான்!

ஊருக்குள் வந்துவிடும் வனவிலங்குகளை மீட்கும் பணியில் வனத்துறையுடன் இணைந்து செயல்படுகிறவனாக பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். இரண்டுமுறை கரடியால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளேன். இருந்தும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டே வருகிறேன். ரிஸ்க் எடுக்காமல் வாழ்க்கை ருசிப்பதில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன் தென்காசி மாவட்டத்தில் பெத்தான் பிள்ளை குடியிருப்புப் பகுதியில் ஒரு கரடி மூன்று பேரைத் தாக்கியது. அந்தக் கரடியை மயக்க ஊசி போட்டுப் பிடித்தோம். அதை வேறு காட்டுப்பகுதியில் வனத்துறை உத்தரவுப்படி இடம் மாற்றம் செய்தனர். ஆனால் அங்கே மறுநாளே சென்று அலுவலர்கள் பார்க்கையில் கரடி இறந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கரடியை மயக்கமருந்து ஊசி அடிப்பதற்கு முன்னதாகப் பார்த்தபோது, அது அசாதாரணமாக நடந்து கொண்டிருந்ததைப் கண்டிருந்தேன். இந்த கரடியின் உடலை பிரேதபரிசோதனை செய்து, உடல்மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். ரேபீஸுக்கான ஆய்வுக்கும் அனுப்பினோம். அப்போது அதற்கு ரெபீஸ் என்கிற வெறிநோய் இருந்தது உறுதியானது. மயக்கமடைந்த கரடியை வெறுங்கையால் இழுத்து கயிறுகட்டித் தூக்கிவந்த எங்கள் குழுவில் இருந்த எல்லோருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து, எல்லோரும் வெறிநோய்த் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அதுமட்டும் அல்ல கரடியால் தாக்கப்பட்ட அனைவருக்குமே உயர்நிலை ரேபீஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்கப்பட்டனர். அந்த பிரேதப்பரிசோதனை செய்யாமலோ அல்லது கரடி காட்டுக்குள்ளே சென்று உயிர்துறந்திருந்தாலோ, எல்லோரும் சற்று அலட்சியமாக இருந்திருப்போம். நாங்கள் ரேபீஸால் பாதிக்கப்பட்டிருக்கவும் கூடும்.

சாவை நேருக்கு நேராய்ப் பார்த்ததுபோன்ற அனுபவம் கடந்த ஆண்டு புலி ஒன்றை மீட்கச் சென்றபோது எனக்கு ஏற்பட்டது. இதுவரை நான் எதிர்கொண்ட ரிஸ்க்குகளில் இதைத் தலையாயது என்று சொல்வேன். கண்ணெதிரே என்னை நோக்கி 250 கிலோ எடை யுள்ள பெரும் புலி பாய்ந்தால் எப்படி இருக்கும்? ஒரு நொடி வெலவெலத்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை அருகே பத்துக்காணி பகுதியில் கல்லறைவயல் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கையில் மயக்க ஊசி அடிக்கும் துப்பாக்கியுடன் ஏழுபேர் கொண்ட குழுவில் நானும் ஒருவனாக நின்றேன். சில மாதங்களாக இந்த இடத்தைச் சுற்றி உள்ள பழங்குடியினர் கிராமங்களில் ஆடுகளையும் மாடுகளையும் புலி ஒன்று அடித்ததாக புகார் வரவே, வனத்துறை அதைப் பிடிக்க கண்காணிப்பை அதிகரித்து இருந்தது. அந்த புலியும் கண்ணில் படுவதாக இல்லை. நள்ளிரவில் ட்ராப் காமிராகளில் மட்டும் அகப்பட்டது.12 வயதான ஆண்புலி அது. பிற இளம் புலிகளால் அதன் பிராந்தியத்தைவிட்டு துரத்தப்பட்டு இங்கே வந்துள்ளது. நாங்கள் நின்றிருந்த அன்று அங்கே ஒரு நாயை அது அடித்திருந்த தகவல் கேட்டு நாங்கள் மிகக்குறைந்த அந்த குழுவுடன் போயிருந்தோம். எதிரே ஓடை ஒன்று வளைந்து செல்ல அதன் அருகே ஒரு சிறு பாறைக்குன்று. நாங்கள் இருந்த உயரமான இடத்தில் இருந்து அங்கிருந்த அடர்ந்த புதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ‘சார்... கடுவா’ என்றார் எம்முடன் வந்த பழங்குடி ஒருவர். எனக்கு முதலில் புரியவில்லை. ஏதேனும் சிறுவிலங்கைச் சொல்கிறார் போல் அவரை அலட்சியப்படுத்தினேன். ஆனால் அவர் நடுங்கும் கைகளால் நீட்டிய திசையில் பார்த்தால் புலி படுத்திருந்தது. எதிரெ இருந்த குன்றில் ஒரு மீன்முள் போன்ற வளைந்து செல்லும் குகை இருந்தது. அதன் வாயிலில் இரண்டடி ஆழத்தில் தண்ணீர் தேங்கி இருக்க, அதில் படுத்திருந்தது புலி. புலியைப் பார்த்ததும் என்னுடன் வந்த இருவர் அதிர்ந்து பின்னே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். நான் இருந்த இடத்தில் இருந்து குறிபார்த்து மயக்கத் துப்பாக்கியால் சுட்டேன்.புலிக்கு ஓரடி தள்ளிப் போய் விழ, அது நிமிர்ந்து பார்த்துவிட்டு குகைக்குள் போய்விட்டது. உடனே வனத்துறை மேலதிகாரிகளுக்குச் சொன்னோம். இப்போது பத்தே பேர் கொண்ட ஒரு குழு. அந்தக் குகையின் ஒரு பகுதியை வலை வைத்து அடைத்துவிட்டு இன்னொரு வழிக்கு எதிராக ஒரு பாறைமீது இன்னொரு கால்நடை மருத்துவரும் ஆய்வாளர் ஒருவரும் மயக்கத்துப்பாக்கிகளுடன் தயாரானார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக இருவர் துப்பாக்கிகளுடன்.

நான் இன்னொரு வழியாக மேலும் இருவருடன் பாறை மீதேறி குகையை அணுகினேன். அந்த இடத்தி்லிருந்து குகையின் தரைமட்டம் ஐந்து மீட்டர் கீழே இருக்கலாம். மாலை ஆகிக்கொண்டிருந்ததால் விரைவில் செயல்பட்டாக வேண்டும். அங்கே பாறைகளுக்கு இடையே இருந்த இடைவெளி வழியாக டார்ச் லைட் அடித்தோம். உள்ளே இருட்டில் இரண்டு பல்புகள் போல புலியின் கண் விழிகள். கிட்டத்தட்ட 250 கிலோ எடையுடைய மிருகம். அது கண்கள் தெரிந்த இடத்தை அனுமானித்து அதன் பின்னால் கழுத்து இருக்கக்கூடிய இடம் பார்த்து துப்பாக்கியை இயக்கினேன். அதேசமயம் வெளியே டம்மியாக துப்பாக்கியால் சுட்டு ஓசை எழுப்புமாறு கூறினேன். நான் சுட்ட ஊசி அதன் கழுத்தில் பாய்ந்த அடுத்த கணம் அது பயங்கர உறுமலுடன் மேல் நோக்கிப் பாய்ந்தது. அது இருந்த இடத்தில் இருந்து மேல் நோக்கி என்னை அடையமுடியாது என்பதால் நான் தப்பினேன். அந்த கோப உறுமல் எங்களை மிரட்டிவிட்டது!

சற்று நேரத்தில் அது அரை மயக்கத்துக்கு போயிருந்ததைக் கண்டோம். மீண்டும் குகைக்குள் ரிஸ்க் எடுத்து நுழைந்து அடுத்த டோஸ் அடித்து, பிறகு முழு மயக்கம் அடைந்த பின்னர் அதை கயிறுகள் கட்டி அந்த காட்டு வழியாகத் தூக்கிவந்து, பின்னர் இப்போது அது வண்டலூர் பூங்காவில் உள்ளது.

குறைவான ஆட்களைக் கொண்டு சமாளித்ததாக் அதிகாரிகள் பாராட்டும் கிடைத்தது.

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com