
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பால்யமோ பதின்மமோ அமைந்தவர்களுக்கு இந்த இருபத்தைந்து ஆண்டுகள் ஒரு தலைமுறை இடைவெளி மட்டுமல்ல. சற்று அகலக்கால் வைத்து தாண்டி வந்த பெரும் ஆச்சரியமான ஆண்டுகள். 1960ற்கும் 1980ற்கும் இருந்த இடைவெளியை விட 2000த்திற்கும் 2020களுக்குமான இடைவெளி என்பது பன்மடங்கு மாறியிருக்கும் ஒன்று.
முக்கியமாக தகவல் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மனித உறவுகளிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. உலகம் ஒரு உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. ஆனால் தன்னுடன் வசிக்கும் சக உயிரைப் பற்றிக்கூட அறிய முடியாமல் தனிமையை உருவாக்குகிறது என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
90களின் ஆரம்பத்தில் நான் இருந்த கிராமத்தில் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ஒரு வீடு இருந்தது. போட்டி போட்டுக்கொண்டு சிறுவர் சிறுமிகளாக நாங்கள் அவர்களின் கூடத்தில் உட்கார்ந்து ஒளியும் ஒலியும் பார்த்துக் கொண்டிருப்போம். செல்வமும் வளமும் நிறைந்த அந்த வீட்டில் வதங்கிய முகத்துடன் ஒரு அக்கா இருப்பார். அவர் அணியும் சேலைகள் அனைத்துமே மங்கிய நிறத்தாலானவை. எண்ணெயிட்டு நீவி நீவி ஒரு இழை கூட பிரியாமல் நீண்ட பின்னலிட்ட அந்த ஜோதி அக்கா வீட்டின் திண்ணையில் அமர்ந்திருப்பார். ஊரின் மிக முக்கிய வியாபாரக் குடும்பத்தின் மூத்த பெண் அவர். கண்களிலும் ஒளி இருக்காது. சுற்றி நடக்கும் எதுவுமே அவரை பாதிக்காது. எந்த சலனமும் இருக்காது. அவருக்குப் பின் நான்கு தங்கைகள் இருந்தனர். அவர்களுக்கு திருமணம் நடக்கும் நாட்களில் அந்த அக்காதான் அவர்களை அலங்கரிப்பார். பின் அதே மங்கிய நிற சேலையை அணிந்தபடி கண்ணுக்குத் தெரியாத ஒரு பொட்டை வைத்துக்கொண்டு துளிச் சிரிப்புக் கூட இல்லாமல் அமர்ந்திருப்பார். அவரின் அந்த அமைதிக்குப் பின் இருந்த காரணம் காதல் தோல்வி. ‘லவ் பெய்லியர்’. அப்படி ஒரு வார்த்தையை மறந்து பல ஆண்டுகள் ஆகின்றன.
ஒருவகையில் லவ் ஃபெய்லியர் என்பது ஆண்களுக்கானதாக மட்டும்தான் இருக்கிறது எனக்குத் தெரிந்து அந்த அக்கா மட்டுமே அதை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி தான் காதலிக்கப்பட்டவள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள எந்த பெண்ணும் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. லவ் ஃபெய்லியர் என்ற வார்த்தை ஆண்களால் தங்கள் சோகத்தை வெளிப்படையாக பறைசாற்றிக்கொள்ளப் பயன்பட்டது.. ஆண்கள் தாடி வைத்தும், மதுவருந்தியும் மறக்கப்பட்ட லவ் ஃபெய்லியரை இப்போது ப்ரேக் அப் என்ற சொல் நிரப்பிவிட்டிருக்கிறதா? ஆண்களால் தங்கள் காதல்களை சொல்ல முடிந்தளவுக்கு பெண்களால் சொல்ல முடிந்திருக்கிறதா?
மெல்ல நகர்ந்த காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘ஆமாம். காதலித்தேன். இப்போது நகர்ந்துவிட்டேன். அதனால் என்ன?’ என்று தைரியமாகப் பெண்களைச் சொல்ல வைத்திருக்கிறது. அதற்கு உண்டான வார்த்தைப் பிரயோகமாக இடையில் நிறுத்தல், பின் தொடர்தல் என்பதற்கான வடிவமாக ப்ரேக்- அப் சொல் அமைந்திருக்கிறது. காதல் தோல்வி என்பது ஒரு இடத்தில் தேங்கி விடுகிறது. அது காலத்தை, அவர்களின் வயதை, இளமையைத் தொலைக்க வைத்துவிட்டது. ஆனால் ப்ரேக் அப் என்றால் அது தொடரப்போகிறது, இன்றுடன் முடியப்போவதில்லை என ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது.
ஆண்களை விட பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனர். அந்த தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்காக நூற்றாண்டுகளாய் காத்திருந்து பெற்ற இந்த சுதந்திரத்தை அவர்கள் முழுமையாக அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த இடத்தில்தான் ப்ரேக் அப் என்பது மிக இலகுவான வார்த்தையாய் இருபாலருக்கும் பொருந்தியிருக்கிறது. கால நட்டமின்றி, உணர்வுகளின் மோதலின்றி இரண்டு மனங்களை முறிக்கும் ப்ரேக் அப் என்ற வார்த்தை ஒருவகையில் சவுகர்யமானதுதான்.
ஒட்டாத இரு உயிர்கள் வெறும் உறவின் பேரில் இணைந்திருத்தல் போலியானது என்பதை உணர்ந்து உடைப்பது ஆரோக்கியமானது. அன்பின் பெயரால் சுரண்டல் நிகழ்வதை அது தடுக்கிறது. மேலும் மேலும் ஏற்படும் அகமனச் சிக்கல்களை வருமுன் தடுக்கும் செயலாக ப்ரேக் அப் நிகழ்ந்துவிடுகிறது. அங்கும் இரு மனங்கள் இணைந்து ப்ரேக் அப் என்ற செயல் நிகழ்வதில்லை. காதலின் மயக்கம் தெளிந்த, இதற்கு மேல் இந்த உறவில் எந்த கொடுக்கல் வாங்கலும் நிகழப்போவதில்லை என்று புரிந்துகொண்ட ஒருவரே முன்னெடுக்கிறார். இன்னொருவருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் முடிவெடுத்தாலே அது ப்ரேக் அப்தான். விலக்கப் பட்டதாக உணரும் அந்த இன்னொருவரின் வலிதான் தவிர்க்க முடியாதது. பற்றியிருந்த கரம் சட்டென விலக்கப்பட்டுவிட அவர் தடுமாறி விடுகிறார். அன்பின் பாதைகள் ஒருவழிப்பாதையாக சட்டென மாறிவிடுவது துன்பமயமானது. லவ் ஃபெய்லியரில் மீள்வதற்கு வழியில்லாத அடைக்கப்பட்ட கதவை ப்ரேக் அப் எனும் வார்த்தை மறுபடி திறப்பதற்கான வாய்ப்பை, நம்பிக்கையை அளிக்கிறது.
ப்ரேக்கப்புடன் சேர்ந்து இந்த தலைமுறை பல சொற்களை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறது. பிரிந்தவுடன் துக்கம் தாளாமல் ஒருவருடன் உறவில் இருப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இணைந்திருப்பது Situationship. பழகிவிட்டு திடீரென சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால் Ghosting, இன்னும் இருக்கிறது. Benching, Bread crumbing, Orbiting, Love Bombing, Textationship, etc., ஆனால் முன்னெப்போதும் இல்லாத என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறது. முன்பே எல்லா உறவுகளும் இருந்தன. மனங்களுக்கு இடையேயான சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். இன்|று தனித்தனியாக பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படி வெளிப்படையாக அறிவிக்க அன்று தெம்பு கிடையாது. மறைக்கப்பட்டவைகளைக் குறித்து பேசிப் புரிந்துக்கொண்டு நகரத் தொடங்கும் மாற்றம் உருவாகியிருக்கிறது.
காதலே மாறியிருக்கிறது. அதற்குண்டான கோடுகள் வேறுவகையாக வரையப் பட்டிருக்கின்றன. நேர்க்கோடுகள் நெளிகொடுகளாகியிருக்கின்றன. நாகரிகம் வளர வளர மனித உணர்வுகளுக்கு மதிப்பு அதிகரித்திருக்கிறது. மனம் நோக பேசுவது, பொதுவில் வைத்து அவமானப் படுத்துவது, பின் தொடர்வது, ஒருவர் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது போன்ற விஷயங்கள் டாக்சிக்காக கருதப் பட்டு இப்போது அபாய அடையாளங்களாகப் (Red flag) பார்க்கப் படுகின்றன.
இங்கு மாறியிருப்பது வார்த்தைகள் மட்டுமில்லை. நியாயங்கள், தப்பு, சரி என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு காலவிசைகளின் பின்னால் மாட்டிக்கொண்டிருக்கும் துரும்பாக மனிதர்கள் அலைபாய்ந்துக் கொண்டிருக்கின்றனர். இறுக்கிப் பிடித்து காய்த்துப் போனதை மறுக்கும் பொருட்டு விட்ட பிடி இப்போது ஆதாரமற்று சாய்வதற்கும் காரணமாகிறது. ஆண்களும் பெண்களும் பொறுப்பேற்கத் தயங்குகின்றனர். அன்பினால் ஏற்படும் சிறு துன்பத்தைக் கூட தாங்க இயலாமல் அன்பையே புறங்கையால் ஒதுக்கும் பிழையும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
வருங்காலத்தில் ஆண்- பெண் சார்ந்து இருக்கும் நிலை தொடருமா என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. அப்போது இந்த ப்ரேக்-அப் எனும் சொல் மற்றொரு பரிணாமத்தை அடைந்து வழக்கொழிந்து போயிருக்கலாம்.