
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்கிறார் ஆபிரகாம் லிங்கன். நாம் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகங்களில் பல பழைய புத்தகங்களாக இருக்கின்றன. அந்த புத்தகங்கள் எங்கே இருக்கின்றன, யாரிடம் இருக்கின்றன என்று தேடுபவர்களுக்கு ஓர் அச்சு இதழின் நடுப்பக்கமாக காட்சித்தருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சி மேட்டுப்பட்டியில் வசித்துவரும் முனைவர் சு.முத்தழகன்.
இவரிடம் பழைய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. ஏராளமான அச்சு நூல்களும் அரிதான பழைய நூல்களும் உள்ளன. வருங்கால தலைமுறையினர் எதிர்காலத்தில் வாசிக்கும்படியாக பல அரிதான அபூர்வ நூல்களை மின் நூல்களாக டிஜிட்டல் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். இவரிடமுள்ள மின் நூல்கள் மட்டும் சுமார் ஒன்றரை இலட்சங்கள். இவற்றில் பல நூல்கள் இவரே தன் சொந்த செலவில் மின் நூலாக்கியவை.
புதுக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவரை அந்திமழை இதழுக்காக நேரில் சந்தித்துப் பேசினோம். இந்த நூல்களை சேகரிக்கவும் அவற்றை மின்நூலாக்கும் ஆர்வமும் எப்படி வந்தது என்று கேட்கையில், வாசிப்பு மீதான ஆர்வமும் தாகமும்தான் இவ்வளவு நூல்களையும் சேகரிக்க காரணம் என்கிறார். இவரது தந்தையார் சுப்பையா பிள்ளை நல்ல வாசிப்பாளர். தான் வாசித்த இராபர்ட் கால்டுவெல் 1856 ஆம் ஆண்டு எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலிலிருந்து தனது நூல் சேகரிப்பைத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். இவரிடமுள்ள நூல்களில் சமுல் பி. கறீன் வைத்தியர் அவர்களால் 1875 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த கெமிஸ்தம் எனும் மிக பழையது என்கிறார். இந்நூல்களைத் தவிர சிதம்பர முதலியார் இயற்றிய கணக்கதிகாரம், சுத்தானந்த பாரதியாரின் திருமந்திர விளக்கம் எனும் நூலின் முதல்பதிப்பு, நாலடியார் நூலுக்கு வேதகிரி முதலியாரின் உரைகள், 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த பலவந்த புஷ்பப் பாட்டு, ராமாயண ஏத்தப்பாட்டு போன்ற அரிய நூல்களை அச்சு பிரதிகளாக வைத்துள்ளார். இவர் பல நூல்களைப் பழைய புத்தகக் கடை, பழைய பேப்பர் கடையிலிருந்து சேகரித்துள்ளார். நண்பர்கள் பலர் அபூர்வமான நூல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
புத்தகம் சேகரிப்பதை விடவும் அவற்றைப் பாதுகாப்பது மிகவும் சவாலானது எனும் இவர் தற்போது வீடு கட்டிக்கொண்டிருப்பதால் சேகரித்த மொத்த நூல்களையும் மொத்தமாக கட்டி பரணியில் ஏற்றி வைத்துள்ளார். வீடு கட்டுமானம் முடிந்தபிறகு அவற்றை முறையாக அடுக்கி, காட்சிப்படுத்தப் போவதாக சொல்கிறார்.
இவரிடம் குறிப்பிட்ட சில புத்தகங்களைக் கேட்கையில் இந்தப் புத்தகம் இதற்குள் இருக்கிறதென ஹார்டு ட்ரைவைக் காட்டினார். அவற்றை கணினியில் இணைத்து திறந்து காட்டுகையில் அகர வரிசைப்படி அடுக்கப்பட்ட நூல்கள் விரிந்தன. இது தவிர டிவிடியாகவும் நூல்கள் வைத்திருக்கிறார். இந்த நூல்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும். இவரிடம் தினமும் பலர் அரிதான நூல்களைக் கேட்டு தம் புலன எண்ணைக் கொடுத்து அனுப்பச் சொல்லி வாசிப்பதாகவும் பகிர்ந்துகொள்கிறார்.
“தற்போது வாசிப்பு பழக்கம் இளைய தலைமுறையினரிடம் இல்லை. நாற்பது வயதுக்கு மேலானவர்களே நூல்கள் வாசிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இளைய தலைமுறையினரை வாசிக்கவைக்க இதுநாள் வரை பெரிய முன்னெடுப்பு எடுக்கப்படவில்லை. இப்படியே காலம் போகாது. வாசிக்கும் பழக்கத்தை நோக்கி இளைய தலைமுறை திரும்பும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்காகவே இந்த நூல்களை நான் டிஜிட்டல் படுத்தி வைத்திருக்கிறேன்,’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் எழுதப்பட்ட பல அரிய நூல்கள் இவரிடம் உள்ளன. அவற்றில் 1916 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட எஸ்.இராதாகிருஷ்ண அய்யர் எழுதிய A GENERAL HISTORY OF THE PUDUKOTTAI STATE, 1932 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட அன்றைய மன்னர் கல்லூரி முதல்வர் எழுதிய A CHILD'S HIS-TORY OF PUDUKOTAH முக்கியமானவை. திருக்குறளில் பழைய பதிப்புகள் நிறைய உள்ளன. இவரிடமுள்ள நூல்களில் தமிழ் இலக்கிய நூல்கள் அதிகம். அடுத்ததாக தமிழக வரலாறு, மொழி இலக்கணம், தமிழக ஆய்வு, பண்டைய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டியல், தொல்லியல் நூல்களைச் சொல்லலாம்.
``தற்போது தமிழறிஞர்கள் பலர் உரை எழுதிய நூல்களுக்கே திரும்பத் திரும்ப உரை எழுதுகிறார்கள். உரை எழுதப்படாத நூல்கள் நிறைய உள்ளன. என்னிடம் உள்ள நூல்களில் சிவந்தெழுந்த பல்லவராயன் உலா எனும் நூலுக்கு உரை எழுதப்படாமல் இருக்கிறது. பேராசிரியர் குப்புச்சாமி அவர்களிடம் இந்நூலினைக் கொடுத்து உரை எழுதச் சொல்லியிருக்கிறேன்,’’ என்கிறார்.
இவர் அச்சுப் பிரதி, டிஜிட்டல் நூல் இரண்டிலும் வாசித்து வருகிறார். “இரண்டுக்குமான வாசிப்பு உணர்வில் பெரிய வித்தியாசம் இல்லை. பழக்கம்தான். அச்சு நூலில் சில தகவல்களைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதுவே டிஜிட்டல் நூலில் எளிது. நான் பல நூறு புத்தகங்களை டிஜிட்டலாகவே வாசிக்கிறேன். ஆயினும் அச்சு நூல்களை வாசிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. அது தொடுதல் உணர்வு,’’ என்கிறார்.
“இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிப்பை கொண்டுசெல்ல பள்ளியிலிருந்தே வாசிப்பு பழக்கத்தைத் தொடங்க வேண்டும். குழந்தைகளின் பிறந்த நாள்களைக் கேக் வெட்டி கொண்டாடுவதை விட புத்தகங்கள் வழங்கி கொண்டாடலாம். குழந்தைகள் புத்தகங்களை அப்பொழுதே வாசிக்கவில்லையென்றாலும் பிறகு வாசிப்பார்கள் அல்லவா?’’ என்கிறார் நம்பிக்கையுடன்.