இணையவழிக் குற்றங்கள் எனும் அதல பாதாளம்

இணையவழிக் குற்றங்கள் எனும் அதல பாதாளம்
Published on

சூதாட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. பணையம் வைத்து சூதாடி நாட்டை இழந்த மன்னர்கள் முதல் எல்லாக் காலத்திலும் மனிதர்களுக்கு சூதாட்டத்தின் மீது விருப்பம் இருந்துள்ளது. சூதாட்டத்தால் நடக்கும் தீமைகளை சிறுவயதிலேயே நான் பார்த்துள்ளேன். எங்கள் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் மலைக் கோயில் திருவிழா ஒன்று நடக்கும். திருவிழா அன்று மாலை நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் பெரும்பாலும் ஆண்களே கோவிலில் இருக்கமாட்டார்கள்.

அவர்கள் மலையடிவாரத் தெருவின் இரண்டு பக்கங்களிலும்தான் குழுமி நின்று, யானை மயில் ஒட்டகம், லங்கர் கட்டை போன்ற சூது விளையாட்டுக்களை ஆடுவார்கள். நிறையப் பணம் கட்டி விளையாடும் இந்த சூதாட்டத்தில் பெருங்கூட்டமே கலந்து கொள்ளும்.

எங்கள் ஊர்க்காரர் ஒருவர் லங்கர் கட்டை விளையாட்டில் பணம் முழுவதையும் இழந்துவிட்டு, லங்கர் கட்டைக்காரருடன் சண்டைக்குப் போனார். இதை விலக்கிவிட சென்ற என் அப்பாவின் உற்ற நண்பருக்கு கத்திக் குத்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

சிலருக்கு ’போனால் பூனை, கிடைத்தால் யானை’ என்ற மனநிலை. பலருக்கு எளிதான முறையில் எப்படியாவது பணம் சம்பாதிக்கணும் எனும் எண்ணம். இந்த சூதாடி மன நிலை இன்றைய தொழில்நுட்ப உலகில் மிக ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது. இருக்கின்ற இடத்திலிருந்தே எளிதாக எல்லாப் பணத்தையும் இழக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

இணையக் குற்றங்களில் பெரும்பாலும் ஏமாற்றப்படுகிறவர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான். பணம் அதிகம் வைத்திருப்பவரே சமூகத்தில் பெரிய மனிதர் என்ற கற்பிதத்தை அதிகம் நம்பக்கூடியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். இதனால், பணத்தை எப்படி சம்பாதிப்பது என்ற ஆசையில் இந்த சூதில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இணையக் குற்றங்கள் முதலில் மின்னஞ்சல் வழியாகத்தான் நடக்கத்தொடங்கின. அக்காலத்தில் என்னுடைய உறவினர் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. ‘ஆப்ரிக்காவின் குறிப்பிட்ட நாட்டின் இளவரசி நான்’என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில் கவர்ச்சியான ஒரு புகைப்படத்துடன் ‘என்னுடைய கணவரையும் பிள்ளைகளையும் எதிரி நாட்டினர் கொன்றுவிட்டனர். நிறையப் பணம் இருக்கிறது. இதை எடுப்பதற்கு உங்கள் நாட்டின் வங்கிக் கணக்கையும் அதற்கான உதவிகளையும் செய்தால், எல்லாப் பணமும் உங்களுடையது... அதோடு நானும்’ என அனுப்பியிருந்தார். உடலிச்சையும் பணத்தாசையும் யாரை விட்டது. உடனே பதிலைத் தட்டிவிட்டார். சொத்துக் கைமாற்றத்தின் முதல் ஏற்பாடுகளுக்காக அந்த பெண்மணி கேட்ட பணத்தையும் அனுப்பினார். இறுதியில் என்ன நடந்திருக்கும்…?

சமீபத்திய சர்வதேச கூரியர் ஒன்றின் பெயரிலான ஸ்கேம். நம்மை குற்றவாளி என நம்பவைத்து, அதிலிருந்து நாம் தப்பிக்க, நம்மிடமிருந்தே பணம் பறிப்பதுதான் இந்த நூதன மோசடி. நாம் அனுப்பிய பார்சல் ஒன்று பிடிபட்டிருப்பதாகவும் அதில் நாட்டுக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பொருள்கள், போதைப்பொருட்கள் போன்றவை இருப்பதாகவும் நமக்கு போன் கால் வரும். அப்படியொரு பார்சலை நாம் அனுப்பவில்லை என்று சொன்னாலும் நம்முடைய முகவரி, ஆதார் எண் என அனைத்து விவரங்களையும் சொல்லி, ‘இது நீங்கள் தானே’ என்பார்கள். உங்களின் இந்த செயலுக்காக உங்களை ‘எண்ம கைது’ (Digital arrest) செய்யப்போகிறோம் என்பார்கள். உடனே, இதிலிருந்து தப்பிப்பதற்கான வழியையும் சொல்வார்கள். நம்மிடமிருந்து பணம் பறிப்பதுதான். இப்படி, கடந்த ஆண்டின் முதல் பாதியில் பெங்களூர் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் ஏமாற்றி இருக்கிறார்கள். மெத்தப் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான் பெரும்பாலும் இதில் ஏமாந்துள்ளனர்.

எனக்குத் தெரிந்த பணக்காரப் பெண் ஒருவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்து பலகாலம் அங்கே வாழ்ந்து இந்தியா திரும்பியவர். இங்கு பெரிய நிறுவனம் ஒன்றை நடத்துபவர். இவர் தாய்லாந்துக்கு கொரியர் அனுப்பியதாகவும் அதில், போதைப்பொருள் இருந்ததாகவும் போன் கால் வருகிறது. இவருடைய அனைத்து விவரங்களையும் அவர்கள் சொல்ல, தனது சான்றுகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய குற்றம் நடந்துவிட்டதாக இவரும் நம்பிவிடுகிறார். முதலில் இவரை ஸ்கைப்பில் அழைக்க சொல்கிறார்கள். இவருக்கு ஸ்கைப் பயன்படுத்தத் தெரியாது என்பதால், வாட்ஸ் அப் வீடியோ கால் பண்ண சொல்கிறார்கள். இவரும் கால் செய்ததும் காவல் துறை அதிகாரி உடையில் வேடம்போட்ட ஓர் ஆசாமி “இப்போது நீங்கள் எண்ம கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் நேரத்தில் போலீஸ் உங்க வீட்டுக்கு வரும். இந்த விடியோ அழைப்பை ஒரு கணம் கூட துண்டிக்க உங்களுக்கு அனுமதி இல்லை. முழுநேரமும் நேரமும் நீங்கள் என் கண்முன்னே இருக்கவேண்டும். இந்த வழக்கு மும்பையில்தான் நடக்கும். இதிலிருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரே வழி நாங்கள் கேட்கும் பணத்தைத் தரவேண்டும்” என்கிறார்கள். இந்த பெண் “நான் வங்கிக்கு போனால் தான் பணம் கிடைக்கும்” என்கிறார். “உடனே வங்கிக்கு போங்க. ஆனால், யாரிடமும் எதுவும் பேசக்கூட்டது” என்று கட்டளையிட்டவர்கள், இந்த பெண்ணின் வங்கிக் கணக்கையும் வாங்கிவிடுகிறார்கள். “வங்கிக்குப் போக வேண்டும் என்றால் துணி மாற்ற வேண்டும்” என அந்த பெண் சொல்ல. “நீங்கள் கேமராவை விட்டு எங்கும் போக கூடாது. கேமரா முன்னாடியே ஆடைமாற்றுங்கள்” என அவர்கள் மிரட்டியதும் அப்பெண் வீடியோ காலை கட் செய்துவிடுகிறார். அவர்கள் அடுத்தடுத்து கால் பண்ணாலும், இவர் எடுக்கவில்லை. உடனே, இவர் வங்கிக்கு சென்று, வங்கிக் கணக்கை லாக் செய்துவிடுகிறார். இந்த சம்பவம் எவ்வளவு நேரம் நடந்தது தெரியுமா? ஆறு மணி நேரம்.

அப் பெண்ணிடம் இது தொடர்பாக பேசும்போது “பல வழக்கறிஞர்கள், பெரும் வியாபாரிகள் எல்லாம் இப்படி மாட்டியிருக்கும்போது நான் மட்டும் எம்மாத்திரம்!” என்றார். மெத்தப் படித்தவர்களால் கூட இப்படியான திருடர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதுதான் பெரும் வருத்தம் தரக்கூடிய விஷயம்.

இதே போன்றதொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. ஜெர்ரி அமல் தேவ் என்ற மிகப்பெரிய இசையமைப்பாளர். இவர்தான் மோகன் லால் நடித்த முதல் படத்தின் இசையமைப்பாளர். நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவர் ஒருநாள் பதறி அடித்துக் கொண்டு, செல்பி விடியோ எடுப்பதுபோல் கையில் போனை பிடித்துக் கொண்டு வங்கிக்கு ஓடி வருகிறார். பணம் எடுக்கும் கவுண்டருக்கு சென்று “நான் ஒரு அக்கவுண்ட் நம்பர் தருகிறேன். அதற்கு உடனடியாக இரண்டு லட்சம் அனுப்புங்கள்” என பதட்டத்துடன் வங்கி ஊழியரிடம் சொல்கிறார். இவரின் பதற்றத்தைப் பார்த்த வங்கி ஊழியர், “இவ்வளவு பணம் அனுப்ப முடியாது சார்” என்கிறார். “ஹலோ… என்னுடைய பணம். நீங்க யார் கேட்க” என கத்தியிருக்கிறார். அந்த ஊழியர் ஜெர்ரியிடமிருந்து போனை பலவந்தமாக வாங்கிப்பார்த்ததும் எத்திரிலிருந்த போலிப் போலீஸ் அதிகாரி உடனே போன் காலை துண்டித்துள்ளார்.

நான் இத்தகைய இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டதும் இல்லை, பாதிக்கப்படவும் மாட்டேன். ஏன் என்றால் எனக்கு பயமும் இல்லை பேராசையும் இல்லை. எனக்கும் எண்ணற்ற போன் கால்கள் வந்துள்ளன. மூன்று வகையான கால்கள். ஒன்று இதே கொரியர் மோசடி. இரண்டாவதாக என்னுடைய தொலைபேசி எண் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக ‘இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய’த்திலிருந்து. மூன்றாவதாக, உடனடி லோன் தருகிறோம் என்று பேசுவார்கள். இப்படி வரும் பெரும்பாலான போன் அழைப்புகள் இந்தியிலும், கொஞ்சம் ஆங்கிலத்திலும், தமிழில் அரிதாகவும் வரும். நான் இவர்களிடம் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருப்பேன். சிலசமயம் பொறுமை இழந்து கோபத்தில் திட்டிவிடுவேன். அவர்களும் மிக மோசமாக திட்டிவிட்டு அழைப்பைத் துண்டிப்பார்கள்.

ஆன்லைன் சூதாட்டம் ஆடி எனக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் ஒரு இளைஞன், மீன் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சினிமாவில் ஹீரோ ஆகும் அளவுக்கு அழகாக இருப்பான். ஒருநாள் மீன் ஏதாவது புதுசா வந்திருக்கா என்று கேட்பதற்கு அந்த தம்பிக்கு கால் பண்ணினேன், எடுக்கவில்லை. பிறகு அவனுடைய முதலாளிக்கு அழைத்து விசாரித்தபோது அன்று அதிகாலையில் அவன் தற்கொலை செய்துகொண்டான் என்று சொன்னார்.

மீன்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை இந்த இளைஞன் தான் நிர்வகித்து வந்தான். இந்த பணத்தை வைத்து அவன் ஆன்லைன் சூது விளையாடி இருக்கிறான். இதில், மூன்றரை லட்சம் வரை இழந்துவிட்டிருக்கிறான். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான தேதி நெருங்கவே பயத்தில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். ஒரு நாலைந்து நாள் கழித்து அவன் நம்பரிலிருந்து அவனுடைய அம்மா எனக்கு கால் பண்ணி பேசினார். இவனுடைய வருமானத்தை நம்பித்தான் அவனுடைய பெரிய குடும்பமே இருந்துள்ளது என அறிந்தபோது வேதனையாக இருந்தது.

அதேபோல் எனது தருமபுரி நண்பர் ஒருவர் மொபைலை ரிப்பேர் செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு, மொபைல் போனுடன் ஒரு அம்மா வந்திருக்கிறார். மொபைல் லாக்கில் இருந்திருக்கிறது. மொபைலை அன்லாக் பண்ணி, அதிலிருந்த மகனின் போட்டோவை எடுத்துத்தர அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார். இந்த பெண்மணி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 28 லட்சம் ரூபாய் தந்திருக்கிறார்கள். அவ்வளவு பணத்தையும் இந்த பையன் ஆன்லைன் விளையாட்டில் இழந்திருக்கிறான். பிறகு தற்கொலை செய்து கொண்டான்.

ஒருமுறை என்னுடைய மனைவியின் வங்கிக் கணக்குக்கு மூன்றாயிரம் ரூபாய் வந்தது. அனுப்பியவர் யாரென்று தெரியாது. பணம் வந்த அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு. ’தெரியாமல் உங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டோம். ஒரு நம்பர் தருகிறோம். அதற்கு திருப்பி அனுப்புங்கள்’ என்றார்கள். அவர் அலுவலகத்தில் இருந்ததால், உடனே பணம் அனுப்ப முடியாது என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். உடனே ஒரு ‘காவல் நிலைய’த்திலிருந்து அழைத்து ’உங்க அக்கவுண்டுக்கு வந்த பணத்தை நீங்க திருப்பி அனுப்ப மாட்டீர்கள் என்று சொன்னீர்களாமே’என ‘காவலர்’ ஒருவர். மத்திய அரசு அதிகாரியான என் மனைவி “நீ ‘காவலர்’ என்றால் நான் தமிழ்நாட்டுக் காவல்துறை மேல் அதிகாரி. எனக்கு நேரம் இருக்கும்போது பணம் திருப்பி அனுப்புவேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார். பிறகு பணத்தை அனுப்பிவிட்டார். பிறகு இதனால் அவரக்கு மோசடி எதுவும் நடக்கவில்லை என்றாலும் இந்த மாதிரி கொஞ்சம் பணம் அனுப்பி அதை திருப்பி அனுப்பும்போது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் முழுப்பணத்தையும் உருவும் மோசடியும் நிறைய நடக்கிறதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு நன்மைகளை விட தீமைகளையே அதிகம் ஏற்படுத்துவதாக நினைக்கிறேன். சைபர் குற்றங்கள் தொடர்பாக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாமே தவிர முற்றிலுமாக இல்லாமல் ஆக்க முடியாது. ஏனெனில், இது மனிதனின் பேராசையோடு தொடர்புடையது. பணம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்ற மன அமைப்பிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நம் கல்வி முறை அன்றாட வாழ்க்கைக்கு பொருத்தமானதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அதனால்தான் படித்தவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவமானப்பட்டோ ஏமாற்றியோ எவ்வளவு வேண்டுமானாலும் தவறாகவோ பரவாயில்லை, பணம் சம்பாதித்துவிட்டால் போதும், எல்லாத் தவறுகளையும் அப்பணமே சரிசெய்துவிடும் என்ற நம்பிக்கை நம் சமூகத்தில் ஆழமாக உள்ளதே…

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com