
மாற்றத்தை முன்னெடுக்கும் சிறுமி நான்: நெருக்கடிகளின் போது முன்வரிசையில் நிற்பவள்.” இது இந்த ஆண்டு அக்டோபர் 11 அன்று சர்வதேச பெண்குழந்தைகளின் தினமாக அனுசரிக்கப்பட்டபோது அதன் மையக் கருத்தாக உருவாக்கப்பட்ட வாசகம்.
உலகெங்கும் சிறுமிகள் இன்றைய சவால்களை எதிர்கொள்ள, தீர்வுகளை முன்வைக்க தயாராக முன்னெழுந்துவருகிறார்கள். ஆனாலும் அவர்கள் குரல்கள் பெரும்பாலும் செவிமடுக்கப்படுவதில்லை என்று ஐ.நா. சபையின் இணையதளம் கூறுகிறது. ஆனால் பெண்கள் தங்களுக்கான சிறந்த உலகம் உருவாகுமென காத்திருக்கவில்லை. அதை சமைக்கத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் சவால்கள் இருக்கின்றன்.
பெண்குழந்தைகள், பெண்கள்- இருவருக்குமே சவால்கள் ஒன்றுதான். காலங்களாக அன்பின்பெயரால், தாய்மையின் பெயரால், உடல்வலிமையின் பெயரால் ஒடுக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்பட்டு உலகின் சரிபாதியினரான அவர்கள் தங்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் காலம் தொடங்கி விட்டது.
இந்தியாவில் 14.9 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அதில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள். சொந்தக்காலில் நிற்கும் தகுதியை தங்கள் கல்வியால் அடைந்தவர்கள். ’வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்களால்’ நிரம்பியிருந்தது ஒரு காலத்தில் தமிழ்நாடு என்றால் நம்பமாட்டார்கள். இந்த சூழலில் இனி பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித் தர இப்போதைய தலைமுறைச் சமூகம் தயாராகவே இருக்கும்.
ஆனாலும் குழந்தைத் திருமணங்கள், ஊட்டச்சத்துக் ்குறைபாடு, பாலினப்பாகுபாடு போன்றவை இன்னும் இருளாகச் சூழ்ந்துள்ளன. இந்திய அளவிலான குழந்தைப் பிறப்பு விகித சராசரி 1000 ஆண்குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்றுதான் உள்ளது. தமிழ்நாட்டில் இந்தவிகிதம் 1000: 940 என்ற அளவில் இருக்கிறது. ஆண்குழந்தைகளின் மீதான சமூக சாய்வுத்தன்மை இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதையே இதுகாட்டுகிறது.
இந்த இதழில் பெண்குழந்தைகளைப் பெற்றவர் சிலர், இந்த சமூகச் சூழலில் தம் குழந்தைகளும் தாங்களும் அடைந்த வெற்றிகளை எழுதி இருக்கிறார்கள். பிரச்னைகளும் தீர்வுகளும் பதிவாகி இருக்கின்றன. விளையாட்டிலும் ஊடகத்திலும் சாதித்த சிலரின் அனுபவங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
மானுட வரலாற்றின் போக்கில் ஆண்களிடம் இழந்துவிட்ட அதிகாரத்தை பெண் சமூகம் மெல்ல மீட்டெடுத்துவருகிறது. கல்வியும் செல்வமும் அதற்கான வழிகள். இன்றைய பெண் குழந்தைகள் இவற்றின் வழியாக தங்கள் மீட்பைக் கண்டடைவார்கள்!