
இவ்வளவுதான் அன்பாக இருந்தாலும் புத்தகங்களாகச் சேர்ப்பவர்களை வீட்டில் இருப்பவர்கள் சற்று எரிச்சலோடுதான் பார்ப்பார்கள். அதுவும் சென்னை போன்ற இடங்களில் சொந்த வீடோ வாடகை வீடோ எதுவாக இருந்தாலும் புத்தக சேகரிப்பாளர்களுக்கு கஷ்டப்பாடுதான்!
சென்னையை அடுத்த ஆவடி, கோவில்பதாகை பகுதியில் பாரதி ஆய்வு நூலகத்தை நடத்திவருகிறார், பழங்காசு சீனிவாசன். இதில் பழங்காசு அவருக்கான பட்டம். கல்வெட்டு, நாணயங்கள், செப்பேடுகள் என தொல்லியலிலும் ஆர்வம் கொண்டவரான சீனிவாசன், அதற்கென பழங்காசு எனும் இதழையும் நடத்திவந்தார். அதிலிருந்து அவருக்கு இந்த அடைமொழி ஒட்டிக்கொண்டது.
75 வயதாகும் இவர், தன் மகள் வீட்டின் முதல் மாடி முழுவதையும் புத்தக அலமாரிகளால் நிறைத்து வைத்திருக்கிறார். இவரது ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள் குடியிருக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர்க்காரரான சீனிவாசன் பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஐடிஐ படித்துவிட்டு, தொழிலகங்களில் வேலைசெய்தார். பின்னர், திருச்சி பெல் நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியில் சேர்ந்து, பொறியாளராகப் பணி ஓய்வு பெற்றார்.
திருச்சியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தன் ஆய்வு நூலகத்தை இடையில் சிறிது காலம்கூட அவர் கைவிடவில்லை. குடும்பச் சூழல், மூப்பு காரணமாக சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குக் குடிபெயர்ந்தாக வேண்டிய நிலை... ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார், சீனிவாசன். “ நான் இருக்கிறவரை இந்தப் புத்தகங்கள் என்கூடவே இருக்கும். இதை ஏத்துகிட்டா சென்னைக்கு வரேன்னு சொன்னேன். ஒத்துகிட்டாங்க. இதைக் கொண்டுவர்றதுக்கான செலவு 50 ஆயிரம் ரூபா. இடம் மட்டும்தான் மாறி இருக்கு. அதே நூலகம், அதே செயல்பாடுகள்...” என்கிறார், சீனிவாசன்.
1800களில் வெளியான பழமையான நூல்கள், அவற்றிலும் அரிய நூல்கள் என இவருடைய நூலகத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.
இடதுசாரி, வலதுசாரி என எந்த சாரிகளுக்கும் பஞ்சமில்லாமல் நூல்களைப் படித்திருக்கிறார், ஐயா சீனிவாசன். ஆம். “இந்த நூலகங்களில் இருக்கும் பெரும்பான்மையான நூல்கள் நான் படிப்பதற்காக வாங்கியவைதான். அகராதிகள், நிகண்டுகள், கலைக்களஞ்சியங்களை மட்டும் குறிப்புதவிக்காகப் பயன்படுத்துகிறேன்.” என்கிறார்.
அடிப்படையில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த இவரிடம், மார்க்சியம்சார்ந்த புத்தகங்கள் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. நூலகத்தை இளமை உற்சாகத்துடன் நம்மிடம் சுற்றிக் காட்டத் தொடங்குகிறார்.
”மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு, லெனின் தனி நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்தவை, ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் ஆங்கிலத்தில் 15 நூல்கள் சோவியத் யூனியனில் பதிப்பிக்கப்பட்டவை, தமிழில் அலைகள் பதிப்பகம் வெளியிட்டவை, மாவோவின் நூல்கள் தமிழில் 9 தொகுதிகள், மற்ற மார்க்சியத் தத்துவ நூல்கள், ஜீவாவி்ன் தொகுப்பு நூல்கள் 4, சிங்காரவேலர் நூல்கள் 3... இவை பேராசிரியர் முத்து குணசேகரனும் பா.வீரமணியும் இணைந்து தொகுத்தவை..., இருவரின் தனி நூல்கள்,”எனச் சொல்லிக்கொண்டே போனவர், சிங்காரவேலரின் பழமையான நூல் ஒன்றைக் காட்டினார்.
“1931... பாருங்க ஆண்டு சரிதானே... கற்பகம் கம்பெனிதானே... 1925 முதல் சுயமரியாதை இயக்கத்துக்கு வந்துவிடுகிறார். 30வாக்கில் சிங்காரவேலர் சேர்கிறார். பொதுவுடைமைப் பிரச்சாரம் 32 காலகட்டத்தில்தான் தொடங்குகிறது. அப்போது சுயமரியாதை இயக்கத்தில் சமதர்மக் கட்சியென தொடங்கப்பட்டது. பெரியார், சிங்காரவேலர், ஜீவா எல்லாம் அதில் இருக்கிறார்கள்....” என அந்தக் காலகட்டம் பற்றிய அரசியலையும் பேசுகிறார்.
இவர்களைத் தாண்டி, பின்னர் வந்த சோசலிசத் தலைவர் அஜாய் கோஷ், ஏஎஸ்கே போன்றவர்களின் நூல்கள், சோவியத் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட பாப்புலிசம், மஞ்சள் பிசாசு, அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் முதலிய நூல்களும் உள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி, தி.க., தி.மு.க. அரசியல் இயக்கங்களின் வெளியீடுகள், அதற்கடுத்து அம்பேத்கர் தொகுதிகள் 37, அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட 10 அம்பேத்கர் தொகுதி நூல்கள், (மீதம் 18 தொகுதிகள் வரவேண்டியுள்ளன), அம்பேத்கர் பற்றிய தனி நூல்கள், குடியரசு முன்னாள் தலைவர் இராதாகிருஷ்ணன், இராகுல்ஜியின் நூல்கள் என வரிசை கட்டுகின்றன.
இராகுல்ஜியின் வால்கா முதல் கங்கைவரை முதல் பதிப்பு இவரிடம் இருக்கிறது. “மொத்தம் 124 நூல்கள் இராகுல்ஜி எழுதியவை; அவற்றில் 17 நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன; அத்தனையும் என்னிடம் இருக்கின்றன” என்கிறார் சீனிவாசன்.
பாரதியின் தொகுப்பு நூல்கள் 12, 1930 இல் அச்சடிக்கப்பட்ட பாரதியின் தனி நூல்கள், பாரதியின் புதிய அச்சு நூல்கள், பாரதியைப் பற்றிய நூல்கள் என ஒரு பெரும் பாரதித் தொகுப்பைப் பார்க்க முடிகிறது.
இதைப் போலவே, பாரதிதாசனின் நூல்கள் தொகுப்பும் இங்கு இருக்கிறது. பாவேந்தம் எனும் தலைப்பில் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டது.
வ.உ.சி. நூல்கள், அவரைப் பற்றிய நூல்கள், கண்ணதாசன் நூல்கள், அவரைப் பற்றிய நூல்கள், கவிஞர் தமிழ் ஒளி நூல்கள், பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆலந்தூர் மோகனரங்கன், ஜெயகாந்தன் நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், வைரமுத்து, பிற தமிழ்க் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள்...
நாமக்கல் கவிஞர், முடியரசனார், வே.ந.திருமூர்த்தி, தொ.மு.சி. இரகுநாதன், கேசிஎஸ் அருணாச்சலம்... கவிதை நூல்கள், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, பழைய பதிப்பு, இரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை, முத்துவெள்ளை திருவேங்கடம்பிள்ளை, வீராநாயக்கர் ஆகியோரின் நாட்குறிப்பு, ஆனிபிராங்க் டைரிக் குறிப்புகள், மகாகவி பாஸ்கரதாசின் நாட்குறிப்பு (அடைமொழிக்கு ஏற்ப பெரிய நூலாகவே), பகத்சிங், சேகுவேரா போன்றவர்களின் சிறைக்குறிப்புகள், ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள், பிலிப் அகியின் சிஐஏ டைரி, எப்வி அருளின் ஒரு போலீஸ்காரனின் டைரி, ஆனைமுத்து வெளியிட்ட பெரியாரின் வெளிநாட்டுப் பயணக் குறிப்புகள், இட்லரின் மெயின் கேம்ப், கோவை அய்யாமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் என்.கே.கிருஷ்ணன், சிவாஜிகணேசன், கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, பாபர் நாமா என தன்வரலாற்று நூல்கள், கென்னத் ஆண்டர்சன், போன்றவர்களின் வேட்டைக்கார அனுபவங்கள், தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள், சுவருக்குள் சித்திரங்கள், சாகித்ய அகடமி வெளியிட்ட இந்திய இலக்கிய வரிசை, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், அறிவியல் அறிஞர்கள், பிரேமா பிரசுரம் போட்ட சிந்தனையாளர் வரிசை, வ.வே.சு. அய்யர் எழுதிய சந்திரகுப்த மௌரியர் வரலாறு, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வரலாறு, தமிழ்நாடு சிபிஐஎம் வெளியிட்ட இஎம்எஸ் வரலாறு (1967), இன்னும் இங்கு கட்டில் பிரிக்கப்படாத புத்தகங்கள் எல்லாம் வரலாற்று நூல்கள்தான்’’ என திகைக்கவைத்தவரிடம், பேச்சின்போக்கில், இவை எல்லாவற்றையும் நீங்கள் படிக்கத்தான் வாங்கினீர்களா என்றோம்.
"“எதையும் இரவல் வாங்கிப் படிப்பதில்லை. எல்லாமே நான் படிப்பதற்காக வாங்கியவைதான்.” என்றவர், அடுத்த வரிசைக்குக் கூட்டிச் சென்றார்.
பெரியார் வாழ்க்கை பற்றிய நூல்கள், அடுத்ததாக இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அவரின் சீடர் நிவேதிதா ஆகியோரின் வரலாற்று நூல்கள், ஆர்எஸ்எஸ் குரு கோல்வால்கரின் சிந்தனைத் திரட்டு 12 தொகுதிகள், மறைமலை அடிகள் தொகுப்பு, திருவிக தொகுப்பு, ந.சி.கந்தையாபிள்ளை, புலவர் குழந்தை, ந.சுப்புரெட்டியார், தனித்தமிழ் அறிஞர் இளங்குமரனார் தொகுப்பு எனக் கலவையைக் காணச்செய்தார்.
அதையடுத்து, திராவிடர் இயக்கம் பற்றிய பொதுவான நூல்கள், கி.வீரமணி எழுதியவை நீண்ட வரிசையில் உள்ளன. முதல் முதலில் பெரியார் வெளியிட்ட ஞானசூரியன் புத்தகம் இவரிடம் உள்ளது. அழுத்தமாகப் பிடித்தால் உடைந்துவிடும். அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் நூல்கள், ஈ.விகே சம்பத் தொகுப்பு,
மீண்டும் விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர் சிந்தனைத் திரட்டு, கொளத்தூர் மணி வெளியிட்ட பெரியாரின் குடியரசுத் தொகுப்பு, பெரியாரின் சில தனி நூல்கள், பெரியாரைப் பற்றிய விமர்சன நூல்கள், பகுத்தறிவாளர்களில் உலக அளவில் முன்னாள் முஸ்லிம்கள் என்பவர்கள் வெளியிட்ட சில நூல்கள், (இலங்கையிலும் கேரளத்திலும் வலுவாக இயங்குகிறார்கள்), மற்ற சில இசுலாம் பற்றிய நூல்கள்,
மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில 100 நூல்கள், தமிழில் முதலில் வந்த 17 நூல்கள், நேருவைப் பற்றிய நூல்கள், ஆனைமுத்து கொண்டுவந்த பெரியார் சிந்தனைகள் 3 நூல்கள், வீரமணி வெளியிட்ட பெரியார் களஞ்சியம் தொகுப்பு,
70-க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்கள், தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட முதல் 10 தொகுதிகள், என்சைக்ளோபீடியா அமெரிக்கா 30 தொகுதிகள், வாழ்வியல் களஞ்சியம் தமிழ்ப் பல்கலை போட்டது 15வரை, குழந்தைகள் கலைக்களஞ்சியம், பெரியசாமித் தூரன், கொங்குக் களஞ்சியம், நகரத்தார் கலைக் களஞ்சியம், விகடன் வெளியிட்ட பிரிட்டானிகா கலைக் களஞ்சியம், பல்வேறுவகைபட்ட ஆங்கில என்சைக்ளோபீடியா, மானுடவியல், இலக்கியக் களஞ்சியம், மொழி- மொழியியல் ஆங்கிலக் கலைக்களஞ்சியம்,
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட கலைக்களஞ்சியம், இந்து கலைக்களஞ்சியம், பௌத்தக் கலைக்களஞ்சியம், விவிலியக் கலைக்களஞ்சியம் 12 தொகுதி, பைபிள் கலைக்களஞ்சியம் 5 தொகுதிகள், சமயவியல் கலைக்களஞ்சியம், பைபிள் என்சைக்ளோபீடியா, இசுலாமியக் கலைக்களஞ்சியம்,
மயிலை சீனி வேங்கடசாமி நூல்கள், நேதாஜி, பிரிட்டன் காலத்து கெசட்டியர்கள், புதுக்கோட்டை மேனுவல், சாமிநாதசர்மா நூல்கள், அரசியல் கட்சிகளின் வரலாறு, சோவியர் யூனியன் வெளியிட்ட அகிலங்களின் வரலாறு, பழைய முஸ்லிம் லீக் வரலாறு (1947), நீதிக்கட்சி வரலாறு, அந்தக் கட்சியைப் பற்றிய விமர்சனங்கள், ஆர்எஸ்எஸ் இயக்க வரலாறு,
கடித இலக்கிய நூல்கள், நேரு, தெபொமீ, க.ப.அறவாணன், சோமலெ, பாவாணர் நூல்கள், இலங்கை தொடர்பான நூல்கள், நாட்டார் இலக்கியங்கள் எனக் காட்டியவர்,
சென்னையில் விலங்கியல் பூங்காவும் அருங்காட்சியகமும் இணைந்து இப்போதைய செண்ட்ரலுக்கு அருகில் இருந்தபோது மக்கள் பூங்கா எனும் பெயரில் இருந்தது; அது பற்றி எரிந்துபோன கதையைப் பாடிய சிந்தாகப் பாடி வெளியிட்ட உடைந்துபோன நிலை நூல்களை நகலச்சு எடுத்து ஒட்டிய தொகுப்பாகக் காட்டினார்.
தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கண நூல்கள், இலக்கிய, இலக்கண வரலாறுகள் என ஐயாவின் புத்தகத் தொகுப்பு கலைப் படம்போல நீண்டுகொண்டே சென்றது.
காலையில் தொடங்கிய புத்தக ‘உற்று’லா, அலமாரி அலமாரியாகப் பார்த்து முடிப்பதற்குள் சூடான சுக்குத் தேநீர் நேரத்தையும் தாண்டி, பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
”குரானுக்கு தமிழில் இதுவரை 26 மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. இவற்றுடன் 5 விளக்கவுரைகளும் என்னிடம் உள்ளன. 1857இல் வெளியிடப்பட்ட இரேனியசின் பைபிள் மொழிபெயர்ப்பு, 1858இல் இலங்கையில் வெளியிடப்பட்ட சமயப் பரீட்சை அதாவது இந்து மதத்தைவிட கிறிஸ்துவ மதம் உயர்வானது, எப்படி எனக் கூறும் நூலிது, 1949இல் வால்கா- கங்கை நூல் முதல் பதிப்பை என்னிடமிருந்து வாங்கிச்சென்றுதான் 27ஆவது பதிப்பை செம்பதிப்பாக வெளியிட்டார்கள். முதல்பதிப்பில் மொழியாக்கம் கண.முத்தையா, ஆ. ஞானகுருபரன் என்று இருக்கும். பின்னர் வந்த பதிப்புகளில் குருபரன் பெயர் இருக்காது... இப்படி 30 புத்தகங்கள் மறுபதிப்பு செய்ய என்னிடமிருந்த பிரதிகளையே வாங்கிச் சென்றார்கள். என்சிபிஎச் போட்ட மார்க்ஸ்- ஏங்கல்ஸ் மறுபதிப்புக்குத் தந்தது நான்தான். புலவர் குழந்தையின் 4 நூல்களும் நான் தந்ததுதான். ஈவிகே சம்பத் குடும்பத்தாரிடமே அவருடைய நூல்கள் இல்லை. என்னிடம் இருந்த பிரதியை வைத்துதான் அவரின் தொகுப்பைக் கொண்டுவந்தார்கள்.” என்ற பழங்காசு சீனிவாசன்,
“திராவிட நாடு முதல் இதழிலிருந்து வைத்திருக்கிறேன். கருணாநிதி கொண்டுவந்த முத்தாரம் இதழ் 1956ஆம் ஆண்டின் தொகுப்பு வைத்திருக்கிறேன். காஞ்சிபுரம் சிற்சபை கொண்டுவந்த சித்த மருத்துவம் இதழ் 14 ஆண்டுத் தொகுப்பும் உள்ளது.” என தகவல்களை நினைவின் அடுக்கு
களிலிருந்து ஒவ்வொன்றாக அழகாகச் சொல்லிக்கொண்டே போகிறார்.
1860இல் பலகை அச்சு முறையில் அதாவது ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு பலகை எனும் முறையில் அச்சிடப்பட்ட இந்திய இலக்கணச் சுருக்கம் இவரிடம் உள்ள மிக அரிய நூல்களில் ஒன்று.
இதுவரை இவருடைய நூலகத்தைப் பயன்படுத்தி முப்பதுக்கும் மேற்பட்டோர் ஆய்வுகளைச் செய்துள்ளனர். பலர் நூல்களையும் எழுதியுள்ளனர். கணக்கிட்டுச் சொல்லும்படி இல்லாதபடிக்கு கணிசமான கட்டுரையாளர்களும் பாரதி ஆய்வு நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூகப் பயனாகவும் வரலாற்றுப் பெட்டக மாகவும் இருந்துவரும் பழங்காசு சீனிவாசன் 75 வயதை எட்டிவிட்டார். விடாமல் ஆய்வுகளை முன்னிட்டுப் பேசுகிறார், எழுதுகிறார். ஆய்வேடுகளைத் திருத்திக்கொடுக்கிறார்.
தமிழ் எண்ணியலில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர், இதுகுறித்த புத்தகம் ஒன்றையும் எழுதிவருகிறார். ஏற்கெனவே இவர் தன் இணையருடன் இணைந்து எழுதிய மாமிச உணவின் மருத்துவ குணங்கள் புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றது.
அரிய இந்த நூலகத்தை அவருக்குப் பின்னர் யார் பராமரித்துப் பயன்படுத்துவார்கள் எனும் கேள்வி அவருக்குள்ளும் எழுந்தபடியேதான் இருக்கிறது. அரசோ உரிய நிறுவனங்களோ முழுமையாக இந்த நூலகத்தைத் தம்வசம் எடுத்துக்கொண்டால் கொடுக்கத் தயார் என்கிறார் அவர். அவரது விருப்பம் நிறைவேறுமா?