
தேனி மாவட்டம் கம்பத்தில் என் வீட்டினருகில் இருந்த வாவேர் பள்ளிவாசலில் (மசூதி) தான் சிறு வயதில் என் பெரும்பாலான நேரங்கள் கழியும். சின்னமனூர், கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் என மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த எங்கள் பகுதியில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகம். விவசாயம்தான் இவர்கள் பிரதான தொழில். வெள்ளையர்களால் ஏலக்காய் வணிகமும், பிற்காலத்தில் துணி விற்பனையும் இவர்களின் தொழிலாக மாறியது. பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் விவசாயம் மற்றும் இதர தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் உண்டு.
மொய் என்பது இங்குள்ள பகுதியில் பிராதன விஷயம். திருமணம் உள்ளிட்ட எல்லா விசேஷங்களிலும் முஸ்லிம்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் மொய் வைக்கும் வழக்கம் உண்டு. எங்கள் பகுதி திருமண வீட்டில் “புகுந்த வீட்டில் வாழப்போகும் பெண்ணே” என்ற பாடல் ஒலித்தால் திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று அர்த்தம். அதே போல “வாராயோ என் தோழி வாராயோ” என்ற பாடல் ஒலித்தால் பெண் அழைப்பு தொடங்கிவிட்டது என்று அர்த்தம். அது முடிந்து ஊரே அலறும்படி மொய் வைப்பவர்களின் பெயரையும் மொய்த் தொகையையும் மைக்கில் சத்தமாகச் சொல்லுவது சம்பிரதாயமாக நடக்கும். விவசாயத்தில் பரஸ்பரம் சேர்ந்து வேலை செய்வதால் சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இந்த மொய் வைக்கும் பழக்கம் காலப்போக்கில் உருவாகியிருக்கலாம் என்பது அனுமானம்.
திருமணத்துக்கான தொடக்கம் என்பது பெண்ணுக்குப் பூ வைத்தல் என்பதிலிருந்து தொடங்குகிறது. மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு உறவினர் சூழ சென்று மணப்பெண்ணுக்குப் பூ வைப்பார்கள். இது கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் போலத்தான். அதன் பிறகு மகர் பற்றிப் பேசுவார்கள். பெரும்பாலும் பூ வைத்தல் நிகழ்ச்சி முடிந்த ஒரு மாதத் துக்குள் பிறை பார்த்து நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடத்தி முடிக்கப்படும்.
இஸ்லாத்தில் நபிகள் நாயகம் வாக்குப்படி திருமணத்தில் பெண் வீட்டாரிடமிருந்து மகர் எனப்படுகிற வரதட்சணை வாங்குவது பாவச்செயல். ஆனால் திருமணத்தின் போது ஆண்தான் பெண் வீட்டாருக்கு வரதட்சணை அளிக்க வேண்டும். இதை இஸ்லாத்தின் சிறப்புகளில் ஒன்றெனச் சொல்லலாம். அதே போல இஸ்லாத்தில் பெண்களுக்கும் சொத்தில் சமமான பங்கு உண்டு. தமிழர்களின் தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக நான் இதைப் பார்க்கிறேன்.
இந்துக்களிடையே இருக்கும் தாய்மாமன் பெண்ணுக்கு சீர் செய்வது போல, தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தாய்மாமன் பெண்ணுக்கு சீர் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்ணுக்குத் தந்தை இல்லாத பட்சத்தில் அந்தப் பெண்ணின் தாய்மாமன் தான் திருமண உறுதிமொழியை எடுப்பார். மேலும் இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஹஜ் புனிதப் பயணம் செல்ல, கணவன் இல்லாத பெண்கள் அண்ணன் தம்பியுடன்தான் ஹஜ் பயணம் செல் வார்கள். எனவே தாய்மாமனுக்கு முக்கியத்துவம் இதிலிருந்துதான் தொடங்குகின்றது.
பொதுவாக இஸ்லாமியத் திருமணங்களில் அதிகம் சடங்குகள் ஏதும் கிடையாது. எளிமையான நிகழ்வுகளுடனே திருமணம் நடந்து முடிந்துவிடும். ஆனால் சடங்குகளில் இல்லாத பிரம்மாண்டம் பிரியாணியில் வந்து விடும். இன்றைக்குத் தெருவுக்குத் தெரு பிரியாணி கடைகள் முளைத்து விட்டாலும் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் பிரியாணி என்றால் அது முஸ்லீம்கள் வீட்டுத் திருமணத்தில்தான். காட்டு நாயக்கர்கள் சமூக இல்லத் திருமணத்து ஊர்வலத்தில் தேவராட்டம் ஆடிக்கொண்டு போவதுபோல இஸ்லாமியத் திருமணங்களின் ஊர்வலங்களிலும் மசூதியைச் சேர்ந்த ஹஜ்ரத் மோதிமார்களும் உறவினர்களும் சேர்ந்து அரபிப் பாடல்களைப் பாடிக் கொண்டு மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு மசூதிக்குப் போவார்கள். அங்கு பிரார்த்தனை முடிந்தவுடன் இரு வீட்டாரும் சேர்ந்து ஹஜ்ரத் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் ஆணின் தந்தையும் பெண்ணின் தந்தையும் மணமகனும் மசூதியிலிருக்கும் திருமண ஒப்பந்தப் படிவத்தை வாசித்து உறுதிமொழி எடுத்து அந்த நோட்டில் கையெழுத்திடும் வழக்கம் உள்ளது. பிறகு அந்தத் திருமண ஒப்பந்தத்தை ஹஜ்ரத் எல்லோர் முன்னிலையிலும் வாசிப்பார். அதற்கு முன்பு அந்தத் திருமண ஒப்பந்தத்தை ஹஜ்ரத் மணப்பெண்ணிடமும் வாசித்துக் காட்டுவார். அந்த மணப்பெண்ணின் சம்மதத்துக்குப் பிறகுதான் மாப்பிள்ளையிடம் சம்மதம் கேட்கப்படும். இப்போது அந்தத் திருமணம் சட்டப்பூர்வமாகிட்டது எனலாம். இஸ்லாமியத் திருமணம் சார்ந்து ஜமாத்துக்களின் பங்கு முக்கியமானது.
இஸ்லாமியத் திருமணங்கள் பெரும்பாலும் பெண் வீட்டில்தான் நடக்கும். திருமணச் செலவுகளை பெண் வீட்டார்தான் செய்வார்கள். எழுபதுகளில் வீட்டின் முன்பு பெரிய பந்தல்போட்டு முகப்பில் வண்ணத் துணிகளால் அலங்கரிப்பார்கள். அதில் சரம் சரமாய் பூக்கள், வாசனைச் செடிகள், பழங்கள் எனத் தொங்கவிடுவார்கள். வீடு ஜொலிக்கும். ஆனால் திருமணங்கள் மண்டபத்தில் நடக்க ஆரம்பித்த பிறகு வீடுகளில் திருமணங்கள் நடப்பதில்லை. முன்பு பெண் வீட்டார் மகர் வாங்கிக் கொண்டு திருமணம் செய்வதால் திருமணச் செலவை அவர்களே பார்த்துக் கொண்டனர். சமீப காலமாக மண்டபங்களில் திருமணங்கள் நடக்க ஆரம்பித்த பிறகு திருமணச் செலவை இரு வீட்டார்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள் திருமணம் ஒரு நாளில் முடிந்துவிடும். ஆனால் உருது பேசும் முஸ்லிம்கள் திருமணம் மூன்று நாட்கள் வரை நடக்கும். முன்பு அதிகமாக திருமணங்கள் மாலை வேளையில் ஆரம்பித்து நடு இரவில் முடியும்படியாக இருந்தது. தற்போது இதுமாதிரியான திருமணங்கள் நடைபெறுவது குறைந்துள்ளன.
உருது பேசும் குடும்பத் திருமணத்தில் முந்தைய இரவு மெகந்தி வைக்கும் வைபவம் நடக்கும். ஐந்து விரல்களிலும் மருதாணி மணக்கும். ஆடல் பாடல் என கச்சேரி களை கட்டும். இப்போதும் கேரளா மலபார் முஸ்லிம்களிடம் ஒப்பனா எனும் கலை நிகழ்ச்சி நடப்பதுண்டு. இப்போது ஒப்பனா நடனம் ஒரு நாட்டுப்புறக் கலைவடிவமாகிவிட்டது எனலாம். ஒப்பனா நடன நிகழ்ச்சி கேரளத்துப் பல்கலைக்கழக அளவிலும் மிகவும் பிரபலம். ஆனால் தமிழ் பேசும் இஸ்லாமியக் குடும்பங்களில் அவ்வளவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.
திருமணம் முடிந்ததும் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். மூன்று நாள் கழித்து மறு வீட்டுக்குப் பெண்ணை கூட்டிக் கொண்டு வருவார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டுக்கு விருந்துக்கு வருவார்கள். மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். பலகாரங்கள், பிரியாணி என விருந்து முடிந்தவுடன் பெண் வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பொருளை மாப்பிள்ளை வீட்டினர் தெரியாமல் எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற ஒரு வழக்கமிருக்கிறது. மாப்பிள்ளையின் செருப்பை எடுத்து ஒளித்து வைப்பது போன்ற விளையாட்டும் உண்டு. இது குறிப்பாக ராஜபாளையம் பகுதியி லிருந்து வந்து கம்பம் பகுதியில் குடியேறிய முஸ்லிம்களிடம் இந்த வழக்கம் இன்னும் உண்டு. காதல் திருமணத்திற்கு இஸ்லாம் எதிரானது இல்லை. முஸ்லிம் ஆணும் பெண்ணும் காதலித்தாலும் கூட, பெற்றோர்கள் சம்மதித்தால் காதல் திருமணங்களுக்கு தடையேதுமில்லை.
திருமணம் பற்றிப் பேசும்போதே “முத்தலாக்” என்னும் விவாகரத்து பற்றியும் நாம் பேசியாக வேண்டும். மற்றவர்கள் நினைப்பது போல ஃபோனிலோ அல்லது நேரிலோ மூன்று முறை “தலாக்” என்று கூறிவிட்டால் விவாகரத்தாகிவிட்டது என்று அர்த்தமில்லை. அது அவ்வளவு சுலபமுமில்லை. முதல் முறை உறவினர்கள் முன்னிலையில் தலாக் சொல்லவேண்டும். இரண்டாவது முறை ஊர்க்காரர்களின் முன்னிலையில் சொல்ல வேண்டும். மூன்றாவது முறை பெண்ணிடம் பேசிவிட்டு, அவருக்குச் செய்ய வேண்டிய ஜீவனாம்சம் உள்ளிட்ட எல்லாக் கடமைகளையும் செய்து விட்டு தான் தலாக் சொல்லமுடியும். அது பல காலகட்டங்களாக நடைபெறும். அதே வேளையில் ஒரு பெண், தனக்குப் பிடிக்காத கணவனை சரியான காரணத்துடன் விவாகரத்து செய்ய வேண்டுமானால் ஊர் முன்பு ஒரு முறை தலாக் சொன்னால் போதும் என்கிற அளவுக்குப் பெண் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பது இஸ்லாம்.
முதல் திரைப்படத்தை திருமணத்தை மையமாக வைத்து எடுத்ததேன் ?
கம்பத்தில் எங்கள் வீடு ஒரு மசூதியின் பக்கத்தில் இருந்தது. அங்கு நடக்கும் அனைத்துத் திருமணங்களுக்கும் சென்றுவிடுவேன். திருமணம் முடிந்தவுடன் சாக்லேட்டை வாரி இறைப்பார்கள். அதை சிறுவர்களாகியா நாங்கள் பொறுக்கி எடுத்துக் கொள்வோம். என் பிராயம் திருமணம் சார்ந்த மகிழ்ச்சிகளால் நிறைந்தது என்பேன். நான் அதிகம் கடந்து வந்த திருமணங்களை வைத்து ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்றுதான் “திருமணம் என்னும் நிக்காஹ்” திரைப்படத்தை எடுத்தேன். இரண்டு வெவ்வேறு சமூகத்தில் இருக்கும் திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் என பொதுமைகளையும் உணவு உடை என அவர்களுக்கிடையேயான கலாச்சார வேறுபாடுகளையும் காட்சிப்படுத்த விரும்பினேன். எனவேதான் என் முதல் திரைப்படம் திருமணத்தை மையமிட்டதாக அமைந்தது.
மறக்க முடியாத திருமணம் :
நடிகர் நாசர் அவர்களிடம் உதவியாளராகப் பல படங்கள் பணியாற்றினேன். நானும் நாசர் சாரும் சேர்ந்து ஒரு திருமணத்தைத் திருச்சியில் நடத்தி வைத்தோம். நடிகர் நாசரின் நண்பரான யோகானந்த் என்பவரின் திருமணத்தைத் தெருக்கூத்தை மையமாக வைத்து நாங்கள் வடிவமைத்தோம். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்களுடன் சேர்ந்து அந்தத் திருமணத்தை உருவாக்கினோம். அதற்காக அந்தத் திருமணத்திற்காக இரவு முழுவதும் ஒத்திகை நடத்தி மறுநாள் காலை திருமண நிகழ்வைத் தொடங்கினோம்.
முதலில் கட்டியங்காரன் முன்னறிவித்தல். பிறகு கணபதி வந்தனம். அதைத் தொடர்ந்து கட்டியங்காரன் திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று திருமண நிகழ்வின் போது ஏதாவது குற்றம் குறை இருந்தாலோ, அல்லது உணவு உபசரிப்பில் குறை இருந்தாலோ மன்னித்து பெரியவர்கள் ஒன்று கூடி இந்தத் திருமணத்தை நல்ல படியாக நடத்தித் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு மணமகன் மேடைக்கு வர, அவரை கூத்துக் கலைஞர்கள் மேடைக்கு அழைத்து வந்தார்கள். பிறகு அதேபோன்று தெருக்கூத்து ஆடல் பாடலுடன் மணமகள் மேடைக்கு அழைத்துவரப்பட்டார். பிறகு கூத்துக்கலைஞர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் முன்னிலையில் ஊர்ப்பெரியவர் ஒருவர் தாலி எடுத்துக் கொடுக்க, கூத்து வாத்தியார் வாழ்த்துப்பாடல் பாட தாலி கட்டியவுடன் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. சாதி மத அடையாளங்கள் ஏதுமின்றி தமிழ் பாரம்பரியக் கலையின் கம்பீரத்தோடு அந்தத் திருமணம் நடந்து முடிந்தது. இது என் வாழ்வில் மறக்க முடியாத திருமணம்.
(அனீஸ், திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தின் இயக்குநர். திருமண நிகழ்வுகளை விரிவாகத் திரையில் பதிவு செய்தவர். சந்திப்பு: சரோ லாமா)
ஆகஸ்ட், 2017.