மருத்துவரிடம் செல்லவேண்டிய நேரம்!

மருத்துவரிடம் செல்லவேண்டிய நேரம்!

மருத்துவர் தமிழ்த்தென்றல் அரவிந்த், மகப்பேறு மருத்துவர்

பிரசவத்துக்காகக் காத்திருக்கும் பெண்ணுக்கு பொதுவாக இரண்டு விதமாக வலி இருக்கும். ஒன்று சூடு வலி எனப்படும் சாதாரண வலி. மற்றொன்று நிஜமான பிரசவ வலி.  இந்த வலிதான் பிரசவத்துக்கான பிரதான அறிகுறி. என்றாலும் அந்த சமயம் வெள்ளைப்படுதல், பனிக்குடம் உடைதல் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கும். வலி இல்லாமல் கூட இந்த அறிகுறிகள் இருக்கலாம்.

பெரும்பாலும் பலருக்கும் பனிக்குடம் உடைவது உணரப்படுவது இல்லை. கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும்போதோ, குனியும்போதோ, உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ பனிக்குடம் உடைந்து  அந்த திரவம் கால் வழியாக வரும். அப்படி வந்தால் உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும். பலபேர் அதை சிறுநீர் என்று தவறாக நினைத்து விடுவார்கள்.

பிரசவ வலி என்றால் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இடைவெளிவிட்டு வரும். ஆனால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அந்த வலி அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்போது வெள்ளைப்படுதலோ, பனிக்குடம் உடைதலோ இருக்கலாம். ஃபால்ஸ் பெயின் தொடர்ந்து வலித்துக் கொண்டே இருக்கும். இடைவெளி விடுவது இல்லை. ஓரிரு மணி நேரத்தில் அது சரியாகிவிடும். பொதுவாக வலி ஒருமணிநேரத்துக்கு மேல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே கொஞ்சமாக வெள்ளைப்படு்தல் (Show) இருக்கலாம். அப்படி இருந்தாலும் அது பிரசவத்துக்கான அறிகுறிதான்.

பிரசவ காலத்துக்கு முன்பாக வயிறு கொஞ்சம் இறுக்கமாகும், பிறகு தளர்வாகும். இந்த சமயத்தில் கர்ப்பப்பை பை சுருங்கி விரியும். இது ஏழெட்டு மாதத்திலிருந்தே இருக்கும். ஒன்பதாவது மாதத்தில் அதனுடன் கொஞ்சம் வலி இருக்கும்.  இந்த சுருங்கி விரிதல் என்பது அதிக வலியோடு இருந்தால், அதுதான் பிரசவ வலி என்கிறோம்.

பொதுவாக குழந்தை பிறக்க மூன்று படிநிலைகள் உண்டு. முதலில் இறுக்கமாக மூடிக் கொண்டிருக்கும் கர்ப்பப் பை வாய் கொஞ்சம் கொஞ்சமாக விரிய ஆரம்பிக்கும். ஒரு விரல், இரண்டு விரல், மூன்று விரல் அளவுக்கு விரிந்து கொண்டே வரும். கர்ப்பப் பையின் வாயை திறக்கத்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. குழந்தையின் தலை வருகின்ற அளவுக்கு கர்ப்பப் பையின் அந்த வாய் திறக்க வேண்டும். அப்படித் திறந்தால் குழந்தை பிறந்துவிடும். இது நடக்க தலைப்பிரசவமாக இருந்தால் பதினெட்டு மணிநேரம்வரை கூட ஆகலாம். இரண்டாவது மூன்றாவது பிரசவம் இதைவிட குறைந்த நேரத்தில்கூட ஆகலாம்.

வலிவந்த உடன் விரைவாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். பிரசவம் என்பது தாய்மட்டுமல்ல குழந்தையும் சேர்ந்து பங்கெடுக்கும் நிகழ்வு. எனவே குழந்தை நலமாக இருக்கிறதா என்பது கண்காணிக்கப்படும். மருத்துவமனையில் cardio tocography மூலம் குழந்தையின் இதயத் துடிப்பை கண்காணிப்பார்கள். எனவே தான் நன்றாக வலி வந்தவுடன் போகலாம் என்று காத்திருக்கக் கூடாது.

நிறைமாதத்தில் ரத்தப்போக்கு ஏற்படுதல் சாதாரணம் கிடையாது என்பதால், அவசியம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நஞ்சுக்கொடி அறுந்துவிட்டால்தான் ரத்தப்போக்கு  இருக்கும். எனவே அவசியம் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

பிரசவத்தின் வலியை தாயும் சேயும் பொறுத்துக் கொண்டால்தான், பிரசவம் வெற்றிகரமாக முடியும். வலியும் நல்லா வரவேண்டும், கர்ப்பப் பை வாயும் திறக்க வேண்டும். குழந்தை தலை இறங்கிவர தாயின் இடுப்பெலும்பில் இடமும் இருக்கவேண்டும்.  இந்த மூன்றுமே சரியாக இருந்ததால் வெற்றிகரமாக சுகப்பிரசவம் நடக்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com